உலகச் செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் 

ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை உருவாக்குவதில் இந்தியா, பிரான்ஸ் அடங்கலான நாடுகள் தீவிர கவனம்

கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு

 சீனாவில் கொரோனா கட்டுக்கடங்காது பரவல்

கடன் சுமை மிகுந்த நாடாக பாகிஸ்தான்வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் 

குத்துவிளக்கேற்றி பைடன் தம்பதி வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்துக்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வேளையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அவர் , இருளிலிருந்து அறிவு , ஞானம் , உண்மை உள்ளதைத் தான் தீபாவளி நமக்கு நினைவுப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.   நன்றி தினகரன் 
ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை உருவாக்குவதில் இந்தியா, பிரான்ஸ் அடங்கலான நாடுகள் தீவிர கவனம்

ஹைப்பர்சொனிக் ஆயுதங்களை உருவாக்கிவரும் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்கியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக சுயாதீன விடயம் தொடர்பான நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சீனா சமீபத்தில் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஹைப்பர்சொனிக் ஏவுகணையைப் பரீட்சித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை மிகவும் மேம்பட்ட ஹைப்பர்சொனிக் ஆயுத திட்டங்களைக் கொண்டிருந்தாலும், அவுஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் உட்பட பல நாடுகள், ஹைப்பர்சொனிக் ஆயுத தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக சுயாதீன காங்கிரஸ் ஆராய்ச்சி சேவையின் புதிய அறிக்கையில் சுட்டிக்கப்பட்டுள்ளதாக 'த பிரிண்ட்' குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்காவும் இந்தியாவுக்கு ரஷ்யாவும் இதன் நிமித்தம் ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளன. மேக் 7 ஹைப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ் II ஐ உருவாக்க ரஷ்யா இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. பிரம்மோஸ் II திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டாலும் இது குறிப்பிடத்தக்க தாமதங்களை எதிர்கொள்வதால் 2025 முதல் 2028 வரையான காலப்பகுதிக்குள் ஆரம்ப செயல்பாட்டு திறனை அடைவதை இலக்காகக் கொண்டு தற்போது திட்டம் வகுக்கப்பட்டுள்ளது'.

'இந்தியா அதன் ஹைப்பர்சொனிக் தொழில்நுட்ப டெமொன்ஸ்ட்ரேட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டை திறன் கொண்ட ஹைப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணையை உருவாக்கி வருகிறது. அத்தோடு மேக் 6 ஸ்கிராம்ஜெட்டை 2019 ஜூனிலும் 2020 செப்டம்பரிலும் வெற்றிகரமாகப் பரிசோதித்துமுள்ளது.

சுமார் 12 ஹைப்பர் சொனிக் காற்றாலை சுரங்கங்கள் இந்தியாவிடமுள்ளன. அவை மேக் 13 வரையிலான வேகத்தை பரீட்சிக்கும் திறன் கொண்டவை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக 'பைனான்சியல் டைம்ஸ்' குறிப்பிட்டுள்ள போதிலும் அதனை சீனா மறுத்துள்ளது. அது ஒரு ஹைப்பர்சொனிக் வாகனமே அன்றி அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சொனிக் ஏவுகணை அல்ல என்று பிரித்தானியாவின் முன்னணி செய்தித்தாளொன்று தெரிவித்துள்ளது. இந்தியாவைப் போன்று, பிரான்ஸும் ஹைப்பர்சொனிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒத்துழைத்து ஒப்பந்தம் செய்துள்ளதோடு ஜப்பான் ஹைப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது.   நன்றி தினகரன் 
கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு

கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு-First Pill to Treat COVID Gets Approval in UK

- தொற்று அறிகுறி தென்பட்டு 5 நாட்களுக்கு தலா 2 மாத்திரை வீதம் வழங்க சிபாரிசு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் பிரிவு அனுமதித்துள்ளது.

மெர்க் (MSD) மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியுட்டிக்ஸ் (Ridgeback Biotherapeutics) நிறுவனங்கள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்திருக்கின்றன.

மோல்னுபிராவிர் (molnupiravir) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாத்திரை, கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பமான தொற்றாளர்களுக்கு, இந்த மாத்திரையை முதல் 5 நாட்களில் நாளொன்றுக்கு 2 முறை வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்காக ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மாத்திரையின் பயன்பாட்டின் பரீட்சார்த்த நிலை பரிசோதனைகளின்போது, வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றை 50% வரை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய நடைமுறைகளின் பின்னர் குறித்த மாத்திரையை தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உலகின் முதல் நாடாக இந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதியளித்திருக்கிறது.

மிகவும் பலவீனமான மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை ஒரு புரட்சிகரமானது என, அந்நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இன்று எமது நாடு வரலாறு காணும் ஒரு நாளாகும். ஏனெனில் கொவிட் தொற்றுக்கு வீட்டிலேயே எடுத்துச் கொள்ளும் வகையிலான வைரஸ் தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் உலகின் முதல் நாடு இங்கிலாந்து என்பதே அதற்கான காரணமாகும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் இந்த மாத்திரையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். தடுப்பூசியை விட மாத்திரையை தயாரிப்பது எளிது என்பதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 
சீனாவில் கொரோனா கட்டுக்கடங்காது பரவல்

வேகமாகப் பரவும் டெல்டா வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா போராடி வருகிறது.

சீனாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள், வட்டாரங்களில் புதிய வைரஸ் பரவல் நீடிக்கிறது. மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.

சீனாவில் புதிதாக 93 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் 18 மாநிலங்கள், நகர மன்றங்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 500 ஆக உயர்ந்துள்ளது.

ஜூலையில் அடையாளம் காணப்பட்ட நான்ஜிங் விமான நிலைய வைரஸ் பரவலை விட, தற்போது நிலைமை சிக்கலாய் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நான்ஜிங்கிலிருந்து ஒரு வாரத்துக்குள் 15 நகரங்களுக்கு நோய் பரவியது.

அதுபோல் இல்லாமல், அடையாளம் காணப்படாத பலரிடமிருந்து தற்போதைய பரவல் ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நெருங்கி வரும் குளிர்காலம் வைரஸ் பரவலை மேலும் மோசமாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய சோங்கிங், ஹெனான், கிழக்கு கடற்கரையில் ஜியாங்சு ஆகிய மாகாணங்களில்தான் பெரும்பாலான பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இல்லாத மாகாணத்தை பராமரிக்க உறுதி பூண்ட நிலையிலும், முன்னதாக கட்டுக்குள் வைத்த நடவடிக்கைகளை தாண்டியும் டெல்டா வகை வேகமாக பரவிவருகிறது என சீன அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'டெல்டா கொரோனாவை ஒழிக்க நடவடிக்கைகள் தேவைப்பட்டது. ஆனால், மற்ற நாடுகள் அதன் கவனத்தை ஒழிப்பதில் செலுத்தாமல் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்தவதில் செலுத்திவருகின்றன. அதை, எண்டெமிக் நோயாக கருதி அதனுடன் வாழ கவனம் செலுத்துகின்றனர்' என்றார்.

நேற்று புதன்கிழமை மட்டும், தலைநகரம் பீஜிங்கில் ஒன்பது பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஒருவருக்கு அறிகுறி தென்படாத கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா அலை காரணமாக, மொத்தம் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, பெப்ரவரியில் டெல்டா கொரோனா பரவ ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட அது அதிகம்.    நன்றி தினகரன் 

கடன் சுமை மிகுந்த நாடாக பாகிஸ்தான்


பாகிஸ்தான் அரசு மிக மோசமான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அதன் டொலர் கையிருப்பு உணவுப் பொருட்களை அடுத்து வரும் சில மாத காலத்துக்கு இறக்குமதி செய்யவே போதுமானதாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் நிதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போதிய நிதியின்றி பொருளாதார பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானின் 2021 - 22 காலப் பகுதிக்கான வெ ளிநாட்டுக் கடன் தேவை 23.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்றும் 2022 - 23 காலப் பகுதியில் இக் கடன் தேவை 28 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்றும் சர்வதேச நாணய சபை மதிப்பிட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வந்த பாகிஸ்தான் இம்ரான்கான் பதவியேற்ற மூன்றாண்டு காலப் பகுதியில் மேலும் சீர்குலைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவிடம் பாகிஸ்தான் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.

இதேசமயம், பெருமளவு வெளிநாட்டுக் கடன் சுமை கொண்ட பத்து நாடுகளில் ஒன்றாக உலக வங்கி பாகிஸ்தானையும் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் மத்திய வங்கியின் அறிக்கையில் அந்நாட்டின் அரச கடன் தொகை 39.9 டிரில்லியன்களாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 14.9 டிரில்லியன் ரூபா கடந்த மூன்றாண்டு இம்ரான்கான் ஆட்சியில் பெறப்பட்ட கடன்களாகும். அந்நாட்டின் தற்போதைய பணவீக்கம் 9 சதவீதமாகும். இது தெற்காசிய நாடுகளில் காணப்படும் உயர்மட்ட பணவீக்கமாகும்.   நன்றி தினகரன் No comments: