எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 66 1986 இல் யாழ்.கோட்டையில் முடக்கப்பட்ட இராணுவமும் - காவல் அரணில் விழித்து நின்ற போராளிகளும் ! கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் ! ! முருகபூபதி


சமதர்மப்பூங்காவில் தொடருக்கு  வரவேற்பிருந்தது.  அதனை தொகுத்து புத்தகமாக்குமாறு சிலர் சொன்னார்கள். 

ஆனால், அது சாத்தியமானது, நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் !

சோவியத் நாட்டிற்கு  அதிபர்  கொர்பச்சேவ்  காலத்தில் நாம் சென்றிருந்தோம்.  அங்கு  படிப்படியாக நேர்ந்த மாற்றங்களை அவதானித்தேன்.

நாம் தங்கியிருந்த இஸ்மாயிலோவா நட்சத்திர விடுதிக்கு மாஸ்கோவிலிருந்து படிக்கும் இலங்கை மாணவர்கள் சிலர் வந்து சந்தித்தனர்.

அவர்களுடன் உரையாடியபோது சில விடயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

நாம் அங்கே சென்றிருந்தபோது,  ஒரு அமெரிக்கன் டொலருக்கு வங்கியில் ஏழு ரூபிள்கள் சோவியத்  நாணயம் தரப்பட்டது. இதுபற்றி அம்மாணவர்களிடம் சொன்னபோது,   எம்மிடம் தந்தால்,  “ தாங்கள் பத்து ரூபிள்கள் தரமுடியும்      என்றனர்.

 “ உங்களுக்கு எதற்கு அமெரிக்க டொலர்கள்..?   எனக்கேட்டேன்.

தாங்கள் விடுமுறை காலத்தில் பிரான்ஸுக்கு சென்று திரும்புவதாகவும். அங்குசென்று பெண்களுக்குப்பிடித்தமான


வாசனைத்திரவியங்கள், அழகுசாதனப்பொருட்கள் வாங்கி வந்து, இங்கே விற்பதாகவும். அதனால் கிடைக்கும் லாப வருமானத்தை தங்கள் செலவுகளுக்கும் சேமிப்புக்கும் பயன்படுத்துவதாகவும் சொன்னார்கள்.

உள்ளுர் உற்பத்தியை விட வெளிநாட்டு உற்பத்திகளுக்கு அங்கிருந்த மதிப்பினை அந்த மாணவர்களிடமிருந்து அறிய முடிந்தது.

இலங்கை திரும்பியபின்னர், அங்கிருக்கும் சோவியத் தூதுவராலயத்தில் பணியாற்றும் சோவியத் பிரஜைகளிடத்திலும்  அந்த மனப்பான்மையை அவதானிக்க முடிந்தது.


மாஸ்கோவுக்கு படிக்கச்செல்லும் இலங்கை மாணவர்கள் ஊடாக அவர்கள் தமது உறவுகளுக்கு இலங்கையிலிருந்து தரமுயர்ந்த கைக்கடிகாரங்களையும் வாங்கிக்கொடுத்தனுப்பியதையும் அறிய முடிந்தது.

கம்யூனிஸ  நாடுகள் இவ்வாறுதான் திறந்த பொருளாதாரத்தை நோக்கி படிப்படியாக நகர்ந்தன.  காலப்போக்கில்  தகர்ந்தன.

அன்று 1985 இல் நான் பார்த்த சோவியத் யூனியன் இன்றில்லை.

அதன் சிற்பி, மேதை லெனினின் பூதவுடல்  இன்றும் கிரெம்ளின் சதுக்கத்தில்  பொன்னுடலாக காட்சியளிக்கிறது.

------

அந்தப்பயணத்தின்போது பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு


பிரயாணப்பை தந்திருந்தார்கள்.  சில மாதங்கள் அதனையே நான்  இலங்கையில் வெளியூர் பயணங்களுக்கு பாவித்தேன்.

ஒரு தடவை வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த எனது தங்கை வீடு சென்றபோது,   அங்கிருந்து படித்துக்கொண்டிருந்த ஒரு வளர்ப்பு மகன் கேட்டு கொடுத்துவிட்டேன்.  அந்த மகன்   தனது குழந்தைப்பருவத்தில் தாயையும் தந்தையையும் இழந்தவன்.   நாம்தான் அவனை வளர்த்தோம்.  அக்காலப்பகுதியில்  அங்கிருந்து நன்றாகப் படித்தான்.  சிறந்த சித்திகளும்  பெற்றான். ஆனால்,  ஈழக்கனவுகளுடன் களம் புகுந்த ஒரு விடுதலை இயக்கத்தின் வகுப்புகளுக்கும்  அவன் சென்று வரத்தொடங்கியதையடுத்து,  தங்கை அவனை என்னிடம் அனுப்பினாள்.

அவனை கொழும்பில் ஒரு பிரபல கல்லூரியில் சேர்ப்பதற்கு முயற்சித்து, எனது நண்பரான  அக்கல்லூரி அதிபரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினேன். அவரும் அவனது பாடசாலை முன்னேற்ற அறிக்கைகளை பார்த்து திருப்தியடைந்து சேர்த்துக்கொள்ள சம்மதித்தார்.

தான் முன்னர் கற்ற வவுனியா பாடசாலையில் தானே    வகுப்பு மாணவர் தலைவன் என்றும், அந்த ஆண்டு சரஸ்வதி பூசை தனது பொறுப்பில்  அங்கே நடக்கவிருப்பதாகவும், அதனை முடித்துக்கொண்டு வந்து இணைந்துகொள்வதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு புறப்பட்டான்.

ஆனால், அவன் திரும்பி வரவில்லை.  விசாரித்தபோது, அவன் குறிப்பிட்ட அந்த இயக்கத்தில் இணைந்து பயிற்சிக்காக தமிழ்நாடு சென்றுவிட்டான் என்ற செய்தியே கிடைத்தது.


சரஸ்வதி பூசையில் கலந்துகொண்டவன், அடுத்த நாள் ஆயுதபூசையுடன், ஆயுதங்களைத் தேடிச்சென்றுவிட்டான்.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் நான் வீரகேசரியில் பணி முடிந்து வீடு திரும்புகின்றேன்.  இரவாகிவிட்டது. வாயிலில் எதிர்ப்பட்ட எனது அம்மா,    உன்னைப்பார்க்க ஒரு விருந்தினர் வந்திருக்கிறார்.  உனது அறையிலிருக்கிறார்.  போய்ப்பார்.    என்றார்.

என்னைப்பார்க்க வந்திருக்கும் அந்த விருந்தினர் யார்…?  என்பதை அறிய ஆவலுடன் எனது அறைக்குள் சென்றேன். அறை இருளாக இருந்தது. லைற்றைப்போட்டேன்.  ஒரு உருவம் “ சித்தப்பா   எனச்சொல்லியவாறு பாய்ந்து வந்து  லைற்றையும்   அணைத்து என்னையும்  கட்டி அணைத்து முத்தம் தந்தது.

யார் என்று பார்த்தால், சரஸ்வதி பூசைக்குச்சென்று, அங்கிருந்து ஆயுதப்பூசைக்கு புறப்பட்டவர்.  அன்று  ஒருநாள் அவரிடம் நான் கொடுத்த அந்த சோவியத் பயணப்பை அங்கிருந்தது.

நீண்டநேரம் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். இரவு உணவு உண்ணும்போது, தனக்கு ஊட்டிவிடுங்க சித்தப்பா என்றார். எனது குழந்தைகள் வேடிக்கை பார்த்தன.

இரவு என்னை அணைத்துக்கொண்டே படுத்தார்.   அவரது செயல்கள்


விநோதமாக இருந்தன.

தான் படிப்பை தொடராமல் இயக்கத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு கோரினார்.  மன்னிப்புக்கேட்பதற்காகவே இந்தப்பயணம் வந்ததாக வேறு சொன்னார்.

அவருக்கு இயக்கத்தில்  ‘ அக்கா  ‘ என்றும் ஒரு பெயர். காரணம் அவரது குரலில் பெண்தன்மை இருந்தது.  அந்த இயக்கத்தின் தலைவருக்கு மிகவும் நம்பிக்கையானவர் என்பதும் தெரிந்தது.

நடு இரவில் எழுந்து,   சித்தப்பா,   உங்கள்  ஊரிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு வவுனியா நோக்கி புறப்படும் தனியார் பஸ்ஸில் என்னை ஏற்றிவிடுங்கள்  “ என்றார்.

சரி…என்றேன்.

அவரை  எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த அதிகாலை


வேளையில்  பஸ் நிலையத்திற்குச்  செல்லும்போது,                                       எதற்காக இங்கே வந்தாய்.  உண்மையைச்சொல்.   “ எனக்கேட்டேன்.

இங்கிருக்கும் வங்கிகளின் லொகேஷன் பார்க்க வந்ததாகவும்,  தனது இயக்கத்தலைவர் அதற்காக தன்னை அனுப்பியதாகவும் சொன்னார்.

 “ இனிமேல் இந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்காதே  “ எனச்சொல்லி, அவரை  அந்த தனியார் பஸ்ஸில் ஏற்றிவிட்டேன்.

முளைத்து மூன்று இலை விடுமுன்னர் எத்தகைய காரியங்களில் இளம் தலைமுறையினர் தலைவர்களினால் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற கவலைதான் அப்போது எனக்கு வந்தது.

வீரகேசரியில் தொடர்ந்து போர்க்கால செய்திகள்


எழுதிக்கொண்டிருந்தபோது,  இலங்கையில் வடக்கிலும்  வடமேற்கிலங்கையிலும் வங்கிகள்   சில இயக்கங்களினால் கொள்ளையிடப்பட்டன.

நீர்வேலி, புலோலி, புத்தூர், யாழ்ப்பாணம் ,   நிக்கவரெட்டியா வங்கிக்கொள்ளைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அத்துடன் குரும்பசிட்டியில் ஒரு நகை அடவு பிடிக்கும் நிலையமும் வடக்கில் சில ஆலயங்களும் கொள்ளையிடப்பட்டன.   இந்தக்கொள்ளைச் சம்பவங்களையடுத்து,  யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து வங்கிகளும் யாழ். கோட்டைக்குள் வந்து சேர்ந்தன.

ஓய்வூதியம் பெறவேண்டியவர்கள் அங்குதான் செல்லநேர்ந்தது.

யாழ்ப்பாணத்தில் கொள்ளைகள் நடந்தால், யார் செய்கிறார்கள்..? எதற்காக செய்கிறார்கள்..? என்பது தெரியாமல்,  அனைத்தும் இனந்தெரியாதவர்கள் செய்யும் செயல் என்று பொதுவாக செய்தி எழுதிக்கொண்டிருந்தோம்.

திருகோணமலையிலிருந்து இரத்தினலிங்கம்,   மட்டக்களப்பிலிருந்து  நித்தியானந்தன், வவுனியாவிலிருந்து மாணிக்கவாசகர், புலோலியிலிருந்து தில்லை நாதன், யாழ்ப்பாணத்திலிருந்து காசி. நவரத்தினமும், அரசரட்ணமும் செய்திகளை தினம் தினம் தொலைபேசி ஊடாக தந்தவண்ணமிருந்தனர்.

வீரகேசரியை கொள்ளைச்சம்பவ செய்திகள் ஆக்கிரமித்திருந்த காலம் அது. பாடசாலைகள், கல்லூரிகளையும் இயக்கங்கள் விடவில்லை. அங்கிருந்த ரோணியோ அச்சிடும் இயந்திரம்  காகிதாதிகள் என்பனவும் கொள்ளையிடப்பட்டன.

யாழ்ப்பாணக்கலாசாரம் கந்த புராண கலாசாரம் என்ற பெருமையையும் புகழையும்  இழந்தது.  கொள்ளையடிக்கும்  கலாசாரம் ஓங்கியது . அனைத்தும் தமிழ் ஈழக்கனவுடன் அரங்கேறியது.

சமகாலச்செய்திகள்,  யாழ்ப்பாணம் என்ற பெயரை வாள்ப்பாணம் என்று மாற்றிக்கொண்டிருக்கின்றன.

போராடுவதற்கு ஆயுதங்கள்  தேவை. அவற்றை வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்கும் இயக்கத்தினரை பராமரிப்பதற்கும் பணம் தேவை. அதற்கு ஒரே வழி கொள்ளைதான்.

இது எங்கேசென்று முடியும்…? என்ற ஆழ்ந்த யோசனையுடன் செய்திகளை எழுதினோம்.

அப்போது மீண்டும் நான் இந்தத் தொடரில் முன்னர் குறிப்பிட்ட கவிதை வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

அந்தக்கவிதையின் இறுதிப்பகுதி இவ்வாறு முடிந்திருக்கும்.

 எங்கள் தாத்தா கடவுளுக்குப்பயந்தார்

எங்கள் அப்பா தாத்தாவுக்கு பயந்தார்.

நாங்கள் ஆர்மி, நேவிக்கு பயப்படுகிறோம்.

எங்கள்   தம்பிப் பாப்பா எவருக்கும் பயப்படமாட்டான்.

இதில் கடைசி வரியை ஊன்றிக்கவனியுங்கள்.

 “ தம்பி எவருக்கும் பயப்படமாட்டான். 

முடிவை 2009 மே மாதம் கண்டுகொண்டோம்.

 

1986 ஆம் ஆண்டு இறுதிப்பகுதி. ஒக்டோபர் மாதம் என நினைக்கின்றேன்.  எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் ஒரு மகாநாட்டை நடத்தியது.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்கள் மல்லிகை ஜீவா, சோமகாந்தன், தெணியான் ,  பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்  உட்பட சிலர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அழைத்திருந்தனர்.

கொழும்பிலிருந்து நானும் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனும் புறப்பட்டோம்.  ரயில் போக்குவரத்து வவுனியாவுடன் நிறுத்தப்பட்டிருந்த காலம்.

கோட்டையிலிருந்து காலை யாழ்தேவியில் நாமிருவரும் புறப்பட்டு,  வவுனியாவை வந்தடைந்து, அங்கிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்றோம்.  இராணுவம் கோட்டைக்குள் முடக்கப்பட்டிருந்தது.   சாவகச்சேரிக்கு அப்பால், இயக்கங்களின் முகாம்கள்.  அங்கிருந்து விடுதலைக்கீதங்கள் ஒலிபரப்பாகின.

கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேறாத வகையில் அனைத்து தமிழ் இயக்கங்களினதும் போராளிகள் கண்விழித்திருந்து காவல் காத்தனர்.

ஒரு செய்தியாளனின் பார்வையில் அனைத்தையும் அவதானித்தேன்.  அப்போது அடிக்கடி எனது மனதில் துளிர்விட்ட வசனம் இதுதான்:

சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.

நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் வந்து எம்மிருவரையும் அழைத்துச்சென்று ஓட்டுமடத்தில் 111 இலக்க இல்லத்தில் விட்டார். அந்த இலக்கத்திற்குரிய இல்லம் நண்பர் சோமகாந்தனுடையது.

பிரேம்ஜி, அந்த இலக்கத்தை நாமம் என்று குறிப்புணர்த்தி வேடிக்கையாகச்  சொல்வார்.  அந்த வீட்டுக்கு  சமீபமாகத்தான் யாழ். நகர பிதா விஸ்வநாதனின் இல்லம். இந்த விஸ்வநாதனின் புதல்வர்தான்  அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பிரதமராக இயங்குகிறார்.

தமிழ் ஈழப்போராட்டத்தில் தாயகத்தில் எத்தனை தம்பிமார் எஞ்சி நின்றார்கள்..? எத்தனை தம்பிமார் வெளிநாட்டில் எஞ்சி நின்றார்கள்..? என்பதை வரலாறு கூறுகிறது.

விடிந்தால்  எமது மாநாடு.  தமிழ் மாநாடு என்று வந்துவிட்டால் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும்  இருக்கும்தானே.  சிலர் அந்த மாநாட்டுக்கு எதிராகவும் யாழ். ஈழநாடுவில் அறிக்கை விடுத்திருந்தனர்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் அதற்கு முன்னரும் கொழும்பில்  1974 ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்தியிருந்தது.  அதில் 12 அம்சத்திட்டத்தை அப்போதிருந்த பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் மேடையில் சமர்ப்பித்திருந்தோம். தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு தரும் திட்டங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அதனை அமுல்படுத்த தன்னால் முடியும். எனினும் நாடாளுமன்றில் விவாதம் என்று வரும்போது,  எதிர்க்கட்சியும் தமிழர் தரப்பு கட்சிகளும் எதிர்க்கும். அதனால்,  நாம் முன்வைக்கும்  12  அம்சத்திட்டத்தை அனைத்து கட்சித்தலைவர்களிடமும் காண்பித்து ஒப்புதல் பெற்று வாருங்கள் என்று பிரதமர் ஶ்ரீமா சொன்னார்.

அதற்காக  செயலாளர்  பிரேம்ஜி  மிகவும் பிரயாசப்பட்டார்.  இரவு பகலாக உழைத்தார்.  1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்ததும் அனைத்தும் தலைகீழாக மாறியது.   1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் நிலைமை  மேலும் மோசமடைந்தது.  ஆயுத இயக்கங்கள் தலையெடுத்தன.

அந்த இயக்கங்களுடன் பேசுவதற்கும் எமது சங்கம் முயன்றது. அதற்காகவே யாழ்ப்பாணத்தில் 1986  இறுதியில் அந்த மாநாட்டை சங்கம் ஏற்பாடு செய்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இணைந்து தயாரித்த யோசனைகளுடன் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தோம்.

புலிகளின் தரப்பிலிருந்து நண்பர் கவிஞர் புதுவை இரத்தினதுரையும் மலரவனும்  கலந்துகொண்டனர்.

கிட்டு அப்போது யாழ். மாவட்ட தளபதியாக இருந்தார்.  ஆனால், அவர் மாநாட்டுக்கு வரவில்லை.

இரத்தினதுரை  எனக்கும் மல்லிகை ஜீவா, சோமகாந்தன், பிரம்ஜி ஆகியோருக்கும் இலக்கிய ரீதியில் நல்ல நண்பர். வரதபாக்கியான் என்ற புனைபெயரில் செ. கணேசலிங்கனின் குமரன் இதழ்களில் கவிதை எழுதியர். எமது மக்கள் விடுதலை முன்னணியின் செஞ்சக்தி இதழிலும் அவரது கவிதைகள் இடம்பெற்றன.  முன்னர் இடதுசாரி சிவப்புச்சித்தாந்தம் பேசியவர் பின்னர் புலிச்சித்தாந்தம் பேசினார்.

மத்தியகிழக்கிற்கு பணிநிமித்தம் சென்று திரும்பிய இக்கவிஞர்,  எவ்வாறு புலிகள் இயக்கத்தினுள் இணைந்தார் என்பது பற்றி எனது சொல்ல மறந்த கதைகள் என்ற  நூலில் காத்திருப்பு என்ற தலைப்பில்  இரண்டு அங்கங்கள் விரிவாக எழுதியிருக்கின்றேன்.

அந்த மாநாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நானும் சோமகாந்தனும் பிரேம்ஜியும்  நாவலர் மண்டபத்திற்கு சென்றோம்.

குறிப்பிட்ட மாநாடு நடந்தன்று காலை வெளியான ஈழநாடு பத்திரிகையின் செய்திக்குறிப்பில்  எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.

அதனைப்பார்த்திருந்த ஒருவர் கோட்டைக்கு முன்னால் காவல் அரணிலிருந்து விரைந்து வந்து எனக்காக காத்து நிற்கிறார்.

என்னைக்கண்டதும்     சித்தப்பா   எனச்சொல்லிக்கொண்டு அருகே வந்து கட்டி அணைத்தார். அவரது இடுப்பில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது.  அத்துடன் ஒரு  ( கிரைனெட் ) கைக்குண்டும் வைத்திருந்தார்.

அவர்தான் சரஸ்வதி பூசைக்கென்று சென்று,  ஆயுதபூசையில் கலந்துகொண்டு விடுதலை அணியில் இணைந்த எனது பெறாமகன்.

அவரது கண்கள் சிவந்திருந்தன.  இரவிரவாக நித்திரை விழித்து  கோட்டைக்கு முன்னால் நின்று காவல் காத்துவிட்டு என்னைத் தேடிவந்துள்ளார்.

 “ இராணுவத்தை வெளியேறவிடமாட்டோம்.  நாம் அவ்வாறு காவல் காப்பதனால்தான் இன்று உங்களால் இங்கே மாநாடு நடத்த முடிகிறது.   என்றார்.

நான் அவர் வசம் இருந்த கைத்துப்பாக்கியையும் அந்த கைக்குண்டையுமே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 “ அந்த ருஷ்யா பேக் எங்கே….?    எனக்கேட்டேன்.

 “ சித்தப்பா இன்னுமா அந்த பேக்கை மறக்கவில்லை   என்று சொல்லி சிரித்தார்.

   அதனை மட்டுமல்ல, அன்று நீ என்ன காரணத்திற்காக அங்கே வந்தாய் என்பதையும் நான் மறக்கவில்லை. 

 “ என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் சித்தப்பா… நான் இனி இவர்களுடன்தான்.  உயிரோடு இருந்தால்,   மீண்டும் வந்து உங்களைப் பார்ப்பேன்    எனச்சொல்லிவிட்டு அகன்றார்.

இதே வசனத்தைத்தான் நண்பர் புதுவை இரத்தினதுரையும் என்னிடம் இறுதியாகச் சொன்னார்

 “ மச்சான்… இனி நான் இவர்களோடுதான். உயிரோடு இருந்தால் மீண்டும் சந்திப்பேன்.   

புதுவை இரத்தினதுரை 2009 இல் இறுதிப்போரின்போது   சரணடைந்து காணாமல்போனார்.

எனது பெறாமகனின் இயக்கத்தலைவர்  உமா மகேஸ்வரன்  கொழும்பு புறநகரில் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாரோ ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்தப்  பூதவுடலுக்கு  இறுதி அஞ்சலி செலுத்த  இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தனாவும் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் சென்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட  அந்தத் தலைவரின் பூதவுடலின் அருகே சோகமே உருவாக நின்றவர் அந்த பெறாமகன்.   தலைவரின் நம்பிக்கைக்குரிய  அவரின் தோளைத் தடவி ஆறுதல் சொல்லிவிட்டு ஜனாதிபதியும் பாதுகாப்பு  அமைச்சரும்  விடைபெற்றுச் சென்ற காட்சி  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அந்தஇயக்கத்தின்மீது விசுவாசமிக்கவராகவும், தனது தலைவனிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவருமான அந்த இளைஞர் தற்போது வெளிநாடொன்றில்,    கடந்து சென்ற கதையெல்லாம் வெறும் கனவுதான் என்ற நினைப்பில் தானுண்டு தனது குடும்பம்  உண்டு  என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அதே ஜே.ஆர். ஜெயவர்தனாவும் லலித் அத்துலத் முதலியும்,  உமா மகேஸ்வரனுக்கு  இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு சில நாட்களுக்கு  முன்னர் அதே மாதம் ( 1989 ஜூலை ) 13 ஆம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட  அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், வெற்றிவேல் யோகேஸ்வரன் ஆகியோரின் பூதவுடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களின் அந்த  இறுதி வணக்கத்தை பெற்ற தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டது பேரினவாதிகளாலோ அல்லது சிங்கள இராணுவத்தினராலோ அல்ல என்பதும் வரலாறு ! 

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்

என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

 

( தொடரும் )

No comments: