கனடாவில் 87 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இலங்கை மூதாட்டி

 Sunday, November 7, 2021 - 6:00am

கனடாவில் 87 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இலங்கை மூதாட்டி வரதலெட்சுமி சண்முகநாதன்-87 Year Old Sri Lankan Woman Earns Masters Degree in Canada-Varathaledchumy Shanmuganathan

- வாழ்நாளில் இன்னும் இலட்சியங்களைக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்

இலங்கையைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி ஒருவர் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மூத்த மாணவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வரதலெட்சுமி சண்முகநாதன் என்ற இவர் 4,000 மாணவர்களில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவராக விளங்குகின்றார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டம் பெற்றார்.

“அரசியல் அறிவியலில் ஏதாவது செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் முழுவதும் லட்சியமாக இருந்து வருகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் அரசியல் மற்றும் அரசியல் அறிவியலில் ஆர்வமாக இருந்தேன்”என்று வரதலெட்சுமி சண்முகநாதன் கூறினார்.

சண்முகநாதன் அப்பல்கலைக்கழகத்தின் மூத்த பட்டதாரி மட்டுமல்ல, கனடாவில் முதுகலைப் பட்டம் பெற்ற வயதான பெண்களில் இவரும் ஒருவர் என்று பல்கலைக்கழகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது 50 களின் நடுப்பகுதியில் லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் முதல் பட்டத்தைப் பெற்றார். இப்போது பெற்றுள்ளது இரண்டாவது பட்டம்.

யோர்க்கில் இருந்த போதிலும், தான் பிறந்து வளர்ந்த இலங்கையில் தனது படிப்பை மையப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது பதின்ம வயதில் மகாத்மா காந்தியின் கொள்கையில் ஈர்க்கப்பட்டார்.

“நான் இலங்கையில் கவனம் செலுத்தினேன், ஏனென்றால் இலங்கை கடந்த 50 ஆண்டுகளாக செய்திகளில் உள்ளது. இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அன்றிலிருந்து இலங்கையின் செய்திகள் எப்பொழுதும் அமைதி மற்றும் போர் என்பதாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.

சண்முகநாதன் வட இலங்கையில் பிறந்து, இளங்கலைப் பட்டம் பெற்று இந்தியாவுக்குப் பயணம் செய்தார். அங்கு பட்டம் பெற்ற பிறகு, அவர் இலங்கை திரும்பினார். ஒரு உள்ளூர் பாடசாலையில் இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலம் கற்பித்தார். பின்னர் கல்வியில் டிப்ளோமா பெற்றார்.

கனடாவுக்கு குடிபெயர்வதற்கு முன்பு, சண்முகநாதன் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அங்கு அவர் படித்தார். பின்னர் உயர்நிலைப் பாடசாலையில் ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக (ESL) கற்பித்தார்.

பின்னர் சண்முகநாதன் தனது மகள் அனுசரணை செய்ததை அடுத்து 2004 இல் கனடா வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மூத்தவர்களுக்கான யோர்க்கின் கல்விக் கட்டணத் தள்ளுபடி ஊக்குவிப்பு பற்றிக் கேள்விப்பட்ட அவர், கற்றல் மற்றும் விண்ணப்பத்தில் தனது ஆர்வத்தைத் தொடர முடிவு செய்தார்.

சண்முகநாதன் 85 வயதில், 2019 இலையுதிர்/குளிர்கால அமர்வில் அரசியல் அறிவியலில் முதுகலை திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

"நான் எப்பொழுதும் A அல்லது A மைனஸைப் பெற விரும்பினேன். எல்லா வழிகளிலும் எனக்கு A அல்லது A மைனஸ் கிடைத்தது" என்று அவர் கூறினார்.

சண்முகநாதன் வளாகத்தில் தனது சக தோழர்களிடையே பழக உற்சாகமாக இருந்த போதிலும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அந்த நேரம் குறைக்கப்பட்டது.

மாறாக தன் மகள், மருமகன் மற்றும் நான்கு வயது பேரனுடன் வீட்டில் படிப்பதில் பெரும்பகுதியைக் கழித்தார்.

“பி.எச்.டி செய்ய விரும்பினேன், ஆனால் நான் எம்.ஏ (முதுகலை) செய்ய வந்தேன். ஏனென்றால் நான் அதை முடித்து விட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இது பற்றி நான் ஒரு புத்தகம் எழுதப் போகிறேன்” என்றார் அவர்.

சண்முகநாதனின் புத்தகம் போருக்குப் பிந்திய இலங்கை பற்றிய அவரது ஆய்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி தினகரன் 

No comments: