நோன்பு / விரதம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

விரதம் / நோன்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து உணவை உண்ணாது விடுவது. இத்தகைய உண்ணாநோன்பைப் பல மதத்தினரும் கைக்கொள்ளுகிறார்கள். மதங்கள் போதிப்பதை மத அனுஷ்டானங்களாக அம் மதத்தைச் சார்ந்தவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். மதங்கள் வேறுபட்ட தெய்வங்களை வழிபட்ட போதும்; மக்களின் மேன்மைக்கான வழிமுறைகளைக் காட்டி நிற்பதே மதம் ஆகும்.


உண்ணா நோன்பு எமக்கு உணர்த்துவனவோ பல. நோன்பு இருக்கும் போது பசி, தாகம் போன்ற உனர்வுகளை நாம் அந் நேரம் கட்டுப்படுத்துகிறோம். இவ்வாறு பசியுணர்வை அனுபவித்தால் தான் எமக்குப் பசி என்றால் என்ன என்பது புரியும். நாமே பசியின் இயல்பை அறியும் போது அதன் தாக்கம் எத்தகையது என்பதை அனுபவித்து உணர்கிறோம். இவ்வாறு உணர வைப்பதால் பசிக்கொடுமையால் வாழுபவரின் துன்பத்தை நாமும் உணருகிறோம் அல்லவா? அதன் பின்பும் பசியால் வாடுபவனுக்கு உணவளிக்காமல் இருப்போமா? இதை உணர்த்துவதே மதங்களின் உயர்ந்த நோக்கம்.

அதை விடுத்து, நாம் உண்னாமல் பட்டினி கிடந்தால் ஆண்டவன் அள்ளிக் கொடுப்பான் என எண்னுவது எத்தனை மடமை! இதையே யுகக்கவி பாரதியும்தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம்என ஆவேசமாக ஆர்ப்பரித்தான். உணவில்லாதவர் படும் துன்பத்தை மத அனுஷ்டானமாக நாசுக்காக நம்மை உணர வைப்பதல்லவா மதம்! இதுதான் மதம் மனிதனை மனிதனாக்கும் யுக்தியோ?

விரதம் அல்லது உண்ணா நோன்பு எம்மை பசி என்றால் என்ன என்பதை மட்டும் உணர வைக்கிறதா? இல்லை, எமது உடலையும் மனதையும் திடப்படுத்துவது இந்த நோன்பு. அதன் மூலம் எமது சிந்தையும் உடலும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதனால் நாம் திடசித்தம் பெறுகிறோம்.

நோன்பு / விரதம் என்பது நாம் களைத்து, சோர்ந்து உட்கார்ந்து விடுவதல்ல. எமது நாளாந்த வேலைகளை நோன்பின் போதும்  நாம் உற்சாகமாகக் கவனிக்க வேண்டும். நாம் விரதம் இருக்கிறோம் எனப் பிறரிடம் கூறி அவர்களின் அனுதாபத்தை பெறுவதற்கல்ல நோன்பு. உற்சாகத்துடன் மிளிரவே நோன்பு. இதுவே எமக்குத் திடத்தைத் தருவது.



மத அனுஷ்டானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் சேர்ந்து திடமளிப்பது. உண்ணாமல் இருப்பதால் உடல் பல நன்மைகளைப் பெறுகிறது. எமது வாயில் இருந்து உடலின் அனைத்து சீரணிக்கும் சீரன உறுப்புகள் யாவும் ஓய்வு எடுக்கும் போது அதன் மூலம் உடல் புத்துயிர் பெற முடிகிறது. உணவு எமக்கு ஊட்ட சக்தியை வழங்கும் அதே நேரம் கழிவுப் பொருட்களும் அதனுள் உண்டு. இதுவே மலசலமாகவும் வியர்வையாகவும் வெளியேறுகிறது. இருந்த போதும்  எமது உள் உறுப்புக்கள் இவ்வாறான வேண்டாதவற்றையும் அவ்வப்போது  தம்முள் உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன. எமது உபவாசத்தால் இத்தகைய அசுத்தமும் நீங்க வாய்ப்புண்டு.

எமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் தானியங்கி நமக்குச் சக்தியை வழங்குகிறது. தொடர்ந்து அவை பெறும் ஊட்டம் அவற்றுக்கு அதிகப்படியாகும் ஆபத்தும் உண்டு. இதனால் உபவாசம் இத்தகைய ஆபத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும் செயலையும் செய்கிறது எனில் மிகையாகாது.

அது மட்டுமா? உபவாசத்தின் போது எமது உடலின் வேண்டாத நிறை குறையவும் வாய்ப்புண்டு. இரத்த அழுத்தம் சீரடையும். கொலஸ்ரோல் மற்றும் சீரான தூக்கமின்மை, இருதய நோய், சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறு, பாரிசவாதம் போன்றவை வராது எமது உடலைச் சீராக வைத்திருக்கவும் இவ்வகை நோன்புகள் / விரதங்கள் / உபவாசங்கள் உதவும். மொத்தத்திலே உபவாசம் என்பது வாழ்வை வளம் படுத்தும். இன்னும் என்ன யோசினை? வெகு விரைவில் நாம் உண்ணா நோன்பைக் கைக்கொள்ளலாம்.



மகாத்மா காந்தி பல நோக்கங்களை அடைவதற்கு; சாதிப்பதற்கு உண்ணா நோன்பை அனுஷ்டிப்பது வழக்கம். இதனால் அவர் உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதும் உண்டு. அவருக்கு உண்ணா நோன்பு ஓர் ஆயுதமே. தான் நேர்மையாகச் சரி என எண்ணுவதை சாதிப்பதற்கு இவர் பட்டினி கிடக்கத் தொடங்கி விடுவார். இவரே அரசியல் காரனங்களுக்காக உண்ணா நோன்பு அனுஷ்டித்த முதல் பிராகிருதியாக இருக்க வேண்டும்.

போர் என்பது மற்றவர்களைத் தாக்குவது; அழிப்பது. அதனைச் செய்யாது சாத்வீகப்போராட்டத்தால் தன்னைத் தானே வருத்தி மற்றவர்களை மசிய வைப்பது மகாத்மாகாந்தியின் அரசியல் போராட்ட பாணியாக இருந்தது. இதில் அவர் வல்லவராக விளங்கினார்.அவரது சத்தியாக்கிரகம் என்ற ஆயுதம் உலகையே வியக்கவைத்தது.

தன் நாட்டு மக்களிலே அன்பு கொண்ட மகாத்மாகாந்தி எப்பொழுதும் தான் உண்ணும் உணவு பற்றி மிக மிக அவதானமாக இருப்பார். அதிகப்படியாக உண்ணுவதை; பிறிதொரு மனிதன் உண்டு பசியாறக் கூடிய உணவை தான் உண்டுவிடக் கூடாது என அவர் எப்போதும் எண்ணினார். ஒரு வாழைப்பழத்தை உண்டால் அது ஒரு நேர உணவுக்குச் சமனானதுஅதனால் ஒரு வாழைப்பழத்தை உண்டால் வேறு எதுவும் உண்ணத் தேவை இல்லை என்ற எண்ணம் உள்ளவராக அவர் இருந்தார்.

இயற்கை வைத்திய முறை உணவு உண்ணாமல் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை உடையது. நான் இந்திய கர்நாடக மானிலத்தில் ஓர் இயற்கை வைத்திய நிலையத்தில் சில நாட்கள் தங்கி இருந்தேன். இங்கு முதலிலே அந்த வைத்தியர் என்னைக் கேட்டது 3 நாட்கள் உண்ணாமல் இருக்க முடியுமா என்பதே! முயன்று பார்க்கிறேன் என்றேன். அவ்வாறு இருக்கும் மூன்று நாட்களும் நீத்துப் பூசணிச் சாறு வழங்கப்பட்டது. அதுவும் 3 நேரம் மட்டுமே. மற்றம்படி பச்சைத்தண்ணீர் மட்டும் தான். ஆனால் அந்த மூன்று நாட்களும் எனது உடல் களைப்பையோ சோர்வையோ உணரவில்லை. காலையும் மாலையும் யோகாசனப் பயிற்சி செய்தேன். நான்காம் நாள் திரும்பவும் வைத்தியர் என்னை மேலும் 2 நாட்கள் உண்ணாமல் இருக்க முடியுமா எனக் கேட்டார்இது எனக்கு ஒரு பிரச்சினையாக இல்லை; தொடர்கிறேன் என்று கூறினேன். 5ம் நாள் இரவு எனக்கு நல்ல காச்சல் வந்தது. எனது உடலில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறுகிறது என்றார்கள்.

இயற்கை வைத்தியம் இயற்கையோடிணைந்த எமது உடலை இயற்கை இயல்புகள்  மூலமாகவே சீர் செய்வது. உண்ணாது இருக்கும் போது எமது உள் உறுப்புக்கள் ஓய்வு பெறுவதுடன் பலகாலமாக நாம் உண்ட உணவின் மூலம் சில அசுத்தத் தன்மையும் எமது உடலில் தங்கி எமது உடல் நலத்தைக் கெடுக்கிறது. இவ்வாறு உண்ணாது இருந்து, நீர் மட்டுமே அருந்துவதால் எமது உடல் இயற்கையாகவே சுத்தப்படுத்தப்படுகிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே உலக மதங்கள் யாவும் உண்ணா நோன்பைப் போதிக்கின்றன.

நீங்களும் முயன்று பாருங்கள். உங்கள் உடல் சீரடைவதை நீங்கள் உணரலாம்.

(
இக் கட்டுரை ATBC வானொலியில்பண்பாட்டுக் கோலங்கள்என்ற நிகழ்ச்சியில் 20.10.10 அன்று ஒலிபரப்பாகியது..

 


No comments: