இந்திய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு
யாழ், இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு
இந்திய - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்
யாழ் – கொழும்பு 3வது சேவையாக "உத்தரதேவி" ரயில்
மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானம்
சிரியா சென்று ISIS அமைப்பில் இணைந்தோராலேயே தாக்குதல்
சிறில் காமினிக்கு நாளை ஆஜராகுமாறு மீண்டும் CID அழைப்பு
இந்திய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு
முக்கிய விடயங்கள் கலந்துரையாடல்
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் (11)நடைபெற்றுள்ளது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதையடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி தினகரன்
யாழ், இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்கள் இதற்கான நிதியுதவியை வழங்கினர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ்,யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இலத்திரனியல் ஸ்கோர்போட் , கழக மனை , பயிற்சிகளுக்கான இடம் போன்றன இந்த திடலில் உள்ளமை விசேட அம்சமாகும்
இந்த விளையாட்டு மைதானம் வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலே மிகவும் நவீனகரமான மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது. நன்றி தினகரன்
இந்திய - இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்
இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்துக்கான இந்திய இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் ஆதரவுடன் நேற்று (12) பாராளுமன்ற வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்காக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த அங்குரார்ப்பண கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிகளவான பிரதிநிதிகள் கலந்து கொண்டிருப்பதை இங்கு காணக்கூடியதாக இருந்ததாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த உரையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்திய இலங்கை இருதரப்பு உறவின் பலத்தை நிரூபிக்கும் சாட்சியமாக இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் போது நீர்ப்பாசன அமைச்சர், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரான சமல் ராஜபக்ஷ இச்சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கலாநிதி வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சங்கத்தின் துணைத் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
அனுர பிரியதர்ஷன யாப்பா எம்பி, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் முறையே, செயலாளராகவும் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் ஜகத் குமார சுமித்ராஆராச்சி எம்பி இந்த அமைப்பின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு உயர் ஸ்தானிகர், தனது உரையின்போது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவினால் அனுப்பப்பட்டிருந்த செய்தியின் சுருக்கத்தையும் உயர் ஸ்தானிகர் இங்கு வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
யாழ் – கொழும்பு 3வது சேவையாக "உத்தரதேவி" ரயில்
யாழ்ப்பாணம் – கொழும்புக்கிடையில் 03ஆவது ரயில் சேவையாக உத்தரதேவி ரயில்சேவை நேற்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி ரயில், மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும். இன்று சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 9.35 மணிக்கு யாழ்.தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 1.37 மணிக்கும் வழமையான சேவையில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இரவு நேர தபால் ரயில் சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நன்றி தினகரன்
மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானம்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக செயலணியின் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும் இச்சந்தர்ப்பத்தில், பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து யோசனைகள், ஆலோசனைகள் கோரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தமது கருத்துக்களை ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, செயலாளர், தபால் பெட்டி- 504, கொழும்பு என்ற முகவரிக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அனுப்பலாமென்றும் அவர் குறிப்பிட்டார். நன்றி தினகரன்
சிரியா சென்று ISIS அமைப்பில் இணைந்தோராலேயே தாக்குதல்
புலனாய்வு விசாரணைகளில் தகவல் என்கிறார் சரத் வீரசேகர
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் வெளிவந்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை குழப்பும் வகையில் எதிரணி எம்.பிகள் பொய் கதைகளை தெரிவித்து வருகின்றனர்.
சஹ்ரானின் மனைவி ஹாதியா வழங்கிய வாக்குமூலத்தில் புலனாய் அதிகாரிகள் எவரும் சஹ்ரானை அவரது வீட்டில் சந்தித்ததாக குறிப்பிடவில்லையென தெரிவித்த அவர், புலனாய்வு அதிகாரிகளுக்கும் சஹ்ரானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது உறுதியாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நாட்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2016/17 காலப்பகுதியில் இலங்கையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தது தொடர்பாக விஜேதாச ராஜபக்ஷ கடந்த ஆட்சியில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டிருப்பவர்கள் சிரியாவில் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் என்பது உறுதியாக இருக்கின்றது. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 2000ற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 200க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்காக விசாரணைகள் நடைபெறுகிறது. இந்த இந்த நிலையில் ஜனாதிபதி விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என்றார்.
பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்டுத்தி பொய்த் தகவல்களை தெரிவித்து, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் விசாரணைகளை குழப்ப வேண்டாமென்று கோருகிறோம்.விசாரணை முறையாக நடைபெற்றுக்கொண்டு செல்வதை குழப்ப இவ்வாறான பொய்க் கதைகளை தெரிவித்து விசாரணைகளை குழப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.
ஷம்ஸ் பாஹிம் - நன்றி தினகரன்
சிறில் காமினிக்கு நாளை ஆஜராகுமாறு மீண்டும் CID அழைப்பு
அருட் தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை (15) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் உளடள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற ஒன்லைன் மூலமான கலந்துரையாடலில் அருட் தந்தை சிறில் காமினி உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி CIDயில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
தற்கொலை குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரியனா தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) தலைவர் ஸஹ்ரான் ஹாசிமுக்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவானது, நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினரான அருட் தந்தை சிறில் காமினி கருத்து வெளியிட்டதாக, குறித்த முறைப்பாட்டில் சுரேஷ் சாலே குறிப்பிட்டுள்ளார்.
ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வளர்ப்பதில் அப்போதைய பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலே முக்கிய பங்காற்றியதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள சுரேஷ் சாலே இவ்விடயங்களை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட் தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், அவருக்குப் பதிலாக அன்றைய தினம் மூன்று அருட்தந்தையர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போது வாக்குமூலம் வழங்குவதற்காக ஒருவார காலம் அவகாசம் வழங்குமாறு அருட்தந்தையர்கள் கோரியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, கடந்த 03ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை (FR) மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு கடந்தவாரம் (08) பரிசீலிக்கப்பட்டபோது, அருட்தந்தை சிறில் காமினி தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
அன்றையதினம் நீதிமன்றிற்கு முன்னால், அருட் தந்தைகள், அருட் சகோதரிகளால் மௌன போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment