உலகச் செய்திகள்

 பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் சீனா-அமெரிக்கா இடையே இணக்கம்

ஜப்பான் பிரதமராக மீண்டும் கிஷிடோ

தாய்வானின் இணைப்புகளை சீனா முற்றுகையிடும் அச்சம்

ஆப்கானில் உணவு பிரச்சினை தீவிரம்

தர்மலிங்கத்தின் தூக்கை நிறுத்துவதற்கு அழுத்தம்

போலந்து எல்லையில் தஞ்சம்கோரிகள் படையெடுப்பு: பெலாரஸுடன் பதற்றம்

தலிபான்கள் வழி ஆப்கானுக்கு நிதியளிக்க அமெ. தயாரில்லை


பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் சீனா-அமெரிக்கா இடையே இணக்கம்

சீனாவும் அமெரிக்காவும் பருவநிலை மாற்றத்தை மெதுவடையச் செய்வதற்கு இணைந்து செயல்படக் கூட்டுப் பிரகடனத்தை அறிவித்துள்ளன. சிஓபி26 உச்சநிலை மாநாட்டில் இந்த எதிர்பாராத அறிவிப்பு இடம்பெற்றது.

அண்மைக் காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இருநாடும் இணைந்து ஒரு அரிய உறுதிப்பாட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பாரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயல்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன. அதேபோன்று இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பருவநிலை பிரச்சினைகளை தவிர்க்க, தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக உலக வெப்பநிலை 1.5 செல்சியஸிற்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு பாரிஸில், உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸிலிருந்து 2 செல்சியஸ் வரை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என உலக தலைவர்கள் உறுதியளித்தனர்.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உலக வெப்பநிலை உயர்வை ஒன்றரை பாகை செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவது குறித்துக் கடந்த சில தினங்களாக மாநாட்டில் பேசப்பட்டது.

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஜோன் கெர்ரி, இரு நாடுகளையும் சேர்ந்த பணிக்குழு அடுத்த ஆண்டின் முதற்பாதியில் சந்திக்கும் என்று கூறினார்.

பருவநிலை நெருக்கடியைக் கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கைகளில் பணிக்குழு கவனம் செலுத்தும் என்றார் அவர்.

அமெரிக்காவும் சீனாவும் உலகிலேயே மிக அதிகமான கரிமத்தைப் பயன்படுத்துவதால் அவற்றின் இணக்கம் பருவநிலை மாநாட்டில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறுதிப்பாட்டில், மீத்தேன் உமிழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது, மற்றும் கார்பன் அற்ற சூழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்கு பின்னர் க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் சிஓபி26 மாநாடு பருவநிலை பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு முக்கிய மாநாடு. இந்த மாநாட்டில் உலக வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைக்க சுமார் 200 நாடுகள் தங்களின் திட்டங்களை வழங்க வேண்டும். சிஓபி26 மாநாட்டில் நாடுகள் ஒப்புக் கொள்ளும் விடயங்கள் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் ஜப்பான் பிரதமராக மீண்டும் கிஷிடோ

அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவு

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடோ மீண்டும் தேர்ந்த​ெடுக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அவா் புதன்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்று முறைப்பாடு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தனது பதவிக் காலம் முடிவதற்கு சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை இராஜினாமா செய்தார். சுகாவுக்குப் பதிலாக புமியோ கிஷிடோ பிரதமரானார். கடந்த மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற தோ்தலில் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.   நன்றி தினகரன் 
தாய்வானின் இணைப்புகளை சீனா முற்றுகையிடும் அச்சம்

சீனா, தாய்வானின் முக்கிய வான், கடல் பயண இணைப்புகளை முற்றுகையிடலாம் என்று தீவின் பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

தைவான் சுய அரசாங்கத்தைக் கொண்ட ஜனநாயகத் தீவாகத் தன்னைக் கருதுகிறது. ஆனால் அதனைத் தனக்குச் சொந்தம் எனக் கருதும் சீனா, தாய்வானை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டுவந்து அதன் “ஒரே சீனா“ கொள்கையை நிறைவேற்ற முயல்வதாக நம்பப்படுகிறது.

அது தொடர்பில் சீனா, அதன் போர் விமானங்களைப் பல முறை, தாய்வானிய வான் எல்லைக்குள் அனுப்பியுள்ளது.

சீனா அதன் வான், கடல், நிலப் படையெடுப்பு ஆற்றலை வலுப்படுத்தி வருவதாகத் தாய்வானிய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

தாய்வானின் முக்கியத் துறைமுகங்கள், விமான நிலையங்கள், வெளிநாட்டை நோக்கிய பயணப் பாதைகள் போன்றவற்றைச் சீனா துண்டித்துவிடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சீனா, அதன் ஏவுகணை அமைப்புகளைக் கொண்டு முழு தாய்வானையும் தாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது. கடந்த 40 ஆண்டுகள் காணாத அளவில் தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றநிலை உருவாகியுள்ளது.   நன்றி தினகரன் 
ஆப்கானில் உணவு பிரச்சினை தீவிரம்

ஆப்கானிஸ்தானில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நிதி இல்லாத சூழலில் தலிபான்கள் ஆட்சியில் அந்நாடு நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போதிய நிதியின்மை காரணமாக உணவுப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதோடு சிலர் தமது பிள்ளைகளையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளது.

“95 வீதமான ஆப்கானியர்களுக்கு உண்பதற்கு போதுமான உணவு இல்லாததோடு நவம்பர் ஆரம்பத்தில் குளிர்காலம் வரவிருக்கும் நிலையில் மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் பட்டினி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானின் பாதிக்கும் அதிகமான மக்கள் தொகையான 28.8 மில்லியன் பேர் நவம்பரில் இருந்து உணவு பாதுகாப்பு இன்மைக்கு முகம்கொடுத்திருப்பதாக ஐ.நா உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 
தர்மலிங்கத்தின் தூக்கை நிறுத்துவதற்கு அழுத்தம்

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நாகேந்திரன் தர்மலிங்கம் மீதான தண்டனையை நிறுத்தும்படி ஐந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர்் போதைக் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றங்காணப்பட்ட தர்மலிங்கம் கற்றல் குறைபாடு கொண்டவர் என்று கூறப்பட்டுள்ளது.

33 வயதான தர்மலிங்கம் 2010 ஆம் ஆண்டு 42.72 கிராம் போதைப் பொருளை எல்லை தாண்டி கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு தண்டை விதிக்கப்பட்டார். அவர் மீதான தூக்குத் தண்டனை கடைசி நீரே மேன்முறையீட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.

அவரது நுண்ணறிவு, தகவலறிந்து முடிவுகளை எடுக்கும் திறனை பாதிக்கும் அளவு குறைவாக உள்ளது என்று வாதிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது வழக்கை நேற்று எடுத்துக்கொண்ட நிலையில், தர்மலிங்கத்திற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த வழங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகத் தீவிர குற்றங்களுக்கு மாத்திரம் சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டு வரும் மரண தண்டனையை நிறுத்தும்படி ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.    நன்றி தினகரன் 

போலந்து எல்லையில் தஞ்சம்கோரிகள் படையெடுப்பு: பெலாரஸுடன் பதற்றம்

ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நூற்றுக்கணக்கான தஞ்சம்கோரிகள் நுழைய முயலும் நிலையில் தமது பெலாரஸ் நாட்டு எல்லையில் ஆயுத மோதல் ஒன்று ஏற்படும் சாத்தியம் உருவாகி இருப்பதாக போலந்து எச்சரித்துள்ளது.

எல்லையின் முல் வேலியை வெட்டி நூற்றுக்கணக்கானவர்கள் முன்னேற முயற்சிக்கும் நிலையில் அங்கு மேலதிக துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பெலாரஸ் பிரச்சினையை உருவாக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடான போலந்து குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் நிராகரித்துள்ளது.

கஸ்னிகாவில் பிரதான எல்லை கடவை ஒன்றை மூடுவதாக போலந்து குறிப்பிட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் பெலாரஸில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடுகளான போலந்து, லிதுவேனியா மற்றும் லத்விய நாடுகளுக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பலரும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.   

எல்லைப் பகுதியில் வெப்பநிலை பூஜ்யத்திற்கு குறைவாக பதிவாகும் நிலையில் அண்மைய வாரங்களில் பல குடியேறிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் இளம் ஆண்கள் என்றபோதும் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போலந்தின் கிழக்கு எல்லையில் சுமார் 4,000 குடியேற்றவாசிகள் திரண்டிருப்பதாக போலந்து அரசாங்க பேச்சாளர் பியோடர் முல்லர் தெரிவித்துள்ளார். இது ஒரு தருணத்தில் தீவிரம் எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அது ஆயுத மோதலாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிரான பதில் நடவடிக்கையாக இந்த குடியேறிகளின் படையெடுப்பை பெலாரஸ் தலைவர் தூண்டி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது ஆர்ப்பாட்டங்களை முடக்கியது தொடர்பில் பெலாரஸ் தலைவர் லுகசன்கோ மீது தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

தலிபான்கள் வழி ஆப்கானுக்கு நிதியளிக்க அமெ. தயாரில்லை

ஆப்கான் இஸ்லாமிய எமிரேட் அரசு அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம், பெண் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் தீவிரவாதத்திற்கு ஆப்கான் மண்ணை பயன்படுத்துவதை அனுமதிக்காதது போன்ற கடப்பாடுகளை நிறைவேற்றும் வரை அந்த நாட்டுக்கு நிதி உதவி வழங்குவதற்கு அமெரிக்கா இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார்.

“ஆப்கானின் தற்போதைய தலைமைக்கு நேரடியாக நிதி அளிக்கும் நிலைமையில் நாம் இல்லை. நாம் விரும்புகின்ற நிலையில் தலிபான்கள் இல்லை. அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும் வரை, அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அரசாங்கம் தொடக்கம் ஏனைய அம்சங்கள் பற்றி நாம் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

சர்வதேச அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தொடர்ந்து நிதி அளிப்பது பற்றியே நாம் அவதானம் செலுத்தி உள்ளோம்” என்று சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் சுலிவன் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 


No comments: