மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலைய மாணவர்களின் கவியரங்கம் பரமபுத்திரன்

 A collage of people

Description automatically generated with medium confidenceமவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலைய மாணவர்கள் தங்கள் கவிபாடும் திறனை வெளிக்காட்டு முகமாக கவியரங்கம் நிகழ்வு ஒன்றினை நடாத்தியுள்ளனர். மவுண்ட் றூயிட் தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது கடந்த 06/11/2021 சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் நிகழ்நிலையில் (online) நடைபெற்றது. நிர்வாகத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள்  மற்றும் கவி ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பித்தனர்.  இந்நிகழ்வினைப் பள்ளியின் பழைய மாணவன் செல்வன் பருணிதன் இரங்கநாதன் தொகுத்து வழங்கினார். 

A collage of a person

Description automatically generated with medium confidence
















கல்வி நிலைய முதல்வர் பாலசுப்ரமணியம் முரளீதரன் அவர்கள் நிகழ்வினை அறிமுகம் செய்து நிகழ்ச்சியைத் தொடருமாறு தொகுப்பாளரிடம் வேண்டுகை விடுத்தார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆசியுரை வழங்குமாறு கல்வி நிலைய நிர்வாகசபைத் தலைவர் கில்பேட் தேவதாசன் அவர்களை அழைத்தார். மாணவர்கள் சிறப்புற நிகழ்வினை வழங்கவும், மேலும் நன்கு தங்கள் கவிபாடும் ஆற்றலையும், தமிழ் பேசும் திறனையும்  வளர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் கூறி  ஆசி வழங்கினார். அடுத்து நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்கள் எப்போதும் மேன்மை பெறவும், இக்கவியரங்கம் வெற்றிகரமாக நடைபெறவும் பள்ளி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து கவியரங்கம் ஆரம்பமானது. 





முதலில் ஆண்டு ஏழு மாணவர்கள் செல்வன்: யாழவன் தமிழ்ச்செல்வன், செல்வன்: ஜக்சன் எல்விஸ், செல்வி: அஸ்வினா ஜனார்த்தனன், செல்வி: கிறிஸ்டினா கில்பேட், செல்வி: அசிக்கா ஜேம்ஸ் ஆகியோர்  ஒன்றாக இணைந்து ‘ஞாலத்தில் உயர்ந்து நன்றே வாழ்வோம்’ எனும் தலைப்பில்  ஒரு கவிதையினைப்  பாடினர். அதனைத்தொடர்ந்து ஆண்டு எட்டு, ஒன்பது வகுப்பு மாணவர்கள் செல்வி: அபிராமி சசிசுதன், செல்வி: காருண்யா சுதாகரன், செல்வன்: அபினேஷ் ஜனார்த்தனன், செல்வி: கீர்த்திகா செந்தில்குமார்,   செல்வி: எழில் கேதீஸ்வரன் செல்வி: ஜனனி விஜயசங்கர் செல்வன்: கோகுல்ரமணன் செல்வி: புகழினி காந்தரூபன் ஆகியோர்  தனித்தனியாக ஒவ்வொருவரும் இரு கவிதைகள் பாடினர். இதில் முதலாவதாக ‘அம்மா’ எனும் தலைப்பில் குறுகிய ஒரு கவிதையும், அதன்பின் முறையே வாணி அருளவேண்டும், அன்னையை வணங்கி அருள்தனைப் பெறுவோம், அன்னை மகிழ்ந்த கதை, ஞாலத்தில் உயர்ந்து நன்றே வாழ்வோம், சொல்லால் வென்றான் தமிழால் நின்றான், செல்வம், நவராத்திரி நாட்கள், கொலு வைப்போம் ஆகிய தலைப்புகளில்  நீண்ட கவிதைகளையும் பாடினர். 





A collage of people

Description automatically generated with low confidence

நிகழ்வில் முனைவர் வெங்கடேஷ் மகாதேவன் அவர்கள் பங்குபற்றிக் கருத்துரை வழங்கினார்.  அன்னை அபிராமியை ஆராதித்தும், ஆனந்தித்தும், இன்பமாகப் பாடிய கவிகளை மகிழ்ந்து பாராட்டினார். மண்ணும், தமிழும் மணக்கும் கவிகள் தன்னைக் கவர்ந்து மனதில் பதிந்து நம்பிக்கை தரும் சொற்களாக நிலைத்துள்ளது எனக்கூறினார். மேலும் மாணவர்களின் கவி பாடும் திறன்களை தனித்தனியாகச்  சுட்டிக்காட்டித் தனது கருத்துரையினை வழங்கியதுடன் மாணவர்கள்  மேலும் கவிதைப்பரப்பில் வளர்ந்து வரவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்துடன் கவியரங்கம் நிறைவுபெற பள்ளி நிலைய நிர்வாகத் தலைவர் அவர்கள் நிகழ்வு ஒழுங்கமைப்புக்கு நன்றியினைத் தெரிவித்து நிகழ்வினை முழுமையடையச் செய்தார். 



இந்நிகழ்வில் பாடப்பட்ட கவிதைகளின் வரிவடிவம் இங்கு தரப்படுகின்றது அதேபோன்று நிகழ்வு ‘யூரியுப்’ (you tube)  தளத்தில் உண்டு. அதற்கான தொடர்பும் இணைக்கப்பட்டுள்ளது.  


அம்மா   --  பாடியவர்: அபிராமி சசிசுதன்

என் தேவைகளை நிறைவேற்ற 

மருத்துவனாய் 

ஆசிரியனாய் 

உற்ற நண்பனாய் 

எம்முடன் நடமாடும் 

பேசும் தெய்வம் 

அம்மா 


கலைவாணி அருளவேண்டும்     


//ஏற்றங்கள் தந்திடும் வாணியைப் பணிந்து 

எந்தன் தாய்மொழி  தமிழினைப் போற்றி

எழுதினேன் ஒருகவி அருள்தர வேண்டி  

பாடுகின்றேன் உங்களை வணங்கி மகிழ்ந்து // 

 

//முந்துதமிழ் சான்றோர்கள்   

முகாமைசெய் நல்லோர்கள்

அன்புமிகு பெற்றோர்கள் 

வழிகாட்டும் ஆசான்கள் 

நன்குபயில் மாணவர்கள்   

அனைவரும் கூடுகின்றோம்//  

   

//ஆடிப்பாடி விளையாடி 

அன்னை தமிழ் அடிதேடி 

ஆனந்தமாய்க் கற்றிடவே 

ஆசிரியர் உதவுகின்றார்//


// தேவைகள் அறிந்து 

சேவைகள் செய்திட 

பெற்றோர்கள் பெரியோர்கள் 

நிர்வாகம் இங்குண்டு// 



//எம்பள்ளி ஓங்கவேண்டும்

 இன்னும் உயர்ந்து ஓங்கவேண்டும் 

தாங்கவேண்டும் 

இன்னும் பல மாணவர்களைத்  தாங்கவேண்டும் 

நீக்கவேண்டும் 

தமிழ்  அறியாமையை  நீக்கவேண்டும் 

தூண்டவேண்டும் 

தமிழை  அறிய மேலும் தூண்டவேண்டும் 

அருளவேண்டும் 

இதற்கு கலைவாணி  அருளவேண்டும்//  

   

// நீடு புகழ் நாடு தமிழ் தேடு மகிழ் வோடு

பீடு நடை போடு மவுண்ட் ரூடு நிறை வோடு

கூடு விருப் போடு பண் பாடு கனி வோடு  

வாணி அருள் தேடு மவுண்ட் ரூடு பள்ளி ஓடு  

எனவாழ்த்தி நிறைக்கின்றேன் நன்றி வணக்கம்// 



அம்மா - பாடியவர்: காருண்யா சுதாகரன் 


எப்போதும் பாசமும் 

என்மீது மோகமும் 

உடல் நலத்தில் அக்கறையும் 

அன்பு கலந்த உணவும் தரும் 

அன்னையே என் தெய்வம் 



அன்னையை வணங்கி அருள்தனைப்  பெறுவோம் – 


//ஆயிரம் கண்ணுடை அபிராமியைப் போற்றி   

அன்னை தமிழினை  அகந்தனில் இருத்தி 

அவையோர் தம்மை மகிழ்ந்து வணங்கி 

அடியேன் இன்று பாடுகிறேன் ஒருகவி //


// என்கவி இன்று ஏற்றிட்ட தலைப்பு  

அன்னையை வணங்கி அருள்தனைப் பெறுவோம் // 


//மூன்று சக்தியாய் முன்னரே உதித்து  

மூவகை அருளும் வடிவங்கள் கொண்டு  

அலைமகள்  மலைமகள்  கலைமகள் ஆகி 

துணிவு தந்து மனதினை வென்று 

செல்வம் செழிக்கும் உத்தியும் காட்டி 

உலகினில் உயர்ந்திடக்  கல்வியும் தந்திடும்   

நலம்மிகு வாழ்வு நல்கிடும் தாயை

வணங்கி மகிழும் நன்னாள் இந்நாள் // 


// துணிவு  தருகையில் துர்க்கையாய்  எழுந்து 

இல்லம் நிறைத்து  இலக்குமியாய்  மலர்ந்து 

கல்வியைத்  தந்திடும்   கலைவாணித் தாயை   

காலா  காலமாய் தமிழர்கள் வேண்டிடும்  

நவராத்திரி நாட்கள் நல்லதோர் விழாக்கோலம் // 


// துணிவு செல்வம்  கல்வி  மூன்றையும்  

வென்றிடப் பள்ளியில்  கற்றிடல் வேண்டும்// 


// நன்றே கற்று  நலங்கள்  பெருக 

அன்னையை வணங்கி அருளினைப் பெறுவோம் 

என்றேகூறி நிறைவு செய்கிறேன்  நன்றிவணக்கம்// 



அன்னை மகிழ்ந்த கதை       பாடியவர்: அபினேஷ் ஜனார்த்தனன் 



//அம்பிகை பாதம் மகிழ்வுடன் தொழுது 

அவையில் இருக்கும் அனைவரையும் வணங்கி  

கவியொன்று தொடுத்து பாடுகின்றேன் இன்று 

பிழையிருப்பின் பொறுத்து கேட்டிடுக என்று 

தொடுக்கின்றேன் என்கவியை இப்போது இங்கே// 


//பாடுபொருள் என்னவெனின்  

அன்னை மகிழ்ந்த கதை  

அன்பர்க்கு நல்வரங்கள் கொடுத்த கதை// 


//அன்னையை விரும்பி வணங்குவான் இராமன் 

ஆனாலும் ஒருநாள் நகைத்துச் சிரித்தான்// 

 

//ஆயிரம் முகத்துடன் ஆத்தாள் தோன்றி 

ஆத்திரம் பொங்கச்   சினத்துடன்  கேட்டாள் 

சிரிப்புக்குக் காரணம் உரைக்கச் சொன்னாள்//


//அன்னைக்கு அந்த இராமன்  சொன்னான் 

எனக்கோ  முகத்தில் ஒன்றே  மூக்கு  

உனக்கோ அங்கே ஆயிரம் மூக்கு

சளிகட்டி விட்டால் எப்படித் துடைப்பாய் 

ஐயகோ  என்னே வேதனை உனக்கு// 

 

//நினைத்தேன் திகைத்தேன் அதனால் சிரித்தேன் 

உரைத்தான் இராமன் மீண்டும் சிரித்தான்// 


// தாயோ இராமன் பேச்சில் மகிழ்ந்தாள் 

விகடப் பேச்சினை விரும்பிக் கேட்டாள் 

விரைந்து பேசும் வரமும்  கொடுத்தாள்  

விகட கவியாய் உயரவும் செய்தாள்//


// காளிதாசன், அபிராமிப்பட்டர், குமரகுருபரர்

அருள் பெற்ற  இன்னும் பல கதைகள் உண்டு //


//அன்னை மகிழ்ந்தால் அருள்வாள் வரங்கள்

அவனியில் சிறப்பாய் வாழவும்  வைப்பாள் 

என்றேகூறி நன்றே முடிக்கின்றேன் நன்றிவணக்கம்// 


அம்மா - பாடியவர்: கீர்த்திகா செந்தில்குமார் 

பத்துத் திங்கள் உந்தியில் சுமந்து 

அக்கறை செலுத்தி அன்பினைப் பொழிந்து 

அவனிக்கு என்னை அழைத்து வந்த 

அம்மாவே என் தெய்வம் 


ஞாலத்தில் உயர்ந்து நன்றே வாழ்வோம்  


// உலகாளும்   இறையின் திருப்பாதம் தொழுது – என் 

உயிரினும் மேலான  தமிழினைப் போற்றி   

அவையோர் தம்மை மகிழ்ந்து வணங்கி 

பாடுகின்றேன் ஒருகவி உங்களின் முன்னே//


// இன்றைய என்கவி ஏற்றிட்ட மகுடம் 

ஞாலத்தில் உயர்ந்து நன்றே வாழ்வோம்// 

 

// ஆத்தாளே  அகிலம் பூத்தவளே   அருள் தந்து காப்பவளே

பின்னும் கரந்து கொள்பவளே என்பார் 

அம்பிகை நேசர் அபிராமிப்பட்டர் //


// முன்னோர்கள் நோக்கும் அவர்களின் வாக்கும்   

அன்னையின் சக்திகள் மூன்று 

அச்சக்திகள் வழங்கிடும் வரங்களும் மூன்று

அவற்றால் கிடைத் திடும் வாழ்வினில் ஏற்றம்// 

 

// துணிவு  செல்வம் கல்வி மூன்றும் 

துலக்கமாய் வாழ உதவிடும் பேறுகள்// 

 

//துணிவு பெற்றிட துர்க்கை உண்டு 

செல்வம் தந்திட இலக்குமி வருவாள்     

கல்வி செழித்திட வாணி அருள்வாள்//

//அம்பிகை பாதம் நம்பியே தொழுது 

துணிவு செல்வம் கல்வி பெற்று 

ஞாலத்தில் உயர்ந்து நன்றே வாழ்வோம்  

என்றேகூறி நிறைவு செய்கின்றேன் நன்றிவணக்கம்// 


அம்மா --   பாடியவர்: எழில் கேதீஸ்வரன் 


அன்பு பாசம் அக்கறை நேசம் 

என்பவை கொண்டு  என்னை வளர்த்து 

நல்வழி காட்டி வாழ வைக்கும் 

நல்ல உள்ளம் எந்தன் அம்மா 



சொல்லால் வென்றான் தமிழால் நின்றான்  


// இறையினைத் தொழுது அவையினை வணங்கி 

கவியொன்று பாடுகின்றேன் கேட்டிட வேண்டுகின்றேன்// 

 

// கவி  சொல்லும் செய்தி 

சொல்லால் வென்றான் தமிழால் நின்றான் – என்//


//முன்னை நாளில் அன்னையைத் தொழுது 

நன்மை விளைந்து  கல்வியில் உயர்ந்து 

நிலைத்த புகழுடன் கவியினை சிந்தும் 

ஏற்றக் கவிஞன் வாக்கு யாதெனின் 

ஆய கலைகள் அறுபத்து நான்கும் 

தாயவள் பாதம் பணிந்தால் கிடைக்கும்// 

 

// அன்னையின் நினைப்பை சிந்தையில் ஏற்றி 

அவளையே தனது உள்ளத்தில் இருத்தி 

சொல்லால் வென்றான் தமிழால் நின்றான் 

கம்பன் என்று பெயரும் கொண்டான்// 


//அம்பிகை அருளால் கல்வியில் உயர்ந்து  

கவிகள் புனைந்து ஏற்றக் கவிஞனாய் 

கல்வியால் கவியால் நிலையாய் வாழ்கின்றான்//


// அன்னையின் திருவடி அணைந்து தொழுது 

மகிழ்வுடன் நாமும்  செழிப்புடன் வாழ்வோம் 

என்றேகூறி நிறைவு செய்கின்றேன் நன்றிவணக்கம்//


அம்மா   -- பாடியவர்: ஜனனி விஜயசங்கர்

என் முகம் பார்க்கும் முன் 

என் ககுரல் கேட்கும் முன் 

என் குணம் அறியும் முன் 

என்னை நேசித்த தெய்வம் 

என் அம்மா 

உயிருக்குள் அடைகாத்து 

உதிரத்தைப் பாலாக்கி 

உள்ளத்தால் மகிழ்ந்து 

எனக்காக வாழும் இதய தெய்வம் 

என் அம்மா 


செல்வம்                           


// அபிராமித் தாயை சிரமேற்றி  

அருமைத் தமிழினைப் போற்றி 

அவையினரை வணங்கி ஆற்றுகின்றேன் என்கவியை//

 

//என்கவி ஏந்திநிற்கும் தலைப்பு செல்வம்//

 

//செல்வம் என்றால் என்னவென்று 

நான் கண்ட பொருள் சொல்வேன்//

 

//முழுமையான உடல் செல்வம் 

ஆரோக்கிய வாழ்வு செல்வம் 

அன்றாடம் கிடைக்கும் உணவு செல்வம்//

 

//கல்வி கற்கும் அறிவு செல்வம் 

பெற்றோரைத் துதிக்கும் பெருமை செல்வம் 

மற்றோரையும் மதிக்கும் பண்பு செல்வம்//

 

//அன்பு காட்டும்  அம்மா  செல்வம் 

அரவனைக்கும் அப்பா செல்வம் 

கூடிவாழும் குடும்பம் செல்வம் 

உடன்பிறந்தோர் உறவு செல்வம் 

அறிவூட்டும் ஆசான் செல்வம் 

நன்மைதரும் நட்பு செல்வம்// 

 

//தெளிவான அறிவு செல்வம் 

துணிவான உள்ளம் செல்வம் 

கனிவான பேச்சு செல்வம் 

உண்மைபேசும் தன்மை செல்வம் 

உலகம் போற்றும் புகழ் செல்வம்//

 

// அம்மா தந்த மொழி செல்வம்

முன்னோர் தந்த ஒழுக்கம் செல்வம் 

நம்மை அறியாது நமக்கு உதவும் 

நல்ல உள்ளம் செல்வம் 

நல்வழியில் வரும் பணம் செல்வம்//


// நான் கண்ட செல்வம் இவை

இன்னமும் உண்டு  

இவற்றை ஏற்று வாழும் இயல்பு  செல்வம் 

என்றுகூறி நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்//  



நவராத்திரி நாட்கள்     பாடியவர்: கோகுல்ரமணன் முரளிதரன் 


//வாணிவிழா நாளில் வாக்கியங்கள் தொடுத்து 

நவராத்திரி நாட்களென கவியொன்று  பாட  

வரந்தந்த அன்னையை வணங்கி மகிழ்ந்து 

கேட்டிருக்கும் உங்களையும்  சிரம்தாழ்ந்து   வணங்கி 

பாடுகின்றேன் என்கவியை கேட்டிடுக பொறுமையுடன்// 


//வித்தைகள் கற்று சித்திகள் பெற்று 

சக்தியுடன் வாழ பக்தியுடன்  வேண்டின் 

வெற்றிபெற துணைசெய்யும்  சக்திமிக்க தேவியின் 

தித்திக்கும் வடிவங்களை  இச்சையுடன் வணங்கிட 

கிடைத்திட்ட பெருநாட்கள் நவராத்திரி நன்நாட்கள் //


//பொருளினைத்  தேடி புகழுடன் வாழ்தல்   

சிறப்பென எண்ணித் துடித்தெழும் வாழ்வில் 

தெய்வத்தின் அருளால் வாழ்க்கை மேம்படும் 

என்பதை நம்பும் தமிழர்கள் நாங்கள் //


//துர்க்கை இலக்குமி வாணி என்று 

துணிவு செல்வம் கல்வி பெருக்கிடும்  

தூயஅன்னை அம்பிகை திருவடி தொழுது  

ஏற்றங்கள் பெறுவோம் துணிவுடன் வாழ்வோம் 

என்றேகூறி நிறைவு செய்கின்றேன் நன்றி வணக்கம் // 


கொலு வைப்போம்      பாடியவர்: புகழினி காந்தரூபன் 


//அம்பிகை பாதம் தொட்டு 

அனைவரையும் அன்புடன் வணங்கி 

தொடுக்கின்றேன் என்கவியை //


//கவிக்கு அமைந்த நல் மகுடம் 

கொலு வைப்போம்//

 

//நவராத்திரி நாளில் கொலு வைத்தல் வழமை//

 

//மூன்று முதல் பதினொரு படிகளை அமைத்து 

ஓர்அறிவு உயிர் தொடங்கி 

அருள்தரும் தெய்வங்கள் வரை 

வண்ண வண்ண உருவங்களை வடிவாக செய்து 

கண்ணைக்  கவரும் வகையில் 

கவனமாக வடிவங்களை  படிப்படியாய் அடுக்குவர் //  


// அழகு மட்டுமன்றி 

அறிவும் தரும் கொலுவைத்து 

மங்கலம் பொங்க மகிழ்வுடன் வாழ்வோம் 

என்றுகூறி நிறைவு செய்கின்றேன் நன்றி வணக்கம்//  


‘யூரியுப்’ (YouTube) தளத்துக்குச் செல்ல 

https://youtu.be/uyN_xvry6Oo

 


No comments: