Tuesday, November 9, 2021 - 3:02pm
அகவை 27இல் இராஜாங்க அமைச்சர்
இளம் வயதில் அரசியல் பிரவேசம் செய்வது புதிய விடயமல்ல. ஆனால் மிகவும் இளமையான பருவத்தில் இராஜாங்க அமைச்சராக வருவது மிகவும் அபூர்வமான விடயம். அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்று இதுவரை சாதுரியமாக அரசியல் பணி செய்து வருகிறார் இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.
இது பெருந்தோட்ட சமூகத்திற்குக் கிடைத்த கௌரவமாகவே கொள்ளப்பட வேண்டிய விடயம். சரியான தருணத்தில் தொலைநோக்கோடு தொழிற்சங்கப் பணியில் அவரை ஈடுபடுத்தியதன் மூலம் தனது சாணக்கியத்தை நிலைநாட்டியவர் தந்தையாரான அமரர் ஆறுமுகன் தொண்டமான்.
தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகவே பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்தில் முழு மலையகத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டவர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான். இதன் பெறுபேறாக இன்றைய அரசாங்கம் நம்பிக்கையோடு மலையக பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தை இவர் பொறுப்பில் கொடுத்து இராஜாங்க அமைச்சராக்கியது.
அவரின் அர்ப்பணிப்பான முயற்சியின் பயனாகவே வீடமைப்புத் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியின் போது முழுமை பெறாத 1235வீடுகளை பூர்த்தி செய்து அவற்றுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், வீதி போக்குவரத்து ஆகியவற்றை நிவர்த்தி செய்து மக்கள் மயப்படுத்தியுள்ளார்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் நன்கொடை மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் முழு மலையகத்திற்கும் அத்தியாவசியமாக உள்ளதால் அவற்றை துரித கதியில் நடைமுறைப்படுத்த அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனூடாக காத்திரமான வகையில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் இராஜாங்க அமைச்சர், தனி வீட்டுத் திட்டத்தை மிகவும் சாதுரியமாக கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1000ரூபா சம்பளத்தை பெற்றுத் தந்து தந்தையின் கனவை நனவாக்கியவர் அவர். தேசிய மட்ட அரசியல் தலைமைகளோடு மிக நெருக்கமான தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டும் தமிழக அரசியல் தலைவர்களோடு உறவுகளை பேணுவதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தமிழ்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சமயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் மலையக மக்களுக்கான அபிவிருத்திகள் உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியமை இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒரு அம்சமாகும்.
மலையகத்தின் இளைய தலைமுறை நாயகனாக அவர் வலம் வருகிறார். இளம் வயதிலேயே அனுபவ முதிர்வை வெளிக்காட்டும் இராஜாங்க அமைச்சர், மலையக சமூகவியல் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்களை துணிச்சலுடன் மேற்கொண்டு வருவதன் மூலம் நம்பிக்கை விடிவெள்ளியாகத் திகழ்கின்றார்.
இன்று அவரது 27வது பிறந்த தினம் ஆகும். அவரது பிறந்த தினம் தொடர்பாக பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தேவதாஸ் சவரிமுத்து
சிரேஷ்ட ஊடக இணைப்பாளர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
நன்றி தினகரன்
No comments:
Post a Comment