நிழல் யுத்தம் - குடும்பங்களில், உறவுகளில், அமைப்புகளில், தொழிற்சாலைகளில், அரச – தனியார் நிறுவனங்களில், அரசியல் கட்சிகளில், அரசாங்கங்களில், தேசங்கள் - தேசத் தலைவர்கள் மத்தியில் காலம் காலமாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
வீரகேசரி ஆசிரிய பீடத்திலும்
நிழல் யுத்தங்களை பார்த்தேன். அணிசேர்வது,
குழுவாதம் பேசுவது இந்த நிழல் யுத்தங்களின் ஊற்றுக்கண்கள்.
வடக்கிலிருந்து எமக்கு தினமும் செய்திகளை தந்துகொண்டிருந்த நிருபர்களின்
அர்ப்பணிப்பு விதந்து போற்றுதலுக்குரியது.
இன்றிருக்கும் நவீன தொழில் நுட்ப வசதிகள் இல்லாத அக்காலத்தில், அவர்கள் தபால் சேவையையும் தொலைபேசியையும் மாத்திரமே நம்பியிருந்தனர்.
அவர்கள் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த அக்காலப்பகுதியில், அலைந்து திரிந்தும், துவிச்சக்கர வண்டிகள், ஸ்கூட்டர்களில்
பயணித்தும் செய்திகளை சேகரித்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அவசரத்திற்கு ஓட்டோக்கள் இல்லாத காலம்.
ஆனால், அவர்கள் தரும் செய்திகள்
அனைத்துக்கும் வீரகேசரி வேதனம் தரவில்லை. பிரசுரமான செய்திகளுக்கு மாத்திரமே வருமானம்
கிடைக்கும்.
ஆசிரிய பீடத்தில் அதற்காகவே நீளமான அடிமட்டத்தை வைத்துக்கொண்டு செல்வி நிர்மலா
மேனன் வீரகேசரி – மித்திரன் பக்கங்களில் குறிப்பிட்ட நிருபர்களின் பெயர்களில் வெளியான
செய்திகளை அளந்துகொண்டிருப்பார்.
பின்னர் தனித்தனி வவுச்சர்கள்
எழுதப்பட்டு, காசோலைகள் நிருபர்களுக்குச் செல்லும்.
அந்தக் காசோலைகள் உரியவேளையில் நிருபர்களுக்கு
கிடைத்தால்தான் அவர்கள் வீடுகளில் அடுப்பெரியும். தங்கள் செய்திகளுக்கு ஆசிரிய பீடத்திலிருப்பவர்கள் உரிய களம் வழங்கவேண்டும் என்பதற்காக அந்த நிருபர்கள் கொழும்பு வரும்போது யாழ்ப்பாணம் மாம்பழம் வாங்கி வந்து கொடுப்பார்கள்.
குண்டசாலை நிருபர் குவால்தீன்
சில சமயங்களில் மலையக தேயிலை பக்கட்டுக்கள்
வாங்கி வந்து கொடுப்பார்.
அவர்களுக்கு முடிந்தது
அவ்வளவுதான்.
ஆனால், கொழும்பிலிருக்கும்
வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் வைன் போத்தலும், கலண்டரும், டயறியும் அன்பளிப்பாக ஆசிரிய
பீடத்திற்கு அனுப்புவார்கள். ஆனால், அவை அனைவருக்கும் கிடைக்காது.
வர்த்தக பிரமுகர்கள் தங்கள்
நிறுவனத்தின் கலண்டர்கள், டயறிகளை அனுப்புவார்கள். சினிமா விளம்பரம் தரும் திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட சிலருக்கு சினிமா பார்க்க இலவச அனுமதிச்சீட்டும்
கிடைக்கும்.
இந்தக்காட்சிகளை கண்டும்
காணாமலும் கடந்து செல்லவேண்டியதுதான்.
யாழ்ப்பாணத்திலிருந்து
எமது பிரதேச நிருபர்கள் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் செய்திகளைத் தந்துகொண்டிருந்தபோது, மற்றும் ஒரு
பக்கத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு எமது அலுவலகத்திலிருந்து
அதே செய்திகள், வரிக்கு வரி அச்சொட்டாக உடனுக்குடன் சென்றுகொண்டிருந்தது.
அந்தக்கைங்கரியத்தை ஒருவர் வெகு கச்சிதமாகச் செய்துகொண்
டிருந்தார். பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் அல்லவா..?
யாழ். நிருபர்கள் காசி.
நவரத்தினமும், அரசரத்தினமும் தங்கள் வரிகளிலேயே
யாழ்ப்பாணம் பத்திரிகை ஒன்றில் செய்தி எவ்வாறு வருகிறது..? எனக்கேட்டனர்.
இதுபற்றி அவர்கள் இருவரும்
பிரதம ஆசிரியரிடம் முறையிட்டனர். ஒருநாள் குறிப்பிட்ட
செய்தி பரிமாறும் நபர் பிடிபட்டார்.
அவரை பொதுமுகாமையாளர் அலுலகத்தினுள்ளேயே இடம்மாற்றம்
செய்தார். அவருக்கு பொதுமுகாமையாளர் அறைக்கு அருகிலேயே மற்றும் ஒரு அறையில் மேசையும்
ஆசனமும் தரப்பட்டது.
அந்தளவுக்காவது அவருக்கு
சலுகை வழங்கப்பட்டதற்கு அந்நபரின் நெருங்கிய
உறவினர் அங்கு முக்கிய பொறுப்பில் அதுவும் செய்திப்பிரிவில் இருந்ததுதான் காரணம்.
இச்சம்பவத்தில் சிக்கியவரின் நண்பர்கள் நிழல் யுத்தத்தை தொடர்ந்தார்கள்.
இறுதியில் அவர்களும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். எனினும் நிழலின் சுவடுகள் தொடர்ந்தும்
படர்ந்திருந்தது.
எனக்கு அடிக்கடி மலையகத்திலிருந்து செய்திகளை தரும்
ஒரு பிரபல மலையகத் தொழிற்சங்கவாதி, ஒருநாள் மதியம் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார். தான் கொழும்புக்கு
வந்திருப்பதாகவும், கொம்பனித்தெரு ஹோட்டல் நிப்பனில் தங்கியிருப்பதாகவும், மாலை பணி முடிந்ததும் அங்கே வரமுடியுமா..?
என்று அழைத்தார்.
“ மன்னிக்கவும். நான் நீர்கொழும்பிலிருந்து கடமைக்கு வருபவன்
. வேலை முடிந்ததும் ஊர் திரும்பவேண்டும் “ என்று சொல்லி மறுத்துவிட்டேன்.
அந்த தொழிற்சங்கவாதி மலையக
தோட்டத்தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் சீவிப்பவர். அம்மக்கள் தேயிலைத் தோட்டங்களில்
அட்டைக்கடியுடன் வசதி குறைந்த லயன் குடியிருப்புகளில்
வாழ்க்கையை கடப்பவர்கள். அவர்களிடமிருந்து
சந்தா என்ற பெயரில் சுரண்டப்படும் பணம்
இவ்வாறு தொழிற்சங்கத்தலைவர்களின் தனிப்பட்ட உல்லாச தேவைகளுக்கு பயன்பட்டதையும் அப்போது காண
முடிந்தது.
மற்றும் ஒரு அரசியல் செல்வாக்கு
மிக்க மலையக தொழிற்சங்கம், தங்களது மாநாட்டுக்காக
தமிழ்நாட்டிலிருந்து நடிகர்கள் நாகேஷ், காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகை சுஜாதா ஆகியோரை
அழைத்திருந்தது.
இவர்களுக்கும் தோட்டத்
தொழிலாளர்களுக்கும் என்ன சம்பந்தம்…? தங்கள் மாநாட்டுக்கு மக்களின் வருகையை அதிகரிப்பதற்கு
அதே மக்களின் சந்தாப்பணத்திலிருந்து இவ்வாறெல்லாம் தொழிற்சங்கத்தலைவர்கள் செயல்பட்டனர்.
அந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி
ஜே.ஆர். ஜெயவர்தனாவும் அழைக்கப்பட்டார். அந்த
மேடையிலிருந்த நடிகை சுஜாதாவும் இலங்கையைச்சேர்ந்தவர் என்பதையும் தாய்மொழி
சிங்களம் என்பதையும் அறிந்துகொண்டு அவருடன் ஜே.ஆர். உரையாடினார்.
அறுபது சதவீதம் தேசத்தின்
பொருளாதாரத்துக்காக உழைக்கும் தோட்டத் தொழிலாளருடன் அவர் உரையாடியிருப்பாரா…?
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு
சமீபமாகவிருந்த உல்லாச விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த காதல் மன்னன் ஜெமினிகணேசனை
நேரில் சந்தித்து பேட்டிகாண்பதற்கு எமது அலுவலக நிருபர், கெமராமேனையும் அழைத்துச்சென்றார்.
இவர்களைக்கண்டதும் “ காதல் மன்னன் “ , விஸ்கிபோத்தலை கட்டிலுக்கு கீழே நகர்த்தி ஓடவைத்தார்.
அந்த விஸ்கியிலிருந்தது
மலையக தோட்டத் தொழிலாளர்களின் குருதி.
அக்காலப்பகுதியில் கொழும்பு
செட்டியார் தெருவில் சில பிரபல நகைமாளிகைகள் வீரகேசரிக்கு விளம்பரம் கொடுத்தன. இலங்கை வானொலிக்காக அந்த நகை மாளிகைகளின் சார்பில் வெளி அரங்குகளில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிகளும்
நடத்தப்பட்டன.
ஒரு நகைமாளிகையின் திறப்புவிழாவுக்கு
நடிகர் சுரேஷும் அவரது காதலியான நடிகை அனிதாவும்
அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொழும்பு கலதாரி மெரிடின் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
அந்த நகைக்கடை முதலாளி வீரகேசரிக்கு
விளம்பரம் கொடுத்திருந்தார். அதனால், ஆசிரியருடன் தொடர்புகொண்டு, நடிகர் சுரேஷை பேட்டி
கண்டு படத்துடன் வீரகேசரியில் எழுதுவதற்கு யாரையாவது அனுப்பிவைக்குமாறு கேட்டிருந்தார்.
ஆசிரியர் ஒரு நாள் காலையில்
என்னை அழைத்து, நடிகர் சுரேஷை பேட்டிகண்டு
எழுதிக்கொண்டுவருமாறு பணித்தார்.
“ என்ன… சொல்கிறீர்கள்….? சுரேஷ் அரசியல் தலைவரா..? அல்லது பிரபல எழுத்தாளரா..?
சமூகப்பணியாளரா..? எந்த அடிப்படையில் நான் அவரை சந்தித்து பேட்டிகாண்பது. வீரகேசரிக்கென
சினிமா நிருபர்கள் இருக்கிறார்கள். அதில் யாரையாவது அனுப்புங்கள். “ என்றேன்.
“ ஐஸே…. நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். நீர் என்ன… தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு சான்ஸ்
கேட்டா செல்லப்போகிறீர்… ? ஏதாவது சினிமா சம்பந்தப்பட்ட
கேள்விகளை அவரிடம் கேட்டுவந்து அரைப்பக்கம்
வரத் தக்கதாக எழுதப்போகிறீர். எமக்கு விளம்பரம்
வந்துள்ளது. புகைப்படம்
எடுப்பதற்கு அலுவலகத்திலிருந்து மோசஸ் உம்முடன்
வருவார். கம்பனி வாகனம் உங்களை அழைத்துச்செல்லும்
“ என்றார்.
நானும் விதியே என என்னை நொந்துகொண்டு
நண்பர் மோசஸுடன் புறப்பட்டேன்.
கலதாரி மெரிடின் ஹோட்டல் வரவேற்பு உபசரணைப் பெண்ணிடம் நாம் வந்த விடயத்தை
சொன்னதும், அவர் சுரேஷுடன் பேசுவதற்கு தொலைபேசி இணைப்புத் தந்தார்.
“ வீரகேசரி
“ எனச்சொன்னதும், தனக்கு பத்து நிமிடங்கள்
அவகாசம் தரச்சொன்னார். காத்திருந்து பத்து நிமிடத்தின் பின்னர் லிஃப்டில் மாடிக்குச்சென்றோம்.
“ பூபதி… அவர் மேக்கப்போடுவதற்குதான் அந்த பத்து
நிமிடம் கேட்டுள்ளார் “ என்றார் மோசஸ்.
அறைக்கதவை தட்டியதும் , சுரேஷ்
எம்மை உள்ளே அழைத்தார். அங்கே அவரது காதலி
நடிகை அனிதாவும் புன்சிரிப்புடன் எம்மை வரவேற்றார்.
நாம் தமிழ்ப்பத்திரிகையிலிருந்து
வந்திருப்பதை அறிந்து, தமிழ் உணர்வு பற்றி சுரேஷ் பேசத்தொடங்கினார். அக்காலப்பகுதியில்தான் ஈழ விடுதலைப்போராட்டம் வீறுகொண்டிருந்தது.
நான் மனதிற்குள் சிரித்துவிட்டு,
அவரது புதிய திரைப்படங்கள் பற்றிக்கேட்டேன்.
அவர் தனது காதலியை எமக்கு அறிமுகப்படுத்தி, அனிதாவும் திரைப்படங்களில் நடிக்கிறார்
என்றார். அனிதா, பாலச்சந்தரிடம் பணியாற்றிய
துணை இயக்குநர் அமீர்ஜானின் படம் ஒன்றிலும் நடித்திருந்தவர்.
“ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் – ஜானகி , இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் - விஜயகுமாரி ,
ஜெமினி கணேசன் – சாவித்திரி - ஏ. எல்.
ராகவன் - ராஜம், ஏவிஎம் . ராஜன் – புஷ்பலதா , விஜயகுமார் – மஞ்சுளா
போன்று நீங்கள் இருவரும் சினிமாவுக்கு வந்து காதலர்களானவர்களா….? “ என்று
ஒரு கேள்வியைக் கேட்டேன்.
மனதிற்குள் எனது ஆசிரியர்
சொன்ன நாய்வேடம்தான் உறுத்திக்கொண்டிருந்தது.
நான் அக்கேள்வியை கேட்டதும் நடிகை அனிதாவின் முகம் மாறியது. உடனே அவர் சுரேஷிடம் தெலுங்கு மொழியில் ஏதோ சொன்னார்.
அப்போது ஒருவர் வெளியே ஷொப்பிங்
செய்துவிட்டு வந்தார். அவர்தான் அனிதாவின் அப்பா என்று எமக்கு சுரேஷ் அறிமுகப்படுத்தினார்.
தாம் இருவரும் தனியே வரவில்லை என்பதையும் எமக்கு உறுதிப்படுத்தினார்.
விடைபெற்று வந்தோம்.
“ பூபதி… சும்மா சொல்லக்கூடாது… உமக்கு இலக்கியம் மட்டுமல்ல…. தமிழ் சினிமா காதலர்களையும் தெரிகிறது “ என்றார் மோசஸ்.
அன்று அவர்களுடன் என்னை நிற்கவைத்து கெமராமேன் மோசஸ் எடுத்த
படம் இன்னமும் என்வசம் இருக்கிறது. அவரது புன்சிரிப்பு மனதில் இன்னமும் தங்கியிருக்கிறது.
ஆனால், மோசஸ் இப்போது எங்கே என்பதுதான் தொலைவிலிருக்கும் எனக்குத் தெரியவில்லை
!
சுரேஷ் – அனிதாவுடனான சந்திப்பு
பற்றி வீரகேசரியில் ஏதோ எழுதினேன். இரண்டு
நாட்களின் பின்னர் காலையில் நான் வீட்டிலிருந்து வேலைக்குப்புறப்பட்டுக்கொண்டிருந்தபோது,
அம்மா வந்து “ தம்பி மூன்று பெண் பிள்ளைகள்
உன்னைப் பார்க்க வந்துள்ளார்கள் “ என்று சொன்னார்.
வெளியே வந்து பார்த்தேன்.
அவர்கள் இளம் யுவதிகள். ஏற்கனவே எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.
“ பூபதி அண்ணன்… எங்களையும் நடிகர் சுரேஷை பார்க்க அழைத்துச்செல்ல முடியுமா..? “ எனக்கேட்டனர்.
வீரகேசரியில் சுரேஷ் சம்பந்தப்பட்ட
பேட்டிச் செய்தி எனது பெயருடன் ( By Line ) வந்திருப்பது அப்போதுதான்
நினைவுப்பொறியில் தட்டியது.
“ உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா..?அவரைப்பார்த்து
என்ன செய்யப்போகிறீர்கள். அவர் இன்று காலை சென்னைக்குப்போயிருப்பார். நீங்கள் போய் உங்கள் வேலையை கவனியுங்கள் “ என்று
எரிச்சலுடன் சொல்லிக் களைத்துவிட்டேன்.
அன்று அந்தப் பிள்ளைகள் வந்திருந்த செய்தியைச் சொன்ன எனது அம்மா,
பின்னாளில் 1990 ஆம் ஆண்டு, சென்னைக்கு வந்திருந்தபோது , கவியரசு கண்ணதாசனின் மனைவி பார்வதி
அம்மாவின் மரணச்சடங்கில் நான் சந்தித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிச்சொன்னதும், “ தம்பி… தம்பி… என்னையும் ஒரு தடவை அவரைப்பார்க்க
அழைத்துச்செல்லமாட்டாயா.. ? “எனக்கேட்டார்கள்.
அந்தப்பயணத்தில் ஜெயகாந்தன், பாலகுமாரன், அசோகமித்திரன் , சிவகாமி , தி. க.சி, கவிஞர் மேத்தா உட்பட பல எழுத்தாளர்களை
நான் சந்தித்தமை பற்றி அம்மாவிடம் சொன்னேன். ஆனால், அவர்களைப்பார்க்க அழைத்துச்செல்லுமாறு
அம்மா கேட்கவேயில்லை.
“ அவர்கள் உன்னிடமிருக்கும் புத்தகங்களில் இருப்பார்கள். சிவாஜி சினிமாவில் இருக்கிறார். பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
நேரில் பார்க்கவேண்டும். “ என்ற அம்மாவின்
ஆசையை நான் நிறைவேற்றவில்லை என்ற கோபத்துடனேயே அம்மா அதன் பிறகு 13 வருடங்கள் கழித்து மேல் உலகம் போய்விட்டார்.
சினிமா வலிமையான ஊடகம்தான்.
நாம் எழுதும் படைப்பு இலக்கியம்….?????
வீரகேசரியில் எனது பணியை
காலை ஒன்பது மணிக்கு தொடங்கவேண்டும். ஆனால், அதற்கு முன்னர் 8-30 மணிக்கு அங்கே தோன்றவேண்டும்.
முதலில் அச்சாகும் மித்திரனுக்கு
செய்திகள் எழுதிக்கொடுக்கவேண்டும். அன்று 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம். ஒரு நாள்
காலை 8 15 மணிக்கு அங்கே செல்கின்றேன்.
சில மாதங்களுக்கு முன்னர்
ஆசிரிய பீடத்தில் எம்முடன் பணியாற்றிய எழுத்தாளர் திக்கவயல் தருமகுலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து
இரவு பஸ்ஸில் வந்து எனக்காக காத்திருந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தனியார்
பஸ்ஸில் பயணித்து வந்து, ஆமர்வீதியில் இறங்கி, அங்கே வந்திருக்கும் அவர் சிரமபரிகாரம் முடித்துவிட்டு
எனது மேசைக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
“ ஊரில் என்ன நடக்கிறது…? என்ன விசேடம் ? திடீரென வந்திருப்பதன் காரணம்..?
“ என்று கேள்விகளை அடுக்கினேன்.
அவர் முன்னர் பணியாற்றிய
கூட்டுறவு சமாஜம் தொடர்பான விசாரணைக்காக கொழும்புக்கு வந்திருப்பதாகவும், வடமராட்சியில் தாக்குதல் சம்பவம்
நடந்திருப்பதாகவும் அதனால், மந்திகை ஆஸ்பத்திரியின் கூரையின் ஊடாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும்
செய்திகளை அடுக்கினார்.
அவரை முன்னால் வைத்துக்கொண்டே,
யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன்.
மறுமுனையில் நண்பர் பூபாலசிங்கம்
ஶ்ரீதரசிங் பேசினார். அன்று காலையில் வெளிவந்திருந்த ஈழநாடு பத்திரிகையின் தலைப்புச்செய்திகளை
சொன்னார்.
அவற்றைக்கேட்டுவிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்த
வேறும் சில தொடர்பாளர்களிடம் கேட்டு செய்திகளை உறுதிப்படுத்திவிட்டு, யாழ் . அரசாங்க அதிபர் பஞ்சலிங்கத்தை தொடர்புகொண்டு
செய்திகளை மேலும் கேட்டறிந்தேன்.
நண்பர் தருமகுலசிங்கம் விடைபெற்றுச்சென்றார்.
யாழ். நிருபர்கள், யாழ்.
ரயில் நிலையத்திற்கு முன்பாகவிருந்த வீரகேசரி கிளை அலுவலகம் வந்து சேர்ந்த பின்னர்
மேலும் செய்திகளை கேட்டுப்பெற்று எழுதினேன்.
அதன்பின்னர் என்ன நடந்தது..?
என்பது பற்றி எனது சொல்லமறந்த கதைகள்
நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.
( தொடரும் )
letchumananm@gmail.com
No comments:
Post a Comment