பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - மீண்டும் வாழ்வேன் - ச. சுந்தரதாஸ் - பகுதி 20

 .

தமிழ் சினிமாஉலகில் பிரபல கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர் டி என் பாலு.ஆரம்ப காலத்தில் வாகன சாரதியாக பணியாற்றிய இவர் பல முயற்சிகளுக்கு பிறகு திரைப்பட கதாசிரியராக எம் ஜீ ஆர் நடித்த தெய்வத் தாய் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் பாலு கதை வசனம் எழுதிய குமரிப் பெண்,நான்,அதே கண்கள்,மூன்றெழுத்து போன்றபடங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.இதன் மூலம் நட்சத்திர கதாசிரியரானார் பாலு.இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த பாலு சிவாஜி நடிப்பில் அஞ்சல் பேட்டி 520,ஜெய்சங்கர் நடிப்பில் மனசாட்சி ஆகிய படங்களை இயக்கி விட்டு 1971ல் முதல் தடவையாக கலரில் மீண்டும் வாழ்வேன் என்ற படத்தை இயக்கினார்.

கலர் பட கதாநாயகனை திகழ்ந்த ரவிச்சந்திரனை ஹீரோவாக போட்டு உருவான இப் படத்தில் கதாநாயகியாக பாரதி நடித்தார்.இவர்களுடன் நாகேஷ்,மனோகர்,எஸ்.வரலட்சுமி,சுந்தரராஜன்,விஜயலலிதா,தேங்காய் சீனிவாசன்,குணாளன்,அஞ்சல்பெட்டி முத்தையா வீ கோபாலகிருஷ்ணன்,ஆகியோரும் நடித்தார்கள்.

ஆங்கிலப் படங்களை பார்த்து அவற்றில் உள்ள சுவாரஸ்யமான காட்சிகளை தழுவி தமிழில் தரும் பாலு இந்தப் படத்திலும் அந்த வழிமுறையை சில காட்சிகளில் பின்பற்றி இருந்தார்.தான் ஒரு காலத்தில் வாகன சாரதியாக இருந்த காரணத்தாலோ என்னவோ இந்தப் படத்தின் கதாநாயகனை வாகன சாரதியாக படைத்திருந்தார் பாலு.



மாற்றான் தாயின் புறக்கணிப்பினாலும் ,வசவுகளினாலும் வீட்டை விட்டு வெளியேறும் ராஜு டாக்ஸி சாரதியாக பணிபுரிகிறார்.ஜெகதீஷ் என்பவன் சாந்தி என்ற பெண்ணை கடத்த முயற்சிக்கும் பொது அதனை தடுக்கும் ராஜு அதன் தொடர்ச்சியாக ஜெகதீஷின் பல சதி செயல்களை அறிந்து கொள்கிறான்.அது மட்டும் அன்றி தன் தந்தை சின்னத்துரை தன் சொத்துக்களை இழக்கவும் இந்த ஜெகதீஸே காரணம் என்று அறிந்து அவனை பழி வாங்க பாடுபடுகிறான்.இவனுடன் சாந்தியும்,சிதம்பரம் என்ற நண்பனும் இணைந்து உதவுகிறார்கள்.

படத்தில் ராஜுவாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார்.இளமை தோற்றம் மாறி நடுத்தர நாயகனாக காட்சியளித்தார் அவர்.பாரதிக்கு தன் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பே கிட்டவில்லை.அதற்கு பதில் கவர்ச்சியை காட்டும் வாய்ப்பு விஜயலலிதாவுக்கு கிட்டியது.தொட்டும் தொடாதது கை பட்டும் படாதது பாடலில் அவரின் கவர்ச்சி நடனம் அதனை உணர்த்தியது.நாகேஷை பயன் படுத்த தெரிந்தவர் பாலு.இந்தப் படத்திலும் அதனை செய்திருந்தார்.




படம் முழுவதிலும் வியாபித்திருந்தவர் ஜெகதீஷாக வரும் மனோகர்.வில்லன் நடிப்பிலும் சண்டைக் காட்சியிலும் ஜமாய்த்திருந்தார் அவர்.கண்ணதாசனின் வெள்ளி முத்துக்கள் ஆடும் வெள்ளம் ,வாலிபம் தொட்டுப் பேசி நாளாச்சு ,எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒலித்தன.படத்தில் ஒரு காட்சியில் பிரபல இசையமைப்பாளர் டீ ஆர் பாப்பா தோன்றியிருந்தார்.



கே எஸ் பிரசாத்தின் திறமை அவரின் ஒளிப்பதிவில் தென் பட்டது.இரண்டு வட இந்தியர்கள் தயாரித்த மீண்டும் வாழ்வேன் பொழுது போக்கை முன்னிலைப் படுத்தி உருவாகி ரசிகர்களின் சுமாரான ஆதரவை பெற்றது.ஆனாலும் பாலு பின் நாட்களில் கமலஹாசனின் வெற்றி படமான சட்டம் என் கையில் படத்தை இயக்கி புகழ் பெற்றார் .




No comments: