முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியிலிருக்கும் மாகாண சபை விவகாரம் ! அவதானி


விடாக்கண்டர்களுக்கும் கொடாக்கண்டர்களுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமடைந்திருக்கிறது மாகாண சபை விவகாரம்.

தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து , தமிழின விடுதலைப்போராட்டமாக உக்கிரமடைந்து,  அரச தரப்பு ஆயுதப்படை இழப்புகளை சந்தித்ததையடுத்து, தென்னிலங்கையில் சிங்கள பேரினவாத சக்திகள் தமிழ் மக்களை தாக்கியும் தமிழர்களின் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவம் ஆடியதையடுத்து, அண்டை நாடான இந்தியா தலையிடத் தொடங்கியது.

அதன் தலையீடு இற்றைவரையில் நீடித்திருப்பதற்கு அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் அன்றைய இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனாவும் 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கைச்சாத்திட்ட ஒப்பந்தமே அடிப்படைக் காரணமாக விளங்குகிறது.

 அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம்


சரியாக அமுலாகவில்லை.

இலங்கையில்  ஒன்பது மாகாணங்கள். தமிழர் தாயகம் எனச்சொல்லப்படும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் வகையில்தான்  34 வருடங்களின் முன்னர்  மாகாண சபைத் தேர்தல் நடந்தது.

ஆனால், அந்த ராஜீவ் – ஜே. ஆர். ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதமர் பிரேமதாச அதிபராக பதவியேற்றதும்,  தம்மைப்போலவே அந்த ஒப்பந்தத்தை எதிர்த்த விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை  My Boys என அழைத்து கொழும்பில் சந்திப்புகளை நடத்தினார்.

இறுதியில் என்ன நடந்தது..?

வடக்கு – கிழக்கு மாகாண சபையும் சிதறுண்டது.  தமிழ்நாட்டில் -ஶ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தியும் இலங்கையில் தலைநகரத்தில் பிரேமதாசவும் தற்கொலைக் குண்டுதாரிகளினால் சிதறுண்டுபோனார்கள்.

 

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண           சபையானது குறிப்பிட்ட  அந்தந்த மாகாணத்தின் விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், வீதிப் போக்குவரத்து, சமூக சேவை  முதலானவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கவேண்டும்.

இவை தவிர  பொலிஸ், காணி அதிகாரமும்  அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.   ஆனால், மத்திய அரசு அதற்கு தொடர்ந்து மறுத்துவருகிறது.

கடந்த 34 வருடகாலமாக மறுத்துவருகிறது.

 இடையில் மக்கள் விடுதலை முன்னணி  2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து, வடக்கையும் கிழக்கையும் பிரித்தது.

அதனால்,  இரண்டு மாகாணங்களும் தனித்தனி நிருவாகக் கட்டமைப்புக்குள் வந்து சபைகள் இயங்கின.

இந்தப்பின்னணியில் நாம் ஒரு முக்கிய விடயத்தை கவனிக்கவேண்டியுள்ளது.  1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானபோது, மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு தடைசெய்யப்பட்ட அவ்வியக்கம் சுமார் 19 வருடங்களின் பின்னர், வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையை பிரிப்பதற்கு வழக்குத் தொடுக்கும்வரையில் தமிழ் கட்சிகள் தேங்காய் துருவிக்கொண்டிருந்தனவா..?

1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தச்சட்டமும் வந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தன…?
கடந்த பொதுத்தேர்தலின்போது எத்தனை இருந்தன…? இடைப்பட்ட காலத்தில் எத்தனை கட்சிகள் குட்டிகளை ஈன்றன..?

அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களினால் இதுவரையில் மக்களுக்கு விளைந்த நன்மைகள் என்ன…?

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்களாகவிருந்த டெனீஸ்வரன் – சத்தியலிங்கம் ஆகியோருக்கும் முதல்வர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த இழுபறிகள் பற்றி பழைய ஊடகங்களை பார்த்து தெரிந்துகொள்ளமுடியும்.

விக்கியும் டெனீஸ்வரனும் நீதிமன்றம் வரையில் சென்றார்கள். விக்கி, தன்னை தெரிவுசெய்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கேக “ டாட்டா   காட்டிவிட்டு தனிவழி சென்றார். இறுதியில், யாழ். மாவட்டத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தெரிவாகி நாடாளுமன்றமும் சென்றார்.

அந்த மாகாண சபையின் மூலம் முதல்வர் விக்கி,  மக்களுக்கு செய்த உருப்படியான வேலைத்திட்டங்கள் என்ன..?

தமிழ் மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அதிகாரப் பரவலாக்கத்திற்காக நடைமுறைக்கு வந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையை இயங்கவிடமால் தடுத்தவர்கள் யார்..? யார்…?

ஜே.ஆர். ஜெயவர்தனா  எதற்காக  வடக்கு – கிழக்கு தவிர்ந்து ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் மாகாண சபை நிருவாகத்தை அறிமுகப்படுத்தினார். ..?

இறுதியில் தெளிவான உண்மை என்ன..?

அதிகாரமற்ற இந்த மாகாண சபைகள் அதற்கு தெரிவாகின்றவர்களின் பைகளை நிரப்பவேயன்றி,  மக்களின் தேவையைப் போக்குவதற்காக அல்ல.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொவிட் பெருந்தொற்றால் இறந்த மக்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு மின் மயானங்களின் பற்றாக்குறை வடக்கிலும் – கிழக்கிலும் நேர்ந்தபோது, அச்சடலங்கள் அநுராதபுரத்திற்கும் பொலன்னறுவைக்கும் சென்ற செய்திகளை அறிவோம்.

அடுத்த ஆண்டு மாகாண சபைத்தேர்தல் நடைபெறும் என்ற செய்திகள் கசியத்தொடங்கியதும், சில சிரேஷ்ட சிங்களத் தலைவர்களின் வாரிசுகள் அந்தத் தேர்தலில் களமிறக்கப்படவிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இனி வடக்கு மாகாண சபையில் மாவை சேனாதிராஜாவா, சி. வி. கே. சிவஞானமா…? அல்லது மீண்டும் விக்கினேஸ்வரனா..? என்ற பட்டிமன்றம் தொடங்கிவிடும்.

இந்தப்பின்னணிகளில் அதிகாரமற்ற மாகாண சபைகளினால் மக்களுக்கு என்ன பிரயோசனம்..?  இம்மாகாண சபைகளின் இயக்கத்திற்காக  வீணாக செலவிடப்படும்  பணம் எவ்வளவு..? முதலமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சர்களுக்கான வேதனம் எவ்வளவு..? அவர்களது மெய்ப்பாதுகாவலர்களுக்காக  ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு..? முதலான விபரங்களை இலங்கை அரசு பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்துமா..?

அத்துடன் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின் அதற்காக தேர்தல் ஆணையம் செலவிடவிருக்கும் தொகை எவ்வளவு..?

மொத்தத்தில் யார் யாரோ சுரண்டிக்கொழுப்பதற்குத்தான் இந்த மாகாண சபைகள் வழிகோலும் . அல்லது முன்னர் வடக்கில் டெனீஸ்வரன் – சத்தியலிங்கம் – விக்கினேஸ்வரன் நடத்திய பட்டிமன்றங்களுக்கும் நீதிமன்றுகளில் வழக்காடு மன்றங்களுக்கும்தான் மீண்டும் பாதை அமைத்துக்கொடுக்கும் .

நிருவாகத்திறமையுள்ள ஆளுநர்களையும்,  மக்கள் நலன்பேணும் அதிகாரிகளையும் பணியாற்றவைத்து மாகாணங்களின் அபிவிருத்தியை மேற்கொள்வதா..?

அல்லது வெறும் வெற்றுவேட்டு அரசியல்வாதிகளின் கைகளில் மாகாணங்களை ஒப்படைத்து மக்களின் வரிப்பணத்தை விரையமாக்குவதா..?

இதில் எது சிறந்தது..?  என்பது பற்றி மக்களே தீர்மானிக்கத்தக்கதாக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளை சமூக நலன் கருதியவர்கள் முன்னெடுப்பார்களா..? 

---0---

 

 

 

 

 

No comments: