தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும் ! [ தேடல் இரண்டு ]


 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


தேடப்படாத காவியங்கள் வரிசையில் வளையாபதிபோல்

இருப்பதுதான் குண்டல கேசியாகும். வளை யாபதி ஒன்பதாம் நூற்றைண்டைச் சேர்ந்தது. குண்டலகேசி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாய் இருக்கிறது. வளையாபதியின் ஆசிரியர் இன்னார் என்று அறியா நிலை இரு க்கிறது. ஆனால் குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார் என்று காட்டப்படுகிறார்.எழுபத்து இரண்டு பாடல்களுடன் வளையாபதி அமைய குண்டலகேசியோ மிகக்குறைந்த அளவில் பத்தொன்பது பாடல்க ளுடன் இலக்கி யமாய் கவனிக்கப்படுகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயா கும்.வளையா பதி சமணத்தைப் பேச குண்டலகேசியோ பெளத்தத்தைப் பேசுகிறது.

  சிலம்பிலும் பெண்தான்.மணிமேகலையிலும் பெண்தான். சிந்தாமணியிலும் பெண்ணே. குண்டலகேசிலும் பெண்தான் வந்து முன்னிற்கிறாள். பெண்கள் இல்லை  என்றால்  காப்பியங்களே இல்லை என்று சொல்லும் வகையில் காப்பியங்களைக் கொண்டு செல்லும் விதத்தில் பெண்களே இருப்பதும் நோக்கத்தக்தேயாகும்.அதே வேளை வணிகர் குலம் என்பதும் தொடர் நிலையாக இருப்பதையும் காண்கின்றோம்.வளையாபதியில் வருகின்ற கதாநாயகன் வணிகர் குலத்தவன். குண்டலகேசியின் கதாநாயகியும் வணிகர் குலத்தவள்தான். ஆனால் கதையின் போக்கு மட்டும் மாறுபடுகிறது.

  வசதிமிக்க வணிக குலத்துப் பிறந்தவள் பத்தா சீதா. இவளின் காதல் பொருந்தாவிடத்தில் சென்று விடுகிறது. அதனால் அவளின் வாழ்வும் வசந்தத்தை இழந்து விடுகிறது.


வசதி யான குடும்பத்தைச் சேர்ந்தவள் - கொள்ளை அடிக்கும் ஒருவனை விரும்புகின்றாள். அரசனால் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டவனைக் கண்டதனால் காதல் கொண்டு அவனையே மணந்திட நினைந்து விடுகிறாள். மகளின் ஆசையினை தந்தை நிறை வேற்றும் பொருட்டு - கொலைக்களம் அனுப்பபட்ட கொள்ளைக் காரனைப் பொருளைக் கொடுத்து மீட்டு மகளுக்கு மணம் முடித்து வைக்கிறான். கள்வன் காதல் கணவ னாய் வந்தமை பத்தாவுக்கு பெரும் ஆனந்தமாய் அமைகிறது.

  களவிலே ஊறிப்போனவனுக்கு களவினை மறந்து


வாழ்வது என்பது சற்றுக் கடினந்தான்.வீட்டிலேயே கைவரிசையினைக் காட்டிட முனைகிறான். இதனால் மனஸ்தாபம் உருவாகிறது. முடிவில் மனைவி யையே கொன்றுவிடத் திட்டமும் இடுகிறான். அவளைக் காதல் மொழிகள் கூறி மலை உச்சிக்கே அழை த்துச் சென்று கொன்றுவிடத் திட்டமிட்டு அவளை மலை உச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை அறிந்து கொண்ட பத்தா - தந்திரமாக அவனை மூன்றுமுறை வலம் வருபோல செய்து முடிவில் தன்னைக் கொல்ல வந்த தனது காதல் கணவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள் என்று கதை அமைகிறது.

 

  வாராய் நீ வாராய்

  போகுமிடம் வெகு தூரமில்லை

  நீவாராய்

 

  ஆகா மாரிதம் வீசுவதாலே

  ஆனந்தம் பொங்குதே மனதிலே

 

    இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்

  கலந்துயிர் விண்ணினைக் காண்பாய்

  அமைதி நிலவுதே

  சாந்தம் தவழுதே

   
    முடிவிலா மோன நிலையை நீ

    மலை முடிவில் காணுவாய்

   ஈடிலா அழகு சிகரம் மீதிலே

  கண்டு இன்பமே கொள்வோம்
 
  இன்பம் அடைந்தே இகமறந்தே

  வேறு உலகம் காணுவாய் அங்கே

  
புலியினைத் தொடர்ந்தே

 புதுமான் நீயே

 

இந்தப் பாடல் வந்து எழுபத்து ஒரு ஆண்டாகிறது. ஏழாம் நூற்றாண்டில் வந்த குண்டலகேசிக் கதைக்கு ஏற்ற பாடலைக் கேட்கின்ற வேளை கதையின் காட்சி கண்முன்னேயே வந்து நிற்கிறதல்லவா காவியக்காட்சி வெள்ளித் திரையில் மந்திரிகுமாரியாய் மலர்ந்தது என்பதை நினைத்துப் பார்ப்போம்.

  சமணமும் பெளத்தமும் வாழ்க்கை நிலையாமையினை வலியுறுத்தும் பாங்கிலேதான் கருத்துக்களைக் கொட்டியபடியே இருக்கும். அந்த வகையில் காதலித்தவன் வஞ்சகம்   செய்தபடியால் குண்டலகேசியின் அப்போதைய மன நிலைக்குச் சமணந்தான் மருந்தாய் அமைந்தது எனலாம். சமணப்பள்ளியை அடைந் தாள். சமண சம்பிரதாயப்படி அவளின் கூந்தல்கள் களையப்பட்டன. மழித்த தலையுடன் சமணப்பள்ளியில் இருந்தாள். சமணத்தில் ஊறிய அவள் சமணத்தை எதிர்ப்போரை யெல்லாம் வாதித்திட்டு நிற்கும் நிலை க்கு வந்து நின்றாள். ஆனால் பெளத்தத்திடம் அவள் வாதம் எடுபடா நிலையில் முடிவில் அவள்  பெளத் தத்துக்கே மாறிவிடாள். மழிக்கப்பட்ட அவளின் கூந்தல் சுருண்டு வளர்ந்தது.வளைந்து குண்டலம் போல் அவளின் கூந்தல் காணப்பட்டதால் குண்டலகேசி என்றே அழைக்கப்ட்டாள். அந்தப் பெயரே இக்காப்பியத் துக்கும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

  யாக்ககை நிலையாமைகூற்றுவனின் கொடுமை,வாழ்க்கையின் நிலையாமைஉடம்பின் இழிவுஎன்பன பற்றியெல்லாம் குண்டலகேசி தன் கருத்துக்களைப் புகன்று நிற்கிறது,

 

  பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

  காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

  மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி

  நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

 

நிலையாமையினை விளக்குதற்கு குண்டலகேசி ஆசிரியர் தருகின்ற ஒவ்வொரு படிமுறையும் அவரின் பேராளுமை யினையே காட்டி நிற்கிறது எனலாம்.இதைவிட இலகுவாய் நிலையாமையினை விளக்கிடல் முடியுமா என்றுதான் எண்ணிப் பாருங் களேன் ! செத்துப்பிழைத்துக் கொண்டே ஒவ்வொரு நாளுமே இருக்கின் றோம்.ஆனால் அதற்காக யாருமே அழுவதே இல்லை.இந்த உடலைவிட்டு உயிர்பிரிந்த போது மட்டும் ஏன்தான் அழுகிறார்களோ தெரியவில்லை என்று - யாவரும் விழித்திட வேண்டும் என்று நிலை யாமையினை எப்படி நாசுக்காய் காட்டுகிறார் குண்டலகேசி ஆசிரியர்.

 

    மறிய மறியும் மலிர்ப மலிரும்

    பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்

    அறிவது அறிவர் அழுங்கார் உவவார்

    உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

 

நயமும் நலமும் பொதிந்த பாடல். பாடலின் அமைப்பே அருமையோ அருமை ! சொல்லும் பாங்கும் சொல்ல தேர்ந்தெடுத்த சொற்களின் பாங்கும்அந்தச் சொற் களைப்  பாடலாய்க் கோர்த்த பாங்கும் வியக்காமல் இருந்திடவே முடியாது. அழுதாலும் பயனில்லை. ஆனந்தப் படுவதாலும் பயனில்லை. வருவதும் வரும். வந்தது வந்ததுபோல் போயும் விடும்.போய்விடும் பொழுது புலம்புவதால் ஆவது எதுவுமே இல்லை. என்ன அருமையான வாழ்க்கைத் தத்துவம். தேடப்படாத குண்டலகேசியா இப்படிச் சொல்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா !

 

  மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று வாய்மை

  நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா

  விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த

  கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்

 

கறை என்பது மனிதராயினும் தேவராயினும் ஏன் கண்ணுதற் கடவுளாகிய சிவனே ஆயினும் கறை என்பது கறைதான்.தவறு என்றால் அங்கு எந்தவிதப் பாகுபாட்டுக்கும் இடமே இல்லை. என்று பார்க்கும் குண்டலகேசியின் பார்வை சுட்டெரிக்கும் தூய்மையான பார்வையாய் தெரிகிறதல்லவா !

                                           ( தேடல் தொடரும் ) 

No comments: