எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 65 “ எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் “ " மீர் துர்ஷ்பா ஃபெஸ்டிவல், சால்யூட் ஃபெஸ்டிவல் " மாஸ்கோ வீதிகளில் ஒலித்த பாடல்கள் முருகபூபதி

 


மாஸ்கோவில் அனைத்துலக மாணவர், இளைஞர் விழா லெனின்  ஸ்ரேடியத்தில் தொடங்குவதற்கு முன்னர்  பிரம்மாண்டமான   ஊர்வலம்  நாம் தங்கியிருந்த மாஸ்கோவில் புகழ்பெற்ற இஸ்மாயிலோவா  நட்சத்திர விடுதியின் முன்னாலிருந்து புறப்பட்டது.

 எமது வழிகாட்டித் தோழர் தோழியரிடமிருந்து  அந்த விழாவை வாழ்த்தும் கோஷங்களை ருஷ்ய மொழியில் எவ்வாறு உச்சரிப்பது என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

 156 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் அணிவகுத்துச்சென்ற நீண்ட ஊர்வலம் அது.

 அந்த நாட்டின் பொது மக்கள் வீதியின் இருமருங்கும் நின்று


கையசைத்து எமக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களில் குழந்தைகளும் இடம்பெற்றனர்.

 எனக்கு அக்குழந்தைகளை பார்த்ததும் எனது குழந்தைகளின் ஞாபகம் வந்துவிட்டது.   ஒரு குழந்தை என்னைப்பார்த்து சிரித்து கையசைத்தது.  அந்தச்சிரிப்பு என்னை கொள்ளை கொண்டது.  அருகே சென்று  அதன் தந்தையிடம்  குழந்தையைக்  கேட்டு வாங்கி தூக்கிக்கொண்டேன்.

 எனது செயல்கண்டு அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.  நானும்

"  மீர் துர்ஷ்பா ஃபெஸ்டிவல்,   சால்யூட்  ஃபெஸ்டிவல் "  என்று உரத்துக்  குரல் எழுப்பினேன்.  அந்தக்குழந்தையின் தந்தையும் தாயும் என்னுடன் சிறிது தூரம் நடந்து வந்தார்கள்.

 அந்த ஊர்வலத்தில் நடந்து   சென்றுகொண்டிருந்த போது,  இலங்கையிலிருந்து  வந்த சமசமாஜக்கட்சிப் பிரதிநிதி ஒருவர்   என்னைத்தேடிவந்து   ஒரு  செய்தி சொன்னார்.

 அமெரிக்காவிலிருந்து  ஒரு  இளம்பெண்  வந்திருப்பதாகவும்.   அவருக்கு நன்றாகத்  தமிழ்பேசத்தெரியும்  என்றும்  தமிழ்  தெரிந்த                 ஒருவரைத்தேடுகிறார்   எனச்சொல்லிக்கொண்டு  என்னை           அவர்  நின்ற  இடத்துக்கு அழைத்துச்சென்று   அறிமுகப்படுத்தினார்.

 


என்.எம் வேர்போங்   என்ற   அந்த  அழகிய  அமெரிக்க               மங்கை, வாஷிங்டன்   நகர  மேயரின்  அலுவலகத்தில்                         ஸ்டெனோவாக பணியாற்றுவதாக  தமிழில்  பேசி  தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்தும்   அந்த                                 ஊர்வலத்தில்  என்னுடன்  அழகிய  தமிழிலேயே                                     பேசிக்கொண்டு  வந்தார்.

 அவருடைய  பேச்சுமொழி  1983  இல்  இலங்கை  வந்த               ராஜம்கிருஷ்ணன்  பேசுவது  போன்று  அழகாக  இனிமையாக இருந்தது.    கலகலப்பாக  உரையாடிய  அந்த  அமெரிக்கப்   பிரதிநிதி தமிழ்நாட்டில்   இரண்டு  வருடங்கள்  அமெரிக்கன்          கல்லூரியில் கற்றிருக்கிறார்.    அத்துடன்  மதுரையில்  பல           மாதங்கள் தங்கியிருந்து  கிராம மக்களுடன்                                              பழகியிருக்கிறார்.

 அவரை   இலங்கை  சிங்களப் பிரதிநிதிகள்  சிலருக்கு 


   அறிமுகப்படுத்தியபொழுது,                    அவர்களுடனும்  அவர்  தமிழில் உரையாடத்தொடங்கி விட்டதால்             அவர்கள்  சங்கடப்பட்டனர். 

 "  தமக்குத்  தமிழ்   தெரியாது"    என்று  சர்வதேச   மொழியில்       சிங்களப்பிரதிநிதிகள்     பதில் சொன்னார்கள்.

 அவர்கள்   அகன்றதும்,  "  இலங்கையில்  இரண்டு  மொழிகள்தானே இருக்கிறது.   எல்லோரும்  படிக்கலாம்தானே  "                   


என்றார்  அந்த அமெரிக்க   யுவதி.

 "அனைவரும்   படிக்கலாம்.  ஆனால்,  படிக்கவில்லை"   என்று சொல்லி   உதட்டைப்பிதுக்கினேன்.

 அன்றையதினம்  அவரை  படம்  எடுப்பதற்கு  விரும்பினேன்.  ஆனால்,  வேண்டாம்   என்று  அவர்  மறுத்தது  எனக்கு  ஏமாற்றமாக  இருந்தது.

அதற்கான  காரணங்களைப்பற்றி   நான்  பின்னர்  ஆழ்ந்து  யோசித்தேன்.

 இதுபோன்ற   மற்றும்  ஒரு  அனுபவம்தான்,   மாஸ்கோ                 


  முன்னேற்றப்பதிப்பகத்தில்    கலாநிதி  விதாலி ஃபுர்ணிக்கா            எனக்கு இலங்கையில்    இருப்பதாக  அறிமுகப்படுத்திய               சோவியத்தூதரக தகவல்   பிரிவு  அதிகாரி  தோழர்  ஸ்ரோகன் தொடர்பான  சந்திப்பு.

 இந்தப்பதிவில் குறிப்பிட்ட ஸ்ரோகனுடன் நண்பர்கள் கே. கணேஷ், பத்மநாப ஐயர் நிற்கும் படங்களை பார்க்கலாம்.

 அவரை இலங்கை  வந்ததும்  சந்தித்து,  நான்  எடுத்த  பேட்டி,   


வீரகேசரி பத்திரிகையில்   அச்சுக்குத்தயாராகி  இறுதி                 நேரத்தில்  நீக்கப்பட்டது. இதுபற்றி   எனது  சொல்ல மறந்த        கதைகள்  நூலில்  விரிவாக எழுதியிருக்கின்றேன்.

 தூதரகங்களில்  பணியாற்றும்  வெளிநாட்டினர் தமக்குத்தெரிந்த -பரிச்சியமுள்ள   மொழிகள்  பற்றி  வெளியில்   வாய்  திறக்கக்கூடாது என்பது   அவர்களுக்கு  தூதரகங்களில்  விதிக்கப்பட்ட  எழுதாத  சட்டம்  என்பது  எனக்கு  பின்னர்தான்  தெரியவந்தது.

 இந்தச்சம்பவத்திற்கும்   மாஸ்கோவில்  என்னுடன்  அழகிய            தமிழில் பேசிய   அமெரிக்க  பிரஜையான   அந்த  இளம்பெண்ணுடா


ன சந்திப்புக்கும்   இடையே  இருந்த  ஒற்றுமை                    தெளிவாகியது.

 வெளிநாட்டு தூதுவர்களை ஏன் இராஜதந்திரிகள் என அழைக்கின்றோம் என்பது பற்றி இதனைப்படிக்கும் வாசகர்களும் தெரிந்துகொள்வார்கள்.

 மாஸ்கோ பயணத்தில்  தமிழக அரசியல் கட்சியைச்சேர்ந்த பலரையும் இந்திய பத்திரிகையாளர்களையும் சந்தித்தேன்.

 இந்திய பிரதிநிதிகள் குழுவில் 500 பேர். அதில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 50 சட்ட மன்ற உறுப்பினர்கள்.  கலாசாரக்குழுவில் 60 பேர்.  இந்திய இளைஞர் காங்கிரஸிலிருந்து 225 பிரதிகள்.

 


இந்திரா காங்கிரஸ் தங்கபாலு,  இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த  சீதாராம யச்சூரி,  தி.மு.க.வைச்சேர்ந்த மிசா கணேசன்.  குச்சுப்புடி நடனத்தில் கின்னர்ஸ் சாதனை புரிந்த நடன நர்த்தகி  சரளகுமாரி… இப்படிப் பலர்.

 அக்காலப்பகுதியில்  இலங்கை அரசியல்வாதிகளில் எனக்கு நம்பிக்கைக்குரியவராகத்திகழ்ந்தவர் விஜயகுமாரணதுங்க.  மூவின மக்களாலும் நேசிக்கப்பட்டவர்.   மாஸ்கோ இஸ்மாயிலோவா நட்சத்திர விடுதியில் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறை அவரும், அவருடன் வந்த ஒஸி அபே குணசேகராவும் தங்கிய அறை.  அதே தளத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த வஜிர பெல்பிட்டவும் இதர தோழர்களும் தங்கியிருந்தனர்.

 இந்தியப்பிரதிகளுக்கு விஜயகுமாரணதுங்கவை அறிமுகப்படுத்தினேன்.

 பிளிட்ஸ் இதழிலிருந்து வந்த பத்திரிகையாளர் அவரை பேட்டிகண்டார்.

 எமது நடமாட்டங்களை  ஒரு சோடிக்கண்கள்


                   அவதானித்துக்கொண்டிருந்தன.  அந்தக்கண்களை கொழும்பில்  தோமஸ் குக்கில் பார்த்தேன்.  மீண்டும் விமானம் ஏறும்போதும் பார்த்தேன்.

 அந்த நபர் குறித்து, எம்முடன் வந்த சில இடதுசாரி பிரதிநிதிகளுக்கும் சந்தேகம் வந்தது.  அவரது நடவடிக்கைகளிலிருந்து இலங்கை அரசின் புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்தவராக இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு வந்தது.

 ஒரு கட்டத்தில் அவருக்கும் மற்றும் சிலருக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் வந்தது. ஆனால்,  வெளிநாட்டில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று அந்த நபருக்கு பயிற்சி தரப்பட்டிருக்கலாம் என்பதையும் ஊகிக்க முடிந்தது.

 “ அவர் தனது கடமைகளையும் நாம் எமது கடமைகளையும் செய்வோம்.    என்றார் விஜயகுமாரணதுங்க.  

 மாஸ்கோ விழாவின் இறுதி நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தபோது,  அங்கிருந்த இலங்கைத்தூதுவர் எம் அனைவருக்கும் இராப்போசன விருந்தளித்தார். அதில்  அன்றைய கல்வி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்காவும் கலந்துகொண்டார்.

 விருந்தின் இறுதியில் அவரும் இணைந்து பாட்டுப்பாடினார்.  இலங்கையில் எதிரும் புதிருமாக  காட்சி தரும் அரசியல் கட்சிகள் அந்த விருந்தின்போது பேதங்கள் அற்று கூடிக் குதூகளித்தனர்.

 மாஸ்கோவில் 1957 ஆம் ஆண்டு நடந்த  அதே உலகவிழாவுக்காக நிர்மாணிக்கப்பட்ட  லெனின் ஸ்ரேடியத்தில்   1985 இல் நாம் கலந்துகொண்ட  விழா தொடங்கியபோது விண்வெளிவீரர் யூரி ககாரினின் புதல்வி தீபம் ஏற்றினார்.

சோவியத் அதிபர் கொர்பஷேவ் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

இந்த விபரங்கள் யாவும் எனது பயண நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளது.

 மாஸ்கோ விமான நிலையத்தில் நாம் வந்திறங்கிய போது எம்மை அழைத்துச்செல்ல வந்த பஸ் வண்டிகளில் ஒலித்த பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பை இங்கே தருகின்றேன்.

 இந்தப்பாடலின் மூலப்பிரதி ஆங்கிலத்தில் எமக்குத் தரப்பட்டது.  அதனை நாடு திரும்பியதும் எம்முடன் பணியாற்றிய கவிஞர் சிவலிங்கத்திடம் கொடுத்து மொழிபெயர்த்தேன்.  அதனை இங்கே தருகின்றேன்.

 “ எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல்

 இளமையதன் புதுப்பாடல்….. இளமையதன் புதுப்பாடல்.

 எதிரிடைகள் மோதிவரும் இன்னல் மிகு நாட்களிலே இனிய சமாதானக் கனவுகளை எங்கெங்கும் வளர்ப்பதற்காய்

இணைந்துள்ள பிள்ளைகள் நாம்..

 வெவ்வேறு நாடுகளில் விளையும் சுவாத்தியத்தில் அந்தந்த இனங்களிலே சமாதான விளைச்சலுக்காய் முளைகொண்ட நாற்றுக்கள் நாம்….

 எங்கெங்கும் பெருகியெழும் எங்களது இளம் குலமே நேர்மையுடையிரேல் நீங்களெலாம் எங்களது நீளணியில் வாருங்கள்…

 இங்கினிய எங்களது நண்பர்கள் நீர் வந்துமது பாடல்களை வளம் குலுங்கப்பாடுங்கள் எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல், இளமையதன் புதுப்பாடல்….

 வசந்தத்தின் குளிர்த்தென்றல் வந்து தரை சமுத்திரத்தில் தவழ்ந்தசைந்து செல்வதுபோல் மிதந்துவரும் புதுப்பாடல் நாமெல்லாம் நண்பர்களே நற்சுத்த சத்தியங்கள்-நீதிக்காய் போராடப் பிறந்தவர்கள்!

 எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல்..

 அருகருகாய் நின்று அடுகளங்கள் ஆடியதை நின்று நினைக்கின்றோம். செங்குருதியாலேதான்

எங்களது தோழமை இறுகியது

என்றெனினும் இளகிக் குலையாது.

 எங்களது தோழர்களே இன்னும் இனிய மகிழ்ச்சியின் பக்கங்களை எதிர்வரும் யுகத்துக்காய் எழுதிக் குறையின்றி நிரப்புங்கள்.

 பெருகியெழும் அந்த யுகத்தின் அழகு, மகிழ்ச்சி, மகத்துவங்கள் அத்தனையும் உம் கரத்தினில் தங்கியிருக்கிறது.

 உண்மையிது இளம் நண்பா நெஞ்சின் உறவோடு மீண்டும் நாம் பாடுவோம் எங்களது சத்தியத்தின் உறுதி சரியாது முடிவு வரை

உயர்த்திப் பிடியுங்கள் உமது புனித வாசகங்களை

எங்களது இளையவரை துணிவுள்ள வீரர்களை மரணக் குழிக்குள் மண்போட்டு மூடிவிட இருளின் முழுப்பலமும் என்றும் தயார் நிலைதான்.

 நேர்மை நிறைந்தோரே நீங்களெலாம் வாருங்கள் எங்கள் அணிகளிலே இணைந்து வந்து சேருங்கள் இளம் இனிய நண்பர்களே பாடுங்கள் எம் இனிய பழுதற்ற பாடலிதை..

 எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல்.

 மாஸ்கோ விழாவில் எனக்கு  மார்பில் அணியும்   நினைவுப் பதக்கங்கள் கிடைத்தன.  நாடு திரும்பியதும் வீரகேசரி ஆசிரிய பீடத்திலிருந்தவர்களுக்கு அவற்றைக்கொடுத்து  எனது பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன்  வாரவெளியீட்டில் தொடர்ந்து எழுதினேன்.

நண்பர் தெளிவத்தை ஜோசப்,  தினகரன் வாரமஞ்சரியில் எனது பயணம் பற்றி குறிப்பு எழுதியிருந்ததுடன், தமது மலையக எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் கொழும்பில் மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் வரவேற்பு சந்திப்பு தேநீர் விருந்துபசாரம்  நடத்தினார்.

இலங்கை வானொலி என்னை கலையகத்திற்கு அழைத்து நேர்காணலை ஒலிபரப்பியது.

இலங்கை -  ஜெர்மன் நட்புறவுச்சங்கமும் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவும்  அடுத்தடுத்து ஒரு மாலைவேளையில் இலங்கை பிரதிநிதிகளை அழைத்து சந்திப்பும் விருந்துபசாரமும் நடத்தியது.

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி  உயர்தர வகுப்பு மாணவர்கள், என்னையும், என்னைப்போன்று வெளிநாடொன்றுக்கு சென்று திரும்பியிருந்த இலக்கிய சகோதரி திருமதி யோகா பாலச்சந்திரனையும் அழைத்து பேசவைத்தனர்.

யாழ்ப்பாணம் சென்றதும், மல்லிகை ஜீவா, தமது மல்லிகைப்பந்தல் சார்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் இல்லத்தில் மூத்த எழுத்தாளர் வரதர் தலைமையில் ஒரு சந்திப்பை நடத்தினார்.

யாழ். ஈழநாடு செய்தி வெளியிட்டது.

வீரகேசரியில் எனது பயணத் தொடரை வாசித்துக்கொண்டிருந்த ஒரு கத்தோலிக்க தமிழ் இளைஞர் ஒருநாள் வீதியில் என்னை சந்தித்து  “ பூபதி அண்ணா  எனது வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும்  “ என்று அழைத்துச்சென்றார்.

அவரது வீடு அந்தக்குடும்பத்தின் ஏழ்மையை காண்பித்தது. தென்னோலையால் கூரையும் சுவரும் அமைந்தது.  அந்தச்சுவரில்  “ சோஷலிஸம் மரணத்தைப்போன்று நிச்சயமானது. என்றோ ஒரு நாள் உலகை அணைத்துக்கொள்ளும்   என்று நான் எனது தொடரில் எழுதியிருந்த வசனத்தை  காகிதத்தில்  பெரிய எழுத்தில் எழுதி காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்தத்தகவலை எனது சமதர்மப்பூங்காவில் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

சென்னையில் கவிஞர் வாலியை சந்தித்தபோது, அந்த நூலை கொடுத்தேன். மறுநாள் மீண்டும் அவரை சந்திக்கநேர்ந்தது.

அந்த  நூலை  தான் முழுமையாகப் படித்துவிட்டதாகவும், அதில் குறிப்பிட்ட வசனம் தன்னையும் பெரிதும் கவர்ந்ததாகவும் சொன்னார்.

தொடர்பாடல்களை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கும் பயணங்கள் பெரிதும் உதவும். 

விஜயகுமாரணதுங்க,  மாஸ்கோவில் இரண்டு வாரங்கள் என்னுடன் உறவாடியதையடுத்து, தனது மக்கள் கட்சி வெளியிடவிருக்கும் தமிழ்ப்பத்திரிகைக்கு ஆசிரியராக வருமாறு அழைத்தார்.

அவருக்கு அவரது கட்சி அரசியலுக்கு தமிழ் இதழ் தேவையாகவிருந்தது.

ஏற்கனவே மக்கள் விடுதலை முன்னணியின் செஞ்சக்தி பத்திரிகை,  சமகாலத்தில் இலங்கையில் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும்  இலங்கை ஆசிரியர்  சங்கத்தின் ஆசிரியர் குரல் ஆகிய பத்திரிகைகளில் இணைந்திருந்தேன்.

 வீரகேசரியில் பணியாற்றியவாறு  இவ்விதம் வெளியே நான் இயங்கியதற்கு நான் வரித்துக்கொண்ட அரசியல் கொள்கைதான் காரணம்.

இலங்கை நிலைமைகள் படிப்படியாக நெருக்கடியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

புலனாய்வுப்பிரிவினர் தமது கண்களுக்குள் எண்ணெய் விட்டு துலாவிக்கொண்டிருந்தனர்.

வட இலங்கை – தென்னிலங்கை முற்போக்கு தீவிரவாதிகள் இணைந்து  நாட்டையே  மாற்றப்போகிறார்கள் என்ற கற்பனையில் அவர்கள் மிதந்தனர்.

அந்தக்கற்பனையாவது நிஜமாகட்டுமே என்ற கனவில் நான் இருந்தேன்.

ஆனால், கற்பனை கனவாகவே முடிந்தது.  வடக்கிலும் ஒற்றுமை இல்லை. தெற்கிலும் அது இல்லை. 

1987 இல் நாட்டை விட்டு வெளியேறினேன்.

முதலில் விஜயகுமாரணதுங்கவும், பின்னர் ரோகண விஜேவீராவும் கொல்லப்பட்டபோது, அவுஸ்திரேலியாவிலிருந்து மனதிற்குள் அழுது தீர்த்தேன்.

எங்கள் தேசம் என்ற சிறுகதையை எழுதினேன். அந்தப்பெயரில் வெளியான தொகுப்பிலும் இக்கதை இடம்பெற்றது.

அச்சிறுகதை அவுஸ்திரேலியா மரபு இதழில் வெளிவந்தது.

( தொடரும் )

 

 

No comments: