உலகச் செய்திகள்

புது வகை கொரோனா 42 நாடுகளில் பாதிப்பு 

தெற்காசிய நாடுகளுக்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது சிங்கப்பூர்

 பிரெக்சிட் சர்ச்சை: பிரிட்டனின் படகை கைப்பற்றியது பிரான்ஸ்

மேற்குக் கரையில் 3,100 புதிய குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டம்

தடுப்பூசி போட்டவர்களிடம் இருந்தும் கொரோனா பரவல்

சீன ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா பெரும் கவலை



புது வகை கொரோனா 42 நாடுகளில் பாதிப்பு 

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஏ.வை.4.2 வகை 42 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் பல்வேறு வகைகளில் உருமாறி வருகிறது.  அந்தவகையில், தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஏ.வை.4.2 வகை பிரிட்டனில் அதிகமாகப் பரவி வருகிறது. 

இந்தியாவிலும் 17 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம்  முழுவதும் மொத்தமாக 42 நாடுகளில் ஜூலை 21 முதல் ஒக்டோபர் 25 வரை 26,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  இதில், 93 வீதமான பாதிப்பு பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வகை கொரோனா பாதிப்பு உள்ளது. 

டெல்டா வகை கொரோனாவை விட ஏ.வை.4.2 வகை கடும் பாதிப்பைக் கொண்டது என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   நன்றி தினகரன் 




தெற்காசிய நாடுகளுக்கான பயண கட்டுப்பாட்டை நீக்கியது சிங்கப்பூர்

கொவிட்-19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 14 நாட்கள் பயண வரலாறு தொடர்பான நடைமுறைப் பட்டியலில் இருந்து ஆறு தெற்காசிய நாடுகளை சிங்கப்பூர் நீக்கியுள்ளது.

பங்களாதேஷ், இந்தியா, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளே சிங்கப்பூரின் பயணக் கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து இவ்வாறு நீக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, இந்த நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் சிங்கப்பூரில் பிரவேசிக்கவும் சிங்கப்பூர் வழியாகப் பயணங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றின் உலகளாவிய நிலவரத்திற்கு ஏற்ப சிங்கப்பூர் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்த விதித்துள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு தெற்காசிய நாடுகளை அதன் பயணக் கட்டுப்பாடு பட்டியலில் இருந்து இவ்வாரம் முதல் நீக்குவதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

என்றாலும், இந்நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் 10 நாட்கள் ஒரு பிரத்தியேக வசதிகள் கொண்ட வீட்டில் தங்கியிருப்பதற்கான அறிவிப்பு காலமும் அடங்கியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த நாடுகளின் கொவிட்-19 தொற்று நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்து இந்நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற மெய்நிகர் செய்தியாளர் மாநாடொன்றில் சுகாதார அமைச்சர் ஓங் யே குங், ‘இந்த நாடுகளில் கொவிட் 19 தொற்று பரவுதல் கட்டுப்பாட்டு நிலைமை தற்போது முன்னேற்றகரமாக உள்ளது. அதனால் அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இங்கு இறங்குவதைத் தடுக்கும் கடுமையான விதிகள் இனி தேவையில்லை’ எனக் குறிப்பிட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ சுட்டிகக்காட்டியுள்ளது.

இதேவேளை சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலும் இவவ்வார நடுப்பகுதி முதல் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இதுவரையும் கொவிட் 19 தொற்றுக்கு 165,663 உள்ளாகியுள்ளனர். அவர்களில் 294 பேர் உயிரிழந்துள்ளனர்.   நன்றி தினகரன் 





பிரெக்சிட் சர்ச்சை: பிரிட்டனின் படகை கைப்பற்றியது பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியதற்கு பின்னரான மீன்பிடி உரிமை தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் பிரிட்டனின் இழுவைப் படகு ஒன்றை கைப்பற்றி இருக்கும் பிரான்ஸ் மற்றொரு படகின் மீது அபராதம் விதித்துள்ளது.

லே ஹவ்ரேவில் இரவில் இடம்பெற்ற சோதனையின்போது இந்த படகுகள் எச்சரிக்கப்பட்டதாக பிரான்ஸ் கடல்சார் அமைச்சர் அன்னிக் கிரார்டி குறிப்பிட்டுள்ளார்.

முதலில் உத்தரவுக்கு உடன் கட்டுப்படவில்லை என்பதோடு இரண்டாவது பிரான்ஸ் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

துறைமுகங்களில் பிரிட்டன் படகுகளை முடக்குவதாக பிரான்ஸ் விடுத்த எச்சரிக்கை ஏமாற்றம் தருவதாக பிரிட்டனின் பிரெக்சிட் அமைச்சர் லோர்ட் ப்ரொஸ்ட் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார். முறையான உரிமம் பெறாது சீன் கூடாவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது பிரிட்டன் இழிவைப்படகு சிக்கியதாக கிரார்டி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் படகு லே ஹவ்ரே துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு நீதித்துறை நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைப்புத் தொகையை செலுத்தும் வரை படகு தடுத்து வைக்கப்படும் என்றார்.

அந்த படகின் தலைமை மாலுமி அபராதம் மற்றும் தடைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் சோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு வெளியிட்ட மற்றொரு படகு மீது அபராதம் விதிக்கப்பட்டதாக கிரார்டி மேலும் தெரிவித்தார்.

பிரெக்சிட்டுக்கு பின்னரான பிரச்சினையாக உள்ள மீன்பிடி உரிமம் வழங்கும் விவகாரத்திற்கு நவம்பர் 2 இற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் சில துறைமுகங்களில் பிரிட்டன் படகுகளை முடக்குவதாகவும் பிரிட்டன் படகுகள் மற்றும் டிரக்குகளுக்கான சோதனைகளை தீவிரப்படுத்துவதாகவும் பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

பிரான்ஸின் இந்த எச்சரிக்கை ஏற்றத்தாழ்வு உடையது என்றும் சர்வதேச சட்டம் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை மீறுவதாக இருப்பதாகவும் பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.   நன்றி தினகரன் 



மேற்குக் கரையில் 3,100 புதிய குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்களில் 3,100க்கும் அதிகமான புதிய வீடுகளை அமைக்கும் மேம்பட்ட திட்டம் ஒன்றை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது.

1,800 வீட்டு அலகுகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கி இருக்கும் திட்டக் குழு ஒன்று மேலும் 1,344 வீடுகளுக்கு ஆரம்ப ஒப்புதலை அளித்துள்ளது.

இஸ்ரேல் கொள்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பகிரங்கமாக கண்டித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையே எதிர்பார்க்கப்படும் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக குடியேற்ற விரிவாக்கத்தை கடுமையாக கண்டிப்பதாக அமெரிக்கா கூறியிருந்தது.

1967 மத்திய கிழக்கு போரில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் 145 குடியேற்றங்களில் 600,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான சர்வதேச சமூகம் இந்த குறியேற்றங்கள் சட்டவிரோதமானது என்று கருதுகின்றனர். எதிர்கால சுதந்திர நாடு ஒன்றின் நிலம் என்று தாம் உரிமை கோரும் பகுதியில் குடியேற்ற நிர்மாணங்கள் மூலமான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உலகம் எதிர்க்க வேண்டும் என்று பலஸ்தீனர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த புதிய வீடுகளின் அதிகப் பெரும்பாலானவை மேற்குக் கரையில் ஆழமாக ஊடுருவி இருக்கும் குடியேற்றங்களில் கட்டப்படுவதாகவும் சில தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் பாரிய அளவில் விரிவுபடுத்தப்படுவதாகவும் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு எதிரான கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏற்கனவே இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,355 குடியேற்ற வீடுகளுக்கு கேள்விமனுக்கான அழைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நிர்வாகத்தால் விடுக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் இந்தத் திட்டம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.   நன்றி தினகரன் 



தடுப்பூசி போட்டவர்களிடம் இருந்தும் கொரோனா பரவல்

கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்கள் மூலமும் வைரஸ் பரவலாம் என பிரிட்டிஷ் நோய்த்தொற்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மூலம் பரவக்கூடிய அளவுக்கு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலமும் வைரஸ் பரவலாம் என அவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவுகள் ‘தி லன்செட்’ மருத்துவச் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

மிதமான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே காட்டாத நோய்த்தொற்று கொண்டவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு வைரஸை பரப்பக்கூடிய அபாயம் சுமார் 40 வீதம் உள்ளது என நிபுணர்கள் குறிப்பிட்டனர். எனினும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர், அதிலிருந்து விரைவில் குணமடைகின்றனர் என்பதையும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது.   நன்றி தினகரன் 



சீன ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா பெரும் கவலை

அமெரிக்கா, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் எனும் அதிவேக நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில், சீனா இரண்டு முறை அதேபோன்ற தொழில்நுட்பத்தைச் சோதித்துப் பார்த்தது. அது மிகவும் அக்கறைக்குரியது என்று அமெரிக்க மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முறையிலிருந்து தப்பிக்கும் தொழில்நுட்பத்தைச் சீனா பரிசோதிக்கிறது என்பதை அது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின், அதிநவீன ஆயுதச் சோதனை கடந்த வாரம் தோல்வியடைந்ததாகத் தகவல் வெளியானது.

சீனாவும், ரஷ்யாவும் ஆயுதப் போட்டியில் முனைப்பாயிருக்கும் வேளையில், அமெரிக்காவுக்கு அது பின்னடைவாகக் கருதப்படுகிறது.  

இம்மாத ஆரம்பத்தில் சீனாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க இராணுவத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக பினான்ஷியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

ஆனால் தாங்கள் எந்த ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை, அது விண்கலப் பரிசோதனை என்றே சீனா தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 







No comments: