பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - மூன்று தெய்வங்கள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 18

 .

மனிதன் என்பவன் கடவுளாகலாம் என்று கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி உள்ளார். தன் துன்பத்தை மதியாது  பிறர் துன்பத்தை துடைக்க முன் வருபவர்கள் அனைவரும் தெய்வங்களாக போற்றப் படுவார்கள் என்ற கதையின் அடிப்படையில் உருவான படம் தான் மூன்று தெய்வங்கள்.ஸ்ரீ புவனேஸ்வரி மூவிஸ் தயாரிப்பில் வண்ணப் படமாக இது உருவானது படத்தில் ஒன்றிற்கு பதிலாக மூன்று கதாநாயகர்கள்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன்,நாகேஷ் என்று மூவரும் இப் படத்தில் கதாநாயகர்களாக நடித்தார்கள்.அதிலும் விஷேசம் என்னவென்றால் மூவருக்குமே மேக் அப் கிடையாது,லேசான டச்அப் தான்.கலர் படம் ஒன்றில் ஒப்பனை இன்றி இவர்கள் மூவரும் துணிந்து நடித்திருந்தனர். அது மட்டும் இன்றி மூவருக்கும் ஜோடிகளும் இல்லை அதனால் டூயட் பாடல்களும் கிடையாது.


சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்து விட்டு சிறை செல்லும் சிவா முத்து நாகு மூவரும் ஒரு நாள் சிறையில் இருந்து தப்பி மளிகை கடை வைத்திருக்கும் பசுபதியின் வீட்டுக்கு வருகிறார்கள்.இவர்கள் மூவரையும் ஓடு திருத்த வந்த  தொழிலாளர்கள் என கருதும் பசுபதியும் அவரின் குடும்பத்தினரும் மூவரையும் அங்கே தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறார்கள்.பசுபதியின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓட நினைக்கும் மூவரும் பசுபதி குடும்பம் தங்கள் மீது காட்டும் அன்பை கண்டு மனம் மாறுகிறார்கள்.அது மட்டும் அன்றி பசுபதி குடும்பத்துக்கு ஏற்படும் தொல்லைகளை தீர்க்கவும் முனைகிறார்கள்.திருட வந்த மூன்று குற்றவாளிகளும் பசுபதி குடும்பத்தாலும் ஊராராலும் போற்றப்படுகிறார்கள்.


மராட்டிய மொழியில் வெளிவந்த படம் ஒன்றைத் தழுவி இப் படம் தமிழில் உருவானது. படத்தின் வசனங்களை கோபு எழுதினார்.நகைச்சுவை படங்களுக்கு திறமையாக வசனம்  எழுதுவதில் பேர்  பெற்ற கோபு இதிலும் தன திறமையை காட்டியிருந்தார்.அதற்கு வசதியாக நாகேஷ் வி கே  ராமசாமி எம் ஆர் ஆர் வாசு வெண்ணிற ஆடை மூர்த்தி என்று ஒரு நகைச்சுவை செட்டே அமைந்திருந்தது.சற்று உணர்ச்சி பூர்வமான கதையை தனது நகைச்சுவை வசனங்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்ப்பித்திருந்தார் கோபு.ஆனாலும் அழுத்தமான காட்சிகளை சிவாஜியும் எஸ் வீ சுப்பையாவும் முத்துராமனும் தமது நடிப்பின் மூலம் ஒப்பேற்றியிருந்தார்கள்.


படத்திற்கு இளமை விருந்து அமைக்கும் வண்ணம் சிவகுமார் சந்திரகலா ஜோடி அமைத்தது.எஸ் வீ ராகவன் ருக்மணி செந்தாமரை ஆகியோரும் படத்தில் இடம் பெற்றார்கள். வண்ணப் படமாக மிளிர்ந்த மூன்று தெய்வங்கள் படத்தின் ஒளிப்பதிவை கே எஸ் பிரசாத் கையாண்டிருந்தார்.

படத்தின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்தவர்கள் கண்ணதாசனும் எம் எஸ் விஸ்வநாதனும் ஆவார்கள்.இவர்களின் கூட்டில் உருவான திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது .அதே போல் தீபாவளி பாடலான தாய் எனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் பாடலும் ரசிகர்களை கவர்ந்தது . இது தவிர வசந்தத்தில் ஒரு நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளாம் பாடலும் தேன் மழையிலே மாங்கனி நனைந்தது முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னுஞ்சல் கண்டேன் ஆகிய பாடல்களும் இனிமையாக அமைந்தன .

ஏற்கனவே சிவாஜியின் சொந்தப படமான புதிய பறவை படத்தை இயக்கிய தாதாமிராசி இந்தப் படத்தையும் இயக்கி வெற்றி படமாக்கியிருந்தார்.



No comments: