இலங்கைச் செய்திகள்

 ஞானசார தேரரின் நியமனம் ஹக்கீம் கவலை வெளியீடு

ஜனாதிபதி செயலணியை கலைக்குமாறு கோரிக்கை

நவம்பர் 01 முதல் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை

COP26: ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணம்

புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்ட மக்கள்!

 ஞானசார தேரர் நியமனம்; ஜனாதிபதியின் நிலைப்பாடு

 

ஞானசார தேரரின் நியமனம் ஹக்கீம் கவலை வெளியீடு

இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்துமாம்

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரின் நியமனத்தின் பின்னணியில் மறைகரங்களும், வெளிச்சக்திகளும் இருக்கலாம். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான முறுகலையும் துருவப்படுத்தலையும் மேலும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம்(28) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆட்சியை எப்படியாவது கைப் பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்செயல்களைத் தொடர்ச்சியாகத் தூண்டி வருபவரும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டவருமான பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக் கண்டிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




ஜனாதிபதி செயலணியை கலைக்குமாறு கோரிக்கை

வடக்கிலிருந்து தமிழ்க்கட்சிகள் குரல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான செயலணியை ஜனாதிபதி உடனடியாக கலைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சி கோரிக்கை  விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இல்லை. அப்படியென்றால், இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லையா? என்றும், தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லை என்று சொல்கின்றீர்களா? என்ற கேள்வியை ஜனாதிபதியிடம் கேட்க விரும்புவதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான செயலணி அனைத்து தரப்பினராலும் பகிஷ்கரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், மாகாண சபைகளை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும், மாகாண சபைகளுக்கான சட்டமாக்கும் உரிமையை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.   நன்றி தினகரன் 



நவம்பர் 01 முதல் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை

நவம்பர் 01 முதல் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை-Inter Provincial Train Services From November 01

கொவிட் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளை எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 31ஆம் திகதி மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை நீக்கத்தை தொடர்ந்து குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் கடந்த திங்கட்கிழமை ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் ஆரம்பமானது. இதன்போது 133 புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது, புகையிரத பருவச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





COP26: ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணம்

COP26: ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணம்-President Left for UK to Attend COP26-Glascow-Scotland

- நவம்பர் 01 - 12 வரை மாநாடு; உலகத் தலைவர்கள் மாநாடு நவ. 01 - 02

ஐக்கிய இராச்சியத்தின் (UK) ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள கிளஸ்கோ நகரில் நடைபெறவுள்ள, COP26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் நடைபெறும். நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

COP26: ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஸ்கொட்லாந்து பயணம்-President Left for UK to Attend COP26-Glascow-Scotland

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பம்” எனும் தலைப்பில் நடைபெறுகின்ற இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25,000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை இடம்பெற்ற மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க  ஆகியோரும், ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.    நன்றி தினகரன் 




புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்ட மக்கள்!

புதுக்குடியிருப்பு  பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள 11 ஏக்கர் காணிகள் நேற்று  இராணுவத்திடம் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை அந்த காணியில் குடியிருந்தவர்களுக்கு  பகிர்ந்தளிக்கும் சட்ட நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்  ஈடுபட்டுள்ளது. அதுவரை இந்த காணிகள் கிராம சேவையாளரின் கண்காணிப்பில் இருக்கும் என்று பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
காணியில் குடியிருந்தவர்ளை அழைத்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்  தலைமையிலான காணி கிளை அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள். 29 பேரின் 10 ஏக்கர் காணியும் ஒருவரின் 1 ஏக்கர் காணியும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
தங்கள் வாழ் இடங்களை பார்வையிட்ட உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பிரதேச  செயலாளர் தங்களிடம் தெரிவித்துள்ள கருத்தில், இந்தக் காணி கடந்த காலத்தில்  அரசாங்கத்தினால் லீசிங் அடிப்படையில் கொடுக்கப்பட்ட காணி லீசிங் காலம்  முடிவடைந்தபடியால் அது அரச காணியாகத்தான் வரும். நீங்கள் வான்பயிர்களை  நாட்டியுள்ளீகள். வாழ்ந்துள்ளீர்கள். நீங்கள் இருந்த காணியினை தற்சமயம்  பார்த்து எந்த ஒரு அபிவிருத்தி நடவடிக்கைகளோ செய்யக்கூடாது. இந்த காணியினை  சட்ட நவடிக்கை ஊடாக மக்களுக்கு வழங்கவுள்ளோம்.

நாங்கள்  2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தக் காணிகளில் வீடமைந்து வாழ்ந்து வந்துள்ள  நிலையில் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் போரின் போது அழிக்கப்பட்டு விட்டன.  படையினரால் கட்டப்பட்ட கட்டடங்களே இதில் மிஞ்சியுள்ளன. தொலைத்தொடர்பு  கோபுரம் ஒன்றும் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - நன்றி தினகரன் 







ஞானசார தேரர் நியமனம்; ஜனாதிபதியின் நிலைப்பாடு

 Friday, October 29, 2021 - 12:08pm

என்னால் கருத்து கூற முடியாது

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை என்னால் விமர்சிக்க முடியாது என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வதே என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 
'ஒரு நாடு ஒரு சட்டம்' என்ற செயலணிக்கு ஜனாதிபதியால் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 
அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க விரும்பவில்லை. அவர் ஜனாதிபதியின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே. 

நானும் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் முடிவை பார்த்திருந்தேன். அவர் எந்த நோக்கத்திற்காக இவரை நியமித்தாரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை என்னால் விமர்சிக்க முடியாது. என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது. 

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பற்றி கதைப்பதாக இருந்தால் விரிவாக கதைக்க வேண்டும். இது பல விமர்சனங்களை கொண்டு வரலாம் அதனால் நான் கதைக்க விரும்பவில்லை.ஞானசார தேரர் பற்றி என்னைவிட ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியும். இதில் என்ன இருக்கின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 







No comments: