பாரதி தரிசனம் - அங்கம் 08 பாரதியும் சிறுகதை இலக்கியமும் வ.வே.சு. ஐயரின் “ குளத்தங்கரை அரசமரம் “ தமிழில் வெளிவந்த முதல் சிறுகதையா..? முருகபூபதி


பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர்  ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் )  எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர்.

இவர்  1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி


வரகனேரியில் பிறந்தார்.  இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது  தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர்.

சுதந்திரம் சும்மா கிடைக்காது,  ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. 

பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும்  முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார்.

பாரதி  மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர்   கைதாகி சிறைசெல்லுகிறார்.  பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து,  அவரைச்சென்று பார்க்க விரும்பும்  ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.

பாரதியும் சிறை சென்று மீண்ட செம்மல்.  ஒரு முன்னாள் கைதியை பார்க்க இந்தக்கைதி விரும்பியபோது,  பொலிஸார் அதற்கு அனுமதி தந்து திருவல்லிக்கேணிக்கு அழைத்துச்செல்கின்றனர்.

மருந்து அருந்தாமல் அடம்பிடிக்கும் பாரதியிடத்தில்,  மிகுந்த அக்கறையோடு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுவிட்டு சிறைசெல்லும்  வ.வே.சு. ஐயர், விடுதலையாக வந்தபின்னர்  1922 ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடக்கி  அதனை  இயக்குவதற்காக பரத்வாஜ்  என்ற ஆசிரமத்தையும் அமைத்தார்.  

அத்துடன் பாலபாரதி என்ற இதழையும் நடத்தினார். இவர் எழுதிய


குளத்தங்கரை அரசமரம்  தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று சொல்லப்படுகிறது.

 பாரதி மறைந்து நான்கு ஆண்டுகளில்  வ.வே.சு. ஐயரின் வாழ்வில் பெருந்துயரம் நேர்ந்துவிடுகிறது.

தனது குருகுல மாணவர்கள் சகிதம் அம்பா சமுத்திரம் அருவிக்குச்சென்றவிடத்தில், அவரது மகள் அந்த அருவியில் தவறி விழுந்துவிடவும், அவளைக்காப்பற்ற அருவியில் குதிக்கிறார்.  தந்தையையும் மகளையும் அருவி இழுத்துச்சென்றுவிட்டது.

சடலங்களும் கிடைக்கவில்லை.

பாரதிக்கு முன்னர் ஐயர் இறந்திருந்தால், பாரதி,  ஐயர் பற்றி ஒரு காவியமே இயற்றியிருப்பார்.

பாரதியை விட ஒரு வயது மூத்தவர் ஐயர்.  பாரதி பிறந்த நூற்றாண்டு வருவதற்கு முன்னர் 1981 இல் ஐயரின் நூற்றாண்டு வந்தது.  ஆனால், பாரதிக்கு தரப்பட்ட முக்கியத்துவம் ஐயருக்கு தரப்படவில்லை.

அதற்கு திராவிடர் கழகங்களும் முக்கிய காரணம்.  பாரதியையே பார்ப்பனக்கவிஞன் என்று புறக்கணித்தவர்கள், ஐயரின் குருகுலத்தில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களினால், ஐயரை முற்றாகவே புறக்கணித்திருந்தனர்.

ஐயரின் பரத்வாஜ் குருகுலத்தில் இரண்டு  பிராமணச்


சிறுவர்களுக்குத் தனியாக உணவளிக்கப்படுவதாக செய்தி வெளியே கசிந்ததையடுத்து  தந்தை பெரியார் தரப்பிலிருந்து கடுமையான ஆட்சேபங்கள் எழுந்தன.  அதனை இந்திய  காங்கிரஸ் கண்டுகொள்ளாதமையினால்,  பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடக்கினார் என்ற செய்திகள் பதிவாகியுள்ளன.

இது இவ்விதமிருக்க,  அடிநிலை சமூகத்தைச்சேர்ந்த கனகலிங்கத்திற்கு பாரதியார் பூணூல் அணிவித்த சடங்கை நடத்தியபோது ஐயர்தான் அதனை முன்னின்று நடத்தினார் என்ற தகவலும் உண்டு.

அத்தகைய முற்போக்கானவரின் ஆசிரமத்தில் அவ்வாறு பிராமணச்சிறுவர்களுக்கு தனியாக உணவு பரிமாறப்பட்டிருக்கும் செய்தியின் பின்னணியிலிருக்கும் சர்ச்சையைப்போன்று (  இதுபற்றி ஜெயமோகன் விரிவாக எழுதியுள்ளார் - வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

https://www.jeyamohan.in/21150/ )


மற்றும் ஒரு இலக்கிய சர்ச்சையும் இன்றளவும் பேசப்படுகிறது.

அதுதான் வ.வே.சு.அய்யரின் சிறுகதை குளத்தங்கரை அரசமரம் சிறுகதை பற்றிய விவகாரம்.

இலங்கையில் வெளிவரும்  ஞானம்  ( 197 ஆவது )  இதழில்                                ( ஒக்டோபர் 2016)  இதுபற்றி ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றார் செங்கதிரோன் த.கோபலகிருஷ்ணன். இவர் இலங்கையில் இலக்கியவாதியாகவும் அரசியல் சமூகப்பணியாளராகவும் அறியப்பட்டவர். இலக்கியவிமர்சகர் செங்கதிர் என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். மீன்பாடும் தேன்னாடாம் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இவரும், இலங்கையில் பாரதியை ஆய்வுசெய்துள்ளார்.

இலங்கையிலும் தமிழகத்திலும் ஒரு காலத்தில் சிறுகதைகளுக்கு இரண்டு தலைப்புகள் இடப்பட்டிருக்கும். பாரதியாரும் அவ்வாறுதான் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார்.

1905 இல் சக்கரவர்த்தினி என்னும் இதழில் பாரதி எழுதியிருக்கும் சிறுகதை: துளசிபாய் அல்லது ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம். கோபலாகிருஷ்ணன் இச்சிறுகதையின் சுருக்கத்தை இவ்வாறு தருகின்றார்.

" துளசிபாய் என்ற பெயருடைய ரஜபுத்திர கன்னிகைக்குத்


திருமணம் நிச்சயிக்கப்பெற்று அவளுக்கு விவாகம் நடத்துவதற்காக மணமகனுடைய ஊருக்குப் பல்லக்கில் அவளை இருத்திப் பயணம் செல்கிறார்கள். போகும் பாதையில் ஒரு கொள்ளைக்காரக் கும்பலிடம் துளசிபாய் அகப்பட்டுக்கொள்கிறாள். அவளை அக்பரின் படைத்தளபதி அப்பாஸ்கான் என்பவன் அந்தக்கொள்ளைக்காரக் கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறான். தன்னைக் காப்பாற்றிய அப்பாஸ்கானுக்கு ஒரு வயிரக்கணையாழியைப் பரிசளித்துத் துளசிபாய் நன்றி பாராட்டுகிறாள். கதையின் முற்பகுதி இங்கே முடிவடைகிறது.

அடுத்து ஒரு வருடகால இடைவெளிக்குப்பின்னர்  அப்பாஸ்கான் மீண்டும்  துளசிபாயைச்சந்திக்கும் சந்தர்ப்பம் வருகிறது. அப்போது திருமணமாகிக்  கணவன் இறந்துபோன நிலையில் துளசிபாயை சுற்றத்தார்  இந்திய நாட்டின் பண்டைய வழக்கப்படி உடன்கட்டை ஏறும்படி   வற்புறுத்துகிறார்கள். துளசிபாய் கதறிக்கொண்டு கூக்குரலிட  அப்பாஸ்கான் அருகில் சென்று பார்க்கிறான். " இது எனது... எனது...எனது... துளசிபாய்  அல்லவா...? அரே அல்லா, மேரீகுலாப் கோ ஜலாவோங்கே...? எனது காதல் ரோஜாவையா இப்பாதகர்கள் சாம்பலாக்கப்போகிறார்கள்" என்ற கோபத்தோடு அவர்களோடு மீண்டும்  சண்டையிட்டு  மீண்டும்  துளசிபாயை  காப்பாற்றுகிறான்.


இவ்விதம் தன்னால் இருதடவைகள் காப்பாற்றப்பெற்ற துளசிபாய் மீது அப்பாஸ்கான் காதல்கொள்கிறான். அப்பாஸ்கானின் காதலை துளசிபாயும்  ஏற்றுக்கொள்கிறாள்.

இதுதான் பாரதியார் எழுதிய கதை.

எந்தக்காலத்தில் என்பதைப்பாருங்கள்...? இந்தக்கதையில் பாரதி சொல்லும் செய்திகளை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

பெண்மைக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கும் பாரதியின் முதல் சிறுகதையே பெண்ணிற்கு நேர்ந்த அநீதிக்கு எதிரான குரலையே ஒலித்திருக்கிறது. அத்துடன் விதவை மறுமணத்தையும், மூட நம்பிக்கைக்கு எதிரான சிந்தனையையும்  இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், கலப்புத் திருமணத்தையும்   அக்காலத்திலேயே அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், இந்தப்பதிவில்,  மேலும் இவ்வாறு சொல்கிறார்:

" நவீனத்துவம், பின்நவீனத்துவம், யதார்த்தவாதம், கட்டுடைப்பு வாதம் என்றெல்லாம்  கலை  இலக்கியக்கோட்பாடுகள் குறித்த


கருத்தியல்கள் எல்லாம் மேற்கு நாடுகளில் பின்னாளில் எழுந்து தமிழ்நாட்டுக்குத் தொற்று முன்பாகவே ஒரு முற்போக்கான கதையை பாரதி 1905 இலேயே பின்னியிருக்கிறார்.

எனவே நல்ல முற்போக்கான சிறுகதையொன்றினைப் படைப்பதற்கு எந்த 'இஸம்' களும் தேவையில்லை. எந்த                       ' வாதம்' களும் அவசியமில்லை."

இவ்வாறு பாரதியின் முதல் சிறுதையும்  தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் சிறுகதையுமான " துளசிபாய் அல்லது ரஜபுத்திரகன்னிகையின் சரித்திரம்" பற்றி ஞானம் இதழில் விரிவாக அறிமுகப்படுத்தியிருக்கும் செங்கதிர் த. கோபாலகிருஷ்ணன், ஞானம் 205 ஆவது இதழில் ( 2017 ஜூன்) பாரதியார் எழுதிய முதற்கவிதை பற்றியும் அதனை இலக்கிய வரலாற்றில் பதிவுசெய்வதற்கு தொடர்ச்சியாக நேர்ந்த தாமதங்கள் பற்றியும் விரிவாக சொல்லியிருக்கிறார்.

பாரதி  எழுதி அச்சுவாகனம் ஏறிய முதல் கவிதை 1904 ஆம் ஆண்டில் விவேகபாநு இதழில் வெளியாகியிருக்கிறது. தனிமையிரக்கம் என்ற அக்கவிதையே அச்சில் வெளியான முதல்கவிதையாயினும்  அதுவே பாரதி எழுதிய முதல் கவிதை அல்ல  என்றும்  அவர் சுட்டிக்காண்பிக்கின்றார்.

எட்டயபுர சமஸ்தான மன்னர் வெங்கடேசுவரரெட்டப்பபூபதிக்கு பாரதி தனது படிப்புக்கு உதவி கேட்டு கவிதை வடிவில்  24-01-1897 இல் எழுதிய கடிதமே அவர் எழுதிய முதல் கவிதை என்றும் அதனை பாதுகாத்துவைத்திருந்தவர் பாரதியின் இளைய சகோதரன் சி. விசுவநாதஐயர் எனவும் குறிப்பிடுகிறார்.

" குயிலானாய்... எனத்தொடங்கும் அச்சில் வெளியான முதல் கவிதையும், தென்னிளசை நன்னகரிற் சிங்கம்... எனத்தொடங்கும் எட்டயபுர மன்னருக்கு அனுப்பிய கவிதைக்கடிதமும் ஞானம் இதழில் முழுமையாக இடம்பெற்றுள்ளது.

இளைசை என்பது எட்டயபுரத்துக்கு மற்றும் ஒரு பெயர்.

எனினும், பாரதியாரே 1908 இல் பதிப்பித்த அவரது முதல் நூலான 'ஸ்வதேச கீதங்கள் ' நூலிலும் அதன்பின்னர் வந்த பல தொகுப்புகளிலும் இக்கவிதை இடம்பெறவில்லை எனவும், பாரதி நூற்றாண்டு விழாக்காலத்தின் பின்னர்தான், தஞ்சை பல்கலைக்கழகம் வெளியிட்ட பாரதி பாடல்கள் (ஆய்வுப்பதிப்பு) சேர்க்கப்பட்டிருக்கும் தகவலையும் கோபாலகிருஷ்ணன் ஞானம் இதழின் ஊடாக எமக்கு தெரிவிக்கின்றார்.

இந்த அரிய தகவல்களை எனது இலங்கையில் பாரதி நூலில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.

பாரதியார் தமது அற்பாயுளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.  அதில் காக்காய் பார்லிமென்ட் என்ற சிறுகதை இக்காலத்து ஜனநாயக அரசிலுக்கும் பொருந்துகிறது.

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பு வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தும்  “கதை எழுதுவோம் வாரீர்  “ என்ற அரங்கில், பேசிவருகின்றேன்.  ஒரு அரங்கில் குறிப்பிட்ட காக்காய் பார்லிமென்ட் கதையையும் பேசுபொருளாக்கியிருந்தேன்.

பாரதியார், தாகூரின் சில கதைகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.  பழைய தமிழ் மரபிலிருந்து புதிய மரபு நோக்கி சிறுகதை வடிவம் வளருவதற்கு பாரதியார் உந்து சக்தியாகத்திகழ்ந்தார்.  

இதுஇவ்விதமிருக்க,  அண்மையில்  எமது எழுத்தாளர் நண்பர் நடேசன்  மெய்நிகரில்  முன்னின்று நடத்திய தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு என்னும் அரங்கில் இந்திய இலக்கியங்களில் மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய  தமிழக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மாலன்,  எனது இலங்கையில் பாரதியில் , செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்ட               " துளசிபாய் அல்லது ரஜபுத்திரகன்னிகையின் சரித்திரம்"  என்ற சிறுகதை பாரதியின் மொழிபெயர்ப்பு கதையே தவிர,  பாரதியே எழுதிய சிறுகதை அல்ல என்றார்.

இது மற்றும் ஒரு சர்ச்சைக்கு வித்திடுகிறது.

புதுமைப்பித்தனின் சில கதைகள் குறித்தும் சர்ச்சைகள் வந்துள்ளன.  அவர் மொழிபெயர்த்த கதைகள் குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தியும் முன்னர் சர்ச்சைகளை  கிளப்பியுள்ளார்.

எது மொழிபெயர்ப்பு..? எது தழுவல்..? என்பதே அதன் உறைபொருள் !

அதற்கு தொ.மு. சி. ரகுநாதனும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி பாரதியாரா…? , வ.வே.சு. ஐயரா..? தேடுவோம் !.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

No comments: