வாசல்வரும் தீபாவளியை வரவேற்போம் வாருங்கள் !

தமிழ்முரசு அவுஸ்திரேலிய வாசகர்கள் அனைவருக்கும் எமது தீபாவளி வாழ்த்துக்கள் .




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

அரக்கனாய் இருந்தவன் அகன்றகன்று ஓடுகிறான்

அல்லலுற்ற அனைவருமே ஆறுதலாய் ஆகிவிட்டார்
ஒளியூட்டும் தீபாவளி ஓடிவந்து நிற்கிறது
வழிபிறந்த தென்றெண்ணி வரவேற்போம் வாருங்கள்

நரகாசுர னெனுமரக்கன் ஒழிந்ததுவே தீபாவளி

நாநிலத்தை ஆட்டிவைக்க  வேறரக்கன் வந்தானே
வேறரக்கன் தானழியும் நிலையிப்போ வந்தமையால்
மானிலத்தில் தீபாவளி மலர்ந்திருக்கு வரவேற்போம்

 தித்திக்க  பட்சணங்கள் செய்திடுவோம் வாருங்கள்

தெருவினிலே மத்தாப்பு வெடிவெடிப்போம் வாருங்கள்
மொத்தமுள்ள உறவுகளில் முகமலர்ச்சி வருவதற்கு
அத்தனைபேர் அகமகிழ அரவணைப்போம் வாருங்கள் 

சித்தமதில் சினமதனை தேக்காது  நாமிருப்போம்

செருக்கென்னும் குணமதனை சிறகொடியச் செய்திடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !

புத்தாடை  உடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்

பெற்றவரைப் பெரியவரை பெரும்பேறாய் போற்றிடுவோம்
கற்றுணர்ந்து நாமிருக்க காரணமாய் ஆகிநிற்கும்
நற்றவத்து ஆசான்கள் பொற்பதத்தைப் பணிந்திடுவோம்

குற்றங்குறை சொலுமியல்பை கொடுந்தீயால் எரித்திடுவோம்

குதர்க்கமிடும் குணமதனை குழிதோண்டிப் புதைத்திடுவோம்
சொற்களிலே சுவையிருத்தி சுகம்பெறவே வாழ்த்திடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடுமே அனைவருக்கும் !

மதுவருந்தும் பழக்கத்தை மனமிருந்து  அகற்றிடுவோம்

மாமிசத்தைப் பெரிதெனவே எண்ணுவதை மறந்திடுவோம்
பொதுவிடத்தை கழிப்பறையாய் ஆக்குவதை தவிர்த்திடுவோம்
போரொக்கும் குணமதனை பொசுக்கியே விட்டிடுவோம்

நலந்திகழும் திட்டமதை நம்மனதில் இருத்திடுவோம்

நம்மொழியை நம்மண்ணை கண்ணெனவே எண்ணிடுவோம்
விலங்குமனப் பாங்குமண்ணில் வீழ்ந்ததுவே தீபாவளி
எனுங்கருத்தை உளமிருத்தி இனிப்புண்டு மகிழ்ந்திடுவோம் !

தீபாவளி யெனுந்திருநாள்  திருப்பங்கள்  தந்திடட்டும்

தித்திப்பும் மத்தாப்பும்  தீபா வளியாகா
கோபதாபம் போயகல கொடியதுன்பம் விட்டோட
யாவருமே மகிழுவதே நல்ல தீபாவளியன்றோ

ஆவலுடன் காத்திருக்கும் அனைத்துமே வரவேண்டும்

ஆறுதலும் தேறுதலும் அள்ளிக்கொண்டு வரவேண்டும்
அமைதியெனும் பேரொளியை காட்டுகின்ற நாளாக
ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டிநிற்போம்

பேரரக்கன் வாராமால் பெம்மானை வேண்டிடுவோம்

ஊர்முழுக்க ஒன்றாகி உவகையுடன் நின்றிடுவோம்
பார்முழுக்க நல்லொளியை பாய்ச்சவென மனமெண்ணி
வாசல்வரும் தீபாவளியை வரவேற்போம் வாருங்கள்
 
விடிவுவந்த தென்றெண்ணி  விளக்கேற்றி மகிழ்ந்திடுவோம்
வேறுவிடர் வாராமல் மெய்ப்பொருளைப் பரவிடுவோம்
நிலையான மகிழ்வெமக்கு அமையவென வேண்டிடுவோம்
நிறைவான பரம்பொருளை நீக்கமறப் பற்றிடுவோம் 

No comments: