இலங்கைச் செய்திகள்

 பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி

மணல் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 4 STF வீரர்கள் காயம்

எஸ்ட்ரா செனகா முதல் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 02 ஆவதாக பைஸர்

கொவிட் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்

எரிபொருள் விலை குறைப்பு, நிவாரணம் வழங்க முயற்சி


பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி

பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி-Basil Rajapaksa's Name Gazetted as SLPP National List MP

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, பசில் ராஜபக்‌ஷவின் பெயர் குறிக்கப்பட்ட அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தேசியப் பட்டியில் எம்.பியாக இருந்த ஜயந்த கெட்டகொட நேற்றையதினம் (06) அப்பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் பொதுஜன பெரமுன கட்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றையதினம் (07) தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தினகரன் 

மணல் கடத்தல்காரர்களின் தாக்குதலில் 4 STF வீரர்கள் காயம்

யாழ். அரியாலையில் சம்பவம்; இருவர் கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கடத்தல்காரர்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரியாலை கிழக்கு பகுதியில் நேற்று (06) செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து மேலும் தெரியவருவதாவது,  அரியாலை பகுதியில் மணல் கடத்தலில் குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் விரைந்தனர். அங்கு மணல் கடத்தல்காரர்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்ய முற்பட்ட போது , கொள்ளையர்கள் அவர்கள் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகாரணங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அதிரடிபடையினர் நால்வர் காயமடைந்துள்ளனர். அதேவேளை தப்பி சென்றவர்களில் இருவரை துரத்தி மடக்கி பிடித்து அதிரடி படையினர் கைது செய்தனர். காயமடைந்த அதிரடி படையினர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பி சென்ற ஏனையவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.  நன்றி தினகரன் 

எஸ்ட்ரா செனகா முதல் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 02 ஆவதாக பைஸர்

கொழும்பு 01 முதல் 05 வரை இன்று ஆரம்பம்

எஸ்ட்ரா செசெனகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதற்கட்டமாக இன்று முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அதன்படி கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. எஸ்ட்ரா செசெனகா தடுப்பூசியை முதல் தடவையில் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக அதனை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் திகதி மற்றும் நேரம் போன்ற விபரங்கள் குறுந்தகவல் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்க தயாரிப்பான 02 இலட்சம் பைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கை கொள்வனவு செய்துள்ளது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் தினம் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் எஸ்ட்ரா செசெனகா தடுப்பூசியை முதல் தடவையில் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மாருக்கு அதனை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்க தயாரிப்பான 26 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்றுமுன்தினம் நாட்டுக்கு கிடைத்துள்ளன. மேலும் 26 ஆயிரம் தடுப்பூசிகள் எதிர்வரும் வாரத்திலும் அடுத்து வரும் வாரங்களில் மூன்றாவது வாரத்தில் 60,000 தடுப்பூசிகளும் நான்காம் வாரத்தில் 90,000 தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளதாகவும் தெற்காசியாவிலேயே பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள முதலாவது நாடு இலங்கை என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் கொவிட் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்

 சுகாதார அமைச்சு - எச்சரிக்கை

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சுகாதாரத்துறையின் நிலைமை மோசமடைவதுடன் கொரோனா வைரஸ் சூழ்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதையடுத்து அமைச்சரவையில் இது தொடர்பில் பேச்சு நடத்தி அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் தொழிற்சங்கங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத் தரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இரசாயன கூட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 14 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஆஸ்பத்திரிகளின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்குட்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய சேவைகள், கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்கள், சிறுவர் வைத்தியசாலைகள் புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்திய சாலை ஆகியவற்றில் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவில்லையென மேற்படி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே தாதியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்கிணங்க அந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் கைவிடப்பட்டது.

தாதியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து தமது கோரிக்கைகளுக்கும் அதுபோன்று தீர்வை பெற்றுத் தருமாறு கோரியே மேற்படி வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன. இத்தகைய சூழ்நிலையில் நேற்றும் ஆஸ்பத்திரிகளில் பல்வேறு பிரிவுகளிலும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்ததாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் மேற்படி சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தப்போராட்டம் சுகாதாரத் துறையிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளிலும் பெரும் அபாயமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் எரிபொருள் விலை குறைப்பு, நிவாரணம் வழங்க முயற்சி

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிப்பு

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற பின்னர் பெல்லன்வில ரஜமஹா விகாரைக்கு (08) மாலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட நிதி அமைச்சர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்மார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வாரெனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார். சகல பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி எரிபொருள் விலை குறித்து ஒரு தீர்வை எடுப்பாரென எதிர்பார்க்கிறோம்.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் கடினமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது கட்சியின் கொள்கையான பெறுபேறு பொருளாதாரத்தின் முன்னேற்றமாக அமையுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.  நன்றி தினகரன் 


No comments: