உலகெங்கும் கடந்த ஒன்றரை வருடகாலத்திற்கும் மேலாகப் பரவி, அச்சுறுத்திக்கொண்டு மனித உயிர்களை பலியெடுத்துவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ வைரஸ், தற்போது தனது மற்றும் ஒரு தம்பியையும் டெல்டா என்ற பெயரில் அழைத்து வந்துள்ள வேளையில், எமது நீண்டகால நண்பரும் தனது வாழ்நாளில் பெரும்பாலான பொழுதுகளை சமூகப் பணிகளுக்காகவே அர்ப்பணித்த பெருமகனுமான சொக்கநாதன் யோகநாதன் அவர்களையும் இழந்துவிட்டோம்.
இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக பரிணாமம் அடைந்த வேளையில் , அதனால் பாதிக்கப்படக்கூடிய அப்பாவிப்பொதுமக்களின் நலன்களுக்காகவும் அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் தமது பொழுதுகளை அர்ப்பணித்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சொக்கநாதன் யோகநாதன்.
கடந்த 05 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 3-30 மணியளவில் அவர் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொவிட் தொற்று சிகிச்சை நிலையத்தில் மறைந்தார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.
இந்தத் துயரச் செய்தி கிடைக்கும்போது நீண்ட தூரப்பயணத்திலிருந்தேன். எனது காரை வீதியோரமாக நிறுத்திவிட்டு, யாழ்ப்பாணம் அரியாலையில் கண்டிவீதியில் அமைந்திருக்கும், அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனைக்கு தொடர்புகொண்டேன்.
துயரச்செய்தியை பகிர்ந்துகொண்ட அங்கு நிருவாகப்பணியிலிருக்கும்
செல்வி காயத்ரி தங்கராசாவிடம் மேலதிக தகவல்களை பெற்றபோது, அன்பர் யோகநாதன் அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு அன்றையதினம் மதியம் 11-30 மணிக்கே நடந்துவிட்டதாகவும், தானும் அங்கு பணியாற்றும் கணக்காளர் திரு. பொன்னம்பலம் தினேஷ் அவர்களுமே அதற்கு செல்லக்கூடியதாக இருந்ததாகவும் சொன்னார்.
சமகால மனித வாழ்க்கையில் இப்படியும் மரணச்சடங்குகள் நடக்கவேண்டியிருப்பதை பார்க்கும்போது, “ யாருடன் நோவோம்….? யார்க்கெடுத்துரைப்போம்…? “ என்றுதான் புலம்பத்தோன்றுகிறது.
கடந்த ஜனவரி மாதம் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான எமது நீண்ட கால நண்பர் டொமினிக்ஜீவா அவர்களும் இந்த கொடிய தொற்றினால் மறைந்தபோது, அவரது ஏக புதல்வன் திலீபனுக்கு மாத்திரமே அந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி கிடைத்தது.
அன்பர் யோகநாதனின் இறுதி நிகழ்வுபற்றி அறிந்தபோது எனக்கு மல்லிகைஜீவாதான் உடனடியாக நினைவுக்கு வந்தார்.
மகாகவி பாரதியின் இறுதி நிகழ்வில் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே கலந்துகொண்டமையால், அந்த எண்ணிக்கை பத்துவிரல்களுக்குள் அடக்கம். அதுவே அந்த மகாகவிக்கு பெருமையாக இன்றும் பேசப்படுகிறது, எழுதப்படுகிறது.
அவரது சாதனையையும் முறியடித்துக்கொண்டு சமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் நினைவுகளைத்தந்துவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அன்பர் யோகநாதன் அய்யாவின் மறைவுச்செய்தியை எமது இலங்கை
மாணவர்கல்வி நிதியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய துணை நிதிச்செயலாளருமான திரு. விமல் அரவிந்தனுடன் பகிர்ந்துவிட்டு, எனது காரை வேகமாக செலுத்தி வீடு வந்து சேர்ந்ததும், அனுதாபச்செய்தியை எழுதி காயத்ரி எனக்கு அனுப்பிய யோகநாதன் அவர்களின் படத்துடன் எமது நிதியத்தின் பரிபாலன சபைக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பினேன்.
அவர் அந்தப்படத்திலும் தொற்றிலிருந்து தன்னை பாதுகாக்க முகக்கவசம் அணிந்துதான் காணப்படுகிறார்.
இந்த பாழாய்ப்போன தொற்று பரவி உயிர்களை காவுகொள்ளத் தொடங்கியபோதே, அதனால் வரப்போகும் பாரிய பொருளாதார நெருக்கடிபற்றியும் மக்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்காக மிகுந்த சிரமங்களை அனுபவிக்கப்போகிறார்கள் என்பதையும் தீர்க்கதரிசனமாக உணர்ந்த யோகநாதன், தாம் நிருவாக இயக்குநராக இயங்கும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை துரிதமாகச் செயற்படத்தூண்டியவர்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம், நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்த ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிவருகிறது.
யாழ். மாவட்டத்தைப்பொறுத்தவரையில் முதலில் அங்கிருக்கும் அதிபர்கள் – ஆசிரியர்கள் ஊடாகத்தான் நலிவுற்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிவந்தோம்.
எமது அமைப்பு அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். இதில் இணைந்திருக்கும் அனைவருமே தொண்டர்களாக பணியாற்றிவருகின்றனர்.
இந்நிதியம் போர் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியிலும் அது உக்கிரமாக தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற காலம் வரையில் மாத்திரம் இயங்காமல் தொடர்ந்தும் தனது பணியை முன்னெடுத்துவருகின்றது.
இடையில் வந்த சுநாமி கடற்கோள் அனர்த்தத்தின்போதும் இரண்டு கொள் கலன்களில் உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வடக்கில் வன்னிக்கும் கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பினை அண்டிய பிரதேசங்களுக்கும் வழங்கினோம்.
ஏற்கனவே எமது நிதியத்தின் திருகோணமலை மாவட்ட தொடர்பாளராக இயங்கிய பல் மருத்துவரும் சிறந்த சமூகப்பணியாளருமான “ ஞானி “ ஞானசேகரனை இந்திய அமைதிப்படை காலத்தில் நாம் இழந்தோம். அவரது உடலும் காணாமல்போனது. அதனையடுத்து சுநாமி காலத்தில் எமது தொடர்பாளராக இயங்கி, நாம் உதவி வழங்கிய கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கண்காணிப்பாளராக செயற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களையும் இனந்தெரியாத நபர்களினால் இழந்தோம். இவரது உடலும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்பொழுது எமது யாழ். மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாணவர் தொடர்பாளர் அன்பர் யோகநாதன் அய்யாவை இழந்திருக்கின்றோம். இவரது இறுதி நிகழ்வில் இரண்டுபேர்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
கொக்குவிலில் வதியும் யோகநாதனின் தாயார், தனது மகன் அநாதையாகப் போய்விட்டானே என்று குமுறிக்குமுறி அழுகிறார் என
அறிந்தபோது பொங்கிவரும் கண்ணீரை அடக்க முடியாமலிருக்கிறது.
போரினால் பாதிக்கப்பட்டு அநாதரவானவர்களுக்கு உதவுவதில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டவரை இறைவன் இறுதிச்சடங்கும் செய்யவிடாமல், அநாதையாகவே அழைத்துக்கொண்டானோ என்ற ஆதங்கமே அந்தத் தாயுள்ளத்தின் கண்ணீரில் வெளிப்படுகிறது.
தனது வாழ்நாளில் இறுதிவரையில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்று அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளை முடிந்தவரையில் பெற்றுக்கொடுத்த பெருமகன், திடீரென எம்மை விட்டுச்சென்ற துயரத்தை நாம் கடந்து செல்ல காலம்தான் துணைசெய்யவேண்டும்.
அவரது மறைவுச்செய்தியை வெளிப்படுத்தி அனுதாபக்குறிப்புகளை நான் எழுதியபோது, அதனை தனது கனடா பதிவுகள் இணைய இதழில் நண்பர் வ. ந. கிரிதரன் வெளியிட்டதுடன் தனது முகநூலிலும் பதிவேற்றியிருக்கிறார்.
என்னிடம் முகநூல் பாவனை இல்லையென்பதனால், தாம் முகநூலில் பதிவிட்ட குறிப்பிட்ட அனுதாபச்செய்திக்கு எழுத்தாளர் நா. சபேசன் எழுதியிருந்த தகவல் குறிப்பினையும் எனக்கு அனுப்பியிருந்தார்.
அக்குறிப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:
“ யோகநாதன் அண்ணரைப் பார்த்து நாற்பது ஆண்டுகளுக்கு
மேலாகிவிட்டது. லங்கா சமசமாஜக் கட்சியை ஆதரித்த குடும்பத்திலிருந்து, தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டாளராக 70 களில் செயற்பட்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முரண்பட்டு, தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணியை, இறைகுமாரன், சந்ததியார், மட்டக்களப்பு வாசுதேவா முதலானவர்களோடு சேர்த்து உருவாக்கியவர். சந்ததியாரும் யோகநாதனுமே அதன் இணைச் செயலாளர்கள். 80 களின் ஆரம்பத்தில் தெல்லிப்பழையிலிருந்து, விசுவமடுவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு பால் கடையொன்றை ஆரம்பித்து நடத்தியவர். யுத்த காலத்தில் தமிழ் அகதிகள் நிறுவனத்தின் (TRO) பொறுப்பாளராகவும் பணியாற்றியவர். மிகவும் அமைதியாக மக்களுக்காக செயற்பட்ட பெரியன். சென்று வாருங்கள் யோகநாதன் அண்ணை! "
எனக்கு இச்செய்தி புதியது. எனினும் யோகநாதன் அய்யா மறைந்து சில மணிநேரங்களில் நடந்த இணையவழி காணொளி நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய பலரும் பேசியதிலிருந்து அவரது தொடர்ச்சியான சமூகச்செயற்பாடுகளை அறியமுடிந்தது.
அவருடனான அறிமுகம் எனக்கு போர் முடிந்த காலத்திற்குப்பின்னரே கிடைத்தது. யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் முன்னர் கொக்குவிலிலும் பின்னர் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலும் இயங்கியது. தற்போது யாழ். அரியாலை கண்டிவீதியில் இயங்குகிறது.
2010 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று இந்த அமைப்பின் நேரடிக்கண்காணிப்பிலிருக்கும் எமது கல்வி நிதியம் உதவும் மாணவர்களையும் அவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்களையும் சந்திப்பேன். கொக்குவில் இந்துக்கல்லூரி, நல்லூர் நாவலர் மண்டபம், அரியாலை கலைமகள் சனசமூக நிலைய மண்டபம் ஆகியனவற்றிலும் நடந்துவந்திருக்கும் இந்த வருடாந்த ஒன்று கூடல்கள் கடந்த சிலவருடங்களாக யாழ். அரசாங்க செயலக மாநாட்டு மண்டபத்தில் நடந்தன.
இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று நெருக்கடியினால் பயணங்கள் தடைப்பட்டதனால் எமது கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் மாணவர் ஒன்றுகூடல்கள் நடைபெறவில்லை.
எனினும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளில் எத்தகைய பின்னடைவோ தேக்கமோ ஏற்படவில்லை. நிருவாக இயக்குநர் யோகநாதன் தொடர்ந்தும் எம்முடன் தொடர்பிலிருந்தார்.
அத்துடன் UNDP, USAID(IDEA), USAID(SCORE) War Affected People’s Association (WAPA), Belgium, TECH Outreach, Malaysia, Child First-UK, TECH Norway முதலான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கா தொடர்பிலிருந்தவர்.
எமது மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களைம் எமது கல்வி நிதியம் வழங்கவேண்டும் என்று அவர் விடுத்த வேண்டுகோளையும் நிறைவேற்றினோம்.
அதற்காக எமது கல்வி நிதியத்தின் கையிருப்பிலிருந்த நிதிவளத்தை பயன்படுத்தாமல், நல்லெண்ணமும் கருணை உள்ளமும் கொண்ட அன்பர்களிடமிருந்து நிதியுதவியைப்பெற்று அந்தப்பணியை மேற்கொண்டபோது, யோகநாதன் அய்யாவும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பணியாளர்களும் சமூக இடைவெளியை பேணியவாறு அவற்றை மக்களுக்கு சீராக விநியோகித்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் மறைவதற்கு ஒரு சில நாட்கள் முன்புவரை இந்த அவசரகால உதவிப்பணிகளில் எம்முடன் தொடர்பிலிருந்தவர்.
அவர் நிருவாக இயக்குநராக வந்தபின்னர், யாழ். அரசாங்க அதிபருடனும் வடபுலத்தில் இதர அரசாங்க அதிபர்களுடனும் வெளிநாடுகளில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் ஆரோக்கியமான தொடர்பினை பேணிவந்தவர்.
எந்தவொரு மக்கள் நலன் சார்ந்த சமூகப்பணிகளிலும் தன்னை முன்னிறுத்தும் தன்முனைப்பு இயல்புகளின்றி தொண்டராகவே இயங்கிய கர்மயோகிதான் யோகாதன் அய்யா.
சில சந்தர்ப்பங்களில் வேலைப்பளு அழுத்தங்களினால் அவர் தனது தார்மீகக்கோபத்தை காண்பித்தாலும், அந்தக்கோபமும் சூரியனைக்கண்ட பனிபோன்று விரைவில் மறைந்துவிடும்.
வெளிநாடுகளில் இயங்கும் தமிழர் நலன் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவைப்பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆதரவை பகிர்ந்தளிப்பதில் நேர்மையையும் கண்ணியத்தையும் இறுதிவரையில் கடைப்பிடித்தவர்.
அவர் எத்தகைய கர்மயோகி என்பதை, அவரது மறைவின்பின்னர் நடந்த இணைய வழி நினைவேந்தலில் உரையாற்றியவர்களின் அஞ்சலிகளிலிருந்தும் தெரிந்துகொள்ளமுடிந்தது.
யோகநாதன் அய்யா மறைந்து சுமார் 24 மணித்தியாலத்திற்குள் அவர் அங்கம் வகித்த யாழ். அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இணையவழி காணொளி நினைவேந்தலில் இலங்கை , மலேசியா, ஐக்கிய இராச்சியம், டென்மார்க், கனடா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் தன்னார்வத் தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள் அவரது வாழ்வையும் பணிகளையும் சிலாகித்து உரையாற்றினர்.
மிகவும் குறுகிய காலத்திற்குள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு நேருக்கு நேர் பார்த்து ஒன்றுகூடுவதற்கு வழிவகை செய்துள்ள இந்த கொரோனோதான் அவரையும் தொற்றி காவுகொண்டிருப்பதுதான் முரண் நகை மிக்க விதிப்பயன்.
கொக்குவிலில் வதியும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறமுடியாத நிலையில் சமூக இடைவெளிபேணும் சூழலில் அவரது அருமை மகள் மற்றும் உறவினர்களிடம் அனுதாபம் தெரிவிக்கமுடிந்தது.
இந்நிகழ்வு யாழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரும், சர்வோதயா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளருமான திரு. சி. யுகேந்திரா தலைமையில் நடந்தது.
யாழ். முன்னாள் அரச அதிபர் திரு. நாகலிங்கம் வேதநாயம், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணையத்தின் முன்னாள் தலைவரும் வடமாகண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான திரு. சி. வி.கே. சிவஞானம், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திரு. க. சுசீந்திரன் உட்பட பலர் உரையாற்றினர்.
அன்பர் யோகநாதன் அய்யா பற்றிய நினைவுகளுக்கு மரணமே இல்லை என்பதும் எம்மை நாம் தேற்றிக்கொள்ள கூறும் ஆறுதல் வார்த்தைதான்.
---0---
letchumananm@gmail.com
No comments:
Post a Comment