வடக்கும் தெற்கும் - சிறுகதை கே.எஸ்.சுதாகர்



நேரம் இரவு எட்டுமணி. சுமோக்கோவிற்கான மணி அடித்தது. Smoko என்பது அவுஸ்திரேலியாவில் வேலை செய்யுமிடங்களில் விடும் சிறு இடைவேளையைக் குறிக்கும்.

 

“உப்பாலி.... உம்மோடை ஒரு கதை இருக்கு” கொன்வேயருக்கு எதிராக வேலை செய்துகொண்டிருந்த சிவராஜா, தன் சிங்களநண்பன் உப்பாலியைப் பார்த்துக் கத்தினான். கார்கள் வரிசையாக கொன்வேயரில் அணிவகுத்து நின்றதால், சிவராஜாவின் முகம் உப்பாலிக்குச் சரிவரத் தெரியவில்லை. சத்தம் மாத்திரம் கேட்டது. கொன்வேயரைக் கவனமாகத் தாண்டி மறுபக்கம் சென்றான் உபாலி.

 

அவர்களுக்கிடையேயான உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது.

 

“ஹலோ உப்பாலி. எனக்கொரு உதவி செய்யவேணும். நீ எனது நண்பன். ஒன்றாகப் பத்துவருடங்களுக்கும் மேல் வேலை செய்கின்றோம். கேட்பதற்கும் தயக்கமா இருக்கு.”

 

“அதனாலென்ன! ரீயைக் குடித்துக்கொண்டே கதைப்போமே!”

 

இருவருமாகத் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று, தேநீரைத் தயாரித்துக்கொண்டார்கள். உப்பாலி சிகரெட் பிடிப்பவன் என்பதால், அறையின் பின்னால் இருந்த சிகரெட் பிடிப்பதற்கான தகரக்கொட்டகைக்குள் ஒதுங்கினார்கள். உச்சக்கட்ட கோடைப்பருவம் என்பதால் தகரக்கொட்டகை வெப்பத்தினால் பிதுங்கியது. வெளியே மாலைக்கருக்கலில் ஆகாயம் சிவந்து காணப்பட்டது.

 

“முன்பும் இதைப் பற்றிச் சாடைமாடையா உனக்குச் சொல்லியிருக்கின்றேன். எனது மகனும் ஒரு சிங்களப்பெண்ணும் யூனிவர்சிற்றியில் ஒன்றாகப் படிக்கின்றார்கள். அவர்களிடையே காதல் அரும்பிவிட்டது” சொல்லியபடியே தனது மொபைல்போனை எடுத்து விரலினால் ஸ்கிறீனைத் தட்டித்தட்டி ஓடவிட்டான் சிவராஜா.

 

“இந்தா... இதிலை இருக்கிறதுதான் அந்தப் பெண். மனோறி லக்மினி எண்டு பெயர். இவையை உனக்குத் தெரிஞ்சிருக்கும். மெல்பேர்ணில் பிரபல லோயர் குணசேகரவின்ரை மகள்...”

 

“எட... எங்கட ஃபமிலி லோயரின்ரை மகள். சின்னனிலை கண்டது. இப்ப பெட்டை நல்ல வடிவா மூக்கும் முளியுமா இருக்கிறாள்..”

 

“முளியும் மூக்கும் இருக்கட்டும்... பிரச்சினை அது இல்லை உப்பாலி! எப்படியாவது உந்தக் காதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்..”

 

உப்பாலிக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது.

 

“பெம்பிளையின்ரை பேரிலையே லக் இருக்கு. யூனிவசிற்றியிலும் படிக்கிறாள். அதுகள் வாழவேண்டிய பிள்ளைகள். அதை விட்டிட்டு இப்ப ஏன் வெட்டவேணுமெண்டு நினைக்கின்றீர்கள்? சிங்கள மக்கள் எல்லாரும் கூடாதவர்கள் இல்லை. அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளுக்காக நீங்கள் எங்களை வெறுக்காதீர்கள்” உப்பாலி இப்பொழுது சிவராஜாவின் கையைப் பிடித்துத் தடவினான்.

 

“மச்சான் நீயே எனது நண்பன். அப்பிடி எனக்கு சிங்கள மக்கள் மீது ஒரு வெறுப்பும் இல்லை. நண்பன் என்றபடியால் உனக்குச் சொல்கின்றேனே! நாட்டிலை எங்கட இனங்களுக்கிடையே எவ்வளவோ நடந்தாப்போல, இந்த உலகத்திலை ஒருத்தருமே இல்லாம, சிங்கள வீட்டில் சம்பந்தம் வைத்திருக்க என்ரை மனிசி விருப்பப்படுறா இல்லை. அதையும் மீறி இந்தக் கலியாணத்தைச் செய்து வைக்கப் போனா, கலியாணவீட்டுக்கு எங்கடை பக்கத்திலை இருந்து ஒருத்தரும் வரமாட்டினம். அப்படிப்பட்ட ஒரு கலியாணம் தேவையோ எண்டு ஜோசிக்கிறன்.”

 

“சிவராஜா நான் உமக்கொண்டு சொல்லவேணும். என்ரை மகளுக்கு இப்ப முப்பத்திமூண்டு வயசாகுது. அவள் தனக்கு கலியாணமே வேண்டாம் எண்டு சொல்லுறாள். அதையும் கொஞ்சம் யோசிக்க வேணும்...”

 

உப்பாலியின் வார்த்தைகள் எதுவும் சிவராஜாவிடம் பலிக்கவில்லை.

 

“உப்பாலி..... எப்படியாவது அந்தத் தொடர்பை வெட்டிவிட வேண்டும். அதற்காக நீங்கள் எனது குடும்பம் தொடர்பாக என்ன அவதூறுகளையும் அவர்களிடம் சொல்லலாம்.”

 

தேநீர் இடைவேளை முடிந்துபோனதற்கான மணி அடித்ததால், சிவராஜா கடைசியாகச் சொன்னது உப்பாலியின் காதில் சரிவர விழவில்லை.

 

இருவரும் மீண்டும் வேலை செய்வதற்காகப் புறப்பட்டார்கள். கதைத்துக் கொண்டு நின்றதில் சிறுநீர் கழிப்பதற்காக நேரம் போதவில்லை. அவசர அவசரமாக இருவரும் ரொயிலற் பக்கம் ஓடினார்கள்.

 

அன்று முழுவதும் சிவராஜாவின் பார்வையில் இருந்து தப்பிவிடுவதற்காக உப்பாலி கடும் முயற்சி எடுத்தான்.

 

°

 

அதன் பின்னர் உப்பாலியைக் காணும் நேரங்களில் எல்லாம், சிவராஜா அந்தக் கதையை ஆரம்பித்துவிடுவான்.

 

“சிவா.. நீயே சொல்லு. இதை எப்படி நான் அவையளிட்டைப் போய்ச் சொல்லுறது? ஒரு மனச்சாட்சி வேண்டாம். எனக்கும் பிள்ளையள் இருக்கு சிவா...” திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொள்வான் உப்பாலி.

 

“எங்களுக்கு நடந்ததுகளைப்பற்றி இந்தப் பிள்ளையளுக்குச் சொல்லிப் புரியப் போவதில்லை. அதுகள் இஞ்சை பிறந்ததுகள். அனுபவித்தவனுக்குத்தானே தெரியும் அதின்ரை வலி. அதுகளுக்கு விளங்கப்படுத்துவது மிகவும் கடினம். சொல்லிப் புரியாது அது.”

 

“எனக்கு முன்னால் சிங்களவரைக் குறை சொல்லாதீர்கள் என்று நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் சிங்கள மக்கள் நினைத்தால் எதையும் செய்யலாம். அத்தோடை சிங்களவரை மாத்திரம் குறை சொல்லவேண்டாம். உங்கடை பக்கமும் பிழை இருக்கு.”

 

“அவுஸ்திரேலியா ஒரு மல்ரிகல்சரர் நாடு. எத்தினையோ மனிசர் இருக்கேக்கை போயும் போயும் ஒரு சிங்களத்தியா அவனுக்குக் கிடைச்சாள்? ஒரு வெள்ளைக்காரியைப் பிடிச்சிருந்தாக்கூட மகிழ்ச்சியடைந்திருப்பேன்” சிவராஜா உச்சத்துக்குப் போகும்போது தனக்கு எதிரே இருப்பவரையும் மறந்துவிடுவான்.

 

`உப்பாலி காரியத்துக்கு உதவான்’ என்று முடிவெடுத்தான் சிவராஜா.

°

ஆறுமாதங்கள் கடந்திருக்கும். அன்று உப்பாலி உடம்புக்கு முடியவில்லை என விடுப்பு எடுத்துக்கொண்டு கட்டிலில் படித்திருந்தான்.

 

இரவு பதினொன்று நாற்பது. உப்பாலியின் மொபைல்போன் கிணுகிணுத்தது.

 

“என்ன உப்பாலி... வேலைக்கு வருவாய், ஒரு குட் நியூஸ் சொல்லலாம் என்றிருந்தேன்.”

 

“சிவா... எனக்குக் கொஞ்சம் தலையிடி காய்ச்சல். குட் நியூஸ் தானே! சொல்லும்.”

 

“என்ரை மகனுக்கு வாற மாதம் கலியாணம். அவன் இப்ப ஒரு நோர்த் இண்டியன் கேர்ள் ஒருத்தியைப் பிடிச்சிட்டான்.”

 

“நோர்த் இண்டியனா?” சலிப்புடன் உப்பாலி கேட்டான்.

 

தொடர்ந்து, “அப்ப இனி வீடு முழுக்க சப்பாத்திதான்... அதுசரி எப்பிடி உன்ரை மகன் அந்த லோயரின்ரை மகளை வெட்டினான்?”

 

“அவன் எங்கை வெட்டிறது? அவனுக்கு இன்னும் சரியாக் கத்தி பிடிச்சு மாம்பழமே வெட்டத் தெரியாது! எல்லாம் என்ரை விளையாட்டுத்தான். மொட்டைக்கடுதாசி... தெரியுந்தானே! ஒண்டுக்குப் பத்து எண்டு லோயருக்கு எழுதினனான். என்ரை ஃபிறன்ஸ் சிலபேரைக் கொண்டும் எழுதுவிச்சனான். என்னண்டு கேக்க மாட்டியோ?”

 

“பாவம் அதுகள். சரி சொல்லு...”

 

“என்ரை மகன் குடு அடிக்கிறான், பவுடர் பூசுறான், பெண்கள் சகவாசம் இருக்கு - என்று வண்ண வண்ணக் கடிதங்கள் என்ரை மகனைப்பற்றி எழுதிப் போட்டன். கை மேல் பலன் கிடைச்சுது!”

 

சிவராஜா சொல்லிக்கொண்டே போனான். மறுமுனையில் சத்தமில்லை.

 

“என்ன உப்பாலி? மெளனமாக இருக்கிறாய்? நான் கதைக்கிறது கேட்குதா?”

 

“கேக்குது... ஆனா ஒரு சந்தேகம்? சிங்களவரும் நோர்த் இண்டியாவிலை இருந்துதானே இலங்கைக்கு முந்தி வந்தது எண்டு சரித்திரம் சொல்லுது!”

 

“அப்பிடியா? நல்லது! இருக்கட்டும்...” வாய் பிளந்தான் சிவராஜன்.

 

அன்று இரவு இரண்டு பேரும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தார்கள். இனி எப்படி ஒருவர் கண்ணில் மற்றவர் விழிப்பது?

 

உறக்கம் சிவராஜாவையும் உப்பாலியையும் மட்டும் விரட்டவில்லை.... ஒரு தமிழ் இளைஞனையும் ஒரு சிங்கள யுவதியையும் கூடத்தான்.

  

No comments: