அரங்கேற்றங்கள் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

 .



இன்று தமிழர்கள் வாழும் நகரங்கள் அனைத்திலும் அரங்கேற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழரின் கவின் கலைகள் எனப் போற்றப்படும் நடனம், வாய்ப்பாட்டு, வாத்தியங்களான புல்லாங்குழல், மிருதங்கம், வீணை போன்றவற்றைக் கற்றுக் கொண்ட இளைஞர்கள், யுவதிகள் தனித்து ஒருவராக மேடையேறி தமது திறமையை வெளிப்படுத்துவது அரங்கேற்றமாகிறது.


அரங்கேற்றம் என்ற சொல் அரங்கத்தில் ஏறுவது எனப் பொருள் படும். ஒரு கலைஞர் தனித்து இயங்கக் கூடிய திறமையைப் பெற்றதும் அத் திறமையைச் சபையோருக்கு எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றமாகிறது. ஆக மொத்தத்தில் ஒரு கலைஞன் உருவாகி இருப்பதை எடுத்துக் காட்டுவதே அரங்கேற்றம் என்ற சடங்காகும்.

இந்தமாதிரியான அரங்கேற்றங்கள் எமது தந்தையர் காலத்திலோ அல்லது எமது பாட்டனார் காலத்திலோ நடைபெற்றதாக நாம் அறியவில்லை. ஆமாம், இந்த வளர்ந்து வரும்; மாறிவரும் நாகரிகத்தின் ஓர் அங்கமே அரங்கேற்றம்.

முன்பெல்லாம் தொழில்கள் யாவும் ஜாதி அடிப்படையிலே நடந்து வந்தன. ஆடல் மற்றும் இசைத்தொழிலும் இவ்வாறே ஜாதி அடிப்படையில் நடந்தது. இந்தக் கவின் கலைகளை வளர்ப்பதற்கு இசை வேளாளர் என ஒரு சமூகத்தினர் இருந்தார்கள். இவர்களே இந்தத் தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தனர். இவர்களை ஊர் வழக்கில்நட்டுவர்என அழைத்தனர். இலங்கையைப் பொறுத்தளவில் இவர்கள் நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியத்தை வாசித்து வந்தார்கள்.

ஆனால் எமது கலைகளின் இருப்பிடமான தென்னிந்தியாவிலே இசை வேளாளர் பரம்பரையில் சிலர் நாதஸ்வரக் கலையை வளர்த்தனர். வேறு சில குடும்பங்கள் நாட்டியத்திலே சிறந்து விளங்கினார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்ட காலம் வரை இந்த நட நங்கையர் கோயில்களிலே ஆடி வந்தார்கள். இவர்களுக்குக் கோயில்களிலே பல்வேறு கடமைகள் இருந்தன. கொடிஸ்தம்பத்தின் முன் ஆடுவது, சுவாமி புறப்பாட்டின் போது ஆடுவது, சுவாமி ஊர்வலம் வரும் போது ஆடி வருவது போன்ற பல கடமைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. இவர்கள் தேவ தாஸிகள் என அழைக்கப்பட்டனர்.( தேவ = இறைவன், தாஸி= அடிமை. ) நாதஸ்வரக் கலைஞர்களின் கடமைகள் போன்றே அன்றும் இவைகள் நடனத்துக்குக் கடமைகளாக விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. ஓதுவார்கள் தேவாரங்களைப் பாடி இறைவனின் புகழைப் பாடுவார்கள். ஆடல் நங்கையரோ இறைவனின் மேன்மைகளை ஆடல் மூலம் வெளிப்படுத்தினர். அதற்காகக் கோயில் இவர்களுக்கு மானியம் கொடுத்து வந்தது.



இப்படியான ஆடல் நங்கையர் கோயில்களில் ஆடுவதுடன் இவர்களின் கடமை முடிந்து விடவில்லை.அரச சபைகளிலும் இவர்களின் நாட்டியங்கள் இடம்பெற்று வந்தன. கவிஞர்களையும் புலவர்களையும் ஆதரிப்பது போன்றே அரசன் ஆடல் கலைஞர்களையும் போஷித்து வந்தான்.

இவ்வாறாக, ஆடல் கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு அரசன் பரிசில்கள் வழங்கினான். உறவாக்கி நல்லூர் என்ற கிராமம் அரசனால் உறவாக்கி என்ற ஆடல் நங்கைக்கு கொடுக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது.

அன்றய சமுதாயத்திலே குடும்பப் பெண்ணானவள் ஆடல் பாடல் எதுவும் தெரியாதவளாகவே இருந்தாள். ஏன் கல்வியறிவு கூட அற்றவளாகவே விளங்கினாள். இவற்றை அறிந்திருப்பது இல்லாளுக்கு அழகல்ல எனக் கருதிய காலம் அது. ஆனால் இந்த ஆடல் நங்கையரோ கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக; கீதங்கள் பாடுவதிலும் வாத்தியங்கள் இசைப்பதிலும் நிருத்தம் ஆடுவதிலும் சிறந்து விளங்கினர். இத்தகைய நங்கையர் அரசன் முதற்கொண்டு உயர் வர்க்கத்தினரின் ஆசை நாயகிகளாகவும் இருந்தனர்.

அன்றய சமுதாயக் கட்டுக்கோப்பில் இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே விளங்கியது. இந்த ஆடல் நங்கையருக்கு அன்று சமூகத்திலே போதியளவு செல்வாக்கும் அந்தஸ்தும் கூட இருந்தது.

இப்படியான ஆடல் நங்கை ஒருத்தியே சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரமான மாதவி. மாதவியின் ஆடல் அரங்கேற்றம் அரசனின் முன்னிலையில் நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கி.பி. 4ம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படும் சிலப்பதிகார காலத்திலே அரங்கேற்றம் என்ற சொல் வருகிறது. இதில் ஆடல் நங்கையான மாதவி அரங்கேற்றத்தின் பின் தனது தொழிலை ஆரம்பிக்கிறாள்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் தாஸி குலத்தைச் சாராத பிற குலத்தினரும் நாட்டியத்தை ஆடி அரங்கேற்றம் செய்கிறார்கள். இத்தகைய அரங்கேற்றங்கள் தொழில் முறையில் தாம் கற்ற கலையைப் பயன் படுத்தி  கலைவளர்க்க உதவுகின்றன.

எமது இலக்கியச் செல்வமான சிலப்பதிகாரத்திலே மாதவிக்கு அரங்கேற்றம் நடந்ததாகக் கூறப்படுவதால் அன்றும் இந்த அரங்கேற்றங்கள் வழக்கில் இருந்ததை அறிகிறோம். ஆனால், இசை வாத்தியக் கலஞருக்கு அரங்கேற்றம் அன்று நடந்தமைக்குச் சான்றுகள் கிடையா.

இன்று முன்னணியில் நிற்கும் ஆடல் கலஞர் யாவரும் மாதவியைப் போன்று அரங்கேற்றம் செய்தவர்களே. ஆனால் முன்னணிப் பாடகர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் யாவரும் அவ்வாறு அரங்கேறி முன்னணிக்கு வந்தவர்களல்லர். இவர்கள் சபாக்களிலே இளம் கலைஞர் வரிசையில் பாட வந்து தமது திறமையால் உயர்நிலைக்கு வந்தவர்கள்.

நித்தியஸ்ரீ, செளமியா, உன்னிகிருஷ்ணன் போன்று முன்னணியில் நிற்கும் இளம் இசைக்கலைஞர்களும் சரி  முன்னாளில் பிரபலமான டீ.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, செம்மாங்குடி போன்ற பெரிய வித்துவான்களும் சரி அரங்கேற்றம் செய்யாது முன்னணிக்கு வந்தவர்களே. வாத்தியக் கலைஞர்களும் அவ்வாறே! இசைக்கலைஞர்களுக்கு அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற கட்டாயம்  அன்று இருக்கவில்லை.

ஆனால், ஆடல்கலைஞர்களின் கதை அரங்கேற்றத்திலேயே ஆரம்பமாகிறது. ஆடல் கலைஞர் ஒருவர் முன்னணிக்கு வரவேண்டுமானால் அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் உண்டு. வெளிநாடுகளில் மாத்திரமன்றி தமிழ்நாட்டிலும் இத்தகைய நிலைமையே  இன்றும் உள்ளது.




இங்கு எமது பெண்கள் பலர் அரங்கேற்றம் முடிந்ததும் பெரும்பாலாக ஆடுவதை நிறுத்தி விடுகின்றனர். அரங்கேற்றத்தில் தான் ஒரு கலைஞர் உருவாகிறார் என்றால் அரங்கேற்றத்தின் பின் தான் கற்ற கலையை விருத்தி செய்யாது விடுவது கருவிலேயே சிதைந்து போன நிலை தான்.

அரங்கேற்றம் என்பது Car Driving இல் ’P’ License கிடைத்த மாதிரித் தான். ஆனால், மேலும் பல வருடங்கள் Car ஓட்டும் போது தான் நீங்கள் தேர்ந்த திறமையுடைய Driver ஆக முடியும். அதே போல பலவருடங்கள் நீங்கள் கற்ற கலையைப் பயிற்சி செய்யும் போது தான் அந்தக் கலையின் நுணுக்கங்களை எல்லாம் அறிந்து அதை விரிவு செய்ய முடியும்.

(
இக்கட்டுரை ATBC வானொலியில்பண்பாட்டுக் கோலங்கள்என்ற நிகழ்ச்சியில் 13.4.2005 அன்று ஒலிபரப்பாகியது.)

Posted by நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் at 10:14 PM 

 

No comments: