எனது அப்பாவின் பூர்வீகம் பாளையங்கோட்டை. அவரது உறவினர்கள் அங்கும் திருநெல்வேலி, மதுரை, சாத்தூர், தூத்துக்குடி, ஶ்ரீவைகுண்டம், சென்னை முதலான நகரங்களிலும் வசிக்கிறார்கள்.
இந்தத் தகவல்களை எனது தாத்த முறையான எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதன் சொன்னார். சென்னையிலிருந்து நான் திருநெல்வேலி சென்று அங்கிருந்து அவர் குறிப்பிட்ட ஊர்களிலிருக்கும் உறவினர்களையும் பார்த்துவிட்டு, இறுதியாக மதுரை வந்து அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று ராமானுஜம் கப்பல் ஏறி, தாயகம் திரும்புவதுதான் எனது பயண ஒழுங்கு.
ரகுநாதன் அதற்கேற்றவாறு நான் செல்லவிருக்கும் ஊர்களின் தொலைவு பற்றியும் பயண ஒழுங்கை எவ்வாறு
மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார்.
அண்ணா நகரிலிருந்து சாத்தூரில் வதியும் எனது மைத்துனர் முறையான ஆண்டபெருமாள் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவரும் தாமதிக்காமல், தான் வந்து அழைத்துச்செல்வதாக பதில் எழுதியிருந்தார்.
இன்றுபோல் அப்போது கைத்தொலைபேசி – மின்னஞ்சல் வசதிகள் இல்லை. நண்பர்கள் காவலூர் ஜெகநாதன், மு. கனகராசன் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவ நண்பர்களுக்கும் பயணம் சொல்லிவிட்டு மைத்துனருடன் புறப்பட்டேன்.
அவர் இரண்டு தடவைகள் இலங்கை வந்திருப்பவர். இறுதியாக அவர் வந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். மேல் வகுப்புக்கு வந்த பின்னர் நானும் அக்காவும் அவருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவோம். அவர் சாத்தூரில் ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியர். அவர் கத்தோலிக்க மதத்தைச்சேர்ந்த ராஜாமணி என்பவரை காதலித்து மணம் முடித்து அந்த மதத்திலும் சேர்ந்துவிட்டிருந்தார்.
ராஜாமணியும் ஆசிரியையாக பணியாற்றினார். மைத்துனரின் ஒரு தம்பி சந்திரசேகரன் தூத்துக்குடியில் தொழில் நுட்பக்கல்லூரியில் விரிவுரையாளர். பாளையங்கோட்டையிலிருந்த எனது அப்பாவின் பூர்வீக வீட்டில்தான் அவர் பின்னாளில் தனது குடும்பத்துடன் வசித்தார்.
மற்றுமொரு தம்பி பாபுராஜ் மதுரையில் பிரசித்தமான பாண்டியன் ஹோட்டலில் எலக்ரீஷியனாக பணியாற்றினார். இந்த மூன்று மைத்துனரும் என்னை மாப்பிள்ளை என்றுதான் அழைப்பார்கள்.
அப்பாவின் உடன்பிறந்த தங்கை மதுரை நகர காவலர் குடியிருப்பில் வசித்தார். அவரது கணவர் புலனாய்வுப்பிரிவில் கைரேகை நிபுணராக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருந்தார். அவர்களின் ஒரு மகன் காந்திமதிநாதனும் பொலிஸ் துறையில் பணியாற்றினார்.
அப்பாவின் அக்கா மகன்மாரான எனது மூன்று மைத்துனர்களும் என்னை தங்களது உறவுப்பெண் ஒருவருக்கு மணம்முடித்துக்கொடுக்கும் எண்ணத்திலிருந்தவர்கள். அது சாத்தியப்படாதமையினால், “ மாப்பிள்ளை “ என அழைத்து மனதை தேற்றிக்கொண்டவர்கள்.
மைத்துனர் ஆண்டபெருமாள் என்னை உறவினர்களின் ஊருக்கெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியதுடன்
அந்த ஊர்களையும் காண்பித்தார். எப்பொழுதும் பயணங்களில் விருப்பமான எனக்கு அவர் காண்பித்த இடங்கள் அதிசயமாகத்திகழ்ந்தன. கோயில்களுக்கும் அழைத்துச்சென்றார். ஆனால், அவர் வெளியே நின்றுகொண்டு என்னை உள்ளே அனுப்பி தரிசனம் செய்யச்சொல்லும் விந்தையான மனிதர் அவர்.
அவர் மாறியிருந்த மதம் அவரை அவ்வாறு மாற்றியிருந்தது. மைத்துனருக்கு இயற்பெயர் ஆண்டபெருமாள். அதனை மாத்திரம் அவர் மாற்றவில்லை.
அவருடன் தூத்துக்குடிக்கு சென்றேன். இந்த நகரம் சுதந்திர போராட்ட காலத்திலும் பிரசித்திபெற்று விளங்கியது. அங்குதான் ஓட்டப்பிடாரம் என்ற பிரதேசத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளை பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்காக போராடியதுடன் சுதேசி கப்பலை ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செலுத்தினார்.
தூத்துக்குடி துறைமுகம் அவரது பெயரில் திகழ்ந்தது. அதனை சுற்றிப் பார்த்தபின்னர் மைத்துனர் சந்திரசேகரன் பணியாற்றிய தொழில்நுட்பக்கல்லூரிக்குச்சென்றோம். அவர் அச்சமயம் ஶ்ரீவைகுண்டத்தில் வசித்தார். தனது குடும்பத்தினரையும் நான் பார்க்கவேண்டும் என்று அங்கே அழைத்துச்சென்றார்.
அவர்களின் வீட்டில் மொட்டை மாடியிலிருந்து
பேசிக்கொண்டிருந்தபோது, வெளியே எட்டிப்பார்த்தேன். ஶ்ரீவைகுண்டத்தின் கோயில் கோபுரமும் அந்த ஊரும் அழகாக காட்சியளித்தன.
அவற்றை ரஸனையுணர்வுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் எனது பார்வை நிலைகுத்தியது! கோட்டை போன்ற தோற்றத்துடன் சுற்றிலும் மதிலால் சூழ்ந்த ஒரு மக்கள் குடியிருப்பு தென்பட்டது. மைத்துனர் சந்திரசேகரன் பல சுவாரஸ்யமான கதைகளை சொன்னார். எப்பொழுதும் தேடல் மனப்பான்மையுடன் வாழும் எனக்கு, அவர் சொன்ன கதைகளினால் அதனை நேரில் சென்று பார்க்கவிரும்பும் எனது எண்ணத்தைச் சொன்னேன்.
” வேண்டாம் மாப்பிள்ளை. அங்கெல்லாம் நாம் போகமுடியாது, போகவும் கூடாது. எங்களைப்பார்க்க வந்த இடத்தில் உங்களுக்கேன் விபரீத ஆசை?” என்றார்.
” மச்சான், பத்திரிகையாளனாகவும் இருக்கின்றேன். நேரில் சென்று பார்த்தால், புதிதாக ஏதும் எழுதமுடியும்” என்றேன். அவர் அழைத்துச்செல்ல மறுத்தேவிட்டார். அதனால் அந்தக்கோட்டையையோ, அதனுள் வாழும் மனிதர்களையோ பார்க்கும் ஆசை நிறைவேறவில்லை.
அந்தக்கோட்டைக்குள் வசிப்பவர்களை ” கோட்டை வீட்டுப்பிள்ளைமார்” என அழைக்கிறார்கள். இவர்கள் அந்த ஶ்ரீவைகுண்டத்தில் வெளியுலக பரிச்சியம் அற்ற தனித்துவமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப்பிள்ளைமார் சமூகத்தினரின் மூதாதையர்கள் காஸ்மீரில் வாழ்ந்ததாகவும், அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் அமைச்சு அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர் எனவும் அறியமுடிந்தது.
இவர்கள் ஶ்ரீவைகுண்டம் வந்து எவ்வாறு தமக்கென ஒரு கோட்டை அமைத்துக்கொண்டார்கள், இவர்களின் வரலாற்றுப்பின்னணி குறித்தெல்லாம் மச்சானிடம் ஓரளவு கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
எனினும் அந்தப்பயணத்தில் எந்தவொரு
கோட்டைப்பிள்ளைமாரையும் சந்தித்துப்பேசுவதற்கான வாய்ப்பினை தருவதற்கு அந்த மச்சான் மறுத்துவிட்டார். மனிதன் சந்திரனிலும் கால் பதித்துவிட்டான். செவ்வாய்கிரகத்திற்கும் செல்லத்தயாராகின்றான். ஆனால், அந்த கோட்டை வாசிகள் வெளியே வராமல் எப்படி இந்த உலகத்தை தெரிந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற கவலை என்னை நீண்ட நாட்கள் அரித்துக்கொண்டிருந்தது.
அதன்பின்னர், 1985 இல் மாஸ்கோவில் நடந்த அனைத்துலக இளைஞர், மாணவர் விழாவுக்குச்சென்றிருந்தபோது, அங்கு முன்னேற்றப்பதிப்பகத்தில் ( Progressive Publication) நான் சந்தித்த தமிழ் அபிமானி கலாநிதி விதாலி பூர்ணிக்கா, தான் ருஷ்ய மொழியில் எழுதியிருந்த ஒரு நூலை எனக்கு பரிசளித்தார். ” எனக்கு அந்த மொழிதெரியாது” என்றேன்.
” கவலையை விடுங்கள் தோழரே! விரைவில் இந்தப்புத்தகம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. வந்ததும் கிடைக்கச்செய்கின்றேன்” எனச்சொன்னவர், அதன் உள்ளடக்கம் குறித்தும் சொன்னார்.
அவரது வாயிலிருந்து ஶ்ரீவைகுண்டம் உதிர்ந்தது! அவரும் கோட்டைப்பிள்ளைமார் பற்றி சொல்லத்தொடங்கினார். அதன்பின்னர் அந்த கோட்டையின் ரிஷிமூலம், நதிமூலம் ஆராயும் எண்ணமும் என்னிடமிருந்து மறைந்துவிட்டது.
1987 இல் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். வித்தாலி ஃபூர்ணிக்கா எழுதிய அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ” பிறப்பு முதல் இறப்புவரை”. ( மொழிபெயர்த்தவர் நா. முகம்மது செரீபு) அதனை சென்னை நியூ செஞ்சுரி புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. நண்பர் கே. கணேஷ் இலங்கையில் கண்டி தலாத்து ஓயாவிலிருந்து தபாலில் அனுப்பியிருந்தார்.
சுஜாதாவும் கணையாழி இதழின் கடைசிப்பக்கத்தில் ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். தமிழக படைப்பாளிகள் இந்த கோட்டையை தரிசித்தால், அற்புதமான நாவல் ஒன்று எழுதமுடியும் என்ற தொனியில் சுஜாதா எழுதியிருந்தார்.
எமது முன்னோர்களின் வாழ்வைச்சித்திரித்து திரைப்படம் எடுக்கும் தமிழ் இயக்குநர்கள், திரைப்பட கதாசிரியர்களின் கண்களுக்கு இதுவரையில் தென்படாத அந்தக்கோட்டையும் அந்த மாந்தரும் சோவியத்தின் உக்ரேயினிலிருந்து சென்றிருக்கும் விதாலி பூர்ணிக்காவுக்கு தெரிந்திருக்கிறது.
இலங்கையிலிருந்து சென்ற என்னால்தான் முழு விபரமும் அறியமுடியாதுபோய்விட்டது.
இதுபற்றி எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
மைத்துனர் என்னை எட்டயபுரம் அழைத்துச்சென்றார்.
அங்கே பாரதி வாழ்ந்த வீடு, அவருக்கு பாரதி பட்டம் வழங்கிய எட்டயபுரம் அரண்மனை, பாரதி மணி மண்டபம், பாரதி அமர்ந்து கவிதைகள் எழுதிய தெப்பக்குளம் படிக்கட்டுகள், அவரது தந்தையார் சின்னச்சாமி அய்யர் நடத்தி, நட்டப்பட்ட தொழிற்சாலையின் சிதைந்த தோற்றம் , பாரதியார் மனைவி செல்லம்மாவின் கைபற்றியும் தோளைப்பற்றியும் உலாத்தலுக்குச்சென்ற மாடவீதி எங்கும் அலைந்து திரிந்தேன்.
பாரதி எனக்கும் ஆதர்சம். அவர் பிறந்து தவழ்ந்து நடந்து ஓடி விளையாடிய மண் அல்லவா..? என்னையறியாமல் உற்சாகம் பிறந்தது.
ஆனால், அந்த உற்சாகம் அந்த அரண்மனையையும் மணி மண்டபத்தையும் பார்த்ததும் மறைந்து சோகம் தொற்றிக்கொண்டது.
அரண்மனை பாழடைந்து சிதிலமாகிக்கொண்டிருந்தது. அதன் உள்ளே செல்லமுடியாமல் கம்பி வேலி. உள்ளே புல்லும் புதரும் மண்டி வளர்ந்து சகிக்கமுடியாதிருந்தது. பாரதி நூற்றாண்டுக்குப்பின்னரும் அது இருந்த கோலம் மனதை வருத்தியது.
மைத்துனரிடமும் பாரதி இல்லத்திலிருந்த இளைசை மணியனிடமும் காரணம் கேட்டேன். இளசை அருணா, இளைசை மணியம் ஆகியோர் சகோதரர்கள். அத்துடன் எழுத்தாளர்கள்.
எட்டயபுரத்திற்கு இளசை என்றும் ஒரு பெயர் உண்டு. பாரதியே எழுதியிருக்கிறார்.
பாரதி இல்லத்தை தமிழக அரசு பராமரிக்கிறது. ஆனால், அந்த அரண்மனையை அரசின் பொறுப்பில் விடாமல், எட்டயபுர மன்னரின் பல தலைமுறை கடந்த வாரிசுகள் கையகப்படுத்தி வைத்துள்ளன.
1947 ஆம் ஆண்டு பாரதி மணிமண்டபத்தை முதல்வர் ராஜாஜி திறந்து வைத்தபோது, இசையரசி எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் இசைக்கச்சேரியும் நடந்துள்ளது.
பாரதி பக்தர்கள் திரளாகக்கலந்துகொண்ட மணிமண்டப திறப்பு விழா பற்றி கல்கி இதழில் அதன் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் எழுதியிருக்கிறார்.
இடது சாரி எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வு பற்றி இலங்கைக்கு 1983 ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு காலத்தில் வந்திருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சொன்ன செய்தி எனக்கு அதிர்ச்சியைத்தந்தது.
அந்த விழாவுக்கு பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு அழைப்பு கிடைக்கவில்லை. அவர் கேள்விப்பட்டு அங்கே சென்றுள்ளார். மக்கள் திரளுக்கு மத்தியில் காவலுக்கு நின்ற பொலிஸ்காரர், யாரோ ஒரு கிழவி என நினைத்து “ தள்ளிப்போம்மா… “ என்றாராம்.
அதற்கு செல்லம்மா, “ யோவ் நான்தான் பாரதியின் மனைவி செல்லம்மா , என்னை உள்ளே விடய்யா “ என்றாராம். தகவல் விழா மேடைக்குச்சென்றபின்னர் அங்கிருந்தவர்கள் பதறிக்கொண்டு ஓடிவந்து அவரை அழைத்துச்சென்றுள்ளனர்.
எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் கடந்த இரண்டு அங்கங்களில் எழுத்தாளர்களின் மனைவிமார் பற்றி எழுதியிருந்தேன்.
மகாகவி என்ற மேதாவிலாசம் பெற்ற பாரதியின் மனைவிக்கு என்ன நேர்ந்தது? என்ற செய்தியை ராஜம்கிருஷ்ணன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டி நிகழ்ச்சிக்கு பயணிக்கும் போது சொன்னபோதுதான், தமிழகப்பயணம் வரும்போது நிச்சயம் எட்டயபுரம் செல்லவேண்டும் என மனதிற்குள் திடசங்கற்பம் பூண்டேன்.
1983 மார்ச் மாதம் கொழும்பில் இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழா பற்றி ராஜம் கிருஷ்ணன் வாயிலாக தெரிந்துகொண்ட நான், சரியாக ஒருவருடத்தில் 1984 ஏப்ரில் மாதம் அந்த மணிமண்டபத்திற்கு முன்னால் கண்ட காட்சி மற்றும் ஒரு அதிர்ச்சியைத் தந்தது.
நானும் இளைசை மணியனும் எனது மைத்துனர் ஆண்டபெருமாளும் அங்கே சென்றபோது அதன் வாயில் மூடியிருந்தது.
அதற்கு காவல் கடமையில் ஈடுபட்ட ஒருமுதியவர் தோட்ட வேலைக்குச்சென்றிருந்தார். வீதியால் சென்ற ஒருவர் மூலம் இளசை மணியன் தகவல் சொல்லிவிட்டார்.
அந்த காவல்காரர் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தார். இடுப்பில் அழுக்கேறிய துண்டு. அதில் மணிமண்டபத்தின் சாவிக்கொத்து. அவரது பெயர் கிருஷ்ண மூர்த்தி. அவரை இளைசை மணியன் எனக்கு அறிமுகப்படுத்தினார். முகச்சவரம் கண்டு பலநாட்களாகி வாடிய முகம். அவரும் அந்த மணிமண்டபம் நிர்மாணிக்கும்போது கல்லும் மண்ணும் சுமந்த பாரதி பக்தன்.
மிகவும் குறைந்த ஊதியம் அவருக்கு அந்த காவல் கடமைக்காக தரப்பட்டது. அதனை உயர்த்துமாறு அவர் தமிழக அரசுக்கு பல மனுக்கள் அனுப்பியும் அறங்காவல் துறை கவனத்தில் எடுக்கவில்லை.
மணிமண்டபத்தை உள்ளும் புறமும் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வருகின்றேன். அந்த அன்பர் கிருஷ்ணமூர்த்தி தலையை சொறிந்துகொண்டு புன்னகை பூத்தார். அந்த தலைசொறிதலின் அர்த்தம் எனக்கு புரிந்தது.
கையிலிருந்ததை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். எனது ஆழ்ந்த மௌனத்தை மைத்துனர் கலைத்தார்.
“ என்ன மாப்பிள்ளை மௌனமாக வருகிறீர்கள்..? களைத்துவிட்டீர்களா..? நல்ல வெய்யில். இதனை கத்தரி வெய்யில் என்பார்கள். “ என்றார்.
எனது உடல் அந்த ஏப்ரில் மாத வெய்யிலினால் பொசுங்கவில்லை. ஆனால், உள்ளம் பொசுங்கியிருந்தது.
பாரதி வாழ்ந்த காலத்திலும் மறைந்த பின்னரும் பாரதி வெறும் ஏட்டுச்சுரக்காய்தானா..?
பாரதி மணி மண்டபம் கட்டுவதற்கு கல்லும் மண்ணும் சுமந்த ஒரு மனிதனை அந்த நாடு எப்படி வைத்திருக்கிறது..?
ஆண்டுதோறும் பாரதி விழா நடக்கிறது. எட்டயபுரத்திலும் நடக்கிறது.
ஒரு சமயம் காமராஜர் முதல்வராக இருந்தபோதும் நடந்தது. அப்போது எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழா செலவுகளை நடிகர் ஜெமினி கணேசன் பொறுப்பேற்றார். அவரது காதல் மனைவி நடிகையர் திலகம் சாவித்திரி என்ன செய்தார் தெரியுமா..? அவ்வூர் மக்களுக்காக பத்து குடிநீர் கிணறுகளை அமைத்துக்கொடுத்தார்.
அத்தகைய கருணை உள்ளம் கொண்ட அந்த நடிகையின் அந்திமகாலம் எப்படி இருந்தது என்பது பற்றி இங்கே விபரிக்கத்தேவையில்லை. ஏழைமக்களின் தாக சாந்திக்கு குடிநீர் வழங்கிய அவர், பின்னாளில் “ குடியில் “ மூழ்கி இறந்தது பெரும் துயர். அந்த விழாவுக்கு சென்ற விடத்தில், அவரது கைவிரல் கார் கதவில் சிக்கி நசிந்தது. இச்செய்திகள் படத்துடன் வெளியாகியது நினைவில் இருந்தது.
தமிழகப்பயணம் முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியதும் பயணத் தொடரை வீரகேசரியில் எழுதினேன். தினமும் அதிகாலையே எழுந்து எழுதும் பழக்கம், இலக்கிய பிரவேசம் செய்த காலத்திலேயே என்னைத் தொற்றிக்கொண்டது.
அந்த வாரம் நான் எழுதவேண்டிய விடயதானம் எட்டயபுரம் பற்றிய ஆக்கம். காலையில் எழுதிக்கொண்டிருக்கும்போது இந்திய ஆகாச வாணி செய்தி வானொலியில் ஒலிபரப்பாகியது. அதில், புதிய ஒலிபரப்பு கோபுரம் ஒன்று திறக்கப்படப்போவதாகவும், அப்பொழுது, இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா பாடல் ஒலிபரப்பாகும் என்று சொல்லப்பட்டது.
அன்று எட்டயபுரம் மண்ணில் பாரதி மணிமண்டபத்தில் நான் உள்வாங்கிக்கொண்ட காட்சியை எழுதிக்கொண்டிருந்தவேளையில்தான் இந்தச்செய்தி வானலைகளில் பரவி எங்கள் ஊருக்கும் வந்தது.
உடனே, “ மணிமண்டபத்திற்காக கல்லும் மண்ணும் சுமந்த கிருஷ்ணமூர்த்திக்கு நிரந்தர வேதனம் வழங்குவதற்கு வக்கற்ற - வழியற்ற அரசுதான் வானலைகளில் பாரதியின் பாடலை ஒலிபரப்ப தயராகிறது. “ என்று எழுதிவிட்டு ஆசனத்திலிருந்து எழுந்தேன்.
அந்தக்கட்டுரை வீரகேசரி வாரவெளியீட்டில் அந்த வாரம் வெளியானது.
உழைப்புக்கு மரியாதை செலுத்தாத அரசினரும் மக்களும் உருப்படமாட்டார்கள் என்ற வெஞ்சினம்தான் பாரதியை கற்ற காலத்திலிருந்தே எனது மனதில் கனன்றுகொண்டிருக்கும் தர்மாவேசம்
( தொடரும் )
letchumananm@gmail.com
No comments:
Post a Comment