பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - சபதம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 6


நல்லவனாக தன்னை காட்டிக் கொண்டு பொதுவாழ்வில் வேஷம் போடும் பலர் தனி வாழ்வில் அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் செய்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டும் இருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 1971-ஆம் ஆண்டு உருவான படம்தான் சபதம். வித்தியாசமான கதை அமைப்பையும் திருப்பங்களையும் கொண்ட படமாக சபதம் அமைந்தது.

தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த கேஆர்விஜயா கதாநாயகியாக நடித்த இப்படத்தை அவரின் கணவர் வேலாயுதம் நாயர் தெய்வநாயகி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரித்தார். திரைக்கு வருவதற்கு முன் கே ஆர் விஜயா வின் இயற்பெயர் தெய்வநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரளவு சர்ச்சைக்குரிய இப்படத்தின் பிரதான கதாபாத்திரமான செல்வநாயகம் வேடம் கபடத்தனம் நிறைந்தது. வெளி உலகில் வள்ளலாகவும் அந்தரங்க உலகில் பசுத்தோல் போர்த்திய புலியாகவும் காட்சியளிப்பவராவார். பகலிலே அபலைப் பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவராகவும் இரவில் அதே கரத்தால் அவர்களை துகில் உரிப்பவராகவும் நடமாடுவார். ஆனால் எப்போதும் சிரித்த முகமாகவும் சாந்தமாகவும் காட்சியளிப்பவர்.


இந்த வேடத்தில் நடிப்பதற்கு படத்தின் இயக்குனர் பி மாதவனும் கதாசிரியர் பாலமுருகனும் வில்லன் ஒருவரை தேர்வு செய்யவில்லை அதற்கு பதில் பண்பட்ட குணச்சித்திர நடிகர் ஒருவரை தெரிவு செய்தனர். டி கே சண்முகம் சகோதரர்களில் ஒருவரான டிகேஎஸ் நாடகக் குழுவைச் சேர்ந்த டீகே பகவதியை அவர்கள் இப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். பகவதியும் அப்பாத்திரத்தில் கன கட்சிதமாக பொருந்தினார்.

அவரை எதிர்த்து பழிவாங்குவதாக சபதம் செய்பவராக சிவகாமி வேடத்தில் கே ஆர் விஜயா நடித்தார். அவரின் காதலன் முத்துவாக ரவிச்சந்திரனும் அவர்களுக்கு உதவுபவராக நாகேஷும் நடித்தனர். இவர்களுடன் வி கே ராமசாமி ,அஞ்சலிதேவி பண்டரிபாய் ஆகியோரும் நடித்தனர்.

பாலமுருகன் உடைய வசனங்கள் படத்தின் ஓட்டத்திற்கு துணை நின்றது. இளையராஜாவின் குருவான ஜிகே வெங்கடேஷ் படத்திற்கு இசையமைத்தார். தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பாடல் எஸ் பி பாலூவின் குரலில் வெங்கடேஷின் இசையில் இதமாக இசைத்தது. பி என் சுந்தரம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். பல படங்களில் கதாநாயகியாக நடித்த எல் விஜயலட்சுமி இப்படத்தில் பாஞ்சாலிசபதம் காட்சியில் நடனமாடிஇருந்தார். இதுவே இவரது கடைசி படமாகும் பி மாதவன் படத்தை மிக நேர்த்தியாக இயக்கி வெற்றி படமாக்கினார்.

No comments: