ஹொங்கொங்கை அவர்களே நிர்வகிக்க அனுமதி; சீன ஜனாதிபதி அறிவிப்பு
ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை; மனைவி வைத்தியசாலையில்
சிறுவர்களுக்கு ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி பரிசோதனை
டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி; டிரம்ப் இணைய வாய்ப்பு
சீன போர் விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசம்
ஹொங்கொங்கை அவர்களே நிர்வகிக்க அனுமதி; சீன ஜனாதிபதி அறிவிப்பு
ஒரே நாடு இரண்டு வகையான ஆட்சிமுறை என்ற சீனாவின் தீர்மானம் தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என்றும் சீனாவின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவாறு ஹொங்கொங்கை ஹொங்கொங் வாசிகளும் மகாவோவை மகாவோ வாசிகளும் நிர்வகிக்க அனுமதிக்கப்படும் என்று சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
சீனத் தலைநகரில் நடைபெற்ற அந்நாட்டின் கம்யூனிச கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சீன ஜனாதிபதி, சீனாவின் தேசிய பாதுகாப்பு, இறைமை மற்றும் அபிவிருத்தியை பாதுகாத்துக் கொள்ளும் அதேசமயம் ஹொங்கொங் மற்றும் மகாவோவின் சமூக உறுதித் தன்மையையும், அம் மக்களின் வளமான எதிர்காலத்தையும் நாம் உறுதிசெய்வோம் என மேலும் தெரிவித்தார் என ஸின்ஷவா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தனது உரையில் இவ்விரு நிர்வாகங்களுக்கான சட்ட நடைமுறைகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறிமுறைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி 1921 ஜுலை மாதம் தொடக்கப்பட்டது.
அப்போது பிரான்சின் நிர்வாகத்தின் கீழிருந்த ஷங்காய் நகரின் சிறிய அறை ஒன்றில் 13 பேர் கூடி இக்கட்சியை ஆரம்பித்தனர் என்றும் சீன மக்கள் குடியரசை நிறுவியவர்களில் இருவர், மாவோஸோடொங் மற்றும் டொங் பிவு ஆகியோர் அக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர் என்றும் சிஎன்என் தெரிவித்துள்ளது. மாவோவின் காலத்தில் பல பிரச்சினைகளை சீனா எதிர்கொண்டது. சீனாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் மூன்று கோடி மக்கள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாவோ 1979ம் ஆண்டு மறைந்த பின்னர் டெங்ஸியாவோபிங் ஆட்சிக்கு வந்தார். அவர் காலத்தில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான போராட்டங்கள் நடைபெற்றபோதும் அவை கடுமையாக நசுக்கப்பட்டன. 2012ம் ஆண்டு ஸி ஜின்பிங் ஜனாதிபதியாகவும் சீன மத்திய இராணுவ குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நன்றி தினகரன்
ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை; மனைவி வைத்தியசாலையில்
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் (Jovenel Moïse) அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் (Claude Joseph) தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவரது வீட்டில் வைத்து தனது சொந்த வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரது மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட அமெரிக்காவின் ஏழ்மையான நாடான ஹெய்ட்டி, பல்வேறு அரசியல் எச்சரிக்கை நிலைகளுக்கு நடுவில் ஜோவெனல் மொய்ஸ் ஆட்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சிறுவர்களுக்கு ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி பரிசோதனை
ரஷ்யாவில் தொடங்கியது
ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றியடைந்தால், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே பரிசோதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களையும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.
இதற்காக பல தடுப்பூசிகள் பிரத்யேகமாக சிறாருக்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் பைசர் போன்ற தடுப்பூசிகள் ஏற்கனவே சிறார்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் உலக அளவில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கி உள்ளன. இந்த பரிசோதனைகளை ரஷ்யா தொடங்கி இருக்கிறது. இதற்காக 12 முதல் 17 வயது வரையிலான பதின்ம வயது கொண்ட 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் நேற்று கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடங்கி இருக்கின்றன.
இந்த பரிசோதனைகளை முடித்தவுடன், அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும். அதன்பின் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு முடிவுகளை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்வார்கள். இந்த பரிசோதனைகள் வெற்றியடைந்தால், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்தியாவுக்கும் இது சிறப்பான நடவடிக்கையாக அமையும். ஏனெனில் இந்தியாவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்வதுடன், உள்நாட்டிலேயே தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி; டிரம்ப் இணைய வாய்ப்பு
டிரம்ப் டுவிட்டருக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கி பயன்படுத்த போவதாக அறிவித்தார். அதன்படி புதிய செயலியை உருவாக்கும் பணியில் டிரம்பின் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். இது தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதால் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் கடந்த ஜனவரி 6-ம்திகதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். கலவரத்துக்கு டிரம்பின் கருத்துகளே தூண்டுதலாக இருந்தது என்று கூறி அவரது டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப் டுவிட்டருக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கி பயன்படுத்த போவதாக அறிவித்தார். அதன்படி புதிய செயலியை உருவாக்கும் பணியில் டிரம்பின் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், டொனால்ட் டிரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர், ‘கேட்டர்’ என்ற புதிய சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார்.
டுவிட்டர் பாணியில் புதிய சமூக வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் இணைவார் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய செயலிக்கு டிரம்ப் எந்த நிதியும் அளிக்கவில்லை என்றார். நன்றி தினகரன்
சீன போர் விமானங்கள் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசம்
தாய்வான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் சீன போர் விமானம் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஊடுருவல் இதுவாகும்.
தேசிய பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை (PLAAF) ஷான்சி Y-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம் தாய்வானின் தென்மேற்கு மூலையில் நுழைந்ததாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, தாய்வான் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை வீடுக்கப்பட்டது. இதனை கண்காணிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் தாய்வான் தயார்நிலையில் வைத்தது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இரு தரப்பினராலும் தனித்தனியாக இந்த நாடு ஆளப்பட்டிருந்தாலும், சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 24 மில்லியன் மக்களை கொண்ட இந்த நாட்டின் முழு இறையாண்மையை பெய்ஜிங் கோருகிறது. இந்த மாதத்திக் ஜூலை 2 மற்றும் ஜூலை 3 ஆகிய திகதிகளில் தாய்வானின் எல்லைகளில் சீன விமானங்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டன.
ADIZ என்பது ஒரு நாட்டின் வான்வெளியைத் தாண்டி விரிவடைந்த பிரதேசம் என்பதோடு அதன் வழியாக பயணிக்கும் விமானங்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். சாம்பல்வலய தந்திரோபாயங்கள் "நிலையான மற்றும் தடுப்பு மற்றும் உத்தரவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முயற்சி அல்லது தொடர்ச்சியான முயற்சிகள்'' என வரையறுக்கப்படுகின்றன, இது ஒரு நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களை நேரடியாகவும் கணிசமான அளவிலும் அடைய முயற்சிக்கும் செயல் என்று தாய்வான் செய்திகள் தெரிவித்துள்ளன.
தேசிய பாதுகாப்பு அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி, சீன விமானங்கள் தாய்வானின் அடையாள வலயத்தில் ஜூன் மாதத்தில் 10 முறை, மே மாதத்தில் 18 முறை, ஏப்ரல் மாதத்தில் 22 முறை, மார்ச் மாதத்தில் 18 முறை, பிப்ரவரியில் 17 முறைகள் மற்றும் ஜனவரியில் 27 முறை கண்காணிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment