இந்தி திரையுலகில் முதலாவது சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டவர் நடிகர் திலீப் குமார் பிரிட்டிஷ் இந்தியாவின் பின்னால் துண்டாடப்பட்ட பாகிஸ்தானில் 1922ஆம் ஆண்டு பிறந்த இவர் 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்பப்பகுதியில் இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்து நட்சத்திர நடிகராக 40 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி னார். யூசுப்கான் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக திலீப்குமார் ஆனார். பிரபல நடிகையான மதுபாலாவை காதலித்த திலீப்குமார் அக்காதல் நிறைவேறாமல் போகவே தன்னைவிட 22 வயது குறைந்த சைராபானுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை 7ம் திகதி தனது 98வது வயதில் காலமான திலீப்குமார் தமிழில் உருவான மலைக்கள்ளன், எங்கவீட்டுப்பிள்ளை இரும்புத்திரை போன்ற படங்கள் இந்தியில் உருவான போது அவற்றில் நடித்து அப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா தமிழில் தயாரித்த ஆலயமணி வெற்றிப்படத்தை திலிப் குமார் நடிப்பில் ஆத்மி என்ற பெயரில் தயாரித்தார். ஆனால் படம் வெற்றி பெறாததால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். இதனால் தான் கதை எழுதி தயாரித்து வெற்றிபெற்ற கங்கா ஜமுனா என்ற படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை இலவசமாக வீரப்பாவுக்கு வழங்கினார் திலீப்குமார். வைஜந்திமாலா நடித்த இந்தி படத்தை தமிழில் பிரபல ஜோடியாக அங்கீகரிக்கப்பட்ட சிவாஜி, பதமினி நடிப்பில் படமாக்கினார் வீரப்பா .
அவ்வாறு 1971 இல் தயாரான படம்தான் இருதுருவம். சிவாஜி பத்மினி இவர்களுடன் முத்துராமன், நாகேஷ், நாகையா, பண்டரிபாய் ஆகியோரும் நடித்தனர். படத்தை தயாரித்ததுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடித்தார் வீரப்பா
ஜமீன் பங்களாவில் பத்துப் பாத்திரம் தேய்ப்பவளான அன்னபூரணி தன் இரு பிள்ளைகளான ரங்கன், துரை இதுவரையும் பாடுபட்டு வளர்கிறாள். அவளின் இறப்பைத் தொடர்ந்து தம்பி துரையை ஆளாக்கும் பொறுப்பு ரங்கனுக்கு வந்துவிடுகிறது. கடும் உழைப்பாளியான ரங்கன் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த நாகநாதனின் அடாவடித்தனத்தை எதிர்க்கிறான். இதனால் வீடு வாசலை இழந்து அனாதரவாக காட்டுக்கு துரத்தப் படுகின்றான். இறுதியில் கொள்ளைக்காரனாக மாறும் சூழ்நிலைக்கு ஆளாகிறான். தம்பி துரையும் காதலி தங்கமும் கலங்குகிறார்கள் .
வட இந்தியாவில் சாம்பல் பள்ளத்தாக்கில் முன்பு இடம்பெற்ற ஜமீன்தார் குடியானவர்கள் மத்தியிலான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டிருந்தது. படத்தில் சிவாஜி பரிதாபத்துக்கு உரியவராகவும் அதேசமயம் மூர்க்கமானவராகவும் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டார். ஜோடியாக பதமினி நடித்தபோதும் காலம் கடந்த ஜோடிப்பொருத்தம் ஆகவே அது காட்சி அளித்தது. முத்துராமன் ராஜாஸ்ரீ ஜோடி பரவாயில்லை. வீரப்பாவின் வில்லத்தனம் ரசிகர்களை ஆவேசப்பட வைத்தது நாகேஷ் தன் பங்கிற்கு குறை வைக்கவில்லை.
தமிழ்த்திரையில் அதிகம் அறியப்படாத என் கே ராமு படத்தின் வசனங்களை எழுதி இருந்தார். அவரின் வசனங்கள் ஆழமானதாக அமைந்தன . படத்தின் இறுதியில் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்து நெருப்பை நெருப்பால் அணைக்க முயற்சி பண்ணினேன் என் கணக்கு தப்பாகி விட்டது என்று சிவாஜி பேசும் வசனங்கள் படத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது. கலரில் உருவான இருதுருவம் படத்திற்கான ஒளிப்பதிவை ஏ வின்சென்ட் அழகாக கையாண்டிருந்தார்.
படத்துக்கான பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே பாடல் ரசிகர்களை மிக கவர்ந்தது. அதேபோல் அகரம் தமிழுக்கு சிகரம் , துள்ளிவரும் சூறைக்காற்று பாடல்கள் கருத்துடன் அமைந்தன. திரை இசையை எம்எஸ் விஸ்வநாதன் வழங்கியிருந்தார்
படத்தை டைரக்டர் பீம்சிங்கின் உதவியாளர் எஸ் ராமநாதன் இயக்கினார். இவர் இந்தியில் இயக்கிய பம்பாய் டு கோவா படத்தில் நடித்ததன் மூலம் தான் அமிதாபச்சன் இந்தி திரையில் நட்சத்திர நடிகரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி என்றாலும் இறுதியில் வீரப்பா இந்தியில் எடுத்த ஆத்மி தமிழில் எடுத்த இரு துருவம் இரண்டுமே துரதிஷ்டவசமாக தோல்வி கண்டு வீரப்பாவை பெரும் நட்டத்திற்கு உள்ளாக்கின.
No comments:
Post a Comment