அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள தமிழ்மொழியுரிமை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?

 Saturday, July 24, 2021 - 3:10pm

இந்நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம் இலங்கை அரசின் விருப்புடனோ அல்லது பாதிப்புக்குள்ளான தமிழர் தரப்பின் கோரிக்கைக்கமையவோ உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிவின்றித் தொடர்ந்த இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு காண இந்தியா தன்னிச்சையாக மேற்கொண்ட தீர்மானமே இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின்படியான பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமாகும்.

இன்று உலக அரங்கில் இந்தியாவும் ஏனைய பல பொறுப்பு வாய்ந்த அமைப்புகளும் இலங்கை அரசாங்கம் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களது நலனைப் பேண வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 1987 இல் இருநாட்டு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படியான மாகாண சபை அமைப்பு மற்றும் அதற்கான தேர்தல் நடத்துவது தொடர்பாகவே இன்று பெரிதாகப் பேசப்படுகின்றது.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டு முப்பத்துநான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்தத் திருத்தத்திலுள்ள பல அடிப்படை விடயங்களை, தமிழர்களது தேவையைச் சகல தரப்பினரும் மறந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

குறித்த ஒப்பந்தத்தின்படியான பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் 1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நாட்டின் ஒரே அரசகரும மொழி சிங்களம் மட்டுமே என்ற சட்டமும் அதைத் தொடர்ந்து 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த சிங்களம் மட்டுமே நாட்டின் ஒரே அரசகரும மொழி என்ற சட்ட விதிகளும் வலுவிழக்கச் செய்யப்பட்டன. அரசியலமைப்பில் நாட்டின் தேசிய, மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பாகப் புதிய சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டமையையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் அதனோடிணைந்த பதினாறாவது திருத்தத்தின் மூலம் இலங்கையின் தேசிய மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பான சட்டங்கள் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இலங்கை முழுவதற்குமான தேசிய மொழிகளாக சிங்களமும், தமிழும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டில் தமிழையும், சிங்களத்தையும் தாய்மொழியாகக் கொண்ட இரு சமூகத்தவரும் இலங்கையின் தேசிய இனத்தவர்களென்று ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நாட்டின் தேசிய இனத்தவரென்ற அங்கீகாரம் கிடைத்தமை இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின்படியான அரசியலமைப்பின் குறித்த திருத்தத்தின் மூலம் என்பதை மறந்து விடக் கூடாது.

அவ்வாறே சிங்களம் மட்டுமே நாட்டின் ஒரே அரசகரும மொழியென்ற சட்டவிதி நீக்கப்பட்டு நாடு முழுவதற்கும் சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழி என்ற விதி ஏற்கப்பட்டு சட்டமாக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழென்றும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி சிங்களமென்றும் வரையறை செய்யப்பட்டதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் என்பதும் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் தமிழர் ஒருவரோ, சிங்களவரொருவரோ தான் விரும்பும் எந்தவொரு மொழியிலும் அரசாங்கத்துடனான தொடர்புகளையும் கருமங்களையும் ஆற்றிக் கொள்ள முடியும் என்ற உரிமையும் சட்டரீதியாக உரித்தாக்கப்பட்டுள்ளது.

மொழிதான் ஒரு மனிதனின் மூச்சு என்பர். குறித்த திருத்தத்தின் மூலமே இலங்கைத் தமிழருக்கு நாட்டின் தேசிய இனத்தவரென்ற அந்தஸ்தும் அதே போல் தமிழர்களது மொழியுரிமை உறுதிப்படுத்தப்பட்டது என்பதையும் ஏற்றேயாக வேண்டும்.

தமிழர்களுக்கு மாகாண சபைகளில் உறுப்புரிமை பெறுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல மாகாண சபைகள். பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே மாகாண சபைகள் வேண்டும், அதற்குத் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பலர் அதிலும் தமிழர்கள் உள்ளனர். மாகாண சபைத் தேர்தல் நடத்தி மாகாண சபைகளை இயங்கச் செய்தால் மட்டுமே பதின்மூன்றாவது திருத்ததத்தின் இலக்கை அடைந்து விட முடியாது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள மொழியுரிமை, கல்வியுரிமை உட்பட பலவற்றையும் நடைமுறைப்படுத்துவதன் மூலமே அத்திருத்தத்தின் உண்மையான, எதிர்பார்த்த நோக்கை அடைய முடியும்.

சிறுபான்மையினத்தவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிக உரிமைகளை, அங்கீகாரத்தைப் பெற்று விடக் கூடாது என்று அன்று முதல் இன்று வரை சிந்தித்துச் செயற்படும் இனவாத சக்திகள் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எரிச்சல் அடையலாம். அது அவர்களது மனநிலை.

ஆனால், தமிழ்த் தரப்பும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தமிழர்களுக்கு எதுவித பயனுமில்லை என்று கூறுவதன் நோக்கமென்ன? இன்றைய தேவைகளில் முக்கியமானது அரசியலமைப்பில் இன்று வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழிக்கான நடைமுறை உரிமையைச் செயற்படுத்துவதே. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழர் தரப்பில் தவிர்க்க முடியாத கடமை, பொறுப்பு ஆகும். தமிழர்கள் தனிப்பட்ட அரசியல் கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மொழியுரிமையைச் செயற்படுத்துவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

த.மனோகரன் - நன்றி தினகரன் 

1 comment:

சொலல்வல்லன் said...

தகவலுக்கு நன்றி!