32-வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஆரம்பம்

 Saturday, July 24, 2021 - 6:00am

 33 விளையாட்டுகள்: மொத்தம் 339 தங்கப்பதக்கம்

ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் கடந்த 17ஆம் திகதி முதல் டோக்கியோவை சென்றடைந்த வண்ணம் உள்ளதுடன், பெரும்பாலான வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளான இன்று 24ஆம் திகதி சனிக்கிழமை பெரும்பாலான இலங்கை வீரர்கள் தமது முதல் சுற்றுப் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். இதற்கான போட்டி அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன, நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர் மற்றும் துப்பாகி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல ஆகிய மூவரும் தமது முதல் சுற்று போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

டெஹானி எகொடவெல

பெண்களுக்கான 10 மீற்றர் எயார் ரைபல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் முறையாக ஒலிம்பிக் வரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள டெஹானி எகொடவெல, இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக போட்டிகளில் களமிறங்கும் முதலாவது வீரர் ஆவார். இவரது போட்டி 24ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனிக்கா கபூர்

இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள மிகவும் வயது குறைந்த (17 வயது) வீராங்கனையான அனிக்கா கபூர், போட்டிகளின் முதல் நாளில் பெண்களுக்கான வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

முதல் முறையாக ஒலிம்பிக்குக்கு தெரிவாகியுள்ள அனிக்கா கபூரின் போட்டியானது இலங்கை நேரப்படி 24ஆம் திகதி மாலை 3.55 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 2 பதக்கங்களை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிலூக கருணாரத்ன

3ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றியுள்ள 36 வயதான நிலூக கருணாரத்ன, முதல் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய வேன்ங் வேயை சந்திக்கவுள்ளார்.

நிலூக கருணாரத்னவின் அனுபவம் அவருக்கு இந்தப் போட்டியில் வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், உலக பெட்மிண்டன் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள குறித்த சீன நாட்டு வீரர் இறுதியாக 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பெட்மிண்டன் குழு நிலைப் போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நிலூக கருணாரத்ன பங்குபற்றவுள்ள இன்று 24ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஆரம்பமாகவுள்ளது.

உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு.மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உலக போர் காரணமாக 3 முறை இரத்தானது.

இறுதியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது.இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த ஆண்டு இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. கொரோனா அரக்கனின் கொடூர தாண்டவத்தால் முதல் முறையாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு இப்போது ஆரம்பமானது. இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உட்பட 207 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள் ஒலிம்பிக்கில், முதன்முறையாக 5 புதுவகையான விளையாட்டுப் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.மேலும், இதுவரை இல்லாத வகையில், சுமார் 49 வீதமான பெண் போட்டியாளர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

கிருமித்தொற்றுச் சூழலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்த ஜப்பான் மீது, பரவலாகக் குறைகூறப்பட்டு வருகிறது.

இருப்பினும், கிருமித்தொற்றால் சோர்வடைந்துள்ள உலகிற்கு, இந்தப் போட்டிகள் புது நம்பிக்கையை அளிக்கும் என்பதால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதாக, ஜப்பான் கூறுகிறது.

ஜப்பானிய மக்களில் கணிசமானவர்கள், போட்டியை ஆதரிக்கவில்லை என்றபோதும், அதிகாரபூர்வமாகப் போட்டி தொடங்கியதும் அவர்கள் மனம் மாறிப் போட்டிகளை ஆதரிப்பர் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

முகக்கவசம், உமிழ்நீர்ப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல்-என இதுவரை இல்லாத புதுப்புதுக் கட்டுப்பாடுகளோடு தோக்கியோ ஒலிம்பிக் அரங்கேறுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், போட்டியைப் பாதுகாப்பாக நடத்திமுடிக்க ஜப்பானிய அதிகாரிகள் உறுதிபூண்டுள்ளனர்.

ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் மாலை 4.50 மணிக்கு தொடங்கியது. தொடக்க விழா 3 மணி நேரம் நீடித்தது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.

ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெற்றது. கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக ஆரம்பமானது.

விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் ஒன்றாக அணிவகுத்து சென்றார்கள்.

வழக்கமாக இரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இந்த தடவை இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஒலிம்பிக் நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அதே சமயம் 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் ஏறக்குறைய ஆயிரம் மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளித்தனர்.

இலங்கை சார்பாக இம்முறையும் ஒன்பது வீர வீராங்கனைகள் பங்குகொள்கிறார்கள். நம்ம நாடு பெரிதும் விளையாட்டின் மூலமே தன்னை பெரிதும் உலகறிய வைத்தது அதில் கிரிக்கெட்டை ஐ போலவே ஒலிம்பிக் போட்டிகளும் முக்கியம் பெறுகிறது அதிலும் மெய்வல்லுநர் போட்டிகள்.

1928 இல் ஆரம்பமானது இலங்கை மெய்வல்லுநர்கள் ஒலிம்பிக் இல் பங்கு பெற்ற தொடங்கியது. அதன் பின்னர் 1948 இல் பங்குகொண்டார்கள், முதன் முதலில் Duncan White 400மீ தடை தாண்டலில் 1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அதன் பின்னர் 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012 மற்றும் 2016 என நம் நாட்டு வீரர்கள் பங்கு பற்றி இருந்தது குறிப்பிட தக்கது.

1976, 1984 இல் யாரும் பங்குகொள்ளவில்லை. 1948 இன் பின்னர் இலங்கைக்கு சுஷந்திகாவினால் மீண்டும் ஒரு வெள்ளி பதக்கம் 2000 ஆண்டு சிட்னி இல் 200 மீற்றர் ஓட்ட போட்டியில் கிடைத்தது.

தமயந்தி தர்ஷா, சிரியானி குலவன்ஷ, சுகத் திலகரட்ன, ரோஹன் பிரதீப்குமார போன்ற பல சர்வதேச புகழ் பெற்ற வீரர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.

இம்முறை 2020 இல் மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி இருவர் யுபுன் அபேக்கூன் 100மீ, நிமாலி லியனாராச்சி 800மீ போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் பொருட்டு ஊவா மாகாணத்தின் பசறை தமிழ் மகா வித்தியலாத்தில் (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றும் மாரிமுத்து அகல்யா ஜப்பான் பயணமானார்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றுவதற்கு தெரிவாகியுள்ள முதலாவது இலங்கை தமிழர், குறிப்பாக மலையகத் தமிழர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் இதன் மூலம் அகல்யா உரித்தானார்.

தேசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா உட்பட சர்வதேச பட்மின்டன் போட்டிகள் பலவற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றியுள்ள தனக்கு ஒலிம்பிக்கில் கடமையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதைப் பெரும் பாக்கியமாக கருதுவதாக அகல்யாக குறிப்பிட்டார்.

இதில் ஜப்பான் மன்னர் நருஹிட்டோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆகியோரும் அடங்குவர்.

பரவசமடைந்தாலும், இன்னொரு புறம் கொரோனா பரவலை நினைத்து ஜப்பானியர்கள் பீதியிலேயே உள்ளனர். அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டு இருந்த போதிலும் டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

புதிதாக 1,832 பேருக்கு தொற்று பரவியது. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஒலிம்பிக் குழுவிலும் கொரோனா ஊடுருவி விட்டது. ஒலிம்பிக் தொடர்புடைய பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சில வீரர்கள் என்று 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிக்கி இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். வீரர், வீராங்கனைகளுக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிக்காக ரூ.1 இலட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ள ஜப்பான் அரசாங்கம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி பெருமையை நிலைநாட்டுவதில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. எனவே அடுத்த 17 நாட்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, போட்டி ஒருங்கிணைப்பு குழுவுக்கு கடும் சவால் நிறைந்ததாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக அமெரிக்கா 613 பேரை களம் இறக்குகிறது. அவர்களே இந்த தடவையும் பதக்கவேட்டையில் முதல்வனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.இந்திய தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

அடுத்த 17 நாட்களுக்கு இந்த பூமிபந்தின் ஒட்டுமொத்த கண்களும் டோக்கியோ நோக்கியே திரும்பியிருக்கும்.

 

போன்களை உருக்கி உலோகம் எடுத்து...

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்களுக்காக 62 இலட்சம் பழைய மொபைல் ஃபோன்களை உருக்கி உலோகங்களை எடுத்துள்ளார்கள். ஒரு தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் இருக்கும். ஆனால், இது முற்றிலும் தங்கம் அல்ல. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், போர் காரணமாக இரத்தாயின. 2024 ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் ஏற்று நடத்தவிருக்கிறது. அதிகாரபூர்வமாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது என்றாலும்,கடந்த 21ஆம் திகதி முதலே தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்தன.கொரிய குடியரசைச் சேர்ந்த ஆன் சான் என்கிற வில்வித்தை வீராங்கனை, தகுதிச் சுற்றிலேயே 680 புள்ளிகளைப் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்திருக்கிறார். கொரியாவின் ஆன் சானை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஸ்போர்ட்ஸ்டார் வலைதள செய்தி கூறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கமே புதிய ஒலிம்பிக் சாதனைகளோடு தொடங்கி இருப்பது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.     நன்றி தினகரன் 

No comments: