உலகச் செய்திகள்

சீனாவில் ரயிலுக்குள் புகுந்த வெள்ள நீர்: 12 பேர் உயிரிழப்பு 

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்; இதுவரை 25 பேர் மரணம்; 7 பேரை காணவில்லை

விண்வெளிக்கு சென்று திரும்பினார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

அமைதி பேச்சுவார்த்தையை தொடர தலிபான் - ஆப்கான் அரசு இணக்கம்


சீனாவில் ரயிலுக்குள் புகுந்த வெள்ள நீர்: 12 பேர் உயிரிழப்பு 

சீனாவின் ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் வீடியோக்களில் பதிவாகியுள்ளன.

ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது. பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.

மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள நகரமான ஜங்ஜோ வெள்ள ஆபத்து அதிகம் உள்ள மஞ்சள் நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

ஹெனான் மாகாணத்தில் சமீபத்திய மழை காரணமாக இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் கனமழையால் இங்கு வெள்ளம் உண்டாகும். இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.   நன்றி தினகரன் 




சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்; இதுவரை 25 பேர் மரணம்; 7 பேரை காணவில்லை

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்; இதுவரை 25 பேர் மரணம்; 7 பேரை காணவில்லை-Zhengzhou Flood-So Far 25 Dead-7 Missing

- சமூக வலைத்தளங்களில் பதறவைக்கும் காட்சிகள்
- தொடர்ந்தும் இடம்பெறும் மீட்புப் பணிகள்

சீனாவில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக> இதுவரை 25 பேர் மரணமடைந்துள்ளதோடு, 7 பேரை காணவில்லை என, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

இவ்வாறு பெய்து வரும் கடும் மழைக்கு நடுவில் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில் இடம்பெற்று வரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளமை துரதிர்ஷ்டவசமானது என தூதகரம் தெரிவித்துள்ளது.

 

 

மழைக்காலங்களில் சீனாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வழமையாக ஒன்றாக இருந்தபோதிலும் தற்போது பெய்து வரும் மழையானது ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத கனமழை என்று சீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக, சீனாவின் ஹெனான் (Henan) மாகாணமும் அதன் தலைநகர் ஷெங்சோ (Zhengzhou) நகரமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

 

 

இந்தப் பகுதியின் சராரசரி ஆண்டு மழை வீழ்ச்சி 640.8 மி.மீ ஆகும், ஆயினும் நேற்றுமுன்தினம் ஒருநாளில் மாத்திரம் 457.5 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஷெங்சோ பகுதியில் பிற்பகல் 4.00 முதல் 5.00 மணி வரையிலான ஒரு மணிநேரத்தில் மாத்திரம் சுமார் 201.9 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் வீதிகளில் நிரம்பியிருப்பதையும், நபர்களை காட்டு வெள்ளம் அடித்துச் செல்வதையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் வீடியோக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 நன்றி தினகரன் 



விண்வெளிக்கு சென்று திரும்பினார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் (57), தனது சொந்த நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பினார்.

ஜெப் பெசோஸுக்குச் சொந்தமான ‘ப்ளூ ஒரிஜன்’ உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம், முதல்முறையாக மனிதர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், ஜெப் பெசோஸுடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், பெண் விண்வெளி வீராங்கனை வாலி பங்க் உள்ளிட்ட 4 பேர் இருந்தனர்.

18 வயதாகும் ஒலிவர் டேமன், 82 வயதாகும் வாலி பங்கும்தான் விண்வெளிக்குச் சென்ற மிகவும் குறைந்த மற்றும் அதிக வயதுடையவர்கள் ஆவர்.

மிகப்பெரிய ஜன்னல்களுடன் கூடிய விண்கலன் பூமியில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. அதில் இருந்தபடி பூமியின் கண்கொள்ளா காட்சியை அனுபவித்த இந்த குழுவினர் பின்னர் பூமிக்கு திரும்பினர்.

இந்தப் பயணத்தின் மூலம், விண்வெளிக்குச் சென்று திரும்பிய இரண்டாவது தொழிலதிபர் என்ற பெருமையை ஜெப் பெசோஸ் பெற்றுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவை சேர்ந்த விர்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்ஸன், அவரது நிறுவனம் தயாரித்த விண்வெளி விமானம் மூலம் கடந்த 11-ஆம் திகதி விண்வெளிக்குச் சென்று வந்தார்.

ஜெப் பெசோஸ், அண்மையில் தான் அமேசான் என்ற மின் வணிக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார். ப்ளூ ஒரிஜின் என்ற தமது கனவுத் திட்டமான விண்வெளி சுற்றுலாவுக்கு ராக்கெட் அனுப்பும் பணியில் இனி முழு கவனம் செலுத்தப்போவதாக அப்போது பெசோஸ் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு விண்வெளி சுற்றுலா பயண திட்டத்தை செயல்படுத்த ப்ளூ ஒரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதில் பயணம் செய்ய எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்திடம் இரண்டு ரொக்கெட்டுகளும், விண்கலனும் உள்ளன. அதில் ஒரு ​ெராக்கெட் சுற்றுலா பயணிகள் சேவைக்கும், மற்றொன்று விண்வெளி ஆய்வுப் பணிக்காகவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 



அமைதி பேச்சுவார்த்தையை தொடர தலிபான் - ஆப்கான் அரசு இணக்கம்

கட்டார் தலைநகர் டோகாவில் கடந்த இரண்டு தினங்கள் இடம்பெற்ற ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தப்படவுள்ளதாக இரு தரப்பும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பும் மீண்டும் சந்திக்கும் இணக்கத்துடன் கலைந்து சென்றுள்ளன.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இரண்டு நாட்கள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 'உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் வரை பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு உறுதி பெறப்பட்டது' என்று இரு போட்டித் தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

'ஆப்கான் எங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க நாம் இணைந்து பணியாற்றுவோம்' என்றும் அந்தக் கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பும் இடைவிடாது சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றபோதும் இதுவரை எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அண்மைக் காலத்தில் ஆப்கானில் தலிபான்கள் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் இந்த பேச்சுவாத்தைகளும் உற்சாகம் இழந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படையினர் ஆப்கானில் இருந்து முற்றாக வெளியேறும் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் சூழலிலேயே தலிபான்கள் அங்கு தமது தாக்குதல்களை அதிகரித்திருப்பதோடு அரச படையிடம் இருந்து பல பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.   நன்றி தினகரன் 




No comments: