முத்தமிழைத் துறக்காத முழுப்பேராளுமை விபுலானந்தத் துறவி !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

  ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி


தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய்கல்லூரி ஆசிரியராய்,   அதிபராய்தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து - 

 

"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல  உற்றுப் பெற்ற

பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "

என்னும் மனப்பாங்கினைப் பெற்று - என்கடன் பணி செய்து கிடப் பதே என்னும் விசாலித்த நோக்குடன் இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி  இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

  


காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்   என்றால் - அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவற த்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம்.1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் உள்ளத்தாலும்.  தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து - துறவியாய் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

 

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த மலரெதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

 உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

என்று சிந்திக்கும் நிலையினை அடைந்த காலம்தான் துறவுக்காலம்


என்பதை முத்தமிழ் வித்தகரின் வார்த்தைகளே சான்று பகர்வதாய் இருக்கிறதல்லவா ?

  மயிவாகனன் விரும்பி இருந்தால் - அவருக்கு வாய்த்த வாய்ப்புகளைப் பயனாக்கி இல்லறத்தில் இணைந்து இகபோக இன்பங்களை இஷ்டமுடன் ஏற்றிருக்கலாம் அல்லவா ஆனால் அவரைக் கருவில் உருவாக்கிய அந்த ஆண்டவனே அவரை அகிலத்துக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் - துறவுக்குள் அவர் மனத்தை நாட வைத்துவிட்டான் என்றுதானே எடுக்க வேண்டி இருக்கிறது. இல்லறத்தில் இணைந்திருந்தால் காரைதீவின் மைந்தன் மயில்வாகனன் குடும்பஸ்தனாகி குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தி சாதாரண மானவராகவே மறைந்திருப்பார். ஆனால் கிழக்கின் முத்தாய் ஒளி விட்டு எல்லோர் இதயத்திலும் பதிந்திருக்கிறார் என்றால் அதற்கு வழி வகுத்தது துறவுதான் என்பதை எவருமே மறுத்து உரைத்திட முடியாது.

  


சுந்தரரை இல்லறத்தில் இணைய விடாமல் எம்பெருமான் தடுத் தாட்கொண்டார். அரச போகத்தில் இருந்த சித்தார்த்த கெளதமர் இல்லறத்தை ஒதுக்கி  இறைஞானம் பெற்றார். அதே போன்ற ஒரு நிலையினையே மயில்வாகனுக்கும் கிடைத்தது எனலாம் . எல்லாமே இறையருள் அல்லால் வேறென்றும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

  ஆண்டவனின் பரிபூரணமான அனுக்கிரகத்தைக் கருவிலே தாங்கி வந்த காரணத்தால்  அடிகளாகி ,ஆசானாகி, பேராளுமையாய் பிரகாசித்து பயனுற வாழ்ந்தார்  எனலாம்.விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கிறார்.தமிழை மூச்சாக்கி நிற்கின்றார்.சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணப்படுகிறார். ஆனால் சைவத்தைக் கைகளில் ஏந்துகிறார். இவையெல்லாம் துறவால் விளைந்த விளைவுகள் என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.துறவு வாழ்க்கை என்பது முத்தமிழ் வித்தகரின் பாதையில் வாய்த்த பெரும் பொக்கிஷம் என்றேகொள்ள வேண்டும்.

  துறவறத்தின் பின்னர்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்


முதற் தமிழ்ப்பேராசியராகிறார். தமிழ் நாட்டில் தமிழ் அறிந்த பலபேர் இருந்தும் - ஈழத்து மைந்தனை எப்படித் தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச் செட்டியார் கண்டுகொண்டார் என்றால் - அதுதான் துறவறத்தின் பெருவெளிச்சம் எனலாம்.பற்றுக்களையும் அறுக்கிறார். ஆனால் ,மொழியில், சமயத்தில், கலாசாரத்தில், பண்பாட் டில், ஆராய்ச்சியில், சமூகத்தொண்டில் ,இசையில் , நாடகத்தில் , கொண்ட பற்றுக்களை இழந்தாரில்லை.அவற்றில் அவரின் பற்றானது பல்கிப் பெருகி பயனளிக்கும் வகையில் அமைந்தது எனலாம். இவையாவும் துறவு வாழ்க்கையின் பின் துலங்கியது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

 " நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் 

   சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே " 

என்று போற்றப்படும் நாவலர் பெருமான் இல்லறத்தை விட்டு துறவுநிலையில் நைட்டிக பிரம்மசாரியாய் ஆனபின்தான் - அவரின் பணிகள் ஆல்போல் விருட்சமாகியது. வேதாசலம் -மறைமலையடிகள் ஆனதின் பின்தான் அவரின் பணிகள் துலங்கின.நாவலர் பெருமானை நல்ல அரசாங்க உத்தியோகத்தில் பார்த்திட அவர் குடும்பத்தார் விரும்பினார்கள்.ஆங்கிலக்கல்வியைக் கற்ற ஆறுமுகமும் அக்காலத்தில் நல்ல உயர் பதவியில் அமர்ந்து இல்லறத்துள் புகுந்திருந்தால் - எல்லோரும் ஏற்றிப் போற்றும் " நல்லை நகர் நாவலர் " என்னும் பொக்கிஷம் எமக்குக் கிடைத்திருக்குமா ? ஆறுமுகம் துறவுக்குள் சென்றதால்த்தான் - கந்தபுராண கலாசாரம் வந்தது. சைவம் பிழைத்தது.தமிழும் தளைத்தது எனலாம்.

  முத்தமிழை மூச்சாக்கினார் அடிகளார்.இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் எங்களின் சொத்துக்களாகும். பழந்தமிழ் இலக்கியங்கள் முத்தமிழினைப் போற்றியே நின்றன. பழந்தமிழ் இலக்கியங்களை இதயத்தில் இருத்திய அடிகளார் - பழந்தமிழ் இசையினை ஆராய முற்படுகிறார். இலக்கியத்தை,  இலக்கணத்தை, வரன்முறையாகக் கற்றவர் அடிகளார்.அதே வேளை பன்மொழிப் பாண்டித்தியமும், விஞ்ஞானப் புலமையும் மிக்கவர்.குறிப்பாக பெளதிகத்தில் பேராளுமை உடையவர்.தான்கற்ற பெளதிக அறிவை முன்னிறுத்தி பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கின்ற இசையினை ஆராய முற்படுகிறார். அவரின் அளப்பெரும் ஆராச்சியால்  வையம் பயனுற வாய்க்கிறது " யாழ்நூல் ". யாழ் நூலினைத் தந்திட்ட முத்தமிழ் மாமுனிவரின் பேராற்றலை வியக்காதார் இல்லை எனலாம். எவருமே தொடாத துறை ! எவருடைய ஆராய்ச்சிக்கும் எட்டாத துறை ! அந்தத்துறையினைத் தொட்டிருக்கிறார் எங்கள் விபுலா னந்தத்துறவி ! இப்பேராய்ச்சி மலர்ந்ததும் முத்தமிழ் வித்தகரின் துறவின் பின்தான் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

   நரேந்திரன் விவேகானந்தர் ஆனபின்தான் இராமகிருஷ்ண அமைப்பே உருவாகிறது.வீரத்துறவியாய் அதே வேளை ஈரத்துறவியாய் பரிணமிக்கிறார்.மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை பல நிலையிலும் நிலை நிறுத்துகிறார். இந்த வழியினை எங்கள் முத்தமிழ் முனிவரும் மனத்தினில் பதிக்கிறார். முத்தமிழ் முனிவரும்  விவேகானந்தர் எப்படி துறவறத்தின் பின் துலங்கினாரே அப்படியேதான் துறவுக்குப்பின் துலங்கி நின்றார் எனலாம்.

  அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல்தமிழ் பேராசிரியரான பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராயும் அணி செய்கின்றார். கல்வியை , சமயத்தை - சமூகத்தைக் கருத்திருத்தி அவர் ஆற்றிய அத்தனை பெரும் பணிகளும் துறவுக்குப் பின்தான் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்,

 இலங்கையில் பல பகுதிகளில் கல்விக்கூடங்களை நிறுவினார். ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார்.இலக்கிய கட்டுரைகள்சமயசன்மார்க்கக் கட்டுரைகள் , ஆராய்ச்சி நூல்கள்மாநாடுகள் பலவற்றில் பேருரைகள்என்றுமே பயன்தரும்வகையில் பல நயமிக்க , பொருள் பொதிந்த கவிதைகள்கவிதை நூல்கள்என்று பல்துறைகளில் - பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்திய காலம் முத்தமிழ் வித்தகரின் துறவுக்காலமேதான் என்பததுதான் உண்மையாகும்.

 ஐப்பத்து ஐந்து ஆண்டுகள்தான் அவருக்கு ஆண்டவன் கொடுத்த வாழ்வாகும். அதிலும் அவர் துறவில்  வாழ்ந்த காலம் இருபத்து மூன்று ஆண்டுகளே. ஆனாலும் அந்தக்காலத்தில் போதித்ததோடு நின்றுவிடாமல் சாதித்தும் காட்டினார்.நல்லவைகளை எல்லாம் அவர் விரும்பினார் ஏற்றுக் கொண்டார். அல்லவைகளை அவர் பார்த்தாரில்லை.அவற்றை நினைத்தாருமில்லை.அவரின் ஆக்கங்கள் , அவரின் தொண்டுகள் என்றுமே எங்கள் மனத்தைவிட்டு அகன்றுவிடவே மாட்டாது.

 அதனால்த்தான் அவருக்கு விழாக்கள் எடுக்கிறோம் ! அவருக்குச் சிலை எடுக்கிறோம் ! அவர்பற்றிய மலர்களையும் வெளியிடுகிறோம்!  துறவு என்றால் காட்டுக்குள் ஓடுவதல்ல ! துறவு என்றால் சமூகத்தைவிட்டு ஒதுங்கி நிற்பதும் அல்ல ! துறவு என்றால் காவியை அணிந்து மொட்டை அடித்து மெளனமாய் குகைக்குள் புகுந்து இருப்பதும் அல்ல !

  மக்கள் மத்தியில் வாழவேண்டும்.மக்களுக்கு ஏற்ற சேவைகளைச் செய்ய வேண்டும். மொழியைபண்பாட்டைகலாசாரத்தை, சமயத்தைசன்மார்க்கத்தைஅறிவியலைசமூகத்துக்கு எப்படியாயினும் கொடுக்க வேண்டும் என்பதை துறவின் வழியில் பயணப்பட்டே கொடுத்த பேராளுமையாய் விளங்குவர்தான் எங்களின் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த துறவி ! அவரின் பெயரினை உச்சரிப்பதும் , நினைப்பதும் கூட எங்களுக்குள் நல்லதோர் உணர்வை , ஊக்கத்தை   உந்துதலை உருவாக்கும் என்பதுதான்  உண்மையாகும் ! 

No comments: