'காலம் அது மாற, கருத்ததுவும் மாறிடுமாம்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-


 

2018

உள்ளே வாராதே! உறுமித்தான் கடுகடுப்பாய் 
வள்ளென்று பாய்ந்திட்டார் வாத்தியார் - வல்லவனும்
பள்ளிக்கு வாராமல் நின்றதனால் பலர் அறிய
எள்ளித்தான் தண்டித்தார் இகழ்ந்து.

கையில் 'செல்' போனைக் கண்டதுமே ஆசிரியர்
தைதையெனக் குதித்தார் தணலெனவே- பையனவன்
காதைப்பிடித்துக் கடுகடுத்தார்  இனிக் கண்டால்
பாதையிலே போட்டுடைப்பேன் பார்!

முகம் மூடி வந்திட்ட முஸ்லீம் பெண் ஜஸ்மின்னை
அகம் நோக ஆசிரியர் அதட்டித்தான் - செகந்தன்னில்
வகுப்புக்கு வரும்போது வாசலிலே 'பர்தாவை'
உகுத்திட்டு வா! என்றார் உறுத்து!

2021
பள்ளிக்கு வாராதீர்! பலர் அறிய ஆசிரியர்
சொல்லித்தான் நின்றாராம் சோர்வுடனே - துள்ளித்தான்
வல்லவனும் வியந்தான் முன்வாத்திதனின் மொழி நினைந்து
எள்ளித்தான் நகைத்தானாம் இகழ்ந்து!

ஆசிரியர் சொன்னார் அத்தனை பேர் கைகளிலும்
பேசுகிற 'செல்' போனை பேணுங்கள் - நாசமுறும்
சாகும் நோய் வந்ததனால் சரியாமல் நாம் இருக்க 
'ஷூம்' அதுவே துணையென்று சொல்லும்.

முகக்கவசம் இன்றித்தான் முன்வந்த ஜஸ்மினையே
அகம் நோகத் திட்டினராம் ஆசிரியர் - சகமதனில்
எல்லோரும் மறவாமல் எப்போதும் முகக்கவசம்
இல்லாமல் வாராதீர் இங்கு!

முடிவுரை
காலம் அது மாறக் கருத்ததுவும் மாறிடுமாம் 
ஞாலத்தில் அதை உணர வழி செய்து - மாளத்தான்
பல உயிரும் பறித்திந்த பாரினையே வெருட்டுகிற
கொலை நோயாம் கொரோனா வந்து!

பிழையதனைச் சரியாக்கி பேதமுறச் செய்ததுவாம்
மலையெனவே மனிதகுலம் மருட்டுகிற - கொலைக்கிருமி
கொரோனா என்னும் கோதாரியால் மயங்கி
பாரெல்லாம் பதறிற்றுப் பார்!

எல்லாம் தலைகீழாய் எப்படியோ ஆயிற்று.
பொல்லாத நுண்மியினால் பொலிவிழந்து - வல்லாரும்
வாடித்தான் சோர்ந்தார்கள் வையமதில் பலபேரை
ஓடித்தான் கெடுத்தவர்கள் உணர்ந்து!


நன்றி - உகரம் | கவிதை முற்றம் | கம்பவாரிதி. இலங்கை ஜெயராஜ் | www.uharam.com

No comments: