எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 51 சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ! “ எழுத்து சோறுபோடுமா…? “ எனக்கேட்ட தாத்தாவும், மகளை சினிமா நடிகருக்கு கொடுத்த ஆசிரியரும் !! முருகபூபதி


தமிழ்நாடு  திருநெல்வேலி மாவட்டத்தில் சாத்தூரில் ஒரு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய எனது அப்பாவின் அக்கா மகனான ஆண்டபெருமாள் மச்சான், என்னை அந்த மாவட்டத்தில் வதியும் எமது உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் சொன்ன செய்தி வேடிக்கையாகவும் இருந்தது.


உறவினர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது,  “ எங்கட கட்டியப்பாவின் மூத்த மகன்.  தாத்தாமாரைப்போல இவனும் ஒரு எழுத்தாளன்.  சிலோனிலிருந்து வந்திருக்கும் எங்க மாப்பிள்ளை    என்றார்.

எனக்கு யாவும் புரிந்தது. ஆனால், அது என்ன  “ கட்டியப்பா 

மச்சானும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தியவர்களும் சொன்ன கதை சுவாரசியமானது.

எங்கள் அப்பா, தனது தாயாரின் வயிற்றில் கருவாகியிருந்தபோது,   அறிகுறி தெரிந்தோ  தெரியாமலோ   அந்தப்பாட்டி,  தனக்கு வயிற்றில் ஏதோ கட்டி வந்திருக்கிறது  என்று சொல்லியிருக்கிறார்.  அப்பாவுக்கு முதல் ஒரு மகனும் மகளும்  அடுத்தடுத்து பிறந்திருக்கிறார்கள்.  மூன்றாவதும் வயிற்றில் வந்துவிட்டது என்று வெளியே சொல்ல     வெட்கப்பட்ட வர், முடிந்தவரையில்  மறைக்க முயன்றிருக்கிறார்.

பின்னர் உறவினர்கள்,  “ அடி பயித்தியமே… பிள்ளைப் பாக்கியத்தை ஏனடி மறைக்கிறாய்.  இப்படி நீ சொல்லிக்கொண்டிருந்தால், பிறக்கப்போவது ஆணா – பெண்ணா என்று பார்த்து கட்டியப்பா – கட்டியம்மா என்றுதான் உனது  பிள்ளையை அழைப்பார்கள்  “ என்றார்களாம்.

அப்பா பிறந்தவுடன் அந்தக்  கிராமமே ஐயம்பெருமாளுக்கு கட்டியப்பா பிறந்துவிட்டான் என்று சொல்லிச்சிரித்ததாம்.  அப்பாவின் தந்தை பெயர் ஐயம்பெருமாள் தொண்டமான்.


அன்று முதல் அப்பாவின் செல்லப்பெயர் கட்டியப்பா. இந்தக்கட்டியப்பா இலங்கை வந்து எனது அம்மாவை கட்டியதால் நான் பிறந்திருக்கின்றேன். அதனால் கட்டியப்பா பிள்ளை. – இது மச்சானின் விளக்கம்.

அவர் ஒரு தாத்தா வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.  அவரது பெயர் வண்ணமுத்து தொண்டமான்.

என்னைப்பற்றியும் எனது தொழில் பற்றியும் இலங்கை கலவரங்கள் பற்றியும் கேட்டார்.  சொல்லிக்கொண்டிருக்கும்போது, வீரகேசரியில் என்ன சம்பளம் தருகிறார்கள்..? எனவும் கேட்டார்.

சொன்னேன்.

 “ இந்தச்சம்பளத்திற்கா வேலை செய்கிறாய்.  அங்கேதான் உனது தாத்தா இருக்கிறாரே..? அவரிடம் சொன்னால் உனக்கு தனது மினிஸ்ரியிலேயே நல்ல வேலை தந்திருப்பாரே..?  “ என்றார்.

 “ யாரைச் சொல்கிறீர்கள்…? 

 “ அவர்தான் சௌமியமூர்த்தி… நான் வண்ணமுத்து, உங்கப்பா


லெட்சுமணன், அவர் அண்ணன் சுப்பையா, உன் தாத்தாமார் ரகுநாதன், பாஸ்கர்….. “ என்று சொல்லிக்கொண்டே சென்றவர், சற்று நிறுத்தி, ரகுவும் உங்கப்பாவும் எங்கட வம்சத்தை மறந்திட்டாங்க.  உன்னை குறை சொல்லமுடியாது, நீ அங்கே பிறந்தாய்.   உங்கப்பா சிலோன்ல ஒரு சிங்களத்திய கட்டிக்கிட்டான் என்றும் எங்க ஊர் பசங்க கொஞ்சக்காலம் சொன்னாங்க.  பிறகு இந்த ஆண்டபெருமாள்தான் போய் பார்த்துட்டு வந்து, உங்கம்மாவும் தமிழ்தான் என்று சொன்னான்.  “ என்று ஏதோவெல்லாம் சொல்லிக்கொண்டு சென்றார்.

நான் பொறுக்கமுடியாமல் அவரை இடைநிறுத்தி,  “ அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் உங்களுக்கு உறவினரா..?  “ எனக்கேட்டேன்.

 “ நீ… நம்பமாட்ட இல்ல… பொறு வாரன்  “ எழுந்து சென்றார்.

உள்ளிருந்து ஒரு ஃபிரேம்போட்ட கறுப்பு வெள்ளை படத்தை எடுத்துவந்து காண்பித்தார். அது சிலர் அமர்ந்தும் – நிற்கும் ஒரு குரூஃப் போட்டோ. அதில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு அருகில் இந்தத் தாத்தா வண்ணமுத்து தொண்டமான் சிரித்துக்கொண்டு நிற்கிறார்.

 “ நா வேணுமுண்ணா ஒரு கடிதம் எழுதித் தரட்டுமா..? கொண்டுபோய்


காமி. நல்ல வேலை தருவர். இந்த எழுத்து பேப்பர் வேலை உனக்கு நல்ல சோறு தராது. கஷ்டப்படப்போற.  ரகுநாதன், பாகம் பிரிச்சு கிடைச்ச சொத்தை ஏதோ பத்திரிகை நடத்தப்போறன்னு  போய் அழிச்சிட்டு, இப்ப மொழிபெயர்த்துக்கிட்டு இருக்கான். 

ரகுநாதன் சாந்தி என்ற இதழை நடத்தியது நினைவுக்கு வந்தது. அதில்தான் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோர்  தொடக்கத்தில் எழுதினார்கள்.  ரகுநாதன்தான் மாக்ஸிம் கோர்க்கியின் பிரபல்யமான தாய் நாவலையும் பல சோவியத் இலக்கியங்களையும் மொழிபெயர்த்தவர். அத்துடன் புதுமைப்பித்தன் வரலாறு உட்பட பல நூல்களை வரவாக்கியவர். பாரதி இயல் ஆய்வாளராக புகழ்பெற்றவர். அவ்வேளையில் சென்னை தி. நகரில் அமைந்த சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவில் சோவியத் நாடு உட்பட வேறும் சில பிரசுரங்கள் வெளியீடுகளிலும் எழுதிக்கொண்டிருந்தார்.

ஆனால், அந்த பெருமை, புகழ் எதுவும் இந்த தாத்தாவுக்கு பொருளற்றவை. பொருள் தரக்கூடிய தொழிலையே நானும் தேர்ந்தெடுக்கவேண்டும் என விரும்பினார்.

அவருடைய  வயது மூப்பின் காரணமாக மரியாதையுடன் மௌனமாக அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன்.

முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியே வந்தபோது, ஆண்டபெருமாள் மச்சான், எனது தோள்பற்றி, “  மாப்பிள்ளை, தாத்தா சொல்வதை பெருசா எடுத்துக்காதீங்க. அவர் பெருசு. அப்படித்தான் பேசுவாரு. எதற்கும் அவர் சொல்றாப்பில அமைச்சரைத்தான்  ஒரு தடவை போய் பாருங்களேன்.   “ என்றார்.

 “ ஆகட்டும் பார்க்கலாம் மச்சான் “  என்று மாத்திரம் அப்போது சொன்னேன். இறுதிவரையில் அமைச்சரிடம் சென்று  எனது உறவு முறை சொல்லி எந்தவொரு உதவியையும் நான் பெறவில்லை.

பின்னாளில்  நான் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றபின்னர் நடந்த ஒரு ஒன்றுகூடல் விழாவுக்காக அமைச்சர்கள்  தொண்டமானையும் இராஜதுரையையும் அழைப்பதற்கு எமது செயற்குழு உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்தேன். அப்போதும் தமிழ்நாடு  சாத்தூர் தாத்தா சொன்ன கதைகளை சொல்லவில்லை.

அமைச்சர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்கள்.  இராப்போசன விருந்தில் அமைச்சர் தொண்டமானுக்கு பக்கத்திலிருந்தேன். அவரிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. எவர் அருகில் இருந்தாலும், எவரை முதலில் பார்த்தாலும் சுகம் விசாரித்துவிட்டு குடும்பத்தினர் பற்றியும் அக்கறையோடும் அன்போடும்  கேட்பார்.

அவ்வாறு என்னிடமும் விசாரித்தார். நான்  பூர்வீக உறவு முறையை அப்போதும் சொல்லவில்லை. நான் வீரகேசரியிலிருந்துகொண்டு தன்னை வந்து சந்தித்ததையே அவர் விரும்பியதனால், எனது அழைப்பினையும் ஏற்று வந்ததாக சொன்னார்.  அவர் வீரகேசரிக்கு பெரிதும் கடமைப்பட்டவர்.  அங்குதான் அவருக்குப்பிடித்தமான மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகமும் பணியாற்றினார்.

பத்திரிகைகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் நல்லுறவை பேணுவதற்கு விரும்பியிருந்த அவரிடம்,  எனது பூர்வீகம் பற்றிச்சொல்லி,  எனது தனிப்பட்ட தேவைகளுக்காக அவரை இறுதிவரையில் நான் சந்திக்கவேயில்லை.

அத்துடன் அவரது வாரிசுகளிடத்திலும் இதுபற்றி மூச்சுக்காட்டவில்லை.

சுயமாக வளர விரும்பிய எனக்கு வாரிசு பெருமைகள் அவசியமில்லைத்தானே..?

சாத்தூரில் மச்சான் வீட்டில் மற்றும் ஒரு அதிசயமும் நிகழ்ந்தது.

ஒருநாள் மதியம் உணவருந்திவிட்டு, மச்சான் வீட்டு முற்றத்தில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பீடா வெற்றிலை சப்பிக்கொண்டிருந்தேன்.  மச்சானும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் என்னைச்சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெரியவர் கையில் மஞ்சள்  நிற துணிப்பையுடன் வந்தார்.  மச்சான் அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்தார்.

தனது மகள் கலைச்செல்விக்கு திருமணம். அவசியம் குடும்பத்துடன் வந்துவிடுங்கள் எனச்சொல்லிக்கொண்டு, மஞ்சள் பையிலிருந்து வெற்றிலை, பாக்கு, பூ ,  எளிமையாக வடிவமைக்கப்பட்ட  ஒரு மஞ்சள் நிற திருமண அழைப்பிதழ் ஆகியனவற்றை எடுத்து ஒரு வெள்ளித்தட்டில் வைத்து நீட்டினார். மச்சானும் அவர் மனைவி ராஜாமணி அக்காவும் எழுந்து நின்று அதனை வாங்கினார்கள்.

வந்திருந்த பெரியவர் என்னைப்பார்த்து,  “ இது யார்..?  ஊருக்கு புதுசா இருக்கே !  “ என்றார்.

மச்சான் எனது பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்திவிட்டு,               “ எங்க கட்டியப்பா மாமா பையன். சிலோன்ல இருந்து வந்திருக்கார் “   என்றார்.

 “ உங்க மாப்பிள்ளையா..?  அப்ப எங்களுக்கும் சொந்தம்தான். தம்பி நீங்களும் நம்ம மகள் கலியாணத்துக்கு வந்திடுங்க    எனச்சொல்லிக்கொண்டு எனக்கும் ஒரு அழைப்பிதழை வெற்றிலை, பாக்கு பூ சகிதம் அந்த வெள்ளித்தட்டத்தில் வைத்து நீட்டினார்.

நானும் எழுந்து நின்று வாங்கிக்கொண்டு  அமர்ந்தேன். அழைப்பிதழை விரித்துப்பார்க்காமலேயே,   “ என்றைக்கு திருமணம் ..?    எனக்கேட்டேன்.

 “ அடுத்தமாதம் ( மே ) 14 ஆம் திகதி. அவசியம் வந்திடுங்க.  உங்க மச்சான் அழைச்சிட்டு வருவார்.  “ என்றார்

 “ அய்யா… மன்னிக்கனும்.  நான் இந்த மாதம் ( ஏப்ரில் ) இறுதியில் புறப்பட்டுவிடுவேன். என்றாலும் உங்கள்  மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள் .. “ என்றேன்.

 “ அதுபோதும்  தம்பி  “ எனச்சொல்லிவிட்டு அந்தப்பெரியவர் மச்சானுடனும் அக்காவுடனும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார்.

நான் அந்த அழைப்பிதழை விரித்து பார்த்தேன்.

மணமகள் கலைச்செல்வி மணமகன் செந்தில் ( திரைப்பட நடிகர் ) என்று இருந்தது.

செந்தில்  முதலில் நடித்து  கம்யூனிஸ்ட் கட்சி தா. பாண்டியன் கதை வசனம் எழுதித் தயாரித்த சங்கநாதம் திரைப்படம் அந்த ஏப்ரில் மாதம்தான் திரைக்கு வந்திருந்தது. அதனை சென்னையில் பார்த்துவிட்டுத்தான் சாத்தூருக்கு வந்திருந்தேன்.

மச்சானிடம்,  அழைப்பிதழ் தந்துவிட்டுச்செல்லும் பெரியவரைப்பற்றி விசாரித்தேன்.   “ அவரும் ஒரு ஆசிரியர் ஒருவகையில் எங்களுக்கும் உறவு   “ என்றார்.

 “ சரி… மச்சான்.  பெண்ணின்  தகப்பன் பாடசாலை ஆசிரியர் எனச்சொல்கிறீர்கள். அப்படியிருக்கையில் தனது மகளை ஒரு சினிமா நடிகருக்கு, அதுவும்  ஒரு புதுமுக நடிகருக்கு கொடுக்கிறாரே..?  “ என்றேன்.

 “ மாப்பிள்ளை… உறவு விட்டுப்போகக்கூடாது பாருங்க…  வேலை வெட்டியில்லாம சுத்திக்கிட்டு இருந்திட்டு,.. மெட்ராஸ் போய் படம் நடிக்கப்போறன் என்று புறப்பட்டான். அங்கே போய் சினிமா சொந்தம் தேடிக்கொள்ளக்கூடாது பாருங்க… அதுதான் எல்லாம் சொந்தத்துக்குள்ள நடக்குது  “ என்றார்.

1984 இல்  சங்கநாதத்தில் தொடங்கிய செந்திலின் திரையுலகப்பயணம்  37 ஆண்டுகளையும் கடந்து வெற்றிகரமாக  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது அவரது வாரிசுகளும் திரையுலகிற்குள் பிரவேசித்துவிட்டனர்.

அந்த சாத்தூர் கலைச்செல்வி , செந்திலின் வாழ்க்கையில் வந்தநேரம் எனச்சொல்வதா..? அல்லது செந்திலின் அதிர்ஷ்டம் என்பதா..? அல்லது செந்திலின் அயராத உழைப்பு என்பதா..?

கரகாட்டக்காரனில்  அவரும் கவுண்டமணியும் நடத்தும் வாழைப்பழ கலாட்டாவைத்தான் மறக்கமுடியுமா?

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் இதுபோன்ற சுவாரசியங்கள் வந்துகொண்டேயிருக்கும்.

ஆண்டபெருமாள் மச்சான், என்னை மதுரையில்  கொண்டையம்பட்டி என்ற ஊருக்கும்  அழைத்துச்சென்றார். அங்கே அவரது தங்கை குடும்பத்தினர் வசித்தனர்.  கரும்புச்செய்கையிலும்  கரும்பு வெல்லம் தயாரிக்கும் குடிசைக் கைத்தொழிலிலும் ஈடுபடும் மக்கள் வாழும் பிரதேசம். 

அழகான அமைதியான ஊர். அங்கிருந்த கரும்புத் தோட்டங்களை பார்த்து பரவசமடைந்தேன். இலங்கையில் கந்தளாயில் சீனி உற்பத்திசெய்யும் தொழிற்சாலை இருந்தபோதிலும் அந்த ஊர்ப்பக்கம் நான் செல்லவில்லை. கரும்புத்தோட்டங்களையும் அதற்கு முன்னர் பார்த்திருக்கவில்லை. சென்னையில் கரும்புச்சாறு உடனுக்குடன் தயாரிக்கும் வண்டில்களை சென்னையில் பல இடங்களில் தெருவோரம் பார்த்தேன்.  வாங்கியும் அருந்தினேன்.

கரும்பில் சீனியும் வெல்லமும் மாத்திரம் அல்ல,  சாராயமும் வடிக்கலாம்.  கியூபாவின் பிரதான பொருளாதாரம் இந்த கரும்பில்தான் தங்கியிருக்கிறது.

கியூபாவின் சிற்பிகளில் ஒருவரான தோழர்  ஏர்ணஸ்ட் சேகுவேரோ அங்கே அமைச்சராகவிருந்தவேளையில் அமெரிக்காவின் ஏற்றுமதி  பொருளாதாரத்தடை வந்தது. அதனால் அந்த நாட்டு மக்களும் தலைவர்களும் சோர்ந்துவிடவில்லை.

சேகுவேரா அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறி ஒரு கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்தார்.  அங்கிருந்து உழைப்பவர்களுக்கு உற்சாகமளித்தார்.  அவர் கைவண்டிலில், கரும்புகளை எடுத்துவந்து  அந்தப் பணியில் ஈடுபட்டார்.

அப்படிப்பட்ட முன்மாதிரியான அமைச்சர்களை எங்களது கிழைத்தேய நாடுகளில் காணவே முடியாது.

கொண்டையம்பட்டியில் நான் பார்த்த வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆண்களுடன் பெண்களும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள்.

பெரிய நீண்ட பாத்திரத்தில் கரும்புச்சாறு  கண்முன்னே வெல்லமாக மாறிவரும் காட்சியை பார்த்து ரசித்தேன்.  எனக்கும் இலங்கைக்கு எடுத்துச்செல்ல சுத்தமான கட்டி வெல்லம் கிடைத்தது.

அந்த வெல்லத்தின் இனிய சுவையுடன், மதுரையை விட்டுப்புறப்பட்டு இராமேஸ்வரத்திற்கு ரயிலில் வந்து மீண்டும் ராமானுஜம் கப்பலில் ஏறி தலைமன்னார் பியர் வந்துசேரும்போது மாலைநேரம் இருண்டுகொண்டு வந்தது.

இலங்கையிலிருந்து ஏற்கனவே  தமிழ்நாடு வந்து திரும்பிக்கொண்டிருந்த எங்கள் ஊர் நண்பர் தில்லைநாதனை கப்பலில் சந்தித்தேன். இவரது அண்ணன் நவரத்தினராஜா சிறிது காலம் குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்திய எங்கள் மயில்வாகனன் மாமாவின் சாந்தி அச்சகத்தில்தான் எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் அச்சிடப்பட்டது.

அன்று இரவு தலைமன்னாரில் ஒரு லொட்ஜில் தங்கினோம்.

தள்ளாடி இராணுவ முகாமை கடந்துதான் நாம் இனி கொழும்பு நோக்கி புறப்படவேண்டும். அந்த முகாமில் பயணிகளின் பொதிகள் சோதிக்கப்படும். 

எனக்கு ஒரு யோசனை பிறந்தது. அது என்ன…?

அடுத்தவாரம் வரையில் பொறுத்திருங்கள் !

( தொடரும் )

 

செந்தில் - கவுண்ட மணி  வாழைப்பழம் கலாட்டா


 

 

 

 

 

 

 

 

No comments: