இலங்கைச் செய்திகள்

வலுவிழக்க செய்ய ஹிருணிக்கா மனு

நாடு கொரோனா வைரஸின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது

கெபிட்டல் மஹாராஜா குழும தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்

இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்


வலுவிழக்க செய்ய ஹிருணிக்கா மனு

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வாவின் விடுதலை உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றத்தில் நேற்று (21) மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 04 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் 11 ஆவது குற்றவாளி , மரணதண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பாக நீதி அமைச்சர், சட்ட மாஅதிபர் மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் நாடு கொரோனா வைரஸின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது

இலங்கை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

நாடு கொரோனா வைரஸின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பயணத் தடை நடைமுறையில் உள்ள போதும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடக்கூடிய அளவில் குறைவடைய வில்லை என மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் திருமதி பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

மே 20 ஆம் திகதியிலிருந்து பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது நாம் எதிர்பார்த்த வகையில் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டது. எனினும் நாம் எதிர்பார்த்த அளவு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது பாரிய அளவில் குறையவில்லை. பயணத் தடைகளில் காணப்பட்ட சிறு தளர்வுகள் இந்த நிலைக்கு காரணமாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் எமது ஆஸ்பத்திரி கட்டமைப்பின் மூலம் எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றின் நானகாவது அலையின் ஆரம்ப நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 
கெபிட்டல் மஹாராஜா குழும தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்

கெபிட்டல் மஹாராஜா குழும தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்-Capital Maharaja Group Chairman R Rajamahendran Passed Away

கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.

கொவிட் தொற்று தொடர்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கிளி மஹாராஜா' என அழைக்கப்படும் இவர், சக்தி, சிரச உள்ளிட்ட தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளின் தாய் நிறுவனமான கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் நிறுவுனர்களில் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகனாவார்.

கெபிட்டல் மஹாராஜா நிறுவனமானது, இலங்கை ஒளி, ஒலிபரப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று என்பதுடன், ஊடகத் துறை தவிர்ந்த பல்வேறு தரப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் அதன் கீழுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
BABUJI MUTHULIGAM

பட மூலாதாரம்,BABUJI MUTHULIGAM

படக்குறிப்பு,

பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி கோரி பெண் உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.

இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இந்திய வம்சாவளி தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, தீ காயங்களுடன் இறந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல இடங்களில் சிறார் மற்றும் பெண் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த 15ம் தேதி உயிரிழந்த அந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனை, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.

அதில், சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண

அத்துடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொரள்ளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிறுமி இறந்தது தொடர்பாக இதுவரை சுமார் இருபதுக்கும் அதிகமான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் மனைவி கைது

இந்த நிலையில், சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் நேற்று (ஜூலை 23) அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.

குற்றவியல் விசாரணை திணைக்களம்.

இதேவேளை, ரிஷாட் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில், அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில், பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ரிஷாட் பதியூதீன் மைத்துனரை (மனைவியின் சகோதரர்) போலீசார் நேற்று கைது செய்தனர். 22 வயதாகும் மலையக பெண் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,

KRISHANTHAN

படக்குறிப்பு,

நீதி கேட்டுப் போராட்டம்

இது குறித்து காவல்துறை ஊடக பேச்சாளர் கூறுகையில், "16 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

4 பேர் நீதிபதி முன் ஆஜர்

குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு - புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

காவல்துறை வேண்டுகோளை ஏற்று அந்த நால்வரையும் 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சந்தேக நபர்களை வரும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றிய 11 மலையக பெண்கள், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தகவல் கிடைத்துள்ளது என பிரபல சிங்கள நாளிதழ் திவயின இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி இன்று இலங்கையில் மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

11 மலையக பெண்களுக்கு என்ன நடந்தது?

ரிஷாய் பதியூதீன்

பட மூலாதாரம்,

BABUJI MUTHULIGAM

படக்குறிப்பு,

மலையகப் பெண்களுக்கு நடந்தது என்ன?

11 மலையக பெண்களும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும், அவர்களில் இருவர் மர்மமான முறையில் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், 16 வயது சிறுமி தீ காயங்களுடன் இறந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இரண்டு மலையக தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை சிறப்புக் குழுவொன்று மலையகம் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண் ஊழியர் தாக்கினார்: சிறுமியின் தாய்

இதற்கிடையே, மலையகத்தின் ஹட்டன் - டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி இறந்த விவகாரத்தில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாய் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி

பட மூலாதாரம்,

GNANASANGARY SABTHSANGARY

படக்குறிப்பு,

கிளிநொச்சியில் ஒரு போராட்ட வாசகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஊழியர், தனது மகளை தும்பு தடியால் தாக்குவதாக தனது மகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார்.

எனினும், ரிஷாட் பதியூதீனின் மனைவியை அந்த சிறுமி எதிர்த்துப் பேசியதனாலேயே, தான் அந்த சிறுமியை தாக்கியதாக, குறித்த இளைஞன் தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் கூறியிருந்தார்.

குடும்ப வறுமை காரணமாகவே தனது மகளை வேலைக்கு அனுப்பியதாகவும் தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அந்த தாய் வலியுறுத்தினார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பதில்

மலையக மக்கள் போராட்டம்.

பட மூலாதாரம்,

KRISHANTHAN

படக்குறிப்பு,

மலையக மக்கள் போராட்டம்.

ரிஷாட் பதியூதீன் வீட்டில், 16 வயது சிறுமி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அருகே அறையொன்றில், அந்த சிறுமி தினமும் இரவு அடைக்கப்பட்டு, அதிகாலை வேலையிலேயே கதவு மீண்டும் திறக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரத்தில் தனியான அறையில் பாதுகாப்பற்ற முறையில் அடைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம்சாட்டப்படும் நபர்களுக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறார் விற்பனை, சிறார்களை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களுக்கும் அதற்கு உடந்தையாக இருப்பது, இலங்கை தண்டனை சட்ட கோவையின் 360சீ ஷரத்தின்படி, சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு நீதி கோரி போராட்டம்

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் சிறுமி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தலைநகரம், மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும், சிறார் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போராட்டத்தில் குரல்கள் ஒலிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அரசை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.   நன்றி தினகரன் 
No comments: