ட்யூன் - குறும்படம் ஒரு பார்வை - கானா பிரபா

 


இந்தியத் திரைமொழிக்கே உரித்தானது பாட்டு.

இதற்குள் அன்பு, பாசம், கோபம், தாபம், விரக்தி எல்லாவற்றையுமே அடக்கி விடலாம். ஆகவே பாடல் என்பது உணர்ச்சியின் இசைப் பரிமாணம், இதற்குள் பந்த பாசங்கள் எல்லாமே பின்னிப் பிணைந்திருக்கும், ஐந்து நிமிடத்துக்கு மிகாத பாட்டுக்குள் விக்ரமனின் படம் மாதிரி ஒரு கதைப் போக்கையே மாற்றி விடலாம் என்பது வேறு விஷயம்.
சந்தோஷ் நாராயணனின் “ட்யூன்” குறும்படத்தைப் பார்த்த போது ஏன் அவர் பாடல்களை அடி நாதமாகக் கொண்டு இந்தப் படைப்பைப் பின்னியிருக்கிறார் என்ற சிந்தனை எழுந்த போது இந்த மாதிரியானதொரு கண்ணோட்டத்தைத் தான் விதைத்தது.
இதற்கு மேல் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகளின் வருகை, அவர்கள் வழியாகச் சொல்லப்படும் செய்தி எல்லாம் தொக்கி நிற்கின்றது.
குறும்படம் என்ற வகையில் மிகக் கச்சிதமாகக் காட்சிப் போக்குக் கையாளப்பட்டிருக்கின்றது. நாடகத் தன்மை தவிர்க்கப்பட்டிருக்கின்றது, குழந்தைகள் நடிக்கிறார்களா? அவர்கள் போக்கிலேயே விட்டுப் படமாக்கியதாகத் தெரிகின்றது.
கே.டி.குஞ்சுமோன் போன்ற தயாரிப்பாளரைத் தேடாமல்
கேடி கொரோனா ஊரை ஆட்டிக் கொண்டிருந்த சமயம் பார்த்து ஒரு குடிசைக் கைத்தொழில் முயற்சியாக சந்தோஷ் இந்தப் படைப்பை எடுத்து முடித்திருக்கின்றார்.
“மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு” பட ஓட்டத்தில் திடீரென்று இந்தப் பாடல் பீறிடும் போதே வேற்றுக்கிரகவாசிகள் அதிசயிக்காமல் என்ன என்பது மாதிரியான பிரமாண்டத்தைக் கொட்டுகிறது. கதையோட்டத்துக்குத் தொடர்ந்த பாடல் தேர்வுகளும் நச்.
கொரோனா காலம் குடும்ப உறவுகளின் நெருக்கத்தைச் சற்றுக் கூடுதலாகவே உணர வைத்தது. இப்படியான படைப்புகளும் வர ஏதுவாகியது. இந்தப் படைப்போ அந்த நெருக்கத்தின் தேவையை இசை முலாம் பூசிக் காட்டுகிறது.
அந்தக் காலத்தில் ஒரு கிழிந்த பட ரீலை வைத்து வெள்ளைத் துணியைச் சுவரில் கட்டிப் படம் போட்ட பால்யம். இன்று ப்ளூ டூத் யுகத்தில் ஒரு ஒலிவாங்கியையும், வெளிச்சக் கொத்தையும் வேற்றுலக மனிதர்களாகக் காட்டிய சாமர்த்தியத்துக்கும் ஒரு சபாஷ்.
கொஞ்சம் பிசகியிருந்தால் எஸ்.ஏ.ராஜ்குமார்த்தனமான பாடலாகி விக்ரமப் படமாகி இருந்திருக்கும். ஆனால் இதுவோ ரகிட ரகிட ரகிட சந்தோஷ் நாராயணன் படம்.
சந்தோஷ் நாராயணன் இவர் வேற ரமணா.
ட்யூன் குறும்படத்தைக் காண
கானா பிரபா

No comments: