ஸ்வீட் சிக்ஸ்டி 11- அரசிளங்குமரி - ச சுந்தரதாஸ்

 .

தமிழ் திரைப்பட தயாரிப்பில் முன்னோடிகளாக செயற்பட்டவர்கள் சோமு, மொஹிதீன் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் நடத்திய ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் எம்ஜிஆருக்கு கதாநாயகனாக நடிக்கும் முதல் சந்தர்ப்பத்தை வழங்கியது. கருணாநிதி வசனகர்த்தாவாக அறிமுகமானதும் ஜூபிடர் மூலமாகத்தான். இன்னும் ஏராளமான நடிகர்கள் கலைஞர்கள் இந்த நிறுவனம் மூலமே சினிமாவில் நுழைந்து ஏற்றம் பெற்றார்கள். ஜூபிடர் தயாரித்த கண்ணகி குபேர குசேலா, அபிமன்யு , மேனகா போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன. எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன் இருவருக்கும் முதல்தடவை இசையமைக்க, பாட்டு எழுத இடமளித்ததும் ஜூபிடரே.

ராஜகுமாரி படத்தின் மூலம் எம்ஜிஆரை முதல் தடவையாக கதாநாயகனாக அறிமுகம் செய்த சோமு, முகைதீன் காலமானதை அடுத்து தனித்து ஜூபிடரை நடத்தி வந்தார். 1956 ஆம் ஆண்டளவில் அதுவரை தமிழ்த் திரையுலகில் யாரும் செய்யத் துணியாத வேலையை செய்யத் துணிந்தார் அவர்.

எம் ஜி ஆரின் நடிப்பில் அரசிளங்குமரி, சிவாஜியின் நடிப்பில் தங்கப்பதுமை ஜெமினியின் நடிப்பில் எல்லோரும் இந்நாட்டு மன்னர், டி ஆர் மகாலிங்கம் நடிப்பில் அமுதவல்லி என்று நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க தொடங்கினார்சோமு.

எம் ஜி ஆர் கதாநாயகனாகவும், அவரின் தங்கையாக பத்மினியும் அவர் கணவனாக நம்பியாரும் இவர்களுடன் தங்கவேலு ,முத்துராமன், ராஜசுலோசனா என்று பலரும் படத்தில் இடம் பெற்றார்கள். கலைஞர் கருணாநிதி படத்தின் கதை வசனத்தை எழுதினார். இசை அமைப்பை ஜி ராமநாதன் ஏற்றுக் கொண்டார்.

விவசாயியான கதாநாயகனின் தங்கையை இளவரசன் ஒருவன் ஏமாற்றி கைவிட்டு விடுகிறான். அவனை தேடி தங்கை நகரத்திற்கு வர அவளைத் தேடி அவளின் அண்ணனும் வருகிறான். இருவரும் பல இன்னல்களை சந்தித்து தங்கள் நோக்கத்தில் இறுதியில் வெற்றி அடைகிறார்கள்.படத்தில் பத்மினியின் நடிப்பு உணர்ச்சிகரமாக அமைந்தது. அவளின் கணவராக வரும் நம்பியார் தனது வில்லத்தனத்தில் உச்சம் தொட்டார். குறிப்பாக எம்ஜிஆருடன் அவர் போடும் வாட் சண்டை விறுவிறுப்பாக படமாக்க பட்டிருந்தது. தங்கவேலுவின் நகைச்சுவை படத்துக்கு மெருகூட்டியது. முத்துராமன் சிறிய வேடத்தில் வந்தபோதிலும் சோடை போகவில்லை.

அரசிளங்குமரி படம் உருவான போது கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகவும் பிஸியாக இருந்தார். இதனால் பட நிர்வாகி அபிபுல்லா அதிகாலையிலேயே அவரின் வீட்டுக்கு சென்று பாடலை எழுதி வாங்கிக்கொண்டார். சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்ற அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்து இன்றும் ஒலிக்கிறது. படத்தை ஏ எஸ் ஏ சாமி டைரக்ட் செய்தார். இடையில் அவருக்கும் எம் ஜி ஆருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மீதி படத்தை காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.


MGR க்கும் பட தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ காரணமாக படத்தயாரிப்பு 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. 1961 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சோமு மறைந்த பின்னரே படம் திரைக்கு வந்தது. ஒரே நேரத்தில் சோமு தயாரித்த நான்கு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஜூபிடருக்கு சொந்தமான நெப்டிஜுன் ஸ்டுடியோ விற்பனைக்கு வர MGR அதை விலைக்கு வாங்கி சத்யா ஸ்டூடியோ என்று பெயர் மாற்றினார். அரசிளம்குமரியுடன் ஜூபிடரும் மூடு விழா கண்டது.


No comments: