இஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி
காசாவில் தரைவழிப் படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார்: 115 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சுக்கு இடையே காசா மீது தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்
ஆப்கான் மாவட்டம் தலிபான்கள் வசம்
சீன - மேற்குலக உறவில் விரிசல்
லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டு வீச்சு
இஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி
முழுவீச்சில் போர் வெடிக்கும் அச்சம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் காசா பகுதியில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இஸ்ரேலில் அறுவர் பலியாகியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வான் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.
இதில் இஸ்ரேலிய குண்டு வீடொன்றில் விழுந்ததில் காசா நகரின் டெல் அல் ஹாவா பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது ஐந்து வயது ஆண் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போதைய தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் 13 சிறுவர்கள் உட்பட மொத்தம் 43 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், குறைந்தது 290 பேர் காயமடைந்திருப்பதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை காலை முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்திய அதேநேரம், ஹமாஸ் அமைப்பு மற்றும் ஏனைய பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பீர் ஷாபாவை நோக்கி ரொக்கெட் குண்டுமழை பொழிந்தன.
இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து குண்டு வீசியதால் காசாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த நிலையில் மற்றொரு கட்டிடம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.
ஹமாஸ் அமைப்பின் பல்வேறு உளவுப் பிரிவு தலைவர்களை போர் விமானங்கள் இலக்கு வைத்து கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. தவிர ரொக்கெட் குண்டு வீசுமிடம், ஹமாஸ் அலுவலகங்கள் மற்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அது கூறியது.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற காசா போருக்கு பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான கடும் மோதலாக இது மாறியிருக்கும் நிலையில், நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
‘தாக்குதல்களை உடன் நிறுத்துங்கள். நாம் முழுமையான போர் ஒன்றை நோக்கி செல்கிறோம். மோதலை நிறுத்துவதற்கு அனைத்து தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஐ.நாவின் மத்திய கிழக்கு அமைதி தூதுவர் டோர் வென்னஸ்லாண்ட் அழுத்தம் கொடுத்துள்ளார்.
‘காசாவில் போர் பேரழிவுகளுக்கு காரணமாவதோடு அதன் விளைவை சாதாரண மக்களே சந்திக்கின்றனர். அமைதியை கொண்டுவர ஐ.நா அனைத்து தரப்புடனும் இணைந்து செயற்படுகிறது. வன்முறைகளை இப்போதே நிறுத்துங்கள்’ என்றும் அவர் எழுதியுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் வீடுகள் அதிர்ந்ததோடு தீப்பிழம்புகள் வானை முட்டின. நேற்று புதன்கிழமை அதிகாலையில் சில நிமிடங்களுக்குள் முப்பதுக்கும் அதிகமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் இருந்து வரும் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வானை ஆக்கிரமித்த நிலையில் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கியும் ஓட்டம்பிடித்தும் தரையில் படுத்துக்கொண்டும் தம்மை காத்துக்கொள்ள முயன்றனர். இந்த ரொக்கெட் குண்டுகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு முறை இடைமறித்தது.
டெல் அவிவுக்கு அருகில் அரபு மற்றும் யூதர்கள் வாழும் லொட் நகரில் வாகனம் ஒன்றின் மீது ரொக்கெட் குண்டு விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். இதனை ஒட்டி அந்த நகரில் உள்ள இஸ்ரேல் அரபுகள் வாகனங்கள், கட்டடங்க மீது தீ வைத்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக லொட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காசாவின் அடுக்குமாடி கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதில் நடவடிக்கையாக பீர்செபே மற்றும் டெல் அவிவ் நகரை நோக்கி 210 ரொக்கெட் குண்டுகளை வீசியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்தது. எனினும் இந்த குண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு காசாவுக்குள்ளேயே விழுந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதில் காசா போராளிகளின் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வர்த்தக தலைநகரான டெல் அவிவை இலக்கு வைத்திருப்பது இஸ்ரேலுக்கு மற்றொரு சவாலாக உள்ளது.
முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி அண்மைய நாட்களாக நீடிக்கு மோதல்களின் தொடச்சியாகவே இந்த பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஜெரூசலத்தில் யூதக் குடியேறிகளால் பலஸ்தீன குடும்பங்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதே அண்மைய பதற்றங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு வசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கும் பரவியுள்ளது. ஹப்ரோன் நகருக்கு அருகில் உள்ள அகதி முகாமில் இடம்பெற்ற மோதலின்போது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அங்கு மற்றொரு கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய தேடுதலின்போது 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இந்த ரொக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக இராணுவம் கடும் பதிலளிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை எற்படுத்திக் கொண்ட சில நாடுகளைக் கொண்ட அரபு லீக் அமைப்பு காசாவில் இஸ்ரேல் பொறுப்பற்ற வகையில் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டியது.
ஹமாஸ் தனது ரொக்கெட் தாக்குதல்களுக்கு ‘ஜெரூசலத்தின் வால்’ என்று பெயரிட்டுள்ளது. ‘இஸ்ரேல், ஜெரூசலம் மற்றும் அல் அக்சாவில் மூட்டிய தீ காசா வரை பரவியுள்ளது. எனவே அதன் விளைவுகளுக்கு அது பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்தார்.
கட்டார், எகிப்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்பு கொண்டு உடன் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தியதாக குறிப்பிட்ட ஹனியே, ‘அவர்கள் மோதலை அதிகரிக்க விரும்பினால் போராளிகள் அதற்கு தயாராக இருக்கிறோம், அவர்கள் நிறுத்த விரும்பினால் போராளிகள் அதற்கும் தயாராக இருக்கிறோம்’ என்று அவர்களிடம் பதிலளித்ததாக குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ரொக்கெட் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் ஆனால் ஜெரூசலம் ஒன்றிணைந்து வாழவேண்டிய பகுதியாக இருப்பதால், பலஸ்தீனர்களை நல்ல முறையில் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று கூடியது. துனீசியா, நோர்வே, சீனா ஆகியவை இந்தச் சந்திப்புக்கு வேண்டுகோள் விடுத்தன.
முதற்கட்டச் சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது. அதன் முடிவில், அமெரிக்கா காட்டிய தயக்கத்தால் கூட்டறிக்கையை வெளியிட முடியாமல் போனது.
கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் அனைத்து வன்முறை நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியிலும் கிழக்கு ஜெருசலத்திலும் அதிகரித்து வரும் பதற்றமும் வன்முறையும் மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு சபை உறுப்புநாடுகள் கூறின.
2014 ஆம் ஆண்டு ஏழு வாரங் கள் நீடித்த காசா போரில் 2,100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 73 இஸ்ரேலியர்கள் பலியாகினர். இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் காசாவில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. நன்றி தினகரன்
காசாவில் தரைவழிப் படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார்: 115 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேலுக்குள் கலவரம் தொடர்கிறது
சர்வதேச அழைப்பையும் மீறி ஐந்தாவது நாளாக நேற்றைய தினத்திலும் காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. முற்றுகையில் இருக்கும் காசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் யுத்த தாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.
காசாவின் வடக்கில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பெண் ஒருவர் மற்றும் அவரது மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றுக் காலை வரை இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குறைந்தது 31 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் குறைந்தது 600 பேர் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீனர்கள் கடந்த வியாழக்கிழமை நோன்புப் பொருநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தபோதும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இதுவரை இஸ்ரேல் தரப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இந்திய நாட்டு பெண் ஒருவரும் உள்ளார். இஸ்ரேலின் பல்வேறு இடங்களை நோக்கி காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ரொக்கொட் குண்டுகள் வீசப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேலுக்குள் பல நகரங்களும் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் அரபு பிரஜைகளுக்கு இடையே மோதல் மற்றும் வன்முறைகள் நீடித்து வருகிறது.
இந்த மோதல்கள் ஒரு சிவில் யுத்தத்தை ஏற்படுத்தும் அச்சம் பற்றி இஸ்ரேல் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு மேலதிக துருப்புகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இதுவரை 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இஸ்ரேல் அரபியரே காரணம் என்று இஸ்ரேல் பொலிஸார் குற்றம்சாட்டியபோதும் அதனை மறுக்கும் அவர்கள் யூத குண்டர்களே அரபு வீடுகள் மீது தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. மேற்குக் கரை நகரான அல் பிரிவின் வடக்கு பகுதியில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸார் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.
காசா மீதான தாக்குதலில் தமது தரைப்படை நேற்று பங்கேற்றதாக இஸ்ரேல் அறிவித்தபோதும் அது காசாவுக்குள் இன்னும் நுழையவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் வழியான தாக்குதல்களால் காசாவின் இரவு வானம் நெருப்பு பிழம்பாக மாறி இருப்பது அங்கிருந்து வெளியாகும் வீடியோ காட்சிகளில் தெரிகிறது.
காசாவுக்கு இஸ்ரேலிய படை நுழையும் அச்சம் காரணமாக இஸ்ரேலுடனான எல்லையில் இருக்கும் பலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் பீரங்கி குண்டுகள் தமது வீடுகளில் விழுவதாக காசாவின் செஜையா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.
‘அங்கே அதிக பீரங்கி குண்டுகள் விழுகின்ற. குழந்தைகள் பயப்படுகிறார்கள். பெரியவர்கள் கூட தமது சிறு வயதில் இருந்து போரை சந்திக்கிறார்கள். நாம் பயத்தில் இருக்கிறோம், இனியும் தாங் முடியாது’ என்று உம் ரயீத் அல் பக்தாதி என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் சுரங்கப்பாதை கட்டமைப்பை அழித்ததாகவும் ஆனால் தமது துருப்புகள் காசாவுக்குள் நுழையவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் கூறியது. கடந்த வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி 220க்கும் மேல் ரொக்கட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
தெற்கு இஸ்ரேலில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் வழியில் ரொக்கெட் குண்டு விழுந்து 87 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அஷ்கலோன், பீர்ஷபா மற்றும் யுவ்னே ஆகிய இஸ்ரேலிய நகரங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேவையான வரை பலஸ்தீன போராளிகள் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய போராட்டக் குழுவின் ஆட்சி உள்ள காசா கடும் விளைவை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தரைவழி ஆக்கிரமிப்பு ஒன்றுக்கு தீர்மானித்தால் இஸ்ரேல் இராணுவத்திற்கு கடுமையான பாடம் கற்பிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் பேச்சாளர் ஒருவர் எச்சரித்தார்.
2014 இற்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான உக்கிர மோதலாக இது மாறியுள்ளது. கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த ஒருசில வாரமாக நீடித்த பதற்றத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் வெடித்தது. முஸ்லிம்களின் புனிதத் தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைலே மோதல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
காசா எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் 7,000 மேலதிக படையினர் நிறுத்தப்பட்டதோடு அங்கு பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காசா மீதான தரைவழி தாக்குதல் ஒரு தேர்வாக இருப்பதாகவும் அது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
நேற்று மோதல் ஐந்தாவது நாளை எட்டிய நிலையில், மோதல்களை உடன் நிறுத்தவும் காசா மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்களை நிறுத்தவும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா மற்றும் ஏனைய இராஜதந்திரிகளும் போரை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் மோதலை கட்டுப்படுத்துவதில் அது தோல்வி அடைந்துள்ளது.
ஜெரூசலம் அல் அக்சா பள்ளிவாசலில் இஸ்ரேல் இராணுவ ஒடுக்குமுறைகளை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தால் பரஸ்பரம் போர் நிறுத்தம் ஒன்றுக்கு தயார் என்று ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெரூசலம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின் கிழக்கு ஜெரூசலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெரூசலத்தை தங்களுடன் இணைத்துக் கொண்டது.
ஜெரூசலம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.
எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெரூசலம் தான் தலைநகராக அமையும் என்று பலஸ்தீன் கூறுகிறது.
கிழக்கு ஜெரூலத்தில் அமைந்துள்ள அல்-அக்சா பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாகும். மலைக் குன்றின் மேல் அமைந்துள்ள இந்த இடத்தை யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர். அவர்கள் இதை ‘டெம்பிள் மவுன்ட்’ (கோயில் மலை) என்று அழைக்கின்றனர். தங்களின் இரண்டு விவிலிய புனித இடங்களில் ஒன்றாக யூதர்கள் இதைக் கருதுகிறார்கள். நன்றி தினகரன்
இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சுக்கு இடையே காசா மீது தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்
69 பலஸ்தீனர் பலி: எல்லையில் படை குவிப்பு
காசாவில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றும் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் ஏனைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதோடு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் விசப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 17 சிறுவர்கள் உட்பட 69 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 390க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மறுபுறம் ஏழு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காசா எல்லையில் ரோந்து சென்ற இஸ்ரேல் படை வீரர் ஒருவர் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு இந்திய பணியாளர் உட்பட ஆறு பொதுமக்கள் உள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு இடங்களை நோக்கியும் நூற்றுக்கணக்கான ரொக்கெட் குண்டுகள் பாய்ந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதனையொட்டி இஸ்ரேலுக்குள் பல நகரங்களிலும் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீன பிரஜைகளுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. இதன்போது வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் மீது தீவைப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இரு தரப்பினரும் வீதிகளில் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல்களில் 374 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு 36 அதிகாரிகள் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரங்களில் சட்ட ஒழுங்கை காக்க பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை அனுப்பப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
‘அரபு குண்டர்கள் யூதர்களை தாக்குவதையும் யூத குண்டர்கள் அரபியரை தாக்குவதையும் நியாயப்படுத்த முடியாது’ என்று நெதன்யாகு தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை இரவிலும் டெல் அவிவ் நகரில் ரொக்கெட் குண்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததோடு மக்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் பெற்றனர். இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் வானில் அந்த ரொக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தும் சத்தங்களும் அந்த நகரில் கேட்ட வண்ணம் இருந்தது.
கடந்த திங்கட்கிழமை மோதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை காசாவில் இருந்து சுமார் 1,500 ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது.
தொடர்ந்து நேற்று அதிகாலையில் முற்றுகையில் உள்ள காசா மீதான வான் தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது. இவ்வாறான தாக்குதல் ஒன்றில் காசா நகரின் மத்தியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் காசா எல்லையில் இஸ்ரேலிய தரைப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்தது. தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கு பல கட்டங்களில் தயாராகி வருவதாகவும் அது தெரிவித்தது. இதற்கு முன்னர் 2014 மற்றும் 2008–2009 போர்களின்போது இஸ்ரேலிய துருப்புகள் காசாவுக்கு ஊடுருவி இருந்தது.
‘அந்த ஏற்பாடுகள் பற்றி இராணுவ தளபதி கண்காணித்து வருவதோடு வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார்... அந்த நிலைமை மற்றும் நடவடிக்கைகளுக்கு தம்மை தயார்படுத்திய மூன்று படையணிகள் மற்றும் பிரிவுத் தலைமையகங்கள் காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன’ என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதனன்று காலை உயிரிழந்த பலரும் விச வாயுவை உள்ளிழுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காசா சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைகள் கட்டுப்பாட்டை இழந்து பரவி வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தனது தூதுவரான ஹாடி ஆம்ரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கில் மூண்டுள்ள புதிய வன்செயலை முடிவுக்குக் கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்தது. பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் மீது அதிகச் செல்வாக்குமிக்க எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராஜதந்திர வழிகளில், அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வொஷிங்டன் குறிப்பிட்டது.
‘விரைவாகவோ தாமதித்தோ இது முடிவுக்கு வரும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால் தம்மை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது’ என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். தாம் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டதற்கான காரணத்தை பைடன் விளக்க தவறினார்.
‘காசா பகுதியில் செயற்படும் ஹமாஸ் மற்றும் ஏனைய பயங்கரவாதக் குழுக்களின் படைத் திறனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்’ என்று அமெரிக்க ஜனாதிபதியிடன் தெரிவித்ததாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் வங்கி ஒன்றின் மீது கடந்த புதனன்று தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவரை கொன்றது.
‘எதிரியுடனான போர் முடிவற்ற ஒன்றாக மாறியுள்ளது’ என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை குறித்து கடும் கவலை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்புச் சபை கூடியபோதும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஹமாஸ் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், ‘கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் வன்முறைகள் மற்றும் அங்குள்ள அரபு மக்கள் மீதான சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையே பல நாட்கள் நீடித்த மோதலின் தொடர்ச்சியாகவே தற்போதைய வன்முறை வெடித்தது.
அல் அக்ஸா வளாகத்தில் இருந்தும் அருகாமையில் யூதக் குடியேற்றவாசிகளால் பலஸ்தீன குடும்பங்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் செய்க் ஜர்ராஹ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய போலிஸாரை வெளியேறும்படி ஹமாஸ் கெடு விதித்தது. அந்த கெடு முடிந்த நிலையிலேயே இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. நன்றி தினகரன்
ஆப்கான் மாவட்டம் தலிபான்கள் வசம்
ஆப்கானிஸ்தானில் நோன்புப் பெருநாள் விடுமுறையை ஒட்டி மூன்று நாள் போர் நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு சில நாள் இருக்கும் நிலையில் தலைநகர் காபுலுக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம் வர்தக் மாகாணத்தில் இருந்து நெர்க் மாவட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தாம் கைப்பற்றியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் தலிபான்களிடம் வீழும் இரண்டாவது மாவட்டமாக வர்தக் உள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேற தயாராகி வரும் நிலையில் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இந்த மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியதை உறுதி செய்திருக்கும் அந்த மாவட்டத்தின் ஆளுநர் அப்துல் ரஹ்மான் தாரிக் ஆப்கான் துருப்புகள் மூலோபாயமாக மாவட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக தெரிவித்தார்.
அந்த மாவட்டத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக தலிபான்கள் கடந்த மே 5 ஆம் திகதி பொர்கா மாவட்டத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சீன - மேற்குலக உறவில் விரிசல்
சின்ஜியாங் மனித உரிமை சர்ச்சை சீனா மற்றும் மேற்குலக நாடுகள் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவில் வேகமான வீழ்ச்சிக்கு காரணமாகி உள்ளது.
அதிகரித்து வரும் பதற்றம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு இடையிலான புதிய முதலீட்டு ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு அது சீனாவில் வர்த்தகத்தில் ஈடுபடும் மேற்கத்தேய ஆடைத் துறையில் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக அந்த பிராந்தியத்தின் உற்பத்திகளை இறக்குமதி செய்வதையும் அமெரிக்கா தடை செய்துள்ளது. நன்றி தினகரன்
லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டு வீச்சு
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி கடந்த வியாழக்கிழமை நான்கு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மூன்று ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வந்ததாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதில் இரண்டு ரொக்கெட்டுகள் லெபனானுக்கு தவறி விழுந்ததாகவும் அடுத்த இரண்டு ரொக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேல் நகரை இலக்கு வைத்து வீசப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி லெபனானின் தி டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதல் தெற்கு லெபனானில் இருக்கும் பலஸ்தீன அகதி முகாமில் இருந்து நடத்தப்பட்டதா அல்லது ஹிஸ்புல்லாஹ் அமைப்பினால் நடத்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment