தமிழ் நாவல் நூற்றாண்டு காலம் 1976 இல் வந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவர் இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி இரண்டு நாட்கள் ஆய்வரங்குகளை நடத்தினார்.
அக்காலப்பகுதியில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறாண்டு பிறந்துவிட்டது என்ற தகவல் தமிழகத்திற்கும் தெரியாதிருந்தது. அப்போது அங்கே முதல்வராக இருந்தவர் பல நாவல்கள் எழுதிய கலைஞர் கருணாநிதி.
பின்னாளில் சிட்டி சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதினார்கள்.
அதற்கு முன்பே, இலங்கையில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய மதிப்பீட்டு நூலையும் எழுதிவிட்டார்.
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூலை சில்லையூர்
செல்வராசன் 1967 ஆம் ஆண்டளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.
கைலாசபதியும் 1968 இல் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியதையடுத்து, தமிழக விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அதற்கு எதிர்வினையாற்றி மார்க்ஸீயக் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற விமர்சனத்தை நடை இதழில் எழுதினார்.
அதனை இலங்கையில் பூரணி காலாண்டிதழ் மறுபிரசுரம் செய்ததையடுத்து, பேராசிரியர் நுஃமானும் அதற்கு நீண்ட எதிர்வினையை மல்லிகையில் தொடராக எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக மு. பொன்னம்பலமும் மல்லிகையில் ஒரு கட்டுரையை எழுதினார்.
சில பதிப்புகளைக்கண்டுள்ள கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் மற்றும் ஒரு பதிப்பினைக்கண்டது. இந்த புதிய பதிப்பினை காலச்சுவடு வெளியிட்டது.
நூலகர் நடராஜா செல்வராஜா, ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு என்ற விரிவான நூலை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
இத்தகைய இலக்கிய வரலாற்றுப்பின்னணியுடன் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி மாத இதழ், தனது 150 ஆவது இதழாக ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழை 475 பக்கங்களில் பெறுமதி மிக்க ஆவணமாகவே வெளியிட்டுள்ளது.
அதன் உள்ளடக்கமும் கனதியும் பிரமிப்பைத்தருகிறது. அதற்காக உழைத்த ஜீவநதி ஆசிரியர் கலாமணி
பரணீதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
மொத்தம் 107 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் கார்த்திகை மாதம் முதல் இதற்காக தொடர்பாடல்களை இலங்கை உட்பட உலகெங்கும் மேற்கொண்டு ஆக்கங்களை சேகரித்திருக்கும் ஆசிரியர் பரணீதரன், நான்கு மாதங்களுக்குள் இந்த அரிய ஆவணத்தை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான இருபது ஆண்டுகாலத்தில் ஈழத்துப்படைப்பாளிகளினாலும், புலம்பெயர்ந்துசென்ற ஈழத்துப்படைப்பாளிகளினாலும் எழுதப்பட்ட நாவல்களை முடிந்தவரையில் விமர்சனப்பாங்கில் இந்த ஆவணம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்றாம் பக்கத்தில் “ குறிப்பு “ என்ற தலைப்பில் பரணீதரன் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு தவறவில்லை. அவர் தொடர்புகொண்டவர்களில் சிலர் எழுதி அனுப்புவதாகச்சொன்னபோதிலும் , கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றத்தவறிவிட்டதையும் தனது ஆதங்கத்தில் சுட்டிக்காண்பித்துள்ளார்.
அதனால், முன்னர் வெளிவந்த சில ஆக்கங்கள் மறு பிரசுரமாகியிருக்கிறது. முன்னர் வாசிக்கத்தவறியவர்களுக்கு மற்றும் ஒரு சந்தர்ப்பத்தையும் ஜீவநதி வழங்கியிருப்பதாக கருத இடமுண்டு.
இருபது ஆண்டுகாலத்தில் வெளிவந்த அனைத்து ஈழத்து
நாவல்களையும் பற்றிய மதிப்பீட்டை ஒரே தொகுப்பில் வெளியிட முயற்சிப்பது சிரமசாத்தியமானது. எனினும் முடிந்தவரையில் பரணீதரன் ஆக்கங்களை சேகரித்துள்ளார்.
விமர்சகர் சி. ரமேஷ் 65 பக்கங்களில் ஈழத்து தமிழ் நாவல்கள் என்ற தலைப்பில் அறிமுகக்குறிப்புகளை எழுதியுள்ளார்.
“ நாவல் குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரை உண்மையிலேயே அறிமுகக் குறிப்புக்களேயன்றி ஆய்வன்று. நாவல் இலக்கியத்தை பயனுள்ள ஆய்வுக்குட்படுத்துவோருக்கு இத்தரவுகள் போதுமானதல்ல. உண்மையில் இத்தரவுகள் விரித்து எழுதப்படவேண்டியது. “ – என்று ரமேஷ் ஒப்புக்கொண்டு பதிவுசெய்திருந்தாலும், அவர் முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி உசாத்துணையாகவே நிச்சயம் திகழும். அவரது தீவிர தேடுதலையும் பரந்த வாசிப்பு அனுபவத்தையும் நாம் பாராட்டவேண்டும்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி பரிமாணங்கள் பலவற்றை கண்டடைந்துள்ளது.
சுதந்திரத்திற்கு முற்பட்ட நாவல் இலக்கியம், மறுமலர்ச்சி கால நாவல்கள், முற்போக்கு – மண்வாசனை நாவல்கள், பிரதேச நாவல்கள் – தலித் இலக்கியமாகத்திகழும் நாவல்கள், நிலக்காட்சிக்கும் பிரதேச மொழிவழக்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி அதன் ஊடாக மக்களின் ஆத்மாவை பிரதிபலித்தவை, வர்க்கப்பார்வைக்கு முன்னுரிமை வழங்கியவை, அழகியலை சித்திரித்தவை, பிரசாரத்தொனி
மேலோங்கியவை, போர்க்கால நாவல்கள், விடுதலை இயக்க உள்முரண்பாடுகளை சித்திரித்தவை, அரசியல் விமர்சன நாவல்கள், புலம்பெயர்ந்தவர்களால் ஆறாம் திணையிலிருந்து படைக்கப்பட்டவை… இவ்வாறு வளர்ச்சி கண்ட ஈழத்து நாவல் இலக்கியத்தின் செல்நெறியையும் ஜீவநதியின் நாவல் விமர்சனச் சிறப்பிதழ் பதிவுசெய்துள்ளது.
நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாவல் நூற்றாண்டு வந்தபோது, அதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் பேசப்பட்ட நாவல்களின் களத்திற்கும், 2000 ஆம் ஆண்டுக்குப்பின்னர் வெளியான நாவல்களின் களத்திற்கும் நிரம்ப வேறுபாடுண்டு.
முன்னைய காலத்தில் நாவல்களில் சோஷலிஸ யதார்த்தப்பார்வையை மார்க்ஸீய இலக்கிய விமர்சகர்கள் எதிர்பார்த்தார்கள், அல்லது வலியுறுத்தினார்கள். அதனால், பலரது நாவல்களில் பிரசாரம் மேலோங்கியுமிருந்தது.
ஈழத்தின் ஒரு மூத்த நாவலாசிரியர் தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டு, நாடெங்கும் அதற்கு நடந்த அறிமுக – விமர்சனக்கூட்டங்களுக்குச்சென்றார்.
அந்த நாவலின் இரண்டாம் பாகத்தை அவர் எழுதியபோது,
அவரால் அவர் எதிர்பார்த்தவாறு எழுதமுடியாமல், விமர்சகர்களின் பார்வையே ஆழமாக அழுத்தியது.
பின்னர், சில மாதங்கள் எந்தவொரு விமர்சனக்கூட்டங்களுக்கும் செல்லாமல், காலத்தை கடத்திவிட்டு இரண்டாம் பாகத்தை எழுதினார்.
“ பிள்ளை பெறாத மருத்துவச்சி, கர்ப்பிணித்தாயிடம் எவ்வாறு மூச்சு எடுத்து விட்டால் பிள்ளை சுகமாக பிறக்கும் என்று சொல்லிக்கொடுப்பதுபோன்றதுதான் இந்த விமர்சகரின் வேலை “ என்றும் கடிந்துகொண்டார் அந்த மூத்த நாவலாசிரியர்.
இதனையே ஒரு மேலைத்தேய அறிஞரும், “ ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் முடவனே விமர்சகன் “ என்று வேறு விதமாகச்சொன்னார்.
அவ்வாறாயின், இலக்கியத்திற்கு விமர்சகர்கள் அவசியமில்லையா..? என்ற கேள்வி எழுகிறது.
விருந்தில் பரிமாறப்படும் உணவு எப்படி இருந்தது எனச்சொல்வதற்கு ருசி பேதம் அவசியமாகியிருப்பதுபோன்று ஆக்க இலக்கிய படைப்புகள் குறித்த கணிப்பினை வெளிப்படுத்துவதற்கும் விமர்சகர்கள் தேவைப்படுகிறார்கள்.
அவர்களின் வாசிப்பு அனுபவங்கள் வெளிப்பட்டிருக்கும் கட்டுரைகளை ஜீவநதி வரவாக்கியுள்ளது.
நூறு தலைசிறந்த தமிழ் நாவல்களை பட்டியலிடும் விமர்சகர்கள் தவறவிட்ட நாவல்கள் பற்றிய அறிமுகக்குறிப்புகளையும் இந்த ஆவணத்தில் காணமுடியும்.
சமகாலத்தில் நாவலின் ஆயுள் காலம் பற்றியும் சிலர் பேசத்தொடங்கியுள்ளனர். அவை எழுதப்பட்ட காலத்தின் பின்புலத்தை அவதானிக்காமல், எதிர்காலத்தில் மறக்கப்பட்டுவிடும் ஆபத்து நேர்ந்துவிடும் எனவும் ஆரூடம் சொல்கிறார்கள்.
ஜீவநதி வெளியிட்டிருக்கும் ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ் இலங்கை – தமிழக – சிங்கப்பூர் – மலேசியா பல்கலைக்கழகங்களின் தமிழ்துறை மாணவர்களையும் சென்றடையவேண்டியது.
சமகால கொரோனோ நெருக்கடி அவலத்திற்கு மத்தியில் நேர்த்தியாக இதனை வெளியிட்டிருக்கும் ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன், ஏற்கனவே, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , அவுஸ்திரேலியா சிறப்பிதழ் , கனடா சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ் முதலானவற்றை இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர்.
அவருடைய அயராத முயற்சியின் அறுவடையாக ஜீவநதியின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழும் திகழும்.
பிரதிகளுக்கு:
K. Bharaneetharan, Kalaiaham, Alvai North west, Alvai, Srilanka
மின்னஞ்சல்: jeevanathy@yahoo.com
தொலைபேசி: 00 11 94 (0) 21 226 22 25
00 11 94 (0) 775 991 949
No comments:
Post a Comment