இலங்கைச் செய்திகள்

 அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போவதில்லை

வவுனியாவில், வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி

யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கொரோனா சிகிச்சை விடுதி

கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 11 கோடி ரூபாய் செலவில் கட்டில்கள்

பொதுபலசேனாவின் செயற்பாடு - அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்ததும் ஒரு யுத்தப் பிரகடனம் தான் - தமிழ் சொலிடாரிட்டி


அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போவதில்லை

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஒருபோதும் ஏமாற்றப்பட போவதில்லை. என்னுடன் அவர்கள் துணிந்து நின்று செயலாற்ற முடியும்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக உயிரையும்கொடுக்க தயாராக இருக்கின்றேன். தேர்தலிலே பாராளுமன்ற வாய்ப்பை இழந்ததென்பது பாரிய இழப்பு என்றுதான் கூற வேண்டும். ஆனால் இம்மக்கள் ஏமாற்றப்படவில்லை. இவ்வாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சரும், பிரதமரின் விசேட இணைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) தினகரனுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

கேள்வி: பிரதமரின் விசேட இணைப்பாளர் என்ற வகையில், தங்களால் ஏற்படுத்தப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் எவை?

பதில்: அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த தேர்தலின் போது சுமார் 31,000 வாக்குகளை எனக்கு அளித்து பாரிய பொறுப்பைத் தந்திருக்கிறார்கள். உண்மையிலேயே அந்த நன்றிக் கடன் எப்போதும் என் மனதில் இருக்கும். பாராளுமன்றம் செல்லா விட்டாலும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விசேட இணைப்பாளர் என்ற பதவியை எனக்குத் தந்துள்ளார்.மக்களுக்கும் பிரதமர் செயலகத்திற்கும் உள்ள தொடர்பாடலுக்காக என்னை நியமித்திருக்கிறார்.

இதனூடாக தேர்தல் காலத்திலே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மாத்திரமல்ல அனைத்து அமைச்சர்களையும் பயன்படுத்தி பாரிய பணிகள் செய்வதற்கான திட்டங்களை வகுத்திருக்கின்றோம். வைகாசி மாத காலப் பகுதியில் நிதியொதுக்கப்பட்டதும், பிரதமரின் உதவியுடன் வேலைவாய்ப்பு, வேலைத் திட்டங்களை செய்யக் கூடியதாக இருக்கும்.

மேலும், நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் கதைத்து நாவிதன்வெளி, அன்னமலை, ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு குடிநீரை வழங்குதற்கான வேலைத் திட்டத்தினை தற்போது முன்னெடுத்துள்ளேன். அதே போல கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்பந்தமாக துறைசார் அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி அனைவரையும் நேரடியாக சந்தித்து தரமுயர்த்தலுக்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி கோரியுள்ளேன். பிரதேச செயலக தரமுயர்த்தலை நிறைவேற்றித் தரும்படி துறைசார் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவிடம் எடுத்துக் கூறியிருக்கின்றேன். அடுத்ததாக பாரிய வேலைத் திட்டமாகவுள்ள கிட்டங்கி பாலத்துக்குரிய அனைத்து தயார்படுத்தல்களையும் பிரதமரிடமும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடமும் கொடுத்திருக்கின்றேன். விரைவாக கிட்டங்கி பாலம் அமைக்கும் இடத்திற்கு பரிசோதனைக் குழு வருவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்று பல வேலைகள் செய்வதற்கு திட்டமிடல்கள் இடம்பெற்றுள்ளன.

கேள்வி: தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறங்கு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறதே...?

பதில்: அவ்வாறு கூறி விட முடியாது. தமிழ் மக்கள் மத்தியிலே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பலப்படுத்தி வளர்ப்பதற்கான தீவிர வேலைத் திட்டத்தை செய்துள்ளோம். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய அமைப்பாளர் பதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அதே போல அம்பாறை மாவட்டத்திற்குரிய அமைப்பாளர்கள் களத்தில் நின்று கட்சியினை பலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். திருகோணமலை, கொழும்பு மாவட்டங்கள் போன்ற இடங்களிலெல்லாம் கட்சியை புனரமைத்து வளர்த்துக்கொண்டு வருகின்றோம்.

கேள்வி: கல்முனை தொகுதியில் நிறைவாக வாக்குகள் கிடைக்கப் பெற்றும் நீங்கள் வெற்றியடையாமைக்கான காரணம் யாது?

பதில்: கடந்த தேர்தலில் 2000 வாக்குகள் மேலதிகமாக கிடைக்கப் பெற்றிருந்தால். பாராளுமன்றத்திற்கு சென்று அம்பாறை தமிழ்மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், பொத்துவில் தொகுதி மக்கள் சற்று குறைவாக வாக்களித்திருந்தார்கள். பொத்துவில் மற்றும் நாவிதன்வெளி தொகுதி வாக்குகள் முழுமையாக கிடைக்கப் பெற்றிருந்தால் வெற்றி வாய்ப்பை இலகுவாக அடைந்திருக்க முடியும். கல்முனை தொகுதி மக்கள் 82 வீத வாக்குகளை அளித்திருந்தார்கள். அந்த வகையில் கல்முனைத் தொகுதி மக்களை பாராட்ட வேண்டும். அதே போன்று சம்மாந்துறைத் தொகுதி தமிழ் பிரதேசங்களிலுள்ள மக்கள் நிறைவாக வாக்களித்திருந்தார்கள். பொத்துவில் தொகுதித் தமிழ்மக்கள் உணர்ந்து வாக்களித்திருந்தால் பல வேலைத் திட்டங்களை இன்று செய்திருக்க முடியும்.60ஆம் கட்டைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளேன்.

காரைதீவு பிரதேசத்தை மையப்படுத்தி தனிக்கல்வி வலயம், கஞ்சிக்குடிச்சாறு குளத்தை புனரமைத்து நீர் விநியோகங்கள் என இவ்வாறு பல வேலைத் திட்டங்களை செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றேன். அனைத்து வேலைத் திட்டங்களும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நாங்கள் ஒரு விநாடியும் ஓயப் போவதில்லை. அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆகவே ஒருபோதும் அம்பாறை கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதித் தமிழ் மக்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு என்ன துயர் வந்தாலும் அவர்களுடன் இணைந்து பங்கெடுப்பதற்கும் அவர்களுக்கெதிராக கிளம்பும் பிரச்சினைகளை தடுத்து நிறுத்துவதற்கும் ஆயத்தமாக இருக்கின்றேன்.

கேள்வி: தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபை தேர்தலில் களமிறங்குமா ?

பதில்: மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. நிச்சயமாக எங்களுடைய கட்சி சார்பாக அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம். இருந்தும் தேர்தல் நெருங்கும் காலத்தில் இணைவதா இணைவதில்லையா என்பதை முடிவெடுப்போம்.

கேள்வி: மட்டக்களப்பு பிரதேசங்களில் ஆற்றுமண் கடத்தல் கொள்ளை வியாபாரம் இடம்பெறுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில்: உண்மையிலேயே ஆற்றுமணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தலைநகரிலுள்ளவர்களும் மட்டக்களப்பிலுள்ளவர்களும் அமைச்சுகளின் பெயர்களைப் பயன்படுத்தி மண்வளங்களை களவாக எடுத்துச் செல்கிறார்கள். கடந்த காலங்களில் லொறிகளில் செல்லப்பட்டவை தற்போது ரயில் பெட்டிகளில் கொண்டு செல்லப்படுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே மண் கொள்ளை வியாபாரம் நடைபெறுவதனால் உள்ளூர்க் கொள்ளையர்கள் புனைபெயர்களில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி மண் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இவர்களால் பல்வேறு விபத்து சம்பவங்களும் அரங்கேறுவதை காணக் கூடியதாகவுள்ளது. இன்று மண் வளம் கொள்ளை வர்த்தகமாக மாற்றமடைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்திற்கு சென்று அரசியலாக்கி படம் காட்டுகிறார்களே தவிர எதுவித மாற்றங்களும் நடந்ததாக இல்லை. எங்களுடைய வளத்தையும் மக்களையும் அழிக்கக் கூடாது என்பதில் உறுதியாக கவனமாக இருக்கிறோம். ஆனால் இதுவொரு பாரிய பிரச்சினையாக தற்போது உருப்பெற்றிருக்கிறது. இதற்கான தீர்வு வெகுவிரைவில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கின்றேன். பொதுமக்களும் சமூகமட்ட அமைப்புகளும் விழிப்படைந்து மட்டக்களப்பு மண் பிரச்சினையினை தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுக்காவிட்டால் இதுவொரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

கேள்வி: மட்டக்களப்பு மேய்ச்சல் தரை உட்பட சகல பரீட்சார்த்த நடவடிக்கைகளும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன அல்லவா?

பதில்: தொப்பிகல பிரதேசத்திலே இருக்கின்ற சித்தாண்டி, சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை, கெவிளியாமடு, மயிலந்தனை, வாகரை போன்றவற்றிலுள்ள மக்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் இன்றி பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். உண்மையிலேயே பரம்பரை பரம்பரையாக இருந்த மேய்ச்சல் தரைப் பிரதேசம் தற்போது முந்திரி, சோள சேனைப் பயிர்ச்செய்கையென்ற போர்வையில் வழங்கப்பட்டுள்ளதனால் அங்குள்ள சிங்கள மக்களால் துரத்தியடிக்கப்படுகின்ற நிலை இருக்கின்றது.

உண்மையிலேயே கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யாராக இருப்பினும் மாட்டைக் கொண்டு வர முடியும். அவ்வாறு வருவார்களாயின் ஒரு பிரச்சினையும் நடக்கப் போவதில்லை. ஆனால் கால்நடைகள் மேய்கின்ற பிரதேசங்களில் பயிர்ச்செய்கைக்கு இடம் கொடுத்திருப்பதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வன இலாகா திணைக்களத்தினரின் உதவியுடன் மகாவலி அதிகார சபைக்குரிய பிரதேசங்களாகவே மேய்ச்சல் தரைப் பிரதேசங்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். சேனைப் பயிர்ச் செய்கைக்காக காணிகள் குத்தகைக்கு வழங்கப்படலாம் என்ற மகாவலி அதிகார சபை சட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி அதை மாற்றியமைக்கலாம். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் இன்னும் இடம்பெறவில்லை. பிரதி அமைச்சராக இருந்த கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்து நிறுத்தியிருந்தேன். இப்போதுள்ள மேய்ச்சல் தரைப் பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றேன். இப்போது கிட்டத்தட்ட 2000 க்கு மேற்பட்ட விவசாய சேனைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு அந்நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பாரிய பிரச்சினையாக மாற்றமடைந்திருக்கின்றது. கால்நடையாளர்கள், கால்நடைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் விருத்தி செய்ய முடியாது என்ற நிலையில் திண்டாடுகிறார்கள். இப்பிரச்சினையைத் தீர்க்க பாலமாக செயற்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி: வடக்கு, கிழக்கில் தமிழர்களது பூர்வீக இருப்பு உறுதிப்படுத்தப்படுமா? மாறாக தொல்லியல் போர்வையில் பாதிப்பு ஏற்படுமா?

பதில்: தொல்பொருள் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய விடயம். தமிழ், - சிங்கள பிரதேசங்களில் தொல்பொருளுக்காக அடையாளப்படுத்தப்பட்டால் உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்க் கிராமத்தில் தொல்பொருள் இருக்கிறதென்று விகாரையையோ சிங்கள பிரதேசத்தில் தொல்பொருள் அமையப் பெற்றுள்ளதென்று இந்து ஆலயத்தையோ கட்ட முடியாது. அது அந்தந்த பிரதேச மக்களுக்குரிய பிரதேசமே தவிர வேற்று இனத்தவரோ மதத்தவரோ அங்கு சென்று குடியிருக்க முடியாது. தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டதும் சில குறுகிய நோக்கம் கொண்ட மதத் தலைவர்கள் வணக்கத்தலங்களை அமைக்க முற்படும்போதே இன முரண்பாடு ஏற்படுகிறது. தொல்பொருள் திணைக்களம் இடங்களை பாதுகாக்கிறதே தவிர இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தவில்லை.

பாக்கியராஜா மோகனதாஸ்
(மண்டூர் குறூப் நிருபர்)     -  நன்றி தினகரன் 



வவுனியாவில், வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 351 ஆவது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குடும்ப வறுமையின் மத்தியிலும் இந்த சாதனை நிலைநாட்டிய என்னை போல் எதிர்காலத்தில் பரீட்சையில் தொற்றவிருக்கும் மாணவர்களும் வறுமையினை கருத்தில் கொள்ளாது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.   நன்றி தினகரன் 




யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கொரோனா சிகிச்சை விடுதி

கோவிட் - 19 நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக்கூடியவாறான ஏற்பாடுகள் மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை, அதி தீவிர சிகிச்சை, ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்க மற்றும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு விசேட சிகிச்சை வழங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

புதிதாகத் தயார்படுத்தப்பட்டுள்ள விடுதியினை யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.   நன்றி தினகரன் 




கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 11 கோடி ரூபாய் செலவில் கட்டில்கள்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச கைத்தொழில் திணைக்களம் ஆகியன பதினோரு கோடி ரூபா செலவில் கட்டில்களை தயாரித்து வருகின்றன.  

750 கட்டில்கள் தயாரிக்கப்பட உள்ள நிலையில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மூலம் 250 கட்டில்களும் அரச கைத்தொழில் திணைக்களத்தின் மூலம் 500 கட்டில்களும் தயாரிக்கப்படவுள்ளன. அதற்கிணங்க அரச கைத்தொழில் திணைக்களம் தற்போது 100 கட்டில்களையும் அரச பொறியியல் திணைக்களம் 60 கட்டிகளையும் இதுவரை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மேற்படி கட்டில்கள் ராஜாங்க அமைச்சர் இண்டிக அனுருத்தவினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்     - நன்றி தினகரன் 





பொதுபலசேனாவின் செயற்பாடு - அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை


14/05/2021 இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்தும் பரப்பும் செயற்பாட்டில் பொதுபலசேனா அமைப்பு ஈடுபடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்கா இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மதங்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரசாரங்கள் குரோதத்தை உருவாக்கியுள்ளன என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன என அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுபல சேனா போன்ற சிங்கள தேசியவாத குழுக்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தொடர்ந்து பிரசாரம் செய்கின்றன என தெரிவித்துள்ள அமெரிக்கா சிஙகள தேசியவாத குழுக்கள் மத மற்றும் சிறுபான்மையினத்தவர்களை சமூக ஊடகங்களில் இழிவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் தமிழ் சமூகத்திற்கு எதிராக குரோதங்களை தூண்டுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.   

நன்றி 






முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்ததும் ஒரு யுத்தப் பிரகடனம் தான் - தமிழ் சொலிடாரிட்டி

14/05/2021 இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைத்து எரியப்பட்டுள்ளது. அரச படைகள் தான் இதை செய்திருக்கின்றது என தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வரலாற்றை மாற்றி எழுதுவதே அரசாங்கத்தின் நோக்கம். யுத்தக்குற்ற விசாரணை - நல்லிணக்கம் உருவாக்குதல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பெறுதல் ஆகியன ஒருபோதும் நடக்காது என்ற உறுதியான செய்தியை ராஜபக்ஸ அரசு இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூருவதைக் கூட மறுக்கும் இந்த அரசாங்கம் தாம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிரி என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுவும் ஒரு யுத்தப்பிரகடணம் தான். முழுமையான அறிக்கை கீழே...


Gallery

நன்றி 




No comments: