பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
இனவழிப்புப் பெருமளவில் நிகழ்ந்த நாளில்
எத்தனையோ ஆயிரமா யிரவுயிர் களந்தோ
நனவுநிலை தனிலேதுடி துடித்து உடல்கள்
நாலுபக்கம் சிதறுண்டு மடிந்த தம்மா!
தினமேங்கி யேங்கிவாழ்ந்து முள்ளி வாய்க்கால்
சிறியநிலப் பரப்பிற்குள் செத்தவு றவுகளை
மனமுருகி நினைவுகூரல் மனிதம் அன்றோ?
மனுநீதிப் பரிகாரம் என்றுசாத் தியமோ?.
முள்ளிவாய்க்கால் கண்டபெரும் அழிவு நடந்து
மூநான்கு ஆண்டந்தோ கடந்த தம்மா!
தள்ளிவரும் தீர்ப்புநாள் என்று வருமோ?
தாளாத துயர்சுமந்தோர் நிலையைக் கண்டு
எள்ளிநகை ஆடிவரும் எதிரிக் கெதிராய்
இறைவனவன் தீர்ப்பளிக்கத் தாமத மேனோ?
கொள்ளிவைக்க எவருமின்றிச் செத்தோர்க் காகக்
குவலயத்துத் தமிழரெலாம் கூடித் தொழுவீர்!
ஒருபாவம் இழைக்காஅப் பாவி மக்கள்
ஒருநொடியில் உயிரிழந்தார் தீயோர் கையால்
தெருநாயைச் சுடுவதுபோல் இரக்க மின்றித்
தேடிநின்று தமிழர்களைக் கொன்று குவித்தார்
கருத்தரித்த நாளன்றே இறப்பினைக் கடவுள்
கணக்கிட்டா புவிதன்னிற் பிறக்க வைத்தார்?
பெருமனத்தொடு இறந்தோர்க்கு ஞாபகச் சின்னம்
பிரியமொடு நிறுவினோரைப் போற்று வோமே!
எழிலன்னைக்(கு) ஏற்றபொன்முடி கவித்து மகிழ
இப்புவியில் எம்மவர்க்கு நாடொன் றமைக்க
அழிவில்லாத் தொன்மைமொழிச் சிறப்பைக் கூற
அகிலத்தோர் தமிழணங்கை வணங்கச் செய்ய
வழியிதுதான் என்றுமனந் தெளிந்து போரில்
வாகைசூடி அரசாண்டு வானடைந் தோர்க்குக்
கழிவிரக்கத் தோடுபுலம் பெயர்ந்த நாமும்
கட்டியதோர் சின்னத்திற்(கு) அஞ்சலி செய்வாம்!.
நாளுக்குநாள் தமிழினத்தை அழித்தே ஒழிக்க
நாசவேலை பலவழியிற் செய்யத் திட்டம்
வேளைக்குவேளை அரசாங்கம் தீட்டு தையா!
வேதனையுறும் தமிழர்களுக் கேது தீர்வு?
வாழ்ந்துவந்த தமிழர்நிலம் பறிபோ குதையா!
வழிநடத்தத் தலைவனென்று இனியார் உள்ளார்?
மாழ்ந்துவரும் இனமதனின் அழிவைக் கண்டும்
மலராதோ ஒற்றுமையெம் ‘மன்னர்’ மனதில்?.
No comments:
Post a Comment