எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழன்ற காலத்தின் மற்றும் ஒரு பகுதி தெற்கில் தமிழருக்கு அடி விழுந்தது, வடக்கில் உழைக்கும் வர்க்கத்திற்கு சிரட்டையில் தேநீர் தரப்பட்டது ! முருகபூபதி


எங்கள் ஊரின் அயலிலிருந்து சிலாபம்  செல்லும் மார்க்கத்தில் கொச்சிக்கடை, தோப்பு, மணல்சேனை முதலான ஊர்களில்  நீண்ட காலமாக வசித்த தமிழ்க்குடும்பங்கள்  பீதியினால்  இடம்பெயர்ந்து கிடைத்தவற்றை கையிலெடுத்துக்கொண்டு,  கடற்கரை வீதி சித்திவிநாயகர் ஆலயத்திற்கும் அதற்கு முன்பாகவிருந்த எமது இந்து இளைஞர் மன்றத்திற்கும் வரத்தொடங்கியிருந்தார்கள்.

வடபகுதியைச்சேர்ந்த  பலர் எங்கள் ஊரில் அரச உத்தியோகங்களிலும், கட்டுநாயக்கா விமானப்படை தளத்திலும் பணியாற்றியவர்கள். அவர்களின்  குடும்பங்களும் அச்சம் காரணமாக வெளியே வராமல் கதவுகளை மூடிக்கொண்டிருந்தனர்.  கடைத்தெருப்பக்கம் பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி  எங்கும் இருந்த தமிழர்களின் அனைத்து கடைகளும் சூறையாடப்பட்டு,  தீ அரக்கனிடம் சிக்கி வெந்துகொண்டிருந்தன.


வதந்தி காட்டுத்தீபோன்று பரவியிருந்தது.  விமானப்படையினர் நகர காவலில் ஈடுபட்டனர்.  இதெல்லாம் நடந்துகொண்டிருந்த அந்த கறுப்பு ஜூலை நாட்களில்  எங்கள் ஊர் நாடாளுமன்ற உறுப்பினர் டென்ஸில் பெர்ணான்டோ, மற்றும் ஊர் தமிழ்பிரமுகர்களுடன்,  அயலூர்களிலிருந்து வந்துகொண்டிருக்கும்  அகதிக்குடும்பங்களை கொழும்பில் இயங்கத் தொடங்கிய அகதிமுகாம்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது எனது அக்காவின் இரண்டாவது மகன் சாந்தகுமார்,  பதட்டத்துடன் ஓடி வந்தான்.

என்னை தனியே அழைத்து,      “ மாமா… உங்களைத் தேடுகிறார்கள்.  நீங்கள் இங்கே நிற்கவேண்டாம்.  மாமியையும் பிள்ளைகளையும் பெரியமுல்லையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்.  நீங்களும் அங்கே செல்லுங்கள். வெளியே அலையவேண்டாம். எனச்சொல்லிவிட்டு,  தான் வந்த சைக்கிளில் என்னையும் ஏற்றிச்சென்று உறவினர் வீட்டில் விட்டான்.

என்னை யார் தேடுகிறார்கள்..? எதற்காக தேடப்படுகிறேன்…? எதுவும் புரியவில்லை.  பெரியமுல்லை  என்ற இடத்தில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் இஸ்லாமியர்கள்.  அங்கிருக்கும் அல்கிலால் மகா வித்தியாலயத்தில்தான் முன்னர் படித்திருக்கின்றேன்.

அதனால், அந்தப்பகுதியில் எனது ஆசான்கள் மற்றும் பாடசாலைக்கால நண்பர்கள் பலரும் இஸ்லாமியர்கள். 


அவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு இனவாத வன்முறைக்கும்பல் வராது என்ற நம்பிக்கை எங்கள் ஊர் தமிழ்மக்களுக்கு இருந்தது.

பெரியமுல்லையில் வசித்த எமது உறவினர்கள்  வர்த்தகத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள்.  அவர்களின் சாரதா ஸ்டோர்ஸ் இரும்புக்கடை சூறையாடப்பட்டது.  எனது நண்பர்கள் பலரதும் பலசரக்கு, புடவை, நகைக்கடைகள் நகரில் எரிந்துகொண்டிருந்தன.

அவற்றின் உரிமையாளர்கள்,  பணியாளர்கள் பலரும் எமது இந்து இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள். அவர்களின் ஆதரவுடன்தான் நாம் மன்றத்தில் தமிழ் விழாக்கள் பலவற்றையும் மருத்துவ முகாம்களையும் நடத்தியிருக்கின்றோம். நான் மன்றத்தின் செயலாளர், பொருளாளர் பதவிகளில் இருந்த அக்காலப்பகுதியில்தான் எங்கள் ஊரும் 1977 – 1981 – 1983 ஆம் ஆண்டுகளில்  கலவரங்களை சந்தித்தது.

1958 ஆம் ஆண்டு கலவரம் வந்தபோது எனக்கு ஏழு வயது.  எமது மன்றத்திற்கு முன்பாகவிருந்து சில பஸ் வண்டிகளில் வடபகுதியைச்சேர்ந்தவர்களின் குடும்பங்கள் எத்தகைய பாதிப்பும் இல்லாமலேயே  அச்சம் காரணமாக யாழ்ப்பாணம்


நோக்கி புறப்பட்டதை பார்த்திருக்கின்றேன்.

அவ்வாறு சென்றவர்கள், பின்னர் திரும்பியும் வந்தனர். அதன்பிறகு 1977 ஆம் ஆண்டும் 1981 ஆம் ஆண்டும் அதே மன்றத்தின் வாசலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு  மக்களை பஸ் ஏற்றிவிட்ட நானும் 1983 ஆம் ஆண்டு ஒரு தனியார் பஸ்ஸில் குடும்பத்துடன் தப்பி ஓட நேர்ந்தது.

1983 வன்செயல்கள் எவ்வாறு தொடங்கின,  அதன் எதிரொலியாக இந்தியாவின் தலையீடு நரசிம்மராவின் வருகை, அன்றைய ஜனாதிபதியின்  செயற்பாடுகள், அவர் தடைசெய்த இடதுசாரிக்கட்சிகள்,  தலைமறைவான மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பற்றிய செய்திகள் பலவும் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றமையால்,  நானும் இங்கே மீளவும் பதிவுசெய்யவில்லை.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா,  அரசியலில் பெரிய  இராஜதந்திரி.   அவரது அவதந்திரம் அவருக்கே அந்தரமாகியதுதான் வரலாறு. இந்திராகாந்தியால்  கிழட்டு நரி


என்ற பெயரும் பெற்றவர்.  அவரது கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட  வன்முறைகளை  மறைத்து, உலக நாடுகளுக்கு பொய்யுரைத்து, அதன் சூத்திரதாரிகள்  இடது சாரிகள்தான் என்று குற்றம் சுமத்தி அக்கட்சிகள்  மீது தடைவிதித்தவர்.

எனினும் இந்தப்பதிவில் இணைத்துள்ள காணொளியின் ஊடாக அன்று என்ன நடந்தது என்பதை அந்த 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிறந்தவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


எங்கள் ஊர் பிரமுகரும்,  மாநகர சபை உறுப்பினரும் நான் ஆரம்பக்கல்வியை பெற்ற வித்தியாலயத்தின் ஸ்தாபகர் விஜயரட்ணம் அய்யாவின் புதல்வருமான ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் மாவத்தகம தேங்காய்ப்பூ                    (  Desiccated Coconut  ) ஆலை முகாமையாளர் தியாகராஜா அண்ணர் எனது குடும்ப நண்பர்.   நான், ஊரில் யாராலோ தேடப்படுகிறேன் என்ற செய்தியை அவரும் அறிந்தவர்.

எனக்கு இடதுசாரிகளுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதையும் நன்கு அறிந்தவர்.  அவரே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து தனது குடும்பத்தினரையும் மேலும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர்களின் குடும்பங்களையும் அழைத்துச்செல்ல முனைந்தபோது,    என்னையும் அவர்களோடு சேர்த்துக்கொண்டார்.

அவர் அரியாலையைச்சேர்ந்தவர்.  அவரும் ஒரு காலத்தில் நான்


முன்னர் கற்ற யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில்தான் பயின்றவர்.  அரியாலை சென்றடைந்ததும், அங்கும் பலர் எனக்கு அறிமுகமானார்கள்.

ஒரு சில நாட்கள் தியாகராஜா அண்ணர் வீட்டில் தங்கிவிட்டு,  வடலியடைப்பில் இருக்கும் எனது  மனைவியின்  உறவினர்கள் வீட்டுக்குச்சென்றோம்.

எமது மூத்த குழந்தை  பாரதிக்கு அப்போது  நான்கு  வயதும் நிரம்பவில்லை. இரண்டாவது குழந்தை பிரியாவுக்கு ஒருவயதும் நிரம்பவில்லை.

பெற்றோரையும்  ஊரையும் விட்டு  ஓடி வந்த கவலை  ஒருபுறம், வீரகேசரியின் எதிர்காலம் என்னவாகும் என்ற யோசனை மறுபுறம், இனி என்ன செய்யப்போகிறோம்..?

கையிலிருந்த சொற்ப பணமும் விரையமாகிக்கொண்டிருந்தது.  எத்தனை நாட்களுக்கு


இவ்வாறு மற்றவர்கள் வீடுகளில் இருப்பது. பூனை தனது குட்டிகளை காவியவாறு இருப்பிடம் தேடி அலைவது போன்று இரண்டு குழந்தைகளையும் நானும் மனைவியும் மாறி மாறி தூக்கிக்கொண்டு அலைந்தோம்.

அந்த வடலியடைப்பு உறவினர் வீட்டில் ஒரு கசப்பான அனுபவத்தை சந்தித்தேன்.

ஒருநாள் எனது மூத்த குழந்தைக்கு மதிய உணவூட்டிக்கொண்டிருந்தேன். அந்த வீட்டுக்குரியவரின் இளையமகன் – பத்துவயதிருக்கும். அவன்தான் எனது திருமணத்தின்போது மாப்பிள்ளைத்தோழன்.

அவன் ஒரு கையில் தேநீர் கேத்திலும் மறுகையில் ஒரு சிரட்டையும் எடுத்துக்கொண்டு அவர்களின் வீட்டு வளவுடன் இருந்த மற்றக்காணிக்குச்சென்றான்.

அங்கே வேலியடைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. சில வேலையாட்கள்  கதியால் நட்டுக்கொண்டிருந்தனர்.

எனக்கு எந்தவேலையும் இல்லாமல் போரடித்தது.

 “ தம்பி… மகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு நானும் வருகிறேன். வந்து உதவி செய்கிறேன்.  “  எனச்சொல்லிவிட்டு,       “ சிரட்டை எதற்கு,  கதியால்  நடுவதற்கு


குழிதோண்டுவதற்கா..?  “   என்று கேட்டேன்.

 “  இல்லை… இல்லை…. வேலையாட்களுக்கு தேநீர் கொண்டுசெல்கிறேன். அவர்கள் தேநீர் அருந்துவதற்குத்தான் இந்தச்சிரட்டை  “ என்றான்.

நான் திடுக்கிட்டேன்.  ஒருகணம் உறைந்துவிட்டேன்.

மகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த கையை உதறிவிட்டு, அந்த வீட்டிலிருந்த முதியவரும் முன்னாள் ஓவஸியருமான ஒரு காலத்தில் சிங்கப்பூரில் பணியாற்றி சிங்கப்பூர் பென்ஷனியர் எனப்பெயரெடுத்தவருமானவரிடம் சென்று,  “ இது என்ன அநியாயம். நாம் அங்கே சிங்களவர் அடிக்கிறார்கள் என்று இங்கே ஓடி வருகிறோம். ஆனால்,  இங்கே எமது சகமக்களை


நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்..?  “ எனக்கேட்டேன்.

அதற்கு அவர்,  “ ஐஸே… நீர் என்னசொன்னாலும், இங்கே இப்படித்தான். இந்த நடைமுறைகளை மாற்றமுடியாது… “ என்றார்.

அதற்குமேலும் அவருடன் வாதிடாமல், மறுகணம் அங்கிருந்து எமது குழந்தைகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும்  அரசடி சந்திக்கு வந்து குப்பிழானிலிருக்கும் மற்றும் ஒருவரது வீட்டுக்கு பஸ் ஏறினோம்.

 “  உங்கட இடதுசாரி தத்துவங்களை உங்களோடு வைத்திருங்கள்.  மற்றவர்களை உங்களால் மாற்றமுடியாது.  இப்படியெல்லாம் அலையநேரிடும் என்பதால்தான், செத்தாலும் பரவாயில்லை.  உங்கள்  ஊரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னேன்  “  மனைவி கண்ணீர் உகுத்தவாறு இளைய மகளை நெஞ்சோடு அணைத்திருந்தாள்.

பல வருடங்கள் கழித்து  ஒரு செய்தியை அவுஸ்திரேலியாவிலிருந்து படித்தேன். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்கா, பதவியிலிருந்த காலத்தில் இலங்கை கெக்கிராவ திப்படுவெவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேநீர் பானத்தை சிரட்டையில் அருந்திய செய்திதான் அது. !   பலரையும்  அச்செய்தி வியப்பில் ஆழ்த்தியது.

நல்லவேளை அந்த முதிய ஓவசீயர் இந்தக்காட்சியை பார்க்கவில்லை. பார்த்திருப்பாராயின் என்னை நினைத்து ஏளனச்சிரிப்பை உதிர்த்திருப்பார் !.

சரி… போகட்டும். மீண்டும் எமது அலைச்சலுக்கு வருகின்றேன்.

மூத்த மகள் எனது மடியிலிருந்து,“ எங்கே அப்பா போகிறோம்?  “   எனக் கேட்டாள்.

குப்பிழானில் எமது உறவினர் இருந்தார்.  எனது இரண்டாவது தம்பியின் மனைவியின் அண்ணன். அவர் குருநாகலைச்சேர்ந்த வர்த்தகர்.  கலவரத்தால் ஊரைவிட்டு வெளியேறி,  குப்பிழானில் வதியும் அவரது மனைவியின் தாய்வீட்டில் வந்து தங்கியிருந்தார்.  அவரது காதல் திருமணத்தை நானும் முன்னின்று நடத்தியிருந்தமையால், அவரது மனைவி எனது மற்றும் ஒரு பாசமலர் தங்கையாகிவிட்டிருந்தாள்.

ஊரில் நீரிழிவு உபாதையுடன்,  கண்பார்வையையும் இழந்திருந்த அப்பாவும், அம்மாவும், இளைய தம்பியும் இருந்தனர். அக்கா, தங்கை குடும்பம் வவுனியாவில்.

வவுனியாவில் சகோதரிகள் நிலைமையை பார்த்துவருவதற்காக குப்பிழானிலிருந்து புறப்பட்டேன்.

அங்கே அப்பா தட்டுத்தடுமாறி வந்துசேர்ந்திருந்தார்.  அவருக்கு பேரக்குழந்தைகளை விட்டுப்பிரிந்த ஏக்கம். அவருக்குரிய மருத்துவ பரிசோதனை நாள் நினைவுக்கு வந்ததும், அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

வவுனியாவுக்குச்சென்ற அப்பா விரைவில் வந்துவிடுவார் என்று எனது மூத்த மகள் குப்பிழானில் காத்துக்கிடக்கிறாள்.

பல இலங்கைத்தமிழர்களினதும் வாழ்க்கையை  இவ்வாறு புரட்டிப்போட்டுவிட்ட அந்த இருண்ட யுகம்தான் கறுப்பு ஜூலை. 

அப்பாவுக்குரிய தேவைகளை கவனித்துவிட்டு, குப்பிழான் திரும்பினேன்.  பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் இராமலிங்கம் வீதியில் வசித்த வயலின் கலைஞர் வி. கே. குமாரசாமி அவர்களின் வீட்டுக்கு வந்தோம்.  அந்தப்பகுதியில்தான் முன்னைய பதிவில் நான் குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வத்தையும் அவரது மனைவியையும் அவர்களின் ஏக புத்திரன் அகிலனையும் சந்தித்தேன்.

மாலையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது எனது மூத்த மகள் எனது மடியிலேயே உறங்கிவிடுவாள். திருமதி திருச்செல்வம் அவளைத்  தூக்கிச்சென்று தங்கள் படுக்கையில்  உறங்க வைப்பார்.

மல்லிகை ஜீவா எம்மைத்தேடிவந்தார்.  சிவராசா மாஸ்டர் என்ற இலக்கிய ஆர்வலர் பதறிக்கொண்டு வந்தார். மானிப்பாயில் வசித்த எழுத்தாளர் சாந்தன் வந்து, தங்கள் ஊரில் வீடு ஒழுங்கு செய்து தருவதாகச்சொன்னார்.

ஒருநாள், மல்லிகை காரியாலயத்தில் இலக்கிய நண்பர்கள் சந்தித்தோம்.  திருநெல்வேலியிலிருந்த காவலூர் ஜெகநாதன்,  தான் குடும்பத்தினருடன் தமிழ்நாடு சென்று வசிக்கப்போவதாகச்சொன்னார். மற்றும் ஒரு நண்பர் வெளிநாடு செல்லவிருப்பதாகச்சொன்னார்.

 “ அப்பாவின் உறவினர்கள் எங்களை தமிழகம் வரச்சொல்லி கடிதம் எழுதியிருக்கிறார்கள். 1940 களில் இலங்கை வந்த அப்பாவும், அதன்பின்னர் திரும்பவில்லை. அவரது பூர்வீக இல்லம் பாளையங்கோட்டையிலிருக்கிறது.  அதனால், அங்கே செல்வதைப்பற்றி யோசிக்கிறோம்  “ என்று நான் சொன்னேன்.

உள்ளே இருந்து விருட்டென எழுந்து வந்த மல்லிகை ஜீவாவின் ஆத்மார்த்த நண்பரும் எழுத்தாளரும், தபால் அதிபருமான ரத்னசபாபதி அய்யர்  “ போறவன் எல்லாம் போங்கோடா… நானும் ஜீவாவும் இங்கிருந்து போகவே மாட்டோம்  “ என்று உரத்துச் சொன்னார்.

 காலம் உருண்டோடியது.  காவலூர் ஜெகநாதன் தமிழகம் சென்று ஒரு இயக்கத்தினரால் கடத்தப்பட்டு காணாமலே போய்விட்டார். மற்ற நண்பர் எங்கே சென்றாரோ தெரியாது.

நான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தேன்.  ரத்னசபாபதி அய்யர் தமது மனைவியுடன் லண்டன் போய்ச்சேர்ந்தார். அவரது பிள்ளைகள் திருமணமாகி லண்டன், அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கின்றனர்.

மல்லிகை ஜீவா இறுதிவரையில் தாயகத்திலேயே வாழ்ந்தார்.  எமது புகலிட இலக்கியங்களை மல்லிகையில் வெளியிட்டார். கடந்த ஜனவரி மாதம் அவரும் எங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றார்.

இது இவ்விதமிருக்க, மீண்டும்  யாழ்ப்பாணத்தில் அன்றைய எமது  வாழ்க்கைக்கு வருகின்றேன்.

நல்லூர் இராமலிங்கம் வீதியிலிருந்து  மீண்டும் அரியாலைக்கு வந்தோம். 

அவ்வூரைச்சேர்ந்தவர்கள் செம்மணி வீதியில் ஒரு வீட்டையும் மிக மிக குறைந்த வாடகையில் பெற்றுக்கொடுத்தனர்.

கொழும்பில் வீரகேசரி, தினகரன்  பிரதம ஆசிரியர்களின் வீடுகளும் அந்த வன்முறையில் சேதமுற்றன. அவர்களும் அகதிமுகாம் செல்லநேர்ந்தது.

பொதுமுகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் தமது துணைவியாருடன் அவருடைய பூர்வீக ஊர் அமைந்திருந்த வடமராட்சிக்கு சென்றுவிட்டார்.

வீரகேசரியில்  பணியாற்றிக்கொண்டிருந்த அன்னலட்சுமி இராஜதுரை தமது குடும்பத்தினருடன் திருநெல்வேலிக்கும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் கரவெட்டிக்கும்,  தட்டச்சாளர் வசந்தியும் அவரது கணவர்   ஒளிப்படக்  கலைஞர் ஜோய் ஜெயக்குமாரும்  கொழும்புத்துறைக்கு வந்துவிட்டனர்.

ஏனையோர் எங்கெங்கே சென்றார்கள் என்பதையும் அறியமுடியாதிருந்தது.

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு தமிழரை அடித்துக்கொன்று மின்கம்பத்தில் கட்டித்தொங்கவிட்டிருந்த காட்சியையும்  அந்தக்கலவர காலத்தில் ஒருநாள் பார்க்கநேர்ந்தது.

அதன்பிறகு சில நாட்கள் கொழும்பு பக்கமே நான் செல்லவில்லை. 

யாழ்ப்பாணம் அரியாலையும் அந்த செம்மணி வீதியும் அங்கிருக்கும் நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் ஆலயத்தின் சுற்றாடலும் எனக்கு  புதிய பல உறவுகளைத் தேடித்தந்தன.

தோழர் ஏர்ணஸ்ட் சேகுவேரோ சொல்லியிருப்பதுபோன்று எனது காலடித்தடங்கள் பதியும் எந்தவொரு பிரதேசமும் எனக்கும்  சொந்தம் என்று வாழப்பழகிவிட்டமையால் நான் செல்லுமிடமெங்கும் கிட்டும் நட்புகள் சொந்தங்களாக பெருகிவிடுவார்கள்.

அரியாலையில் நாம் சந்தித்தவர்கள் எனது குடும்பத்திற்கு பேருதவியாக இருந்தனர். எனது குழந்தைகள் அவர்களின் வீடுகளில் தவழ்ந்து ஓடி விளையாடியதுடன்  அவர்களின் மடியிலும்  உறங்கினர்.  அங்கிருந்த சித்திவிநாயகர் ஆலயத்தின் தேர்முட்டியில் அமர்ந்து சீட்டு விளையாடும் இளைஞர்களும் எனது பிரியத்திற்குரிய நண்பர்களானார்கள்.

அவர்களின் மனதில் இனவிடுதலையுணர்வு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அவர்களுடன் நான் அரசியல் விவாதங்களிலும்  ஈடுபடுவதுண்டு.  நாளடைவில் சிலர்  அவ்வூரில்  காணாமல்போனார்கள். மேலும் சிலர் அய்ரோப்பிய நாடுகளுக்குச்சென்றனர்.

அவர்கள் பற்றிய சிறுகதையை எழுதினேன். வீரகேசரியில் வெளியான அச்சிறுகதையின் பெயர் தேர்முட்டி.

பல ஆண்டுகள் ( 1972 முதல் ) வீரகேசரியுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தபோதிலும், 1985 இல்தான் அச்சிறுகதை முதல் முதலில் வீரகேசரி வாரவெளியீட்டில் வௌியானது.  இளைஞர்கள் விடுதலை இயக்கங்களில் சேரும் காலத்தை அது பிரதிபலித்தமையால், வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜகோபால் அதனை  நான் எழுதியவுடனே வெளியிடுவதில் சற்று தயக்கம் காண்பித்தார்.

இது இவ்விதமிருக்க, 1983 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எனது அப்பாவும் ஊரில் மாரடைப்பால் மறைந்தார்.  அந்தச்செய்தி கேள்விப்பட்டோ என்னவோ,  அப்பாவின் உடன் பிறந்த அண்ணன் சுப்பையா தொண்டமானும் அதே ஓகஸ்ட் மாதம் இறுதியில்  பாளையங்கோட்டையில் மறைந்தார் என்ற செய்தியை தாங்கி வந்தது , எமது தாத்தாமுறை உறவினரான எழுத்தாளர், பாரதி இயல் ஆய்வாளர்  தொ.மு. சி. ரகுநாதனின் கடிதம்.

அப்பாவின் அண்ணன் சுப்பையா அவர்கள் திருச்செந்தூர் முருகன் தேவஸ்தானத்தில் வரவு – செலவு கணக்குகளை பரிசீலிக்கும் பணியிலிருந்தவர்.

எம்ஜீயார் முதல்வராகவும் ஆர். எம். வீரப்பன்  அறங்காவல் அமைச்சராகவும் பதவியிலிருந்த காலப்பகுதியில்  அங்கே  அந்தப்பணிகளை கவனித்த ஒருவர் மரணமடைந்தார்.  அது தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை பல மாதங்களாக ஊடகங்களில் வெளியானது. எதிர்க்கட்சியிலிருந்த தி. மு. க., ஆளும்தரப்பினை கடுமையாக சாடியது.  இச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்பு நோக்கியிருந்தேன்.

அந்தச்சம்பவத்தில்  சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விடுதலையான ஒரு நபர்,  பின்னர் ஒரு  வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

அந்த லொறியின் பெயர் திருமுருகன்.  இச்செய்திகளையும் வாசித்திருக்கின்றேன்.

அப்பாவின் தாய்மாமனார் ரகுநாதன் எமக்கு எழுதிய ஆறுதல் கடிதத்தில் எங்களையெல்லாம் தமிழகத்திற்கே வந்துவிடுமாறு அழைத்திருந்தார்.

அப்பாவின் குடும்பத்தில் அப்பாவும் ரகுநாதனும்தான் தங்கள் பெயருக்குப்பின்னால் பரம்பரை அடையாளத்தை                                    ( தொண்டமான் ) பதிவுசெய்யாதவர்கள்.

யாழ்ப்பாணத்தில் நின்றபோது,  ஒருநாள் மல்லிகைஜீவா, அந்த அலைந்துழன்ற காலத்தைப்பற்றி எழுதித்தரச்சொன்னார். அவருடைய காரியாலயத்திலிருந்து  உடனேயே எழுதிக்கொடுத்தேன். அந்த ஆக்கம், துன்ப மேகங்களும் சமகால துயரங்களும் என்ற தலைப்பில் வெளியானது.  

( தொடரும் )

 

 

 

 

No comments: