பாட்டுக்குப் பாட்டு ( சிறுகதை ) முருகபூபதி


 “ கெதியா வீடு மாறவேண்டும். இல்லையென்றால் நாங்கள் வேறு வீடு


பார்த்துக்கொண்டு போகவேணும்  “

சிங்காரவேலர் மனைவியிடம் புறுபுறுக்கத் தொடங்கினார். அவரது இந்தப்புறுபுறுப்பு, மருமகள் வீட்டுக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு தொடங்கிவிட்டது.

மகனும் மருமகளும் காலையில் துயில் எழும்புவதற்கு முன்னர், சமையலறையில் மனைவி நீலாம்பிகையிடம் கோப்பியோ, தேநீரோ வாங்கி அருந்தும்போதுதான் அவர் இந்த வீடு மாறவேண்டும், அல்லது மகன் மருமகளை இடம் மாற்றவேண்டும் என்ற பல்லவியை பாடத் தொடங்குவார்.

கொரோனோ காலத்தில்தான்   அவரது மகன் செல்வேந்திரனுக்கும்  சாருலதாவுக்கும்  திருமணம் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களை வைத்துக்கொண்டு மிக…. மிக… மிக… எளிமையாக நடந்தது.

தை மாதம் பிறந்ததும்  கோயில் மண்டபத்தில் நடத்துவதற்காக


ஐநூறுபேருக்கு மேல் திருமண அழைப்பிதழும் அனுப்பி, வெளிநாடுகளிலிருக்கும் உறவுகளும்  வருவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நிறைவெய்திய சூழ்நிலையில் இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் வந்து அனைத்து ஏற்பாட்டையும் சீர்குலைத்துவிட்டதே என்ற கோபம் அவருக்கு மட்டுமல்ல, மணமக்களுக்கும் சம்பந்தி வீட்டாருக்கும்தான் நீடித்தது.

ஐந்து பேருடன்தான் திருமண நிகழ்வுகள் நடத்தலாம் என்ற அரசின் உத்தரவு வந்ததும் இரண்டு குடும்பங்களுக்குமிடையில் தொலைபேசி பேச்சுவார்த்தைகள் முதலில் சுமுகமாகத்  தொடங்கி, படிப்படியாக சர்ச்சையாகி,  நிச்சயிக்கப்பட்ட திருமண பந்தமே குழம்பிவிடலாம் என்ற  ஏமாற்றத்தையும் நோக்கி நகர்ந்தபோதுதான்,  லண்டனிலிருந்து சிங்காரவேலரின் தங்கை அவருக்கு புத்திமதி சொல்லி, பெண்வீட்டாருடனும் சமாதானம் பேசி, தவறவிட்ட திருமண நாளுக்குப்பதிலாக வேறு  நாளை குறித்து பத்துப்பேருடன் அந்தத் திருமணம் நடந்தது.

   கனடாவிலிருக்கும் சிங்காரவேலரின்  மூத்த மகள்,  தம்பியின்  திருமணத்திற்காக  அவுஸ்திரேலியா வந்து கட்டுவதற்கு கனடாவில் வாங்கிய  தங்கச் சரிகை போட்ட காஞ்சிபுரம் சாரியையும் மணமக்களுக்கு  பரிசளிக்க வாங்கிய மோதிரங்களையும் ஸ்கைப்பில் அழாக்குறையாக காண்பித்தாள்.

லண்டனிலிருக்கும்  அவரது தங்கையும்  “ இந்தா  பாருங்க அண்ணா, நானும் அவரும் வருவதற்கு எடுத்த  ஃபிளைட் டிக்கட்  ஐடினரி.  இனி என்ன செய்வது..? எப்போது இதற்கு ரிஃபண்ட் தருவாங்களோ தெரியாது  “ என்று  புலம்பினாள்.

திருமணத்தை நடத்துவதா இல்லையா என்ற பட்டிமன்றம் சில நாட்கள் ஸ்கைப் ஊடாக நடந்தது.

 “எந்த நேரத்தில்,  இந்தக்கல்யாணத்திற்கு நாள் பார்த்தோமோ ? ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறது  “ என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்த சிங்காரவேலர்,  திருமணத்திற்காக கோயில் மண்டபத்திற்கு செலுத்திய வாடகைப்பணத்தினை மீளப்பெறுவதற்கும் ஒரு போராட்டம் நடத்தவேண்டியிருந்தது.

பேசிச்செய்த திருமணம்.  கலியாண மண்டபம், திருமண அழைப்பிதழ், ஒளிப்படம், வீடியோ, மாலைகள், அய்யர் கட்டணம் அனைத்தும் தங்கள் பொறுப்பு எனச்சொல்லி, அனைத்திற்கும் முற்பணம் கொடுத்தவர் சிங்காரவேலர்.

மணமகள் வீட்டார், திருமண உபசரிப்பு,  விருந்து, மணமக்களுக்கான கலியாண கார், அவர்கள் இரண்டு நாட்கள் தங்கும் உல்லாச விடுதிக்கட்டணம் அனைத்தையும் தங்கள் பொறுப்பில் எடுத்தனர். ஒரு சாப்பாட்டுக்கு தலைக்கு எழுபத்தியைந்து டொலர் என்று அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தவர் மணமகளின் தகப்பன்.

திருமணத்திற்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை மணமக்களுக்கு கொடுப்பது என்றும், கிடைக்கும் அன்பளிப்பு பணம், காசோலைகளை இருவீட்டாரும் பகிர்ந்துகொள்வது என்றும்தான் முடிவாகியிருந்தது.

கொரோனோ வந்து அனைத்திலும் மண் அள்ளிப்போட்டுவிட்டது.

நாட்கள் நகர்ந்து வாரங்களாகி, மாதங்களாகியதுதான் மிச்சம். கொரோனாவால் மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் நடத்திய பட்டிமன்றங்களும் தொடர்ந்ததுதான் மிச்சம்.

கொரோனோ அனைத்தையும் வேடிக்கைபார்த்துக்கொண்டு  இனம், மதம், மொழி, தேசங்கள் கடந்து பரவியது.

தொற்றாளர் எண்ணிக்கை பிரகாரம்தான் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும், மாநில எல்லைகளை திறக்கமுடியும் என்ற அறிவித்தலை பார்த்து அந்த திருமணத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்து வருவதற்கு விமானத்தில் ஆசனங்கள் பதிவுசெய்தவர்களும் தாம்  செலுத்திய பணம் எப்போது மீளக்கிடைக்கும் என காத்திருந்தனர்.

இரண்டுவீட்டாரும் தொலைபேசி ஊடாக வாக்குவாதங்களில்  ஈடுபட்டு ஒரு முடிவுக்கும் வராமல் காலத்தை  கடத்துவதைப்பார்த்த சிங்காரவேலரின் மகன் செல்வேந்திரனும் மணமகள் சாருலதாவும்தான் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

 “ அப்பா, வாழப்போவது நாங்கள்.  இரண்டு பகுதியும் இப்படி எத்தனை நாட்களுக்கு சண்டை பிடித்துக்கொண்டிருக்கப்போறீங்கள்.  உங்கட ஆட்களுக்கு தாங்கள் வாங்கிய சாரிகளை கட்டமுடியாமல் போய்விட்டதே என்ற கவலை, அவையளின்ட ஆட்களுக்கு, இந்த சாட்டில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு சுற்று சுற்ற  முடியாமல் போய்விட்டதே என்ற  கவலை மட்டுமில்லை,  அப்படியே இங்கேயே தரித்து நின்று  இங்கு புகலிடம் கோரமுடியாமல் போய்விட்டதே என்ற கவலை. ஆனால், எனக்கும் சாருவுக்கும்… எவ்வளவு  ஏமாற்றம் தெரியுமா..?  நாங்கள் ரெண்டுபேரும் லீவு எடுத்தனாங்கள்.  கலியாணத்துக்குப்பிறகு மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து எல்லாம் போக இருந்தனாங்கள்.    எங்கள் இரண்டுபேருக்கும் எவ்வளவு லொஸ்ட் தெரியுமா..?  “ என்று மகன் சொல்லிக்கொண்டிருந்தபோது,  “ அது யார் சாரு… யார் அது  “  என்று கேட்டார் சிங்காரவேலர்.

 “ அது அப்பா, சாருலதாவைத்தான்…  உங்கட  வருங்கால மருமகளைத்தான் நான் சாரு என்று கூப்பிடுறன்  “ என்றான் மகன்.

அதனைக்கேட்ட அவர் தனது மனதிற்குள்  ‘ ஓகோ… சாரு… சாரைப்பாம்பாக மாறாமலிருந்தால் சரி   ‘  என்று சொல்லிக்கொண்டார்.

அவரது மனைவி,  தனது மகன் வரப்போகும் மனைவியை  “சாரு”  எனச்செல்லமாக அழைப்பதுபோன்று தனது கணவன், தன்னை திருமணம் முடித்தகாலத்தில் தனது பெயர் நீலாம்பிகையை செல்லமாக  “ நீலு..  நீலு…. “ என்று அழைத்ததுதான்  நினைவுக்கு வந்தது. 

ஒருவாறு இரண்டு குடும்பமும் ஒரு தீர்மானத்திற்கு வந்து,  கட்டுப்பாடு ஓரளவு தளர்த்தப்பட்ட வேளையில்  மணமகளின் வீட்டிலேயே மிகவும் நெருங்கிய இரண்டு குடும்பங்களையும் வரவழைத்து நடத்திவிட்டார்கள்.

 வருபவர்கள் தத்தம் கார்களை தூரத்தில் நிறுத்திவிட்டுவரவேண்டும் என்றும்,  திருமணத்திற்கு வருவதுபோன்று ஆடை அலங்காரங்களுடன் வராமல் வெகுசாதாரணமாக  உடை உடுத்திவந்து,  திருமணத்திற்கு அணியும் உடையை வீட்டுக்குள்ளே வந்தபின்னர் அணிந்து  அலங்காரம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுடன் பத்துப்பேருடன் முடிந்த திருமணம்தான் அது.

அதிகாலை ஐந்துமணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்ந்தவேளையில் மணமகளை அலங்கரிக்க வந்த பெண் தனது வேலையை முடித்து,  அதற்கான பணத்தையும் சுளையாக வாங்கிச்சென்றுவிட்டாள்.

அயல்வீடுகளுக்கும் திருமண வைபவம் ஒன்று நடக்கும் அறிகுறியே தெரியாமல் நடந்த வைபவம். சிங்காரவேலர்தான் தாலி கட்டும்போது தனது கைத்தொலைபேசியில் கெட்டிமேளத்தையும் தேடி எடுத்து ஒலிபரப்புச்செய்தார்.

மணமகளின் வீட்டு யன்னல் கதவு திரைச்சேலைகளும் பக்குவமாக மூடப்பட்டு, அங்கிருந்து எந்தவோசையும் வெளியே கேளாதவாறு நடந்த திருமணம்.

வரவிருந்த வெளிமாநில  - வெளிநாட்டு  உறவுகள், இணையவழி காணொளியில் கண்டுகளித்த திருமணம்.

நிறைய ஏமாற்றங்கள்,  ஏக்கங்கள், நட்டங்கள், பெருமூச்சுக்கள்  அனைத்தையும் கடந்து ஒப்பேறிய திருமணம்.

 “ உங்களுக்கு என்னப்பா பிரச்சினை….?   ஏன் வீடு மாறவேண்டும் என்று நச்சரிக்கிறீங்க… உங்களுக்கும் கொரோனோ வைரஸ் வந்து ஏதும் செய்துபோட்டுதா….? சொல்லுங்க… என்ன புரப்பளம்…?  “ நீலாம்பிகை தனக்கும் கோப்பி கலந்துகொண்டு வந்து சாப்பிடும் மேசைக்கு அருகில் ஆசனத்தை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

 “ இந்த வீட்டில் இப்ப பாட்டுக்கு பாட்டு நடக்குது.  அவ என்னடான்டா   ‘ இஞ்சி இடுப்பழகா  ‘  என்று பாடுறா.. உவன் உம்மடை செல்ல மகன்  ‘ மஞ்சள்  முகமே வருக..  ‘ என்றும்                  ‘ தேன் சிந்துதே வானம்  ‘  என்றும் பாடுறான்.  உமக்கொன்றும் கேட்பதில்லையோ… நீர்தான் குறட்டைவிட்டு தூங்கிறவராச்சே..  “  என்றார் சிங்காரவேலர்.

  “  என்னப்பா சொல்றீங்க… எனக்கு ஒன்றும் தெரியாது, அதுகள் சின்னஞ்சிறுசுகள். புதுசாக்கட்டிய பிள்ளைகள் என்ன பேசுதுகள், என்ன பாடுதுகள் என்று ஒற்றுக்கேட்கிறீங்களா… சீ.. வெட்கம் இல்லை.  “

 “ வெட்கத்தை பற்றி நீர் பேசுறீரோ….?  ‘ சிங்காரவேலர்  தன்ர மகனின்ட கலியாணத்தை பெரிய எடுப்பில தொடங்கி, கடைசியில், ஊர்பேர் தெரியாமல் நடத்திப்போட்டு கமுக்கமா இருக்கிறார்  ‘ என்று வெளியில் சிலர் என்னை நக்கலாக பேசிக்கொண்டிருக்கிறது உமக்கோ என்ர மகனுக்கோ…. வந்திருக்கும் யாரு… அந்த சாருவுக்கோ தெரியாது.  இங்கே பாட்டுக்கு பாட்டு நடக்கிறது.  உவன்ர கலியாண ஏற்பாட்டினால எனக்கு எவ்வளவு  பெரிய நட்டம் தெரியுமே…?   “

“  மெதுவா பேசுங்க அப்பா… என்ன செய்யிறது…?   யாரையும் குற்றம் சொல்லமுடியாது.  கொரோனா சொல்லிக்கொண்டு வரவில்லை. ஆனால், எங்கட மருமகள் சொல்லிக்கொண்டு வந்த பிள்ளை. எல்லாம் பேசிச்செய்த கலியாணம். உங்களுக்கு அந்தச்சின்னஞ்சிறுசுகளின்ட சரசமும் பாட்டுக்குப்பாட்டும் பிரச்சினையில்லையப்பா…   கலியாண ஏற்பாட்டினால் வந்த நட்டம் தான் பிரச்சினை.  நாங்கள் எல்லாம் உயிர் தப்பியிருக்கிறதே  பெரிய விசயம். அதனை நினைத்து ஆறுதல்படுங்க.  வந்திருக்கும் மருமகள் கெட்டிக்காரி. புத்திசாலி.  அவள் ஏன் இஞ்சி இடுப்பழகா என்று பாடுறாள் தெரியுமா..? இந்த கொரோனோ காலத்தில் இஞ்சி அவசியம் தேவை.  அதுக்கு என்ர அதிபுத்திசாலி மகன் ,  மஞ்சள் முகமே வருக என்று ஏன் பாடுறான் தெரியுமா..?  மஞ்சளும் இந்தக்காலத்தில் அவசியம் தேவை.  இப்ப புரியுதா அந்த பாட்டுக்குப்பாட்டின் அர்த்தம்.  “  என்றாள் நீலாம்பிகை.

 “ அது சரி… அவன் ‘ தேன் சிந்துதே வானம்   ‘ என்று பாடினானே… அதுக்கு என்ன அர்த்தமாம்…?  “ என விளக்கம் கேட்டார் சிங்கார வேலர்.

நீலாம்பிகை சிரித்தாள்.

 “ என்னப்பா புரியவில்லையா..?  பால் கலக்காத கறுப்புத்தேனீரில் எலுமிச்சைச்சாறும் தேன் ஒரு தேக்கரண்டியும் சேர்த்து தினமும் குடித்துவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வருமாம்.  நீங்கள் எங்கே…. இன்னமும் ஈழ அரசியல்பற்றியும் அவுங்கள் முழுக்குடும்பத்தையும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு எடுத்து வந்த  இருபதாவது  திருத்தம் பற்றியும்தானே உங்கட  சிநேகிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறீங்க…. அதுகளை விட்டுட்டு, வாங்கோ, நானும் நீங்களும் பாட்டுக்கு பாட்டு பாடுவோம்.  உங்களுக்கு நினைவிருக்கா, நான் உங்களை திருமணம் முடித்த புதிதில் கொஞ்சக்காலம்  ‘ சிங்காரவேலனே தேவா  ‘ என்ற ஜானகியின் பாட்டை பாடிக்கொண்டிருந்தனான்.   “

சிங்காரவேலர் சிரித்தார். நீலாம்பிகையின் அன்றைய காலைக்கோப்பி அவருக்கு சுவையாக இருந்தது.

---0---

( நன்றி:  கிழக்கிலங்கை  அரங்கம் இதழ் )

letchumananm@gmail.com 


No comments: