உலகச் செய்திகள்

தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவு

பாதுகாப்பு செயலாளரை பதவி நீக்கினார் டிரம்ப்

கொவிட் –19: ‘பைசர்’ மருந்தில் 90 வீதம் நோய் தடுப்பு ஆற்றல்

டிரம்பின் மோசடிக் குற்றச்சாட்டை தேர்தல் துறையினர் நிராகரிப்பு

பைடனுக்கு ‘உளவுக்குறிப்பு’ வழங்க ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் ஆதரவு

லிபிய கடலில் படகு மூழ்கி 74 பேர் பலி

மியன்மார் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி


தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறுப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச வழக்குத் தொடுநர்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி அளித்திருப்பதாக நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான–நம்பகமான கூற்றுகள் தொடர்பில் மாத்திரமே விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விசாரணைகள் பொதுவாக தனிப்பட்ட மாநிலங்கள் அளவில் இருந்தபோதும் அது வலுவான மற்றும் விரைவான தீர்ப்பாக இருக்காது என்று பார் சுட்டிக்காட்டினார்.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக கணிக்கப்பட்டிருப்பதை பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தல் மோசடி இடம்பெற்றதாக அதற்கு அவர் ஆதாரம் இன்றி குற்றம்சாட்டி வருகிறார்.

பைடனின் வெற்றியை உறுதி செய்து பென்சில்வேனிய மாநிலத்தால் வழங்கப்படும் சான்றை தடுக்கும் அவசர தடை உத்தரவு ஒன்றுக்கு டிரம்ப் பிரசார குழு முயன்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் 270 தேர்தல் தொகுதிகளை ஜனநாயகக் கட்சியின் பைடன் கைப்பற்றியதாக கணிப்புகள் மூலம் கடந்த சனிக்கிழமை உறுதியானது.

இதற்கு எதிராக சட்ட நவடிக்கை எடுப்பதாக டிரம்பின் பேச்சாளர் கூறி இருந்தார். இந்த தேர்தல் இன்னும் முடியவில்லை என்று வெள்ளை மாளிகையில் வைத்து அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்ட நடவடிக்கைகளுக்காக டிரம்ப் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே அவரின் நோக்கமாகும். இது முதலில் அந்தந்த மாநிலங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.

ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும், ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.   நன்றி தினகரன் 

 பாதுகாப்பு செயலாளரை பதவி நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவர் கிறிஸ் டோபர் மில்லரைப் புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமித்திருப்பதாக டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எஸ்பருக்கும் ஜனாதிபதி டிரம்ப்பிற்கும் இடையிலான உறவு கடந்த ஜூன் மாதம் கசப்படைந்தது. வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்த ஆர்ப்பாட்ட க்காரர்களைக் கலையச் செய்தது குறித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜனாதிபதியின் அண்மைய முடிவுகளை செனட் பெரும்பான்மைத் தலைவர் மிச் மெக்கொன்னல் ஆதரித்துள்ளார்.

தேர்தல் குளறுபடிகள் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு என்றார் அவர்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தாமும் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் மெக்கொன்னல்.    நன்றி தினகரன் 


கொவிட் –19: ‘பைசர்’ மருந்தில் 90 வீதம் நோய் தடுப்பு ஆற்றல்

பைசர் மருந்தாக்க நிறுவனம், அதன் தடுப்பு மருந்து கொவிட் –19 நோயை 90 வீதம் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளது. பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த அந்தத் தடுப்பு மருந்தை அது சோதித்து வருகிறது.

அந்தத் தடுப்பு மருந்தை நெருக்கடி நேரத்தில் பயன்படுத்துவதற்கு அமெரிக்கக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியைக் கோரவும் திட்டமிடப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 44,000 பேரிடம் நடத்தப்படும் சோதனையில் 94 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களைப் பற்றிய மேல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்கு முன்பாகத் தடுப்பு மருந்து ஏதும் அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் முதற்கட்டமாகக் குறைவான எண்ணிக்கையில்தான் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.     நன்றி தினகரன் 

டிரம்பின் மோசடிக் குற்றச்சாட்டை தேர்தல் துறையினர் நிராகரிப்பு

அமெரிக்காவில் மத்திய, மாநில அளவிலான மூத்த தேர்தல் துறை அதிகாரிகள் வாக்கு நிலையங்களில் செலுத்திய வாக்குகள் தொலையவில்லை என்றும் மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்புக் கட்டமைப்பிலும் கோளாறு ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தேர்தல் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அந்த அதிகாரிகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் எதுவும் நிகழவில்லை என்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு சார்பாக விழுந்த 2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டியிருந்தார். இந்த தேர்தலில் ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்குத் தகுதி பெற தேவைப்படும் 270 தேர்தல் சபை வாக்குகளை விட அதிகமான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முன்னிலை நிலவரம் கூறுகிறது. இருப்பினும் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளி வரவில்லை.

இம்மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தல், அமெரிக்க வரலாற்றிலேயே அதிகப் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட தேர்தல் என்ற அதிகாரிகள், மோசடி நிகழ்ந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினர்.

இதன்படி தேர்தல் வாக்குப்பதிவு மோசடி தொடர்பான ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாட்டின் உள்துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பான சி.ஐ.எஸ்.ஏ குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுதான் தேர்தலில் வாக்குப்பதிவு பாதுகாப்பான வசதிகளுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும். இந்தக் குழுவின் அதிகாரிகள், "எங்களுக்கு கிடைத்த தகவலின்படி வாக்குப்பதிவில் மோசடி, முறைகேடு நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

தேர்தல் பாதுகாப்பு மற்றும் நேர்மை மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்களும் அப்படியே கருத வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக சந்தேகம் எழுந்தால் நேரடியாக தேர்தல் அதிகாரிகளிடம் வந்து பேசுங்கள். அவர்கள்தான் நம்பகத்துக்குரிய குரல்களாக வாக்குப்பதிவு நடைமுறைக்கு சான்று கூற அதிகாரம் பெற்றவர்கள்" என்று தெரிவித்தனர்.

முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக வெளிப்படையாக ஊடகங்களிடம் பேசியதற்காக டிரம்ப் நிர்வாகத்தால் தான் பணியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்று சி.ஐ.எஸ்.ஏ குழுவின் தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் கிரெப்ஸ் கூறியதாக ரோய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

கடந்த வியாழக்கிழமை கிறிஸ்டோபர் கிரெப்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தேர்தல் சட்ட வல்லுநர் பதிவிட்ட கருத்தை ரீ-ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில், "தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை யார் வெளியிட்டாலும் அதை ரீ-ட்வீட் செய்யாதீர்கள். அது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும்" என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, சி.ஐ.எஸ்.ஏ குழுவின் உதவிப் பணிப்பாளர் பிரையன் வேர் தனது பதவியில் இருந்து விலகினார். அவரை வெள்ளை மாளிகை அதிகாரிகள் பதவி விலக கேட்டுக் கொண்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி முகாமை தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறையை மோசடி என கூறி வரும் டொனால்ட் டிரம்ப் கருத்தை ஆதரிக்கும் குடியரசு கட்சியினர் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை சிறுமைப்படுத்தி வருவதாக கவலை தெரிவித்தார்.    நன்றி தினகரன் பைடனுக்கு ‘உளவுக்குறிப்பு’ வழங்க ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் ஆதரவு

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாவிருக்கும் ஜோ பைடனுக்கு, உளவுத்தகவல் பகிர்வு தொடர்பான குறிப்பு அனுப்பும் வழக்கத்துக்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவு எம்.பிக்கள் ஆதரவாக உள்ளனர்.

தேர்தல் முடிவில் வெற்றியாளராக அறியப்பட்டவருக்கு உளவுத்தகவல் குறிப்புகள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை நடந்த தேர்தலில் அசாதாரணமான வகையில் தேர்தல் முடிவுகளை ஏற்க தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதியாக தகுதி பெற வேண்டிய 270க்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பெற்றுள்ளதால் அவரே அடுத்த ஜனாதிபதியாக அறியப்படுகிறார்.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ நடைமுறை டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகும். அதற்கு முன்னோட்டமாக, அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் காணப்படுபவருக்கு ரகசிய சேவை பாதுகாப்பு, அவரது வசிப்பிடம், உறவினர்களுக்கான பாதுகாப்பு, ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்வரை அவரது அலுவல் வசதிகள் போன்றவற்றை அமெரிக்க அரசே ஏற்கும்.

இந்த நடைமுறைகளின் தொடர்ச்சியாக புதிய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான உட்குறிப்பை உளவுத்துறை தினமும் அனுப்பி வைக்கும். இதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த நடவடிக்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் ஆட்சேபித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான லிண்ட்ஸே கிரஹாம், வழக்கமான நடைமுறைப்படி ஜனாதிபதிக்கான உள்குறிப்பை பைடனுக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.    நன்றி தினகரன் லிபிய கடலில் படகு மூழ்கி 74 பேர் பலி

லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் அதில் பயணித்த 74 அகதிகள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

ஐரோப்பா செல்ல 121 பயணிகள் படகில் சென்ற போது கடலில் எழுந்த பேரலைகளால் சுமை தாளாமல் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்தப் படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 74 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இரவு பகல் என மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர் . புதிதாக பிறந்த குழந்தை உட்பட இதுவரை 47 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலமாக கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மத்தியதரைக் கடல் பகுதியில் இது போன்ற எட்டு படகு விபத்துகள் நேரிட்டன.   நன்றி தினகரன் மியன்மார் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

மியன்மார் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூக்கியின் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அடுத்த அரசை அமைப்பதற்கு பொதுமான பெரும்பான்மையை பெற்றிருப்பதாக தேர்தல் முடிவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த அரசை அமைப்பதற்கு பாராளுன்றத்தில் 322 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஆளும் கட்சி 346 ஆசனங்களை வென்றுள்ளது.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் ஆரம்பக் கட்ட முடிவுகளை வைத்து ஆளும் கட்சி முன்கூட்டியே வெற்றியை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஒருசில நாடுகள் ஆங் சான் சூக்கியின் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி உள்நாட்டில் செல்வாக்கு செலுத்தும் கட்சியாக இருந்தபோதும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் காரணமாக அந்தன் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.    நன்றி தினகரன் 

No comments: