இன்றமிழே இல்லத்திற் பேசுவோம் என்று இனியதீபா வளியன்று சபதம் ஏற்பீர்! !

 


…………………………….. பல்வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதிஅறத்தையெலாம் அழித்துவிட்டு அகங்கா ரத்தால்  

        அளப்பரிய அழிவுசெய்த நரகா சுரனை       

மறக்கருணை  யால்மாலோன்   ஆட்கொண்ட வேளை   

        மனந்திருந்திப் பணிவோடு இருகை கூப்பி                  

இறக்கின்ற தருணத்திற் கேட்ட வரத்தை                           

        இன்றுவரை தீபாவளி யெனவே நாமும்                    

சிறப்பாகக் கொண்டாடு  கின்ற வேளை                 

        சிவனருளால் மனத்தகத்தே ஒளியையேற் றிடுவீர்!                       

          

புத்தம்புது பட்டாடை பொலிவுற உடுப்பீர்!            

        போற்றியென்றும் வணங்குமுங்கள் தெய்வம் தொழுவீர்!  

பத்தியோடு  மறையென்னும் தமிழ்மந் திரத்தைப்    

        பக்குவமாய்க் கோவில்களில் ஓதி வருவீர் !                

எத்திக்கும் மனதைநீவிர் அலைய விடாதீர்!              

        இயன்றமட்டும் இன்சொல்லை அன்புடன்  பேசிச்           

சித்தத்தில் சிவனுருவை நிறுத்தி நித்தம்                           

        சிவத்தியானம் சிவதொண்டு  இயற்றி உய்வீர்!                                    


பொன்னான உறவுகளை வாழ்த்தி இன்பம்     

        பொங்கிடவே ஒற்றுமையை வளர்த்து நிற்பீர்  

முன்னாளில் இருந்தேயெம் மூத்தோர் கண்போல்  

        முறையாக ஓம்பிவந்த விழுமி யங்கள்                     

இந்நாளில் மங்காது காத்து வாழ்ந்து              

        இனிவருமெம் சந்ததிக்குங் கொடுப்போம் என்றும்           

இன்றமிழே இல்லத்திற் பேசுவோம் என்றும்                        

        இனியதீபா வளியன்று சபதம் ஏற்பீர்
No comments: