அந்தமில் சுகமும் பெற்று ஆனந்தம் காண்பார் வாழ்வில் !

[ கந்தசஷ்டியை முன்னிட்டு கந்தப்பெருமான் அடியார்களுக்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



கந்தனை நினைப்பார் வாழ்வில்
   வந்திடு வினைக ளெள்ளாம்
வெந்துமே சாம்ப லாகும் 
   வேதனை அகன்றே போகும்
சந்ததம் கந்தன் நாமம்
   சாற்றியே நிற்பா ரெல்லாம் 
அந்தமில் சுகமும் பெற்று
   ஆனந்தம் காண்பார் வாழ்வில்   !


சஷ்டியை நோற்று நின்றால்
   சங்கடம் அகன்றே ஓடும் 
துஷ்டரும் பக்கம் வாரார்
    துன்மதி தொலைந்தே போகும்
இஷ்டங்கள் இணைந்தே வாழ்வில்
    இல்லமும் சிறந்தே ஓங்கும்
நிஷ்டையும் அமைந்தே நிற்கும்
    நிம்மதி நிறையும் வாழ்வில்   !


ஆணவம் ஓங்கும் வேளை
   அகமதில்  இருளே சூழும் 
அசுரராய் ஆகி வாழ்வில் 
    அறமதை அழிப்பார் நாளும் 
அரனது மைந்தன் கந்தன்
    நினைவதை அகத்திற் கொண்டால்
அசுரரும் அமரர் ஆவர்
    ஆணவம் அழிந்தே போகும்   ! 


நினைப்பவர் நெஞ்சில் கந்தன்
   நீக்கற நிறைந்தே நிற்பான்
அடைக்கலம் என்றால் வேலன்
     அறுமுகம் அருளைக் காட்டும்
திருப்புகழ் கேட்கக் கந்தன்
     திருப்பினான் வாழ்வை என்னும்
கருத்தினை மனத்துள் வைத்தால்
    கந்தனே தருவான் காட்சி   ! 


கங்கையைச் சடையில் வைத்தார்
   மங்கையைப் பாகம் வைத்தார்
திங்களைச் சூடிக் கொண்டார் 
    திரு விளையாடல் செய்தார் 
தந்தையாய் அமைந்த போதும்
     தலைமையாய் இருந்த போதும்
எந்தையின் ஆசான் ஆகி
     இருந்ததும்  கநதன் அன்றோ  ! 


கலியுகம் போற்றும் தெய்வம்
   காலனை விரட்டும் தெய்வம்
நிலையினை இழக்கா வண்ணம்
    நிம்மதி நல்கும் தெய்வம்
ஒருதரம் நினைத்தால் போதும்
    உயர்வினை அளிக்கும் தெய்வம்
அருவுரு ஆன தெய்வம் 

      அகிலதில் கந்தன் அன்றோ  !  


No comments: