மண்மகிழ மனம் மகிழ மலர்ந்து வா தீபாவளி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .. அவுஸ்திரேலியா    

  

               

                  வண்ண வண்ண மத்தாப்பு

                        வகை வகையாய் பட்டாசு

                    எண்ண வெண்ண நாவூறும்

                          இனிப்பு நிறை பட்சணங்கள்

                    கண் எதிரே உறவினர்கள்

                          கல கலப்பைக் கொண்டுவர

                    மண்மகிழ மனம் மகிழ

                          மலர்ந்து வா தீபாவளி  !

 

                  பெரு நோயின் தாக்கத்தால்

                        பெருந் தாக்கம் விளைந்திருக்கு

                  தெரு எல்லாம் களையிழந்து

                          உரு உடைந்து நிற்கிறது

                  வருங் காலம் தனையெண்ணி

                          மக்கள் மனம் தவிக்கிறது

                  வாடும் நிலை போயகல

                            வந்து நிற்பாய் தீபாளி  !

 

        நாகரிகம் பெருகி நின்று

            நற் பழக்கம் ஓடியது

        நாநிலத்தில் வாழ்க்கை முறை

            நலன் இழந்து வாடியது

        தீதெழுந்து சிறுமை உள்ளே

            சிக்கும் நிலை ஆகியது

        தீதகன்று ஒளி பரவ

            தீபாவளி வந்து நிற்பாய் !

 

        புத்தாடை மனம் இருக்கு

           புதுத் தெம்பு வரவேண்டும்

        சொத்தான சுற்ற மெலாம்

            சுகங்காணும் நிலை வேண்டும்

        நித்தியமாய் வாழ் நாளில்

            நிம்மதியும் வர வேண்டும்

        நீள் சுகத்தை சுமந்தபடி

             நீ வருவாய் தீபாவளி  !  

 

       மனக் கலக்கம் போக்குதற்கு

          வழி கொண்டு வந்துவிடு

       மாசகன்று மருள் அகல

          வரங் கொண்டு வந்துவிடு

       மனை எல்லாம் மங்கலங்கள்

          மீண்டும் வர வந்துவிடு

       மனமகிழ விருந்து தர

           வந்து நிற்பாய் தீபாவளி  !

              

    உள முடைந்து நிற்பாரை

         உயிர்ப் பூண்ட வந்துவிடு 

      வளம் இழந்து நிற்பாரை

         நிலை உயர்த்த வந்துவிடு

      நிலம் எங்கும் நிம்மதியே

          நிலவி விட வந்துவிடு

      நலன் மிக்க செய்தியுடன்

          வந்து நிற்பாய் தீபாவளி  ! 

 

 

இறை எண்ணம் எழுச்சிபெற

  ஏந்தி வா நற்கருத்தை

கறை எண்ணம் கழன்றுவிட

   காட்டி வா அக்கறையை

பிறை சடையான் அருளதனைப்

   பெற்று வா தீபாவளி

நிறை குடத்தை வைத்துமே

   நின் வரவைக் காத்திருப்போம்  ! 


No comments: