அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 40 – ஒத்து மற்றும் துத்தி – சரவண பிரபு ராமமூர்த்தி

 ஒத்து – ஊதுகருவி

நீ என்ன அவனுக்கு ஒத்து ஊதுறியா? என்று நாம் பலரும் பேசக் கேட்டு


இருப்போம். ஒத்து ஊதுதலும் ஒரு கலை தான். சென்ற நூற்றாண்டின் பாதி வரை உயிர்ப்புடன் இருந்தது ஒத்து இசைக்கருவி. தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நாம் ஒத்தைக் காணலாம்.

 நாதசுரத்தின் துணைக்கருவி ஒத்து. நாசுர இசைக்கு ஆதார சுருதி வழங்கி வந்த கருவி ‘ஒத்து’. நாதசுரம் போலவே இருக்கும். ஆச்சா மரத்தில் செய்யப்பட்டது. ஒத்தில் ஒரு துளை தான் இருக்கும்.  இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்புவார். தற்காலத்தில் நாசுரத்திற்கு சுதிப் பெட்டி வைத்திருக்கிறார்கள்.  அதற்கு முன்பு ஒத்து தான் வாசிக்கப்பட்டது. ஆரம்பம் முதல் முடியும் வரை  ம்ம்ம்ம்ம்ம்எனும்  ஒரே விதமான ஒலி தான் வரும். அதனால் இதை ஊமைக்குழல் என்றும்


சொல்வார்கள். அவ்வளவு சுலபமான கலையல்ல ஒத்து ஊதுவது. குனிந்த தலை நிமிராமல் அடக்கிய மூச்சு ஒத்தின் வழி மேலும் கீழும் சுழல ஊத வேண்டும். வாய் பகுதியில் துணியால் மூடியும் இசைப்பார்கள்.  சிரமமான இந்த வேலையை இலகுவாக்கியது சுதி பெட்டி. பின்பு அதுவும் அழிந்து இப்பொழுது மின்னணு சுதி பெட்டி வந்துவிட்டது. மெல்பர்ன் அருள்மிகு வக்ரதுண்ட பிள்ளையார் கோவிலில் நாதசுர கலைஞர் முனைவர் ஸ்ரீனிவாசன் கலியமூர்த்தி அவர்களின் குடும்பத்தார் போன்ற சிலர் இந்த பழைய ஒத்து இசைக்கருவியைப் பாதுகாத்து ஆயுத பூசை நாட்களில் அவர்கள் முன்னோர் இசைத்த நாதசுரம்/ஒத்து போன்ற இசைக்கருவிகளுக்குப் பூசைகள் செய்து வருகிறார்கள். திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் பகிர்ந்த அரிய ஒத்து புகைப்படம் நீங்கள் இங்கே காணலாம்.

 

தமிழ்நாட்டில் கொங்கு பகுதிகளில் மட்டும் இன்னும் உயிர் மூச்சை விட்டுக்கொண்டு இருக்கின்றது ஒத்து.  இரண்டரை கட்டை சுதி என்று சொல்லக்கூடிய  சின்ன நாயனம் இசைக்கருவி  கொட்டுத்தவுல், பறை, உருமி, பேரிகை போன்ற இசைக்கருவிகளுடன்  வாசிக்கப்பட்டு வருகிறது . இந்த சின்ன நாயனத்திற்கு ஒத்து ஊதும் வழக்கம் தற்பொழுதும் இப்பகுதிகளில் தொடர்கிறது. அங்கேயும் ஆட்குறைப்பு கலாசாரம் வரும் வரை ஒத்து வாழும் என்று நம்புவோம். கொங்கு பகுதி நாட்டார் தெய்வ கோவில் விழாக்கள், திருமணம் மற்றும் இறப்பு வீடுகளில் ஒத்து இசைக்கப்படுவதை நாம் காணலாம். இவர்களின்றி கொண்டாரெட்டி எனப்படும் பழங்குடி மக்களும் ஒத்து இசைக்கிறார்கள். இதுவும் அவர்களின் சிறிய நாதசுரம் போன்ற இசைக்கருவிக்கு சுருதிக் கருவி தான்.

 

வழக்கம் போல் தமிழர்கள் தொலைத்த இடக்கை, துடி போன்ற பல இசைக்கருவிகளை நாம் கேரளத்தில் தான் தேட வேண்டும். அவ்வைகையில் ஒத்து கேரளத்தில் சில பழமையான கோவில்களில் இன்றும் புழக்கத்தில்


உள்ளது. கேரளம் அல்லாமல் துளு நாடு என்று அழைக்கப்படும் தென் கருநாடகத்திலும் நாதசுரத்துடன் ஒத்து இசைக்கும் வழக்கம் உள்ளது. கொல்லூர் மூகாம்பிகை கோவில், உடுப்பி கண்ணன் கோவில் போன்ற துளுநாட்டுக் கோவில்களில் ஒத்து இன்றும் புழக்கத்தில் உள்ளது.

 

காணொளி:

https://youtu.be/FmBNuprXAjU

https://www.youtube.com/watch?v=MIp2g7mqtKs

https://youtu.be/7K9wqiiUjq8

https://www.youtube.com/watch?v=8zH0A0Tqu_c

https://www.youtube.com/watch?v=GB15M17lXyw

 

 

துத்தி – ஊதுகருவி

துத்தி தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் புழங்கி வந்த


ஒரு இசைக்கருவி. சுருதி உபாங்கம் என்றும் அழைக்கப்படும் துத்தி.  Bagpipe என்கிற அயல்நாட்டுக் கருவியை ஒத்து இருக்கும். துத்தியும் ஒரு சுருதி தரும் கருவிதான். இக்கருவியில் ஆச்சா மரத்தில் செய்த ஒரு நீண்ட குழாய் இருக்கும். குழாயின் நுனியில் தோல் பை பொருத்தப்படும். இன்னொரு சிறிய குழாயும் இருக்கும். காற்று புகா வண்ணம் துளைகள் மெழுகினால் அடைக்கப்படும். முந்தைய நூற்றாண்டில் சின்ன மேளம் அதாவது தேவரடியார் குழுவின் ஒரு பகுதியாக வாசிக்கப்பட்டது துத்தி. துத்தி கலைஞரை துத்திக்காரர் என்று அழைத்தனர். கடைசியாக தஞ்சை பெருவுடையார் கோவிலில் புழங்கி வந்தது. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பொழுது இதுவும் அழிந்துவிட்து.

 


காணொளி:

https://www.britishpathe.com/video/maharanee-of-baroda/query/maharanee

 

-சரவண பிரபு ராமமூர்த்தி(https://saravanaprabudr.blogspot.com/)

 நன்றி:

  1. முனைவர் ஸ்ரீனிவாசன் கலியமூர்த்தி அவர்கள், ஆஸ்தான வித்வான், அருள்மிகு வக்ரதுண்ட பிள்ளையார்

    கோவி
    ல், மெல்பர்ன், ஆஸ்த்ரேலியா
  2. பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்
  3. திரு காளியப்பன் மாறன் அவர்கள்பெருஞ்சலங்கையாட்ட  பயிற்றுனர் நெருப்பெரிச்சல் , திருப்பூர்

 

No comments: