மத்திய அரசுடன் போர் தொடுக்கும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியம்

 மத்திய அரசுடன் போர் தொடுக்கும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியம்: எரித்ரியா மீதும் ராக்கெட் வீச்சு

An Ethiopian woman who fled the ongoing fighting in Tigray region holds a child in Hamdait village on the Sudan-Ethiopia border in eastern Kassala state, Sudan November 14, 2020
படக்குறிப்பு,

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண்.

எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்களும், ராஜீயத் துறையினரும் தெரிவிக்கின்றனர்.

இந்த சண்டையில் மாட்டிக்கொண்ட மக்கள் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறி பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக செல்கின்றனர்.


எத்தியோப்பிப் பிரதமர் அபிய் அகமது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது தலைமையிலான மத்திய அரசு பிராந்திய அரசுகளின் உரிமையைப் பறிப்பதாக கூறி எத்தியோப்பியாவின் ஆளும் கட்சியான டீக்ரே பீப்பிள்ஸ் லிபரேஷன் ஃப்ரன்ட் (டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி) போராடி வருகிறது. தாக்குதல் நடத்தப்போவதாக என இந்த கட்சி ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

டைக்ரே சிறப்புப் படையினர்.
படக்குறிப்பு,

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு டீக்ரே மக்கள் விடுதலை முன்ணி மீது போர் அறிவித்தது.

இந்தப் போரில் பக்கத்து நாடான எரித்ரியா எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு உதவி செய்வதாக கருதி அதன் மீதும் தற்போது டீக்ரேவில் இருந்து ராக்கெட்டுகள் வீசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எரித்ரியாவின் தலைநகர் அஸ்மாராவின் புறநகர்ப் பகுதிகளில் பல ராக்கெட்டுகள் விழுந்து வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை.

முன்னதாக எத்தியோப்பியாவின் வேறொரு பிராந்தியத்தின் மீதும் ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் இரண்டு இடங்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மேலும் தாக்குதல் தொடரும் என்றும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்திய அரசுக்குமிடையிலான மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. இந்த சிக்கலால் 17 ஆயிரம் பொது மக்கள் எல்லை தாண்டி சூடானுக்குள் சென்றிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

எரித்ரியாவில் என்ன நடக்கிறது?

சனிக்கிழமை இரவு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக எரித்ரியா தலைநகர் அஸ்மாராவின் மக்கள் தெரிவிக்கின்றனர்.

"எங்களுக்கு கிடைக்கிற தகவல்களின்படி அஸ்மாராவின் விமான நிலையத்துக்கு அருகிலேயே பல ராக்கெட்டுகள் விழுந்துள்ளன" என்று பெயர் வெளியிட விரும்பாத ராஜீயத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை தெரிவிக்கிறது.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை எதிர்கொள்வதற்காக டிரக்கில் செல்லும் எத்தியோப்பியா அரசுப் படையினர்.
படக்குறிப்பு,

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை எதிர்கொள்வதற்காக டிரக்கில் செல்லும் எத்தியோப்பியா அரசுப் படையினர்.

டீக்ரே பிராந்தியத்தில் இருந்து வீசப்பட்ட இரு ராக்கெட்டுகள் அஸ்மாரா விமான நிலையத்தின் மீது விழாமல் குறி தவறி புறநகர்ப் பகுதியில் விழுந்ததாக எரித்ரியாவின் அரைகுறை அரசு ஊடகமான டெஃப்சா ட்வீட் செய்துள்ளது.

எத்தியோப்பியாவின் அரசுப் படைகளுக்கு உதவி செய்வதற்காக எரித்ரியாவின் படையினர் எல்லை தாண்டி வருவதால் அந்த நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்று முன்னதாக டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

எரித்ரிய அரசு தங்களுக்கு அந்தப் போரில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. ஆனால், எல்லை நெடுக நடக்கும் சண்டையும், எரித்ரியாவின் மருத்துவமனைகளில் சிப்பாய்களுக்கு சிகிச்சை நடப்பதும், எரித்ரிய அரசு கூறுவதில் உண்மை இல்லை என்று காட்டுவதாக பிபிசி ஆப்பிரிக்க பிராந்திய ஆசிரியர் வில் ரோஸ் கூறுகிறார்.

அம்ஹாராவில் என்ன நடக்கிறது?

Map

எத்தியோப்பியாவில் டீக்ரேவுக்கு பக்கத்து மாநிலமான அம்ஹாராவின் பஹிர் தார், கோண்டார் பகுதிகளை நோக்கி வெள்ளிக்கிழமை ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக எத்தியோப்பியாவின் அரசு அவசரகால அதிரடிப்படை தெரிவிக்கிறது.

கோண்டார் விமான நிலையத்தின் மீது ஒரு ராக்கெட் விழுந்து அதை பகுதி அளவுக்கு சேதப்படுத்திவிட்டதாகவும், இன்னொரு ராக்கெட் பஹிர் தார் விமான நிலையத்துக்கு வெளியே விழுந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சேதங்கள் பற்றி உடனடியாக தகவல் இல்லை. இரு விமான நிலையங்களுமே சிவில் மற்றும் விமானப்படை விமானங்கள் பயன்படுத்திவந்தவை.

மத்தியப் படைகளோடு சேர்ந்து, அம்ஹாராவின் படைகளும் டீக்ரே மீதான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

எத்தியோப்பிய அரசு சமீபத்தில் நடத்திய விமானத் தாக்குதலுக்கு பதிலடிதான் இந்த ராக்கெட் தாக்குதல்கள் என்கிறது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.

"டீக்ரே மக்கள் மீதான தாக்குதல்கள் நிற்காதவரை எங்கள் தாக்குதல் தீவிரம்தான் அடையும்" என்று டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர் கெடாச்சியூ ரெடா ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

மெனிகிஸ்டு ஹைலீ மரியம் - ஃபிடல் காஸ்ட்ரோ
படக்குறிப்பு,

1991 வரை எத்தியோப்பியாவின் அதிபராக இருந்த மெனிகிஸ்டு ஹைலீ மரியம் (வலது) ஆட்சி அகற்றப்பட்டதற்கு டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி முக்கியக் காரணமாக இருந்தது. மரியத்துடன் உடனிருப்பவர் முன்னாள் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

டீக்ரேவில் விரைவாக ஒரு ராணுவ வெற்றியை அடைந்துவிட முடியும் என்று எத்தியோப்பியப் பிரதமர் நினைத்தார். ஆனால், அவர் தங்கள் எதிரியை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்கிறார் பிபிசியின் பிராந்திய ஆசிரியர்.

டீக்ரே துருப்புகளுக்கு அனுபவம் அதிகம். மலைப்பாங்கான நிலப்பகுதியை அவர்கள் நன்கு அறிவர். இதனால் நீண்ட காலம் நீடிக்கும் பிராந்திய சண்டை நடக்கலாம் என்றும், எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.

பிரச்சனையின் பின்னணி

2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

போர் மூண்டதால் வெளியேறி சூடானுக்கு செல்லும் மக்கள்.
படக்குறிப்பு,

போர் மூண்டதால் வெளியேறி சூடானுக்கு செல்லும் மக்கள்.

கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கல் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதுகிறது.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்கிறது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.


Nantri: https://www.bbc.com/tamil/global

No comments: