படித்தோம் சொல்கின்றோம்: அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை - முருகபூபதி

.


 .முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை
உலக யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட அமோனியா, இன்று விவசாய நிலங்களின் உயிரைக்குடிக்கும் அவலம்!!
                          
                              
 எங்கள் ஏரோட்டம் நின்றுபோனாஉங்க காரோட்டம் என்னவாகும்…?    இந்த  பாடல் வரிகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  அரைநூற்றாண்டுக்கு முன்னரே கவியரசு கண்ணதாசன் அனுபவி ராஜா அனுபவி என்ற கே. பாலச்சந்தரின் திரைப்படத்திற்காக எழுதியது.
1967 இல் இந்தப்படம் வெளியானது.
தெருவெங்கும் காரோட்டம் நிற்கவில்லை. தொடருகிறது. எரிபொருளை உறிஞ்சி கரியமிலவாயுவை உமிழ்ந்து, சூழலை மாசடையசெய்கிறது.
சமீபத்திய அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீயினால் எழுந்த புகைமண்டலம் அயல் நாடுகளை மட்டுமல்ல, முழுஉலகையுமே பெரிதும் பாதிக்கப்போகிறது என்ற செய்தியையும் படித்தோம்.
உழவின் திசை என்னும் நூலை எழுதியிருக்கும் எமது நண்பர் .முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இந்த மண்ணுக்கு வருமுன்பு,   சுமார் ஆறுவருடங்களின் முன்னர் அந்தப்பாடல் பிறந்துவிட்டது.
இந்தியக்கிராமங்கள் பலவற்றில் ஏரோட்டம் நின்றுவிட்ட இக்காலத்தில் முத்துக்கிருஷ்ணன், உழவின் திசை எதனை நோக்கிச்செல்கிறது என்பதை  களத்தில் நின்று ஆய்வு பூர்வமாகவும், திடுக்கிடவைக்கும் புள்ளிவிபரங்களுடனும் செய்தி ஆதாரங்களுடனும் சமூக அக்கறையுடனும் இதழ்களில் பதிவுசெய்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் உழவின் திசை.  


மெல்பன் வாசகர்வட்டத்தை உருவாக்கியதிலும் முத்துக்கிருஷ்ணனுக்கு பெரும் பங்குண்டு. தான் கற்ற மின்பொறியியல் துறையில் தேர்ச்சிபெற்று, அதிலேயே அவர் தனது பணியையும் தொடர்ந்திருப்பாரானால், அவரும் ஆயிரத்தில் ஒரு மின்பொறியியலாளராக ஜனசமுத்திரத்தில் மூழ்கியிருப்பார்.
ஆனால், இலக்கியம், எழுத்து, சமூக ஆய்வு,  பசுமை நடை, தொல்லியல்  வரலாறு என அகலக்கால் பதித்து, தான் கற்றதையும் பெற்றதையும் தொடர்ச்சியாக பதிவுசெய்துவருகிறார்.
இவரது நூல்கள் யாவும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவை. முத்துக்கிருஷ்ணனின்  அயராத தொடர் பயணத்தில் மற்றும் ஒரு வரவு: உழவின் திசை.

வாசல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை தனது வேலுத்தாத்தாவுக்கே நன்றியுணர்வோடு சமர்ப்பித்துள்ளார்.
அவரது வேலுத்தாத்தா வேளாண் கல்லூரிகளில் படித்த பேராசிரியராக நிச்சயம் இருக்கமாட்டார். அவர் மண்ணையும் மக்களையும் படித்திருப்பார். விதை நிலங்கள் பற்றியும், விதைகள், தானியங்கள், உரம், நீர்பாய்ச்சல், பருவகாலங்கள், இயற்கை விவசாயம் பற்றியெல்லாம் தெரிந்துவைத்துள்ள அனுபவசாலியாகத்தான் இருப்பார்.

உழவின் திசையில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை முத்துக்கிருஷ்ணன் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் இந்தியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்த் ( 1880 – 1936)   என்பதையும் இந்நூலிலிருந்து அறிகின்றோம்.

கிராமப்புற வாழ்வையும் நகரப்புற வாழ்வையும் இணைத்து அந்த இலக்கிய ஆளுமை எழுதிய கோதானம் நாவலின் சுருக்கத்தையும் இந்த நூலில் காண்கின்றோம்.    கடுமையான உழைப்பாளியான ஒரு கிராமத்து விவசாயி, தனது குடும்பத்தையும் கால்நடைகளையும் சிறுதுண்டு நிலத்தையும் காப்பாற்ற மேற்கொள்ளும் பேராட்டங்களில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்,  நிலங்களை பிடுங்குவதற்கு எத்தனிக்கும் ஆதிக்க சாதியினர் வருகிறார்கள். வாழ்விற்கு  ஆதாரமாக விளங்கும் சிறு துண்டு நிலத்தை காப்பாற்றுவதற்காக விதை மணிகளை இழக்கிறது அந்த ஏழைக்குடும்பம். பயிர் பச்சைகளை, பாத்திர பண்டங்களை இழக்கிறது. பட்டினி கிடக்கிறார்கள். இறுதியில் உயிருக்கு உயிராக வளர்த்த தங்களது மாட்டையும் இழக்கிறார்கள்.அனைத்தும் இழந்த நிலையில் வயலிலேயே கதையின் நாயகனான ஏழைக்குடும்பத்தலைவனின் இறுதிமூச்சு போய்விடுகிறது.
அந்த நாவல்  இந்திய விவசாயத்தின் ரத்தமும் சதையுமான அடையாளம் எனக்கூறும் முத்துக்கிருஷ்ணன், அந்த அடையாளம் நூறு ஆண்டுகளுக்குப்பின்னரும், இன்றும் அப்படியே பொருந்துவது அவலம் என்று தார்மீகக்கோபம் கொள்கிறார்.

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மட்டுமல்ல, மண்ணை மாத்திரம் நம்பி வாழும் உலகின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரவேண்டிய கோபம்.
ஆங்கிலேயர்  நாட்டை பிடிப்பதற்கு முன்னரே, விவசாயிகளிடமிருந்த  நிலங்கள் விவசாயத்தை தங்கள் வாழ்க்கை பாதையாக கொண்டிராத பெருஞ்செல்வந்தர்களின் கைகளுக்கு போகத்தொடங்கிவிட்ட செய்தியுடன் இந்த நூலின் கட்டுரைகள் பல திடுக்கிடும் தகவல்களுடன் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
முதல் கட்டுரையை படித்துக்கொண்டிருந்தபோது, கென்யா அதிபர் கென்யாட்டா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

 அவர்கள் வரும்போது எம்மிடம் நிலங்களும் அவர்களிடம் வேதாகமும் இருந்தது. பின்னர், எங்களிடம் வேதாகமமும் அவர்களிடம் எங்கள் நிலங்களும் இருந்தன. 
இந்தியாவுக்கு 1947 இலும்  இலங்கைக்கு 1948 இலும்  சுதந்திரம் கிடைத்தது.  வெள்ளையர்கள் வெளியேறி, கறுப்பு வெள்ளையர்கள் வசம்  தேசங்கள் சென்றன.  நிலங்களை கோப்பரேட் நிறுவனங்கள் படிப்படியாக கையகப்படுத்தின. இந்திய விவசாயிகள் குறிப்பாக மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயிகள் எலிக்கறி தின்றும் பட்டினி கிடந்தும் மொட்டை அடித்தும் அரைநிர்வாணமாகவும் வீதியில் இறங்கி போராடினார்கள். எல்லாமே இழந்த நிலையில் தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
அவர்களின் நெஞ்சுருக்கும் கதைகளே இத்தொகுப்பில் கட்டுரைகளாக புள்ளிவிபரங்களுடன் விரிகிறது.

முத்துக்கிருஷ்ணன்,   அறைக்குள்ளே முடங்கியிருந்து அனைத்தையும் எழுதிவிட முடியாது என அழுத்தமாக நம்பும் எழுத்துப்போராளி.  அதனால் அவர் பயணங்கள் மேற்கொள்கிறார். மக்களை சந்திக்கின்றார். மண்வாசனையை நுகர்ந்து பார்க்கிறார். உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை சேகரிக்கிறார். அரசுகளின் ஆணைகளை, நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஆராய்கிறார். ஊடகங்களின் பதிவுகளை மனதிலிருத்துகிறார்.
இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்து எழுதத்தொடங்குகிறார்.
தினமும் மூன்று வேளையும் நமது உணவுத்தட்டத்திற்கு வந்து சேரும் உணவில் விவசாயிகளின் உழைப்பு படிந்திருக்கிறது. அந்த உழைப்பின் நிலையின்  பெறுபேற்றை  காண்பதற்காகவே இக்கட்டுரைகளை எழுதியிருப்பதாக முத்துக்கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.


இந்தியாவெங்கும் பரிதாபத்திற்குரியவர்களாக  காணப்படும் ஏழை விவசாயிகளின் ஆத்மக்குரலாக இந்நூல் விளங்குகிறது.
இந்தியாவில் தினமும் சுமார் இரண்டாயிரம்பேர் வரையில், விவசாய நிலங்களை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற செய்தியையும்  தேசத்தின் உற்பத்தியில் பதினெட்டு சதவீதத்தை ஈட்டிக்கொடுத்துவிட்டு, தற்கொலைசெய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுபவர்கள் பற்றிய தகவலையும் சொல்லும் முத்துக்கிருஷ்ணன், இது பற்றி நாம் உரையாடவேண்டியது அவசியம் எனவும்  இடித்துரைக்கிறார். அதனை ஒரு கடமையாகவும் உணர்த்துகிறார்.

இல்லையேல், பணம் இருந்தும் உணவுக்கு அலைபவர்களாக மாற்றப்படுவோம் எனவும் எச்சரிக்கிறார்.
அதனாலும் நாம் அவரது கருத்துக்கள், தகவல்கள் தொடர்பாக உரையாடவேண்டியவர்களாகிவிட்டோம்.  இந்த விவகாரம் ஒவ்வொரு இல்லத்திலும் பேசப்படவேண்டியது.
அண்மையில் அவுஸ்திரேலியா எஸ்.பி. எஸ். தமிழ் வானொலி நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலைக்கேட்டேன். இங்கே ஒவ்வொரு வீட்டிலும் வாராந்தம் 70 வெள்ளிகளுக்கு மேல் பெறுமதியான உணவு வீணாக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறதாம்.
இது பற்றியும் உழவின் திசை  நூல் இந்திய வாழ்க்கை முறையிலிருந்து பேசுகிறது. வீணாக்கப்படும் தானியங்கள் குறித்து சொல்கின்றது.

ஊடகங்கள் செல்லும் திசைபற்றியும் பேசுகிறார்.
  சுதந்திரத்திற்கு முந்தைய ஊடகங்களுக்கு நோக்கமிருந்தது. இன்றைய ஊடகங்களுக்கு கொண்டாட்டம், கேளிக்கை மட்டுமே மிஞ்சி நிற்கிறது. உலகமயமாக்கம் தொடங்கியதிலிருந்து, பத்திரிகைகளில்  ஒரு வித கொண்டாட்ட மனோபாவம் தொற்றிக்கொண்டது. எல்லாமே வெற்றிதான். அவர்களின் கணிப்புப்படி எல்லா வெற்றியும் உலகமயத்தின் பலன். எல்லாத் தோல்வியும் நம் நாடு உருவாக்கியவை. சுரண்டல், அடிமைத்தனம், சாதியம், அடக்குமுறை போன்ற சொற்கள் பெரிய ஊடகங்களின் உச்சரிப்பிலிருந்து முற்றாக நீக்கப்பட்டு வருகின்றன. “  என்ற ஓர் உண்மையையும் முத்துக்கிருஷ்ணன் தெளிவுபடுத்துகிறார்.

சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படம் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது என்பதை கண்டு பிடித்து சொல்லும் பெரிய ஊடகங்களிடம், நாம் வேறு எதனைத்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியும் நண்பரே…???!!!
  இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்பு, பயனற்று மூடுவிழா காணவிருந்தன அமோனியா ஆலைகளும் ராணுவ ஆராய்ச்சிக்கூடங்களும்.   கவலைப்பட்ட  ஆலை அதிபர்கள் இரவோடு இரவாக ஆலைகளின் பெயர்ப்பலகைகளில் புதிய பெயர் எழுதி மாட்டினார்கள். மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்கின ஆலைகள்.  வேளாண்மை ஆராய்ச்சி மையம்  விவசாயத்துறையில் உலகமே வெறுக்கத்தக்க ஒரு அத்தியாயம் இப்படித்தான் ஆரம்பமானது. – என்னும் செய்தியை இந்த நூல் வெளியிடுகிறது.

பாதுகாப்பு என்ற போர்வையில்  மக்களை கொல்லும் ஆயுதங்களுக்கு  அமோனியாவை விநியோகித்த அதே ஆலைகள், தனது வேலை முடிந்துவிட்டதே என கவலைப்படவில்லை. அதே மக்களின் இயற்கை விவசாயத்தை வேரோடு அழிப்பதற்காக செயற்கை உரங்களை கண்டு பிடிப்பதற்கு அதே அமோனியாவை பயன்படுத்தத் தொடங்கின.
முத்துக்கிருஷ்ணனின் உழவின் திசை தரும் பல செய்திகள் அதிர்ச்சி தருபவை.

அந்தச்செய்திகளை  இந்நூல் ஒவ்வொரு அங்கத்திலும் தடித்த எழுத்துக்களில் பதிவுசெய்துள்ளன. அத்துடன் கட்டுரைகளுக்குப்பொருத்தமான கோட்டோவியங்களையும்  தருகின்றன.
அந்த ஓவியங்கள்  மனதை ஈர்த்து வலிதருகின்றன.   வாசகர் மனங்களில் ஊடுருவுகின்றன. அதனாலும் நூலின் உள்ளடக்கம் கனதி  பெறுகின்றது.
 உலகின் அத்தனை விதை மாதிரிகளையும் திருடி அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,50, 000 நிலத்திணை வகைகள் அமெரிக்க உயிரியல் ஆய்வுக்கூடங்களில் உள்ளன. இது நமக்குத் தெரியுமா…? 

இவ்வாறு நமக்குத் தெரியாத பல  உண்மைகளை வெளிப்படுத்துகிறது இந்த நூல்.
உண்மைகள் சம்பந்தப்பட்டவர்களை சுடும். தவிர்க்கமுடியாது.
தீவிர தேடலிலும் ஆய்வுகளிலும் பெற்றதையும் கற்றதையும் நமக்குத்தந்திருக்கும் முத்துக்கிருஷ்ணனின் உழவின் திசை ஆட்சியாளர்களினதும்  விவசாய ஆராய்ச்சியாளர்களினதும் கண்களில் தென்படல்வேண்டும்.

கைக்கு அடக்கமான 85 பக்கத்தில் வெளிவந்துள்ள நூல். வாசிப்பதில் எந்தச்சிரமமும் இல்லை. மிரட்டாத  எளிய மொழி நடையில் எழுதியிருக்கும் முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

( மெல்பனில் கடந்த ஞாயிறன்று - பெப்ரவரி 02 ஆம் திகதி நடைபெற்ற வாசகர் வட்டத்தின் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்டது)
---0---
letchumananm@gmail.com


No comments: