.
நமரி/ கௌரிகாளம்/ கௌரிகாளை – காற்றுக்கருவி
அமைப்பு
நமரி ஒரு நீண்ட ஊதுகருவி. இரண்டு
அல்லது மூன்று பாகங்களை உடைய நீண்ட குழல்வடிவ கருவியான நமரி, யானையின் பிளிறலைப் போன்ற சத்தத்தை எழுப்பவல்லது. நமரி
கருவியானது எக்காளத்தை விட நீளம் குறைவாகவும் வாய் பகுதி
எக்காளத்தின் வாய் பகுதி போன்று அகன்று இல்லாமலும் இருக்கின்றது.
குறிப்பு
எக்காளம், கொம்பு, தாரை, திருச்சின்னம் மற்றும் நமரி கிராமிய ஐந்திசை
(பஞ்ச வாத்திய) கருவிகள் எனப்படும். யாழ்ப்பாணம் முதல் சென்னை வரை தமிழர்களாகிய நாம் கேரள செண்டை மேளம்/
பஞ்ச வாத்தியம் பின்னால் சென்று நமது நிகழ்வுகளுக்கு அழைப்பதை தவிர்த்து
நமது கிராமிய ஐந்திசை கருவிகளை ஆதரிக்க வேன்டிய நேரமிது. இதனால்
இக்கலைகளை அழியாமல் நாம் பாதுகாக்கலாம். தாரை, தப்பட்டை, கொம்புடன் இணைத்து, சிறுதெய்வக் கோயில் திருவிழாக்களிலும், வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் நமரி இசைக்கப்பட்டு வந்தது. போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், இப்போது இறப்பு வீடுகளில் கூட வாசிக்கிறார்கள்.சில பத்தாண்டுகள் வரை புழக்கத்தில் இருந்து
காணாமல் போன சூரிய வளையம்,
சந்திர வளையம், கனகதப்பட்டை, கொடுகொட்டி, சிறுமுரசு போல் மிக வேகமாக காணாமல் போக இருக்கும்
கருவிகளில் இதுவும் ஒன்று.
நமரியை சில ஊர்களில் கௌரிகாளம் என்று
அழைக்கிறார்கள். காஞ்சி சங்கர மடத்தில் இரண்டு வெள்ளி கௌரிகாளம் கருவிகள் உள்ளன. இரண்டு பாகங்களாக
கழற்றி மாட்டும் வசதியொடு உள்ளது. இரண்டு பாகங்களை சேர்த்தால்
சுமார் ஆறடி நீளம் உள்ளது. மடத்து பூசை வேளைகளில் இசைக்கப்படுகிறது.
மடாதிபதிகளின் ஊர்வல நிகழ்வுகளிலும் இசைக்கப்படுகிறது. முன்பு காஞ்சி மடத்தில் கௌரிகாளம் உள்ளிட்ட கருவிகளை இசைக்க உடையார்பாளையம்
வன்னிய சமஸ்த்தானத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பபட்டு வந்ததாக மடத்தின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன.(ஸ்ரீசந்த்ரமௌளீச்வர சுவாமியின் பூஜா மண்டபம், அம்பாரி, சிம்மாசனம் மற்றும் பல்லக்கைத் தூக்கிவரும் போகிகள், தலைப்பாகையணிந்து ராணுவ
உடுப்புடன் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளின் மீதேறி சிப்பாய்கள்,தீவட்டிக் காரர்கள், மரச் சாமான்களைத் தம்
தலையில் சுமந்தபடி உடன் ஓடி வரும் காலாட்கள், கௌரிகாளை
ஊதுகிறவர்கள், திமிரி நாகஸ்வரம்
வாசிக்கிறவர்கள், நகரா, தவண்டை, மத்தளம்
மற்றும் தவில் வாத்தியங்களை வாசிக்கிறவர்கள், உள்பாரா
மற்றும் வெளிப்பாராக்காரர்கள், யானைப்பாகர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், இதர பணி செய்பவர்கள் என்று 200க்கும் மேற்பட்டவர்).
சமஸ்த்தானங்கள் மடாதிபதிகளுக்கு அளித்த முக்கியத்துவமும் சன்னியாசிகளான
மடாதிபதிகள் அரச வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கை வாழ்ந்ததையும் இக்குறிப்புகள் உறுதி
செய்கின்றது.
காஞ்சி வரதராசப் பெருமாள் கோவிலில் நமரியை
கௌரிகாளை என்கிறார்கள்.
வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது. எக்காளம் போன்று
சற்று நீண்டும் வாய் பகுதி சற்று அகன்று தட்டையாகவும் இக்கருவிகள் உள்ளன. சுமார் ஐந்து அடி நீளம் உள்ளது. இதை போன்ற அமைப்புடைய
கருவி காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. காஞ்சி வரதராசப் பெருமாள் கோவிலில் பெரியாழ்வார்,ராமானுஜர்,
வேதாந்த தேசிகன், தாதா தேசிகன் மற்றும் மணவாள மாமுனிவன்
ஆகியோர் சாற்றுமுறை நிகழ்வுகளில் இரண்டு கௌரிகாளைகள் இசைக்கப்படுகின்றது. வீதிவலம் நிகழும்பொழுதும் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. சென்னை மயிலை ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் இக்கருவி பெருவிழா மற்றும் தெப்பம்
போன்ற நாட்களில் இசைக்கப்படுகிறது. திருப்பெருந்துறையில் இக்கருவி
இசைக்கப்படுவது வழக்கொழிந்து விட்டதாக தெரிகிறது.
சென்னை கோடம்பாக்கம் அகத்தீச்வரர் கோவில்
உள்ளிட்ட சிவாலயங்களில் இக்கருவியை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த வினோத்குமார் தம்பிரான்
என்பவர் இசைத்து வருகிறார்(+919094147848).
இவரிடம் இரண்டு கௌரிகாளை கருவிகள் உள்ளன. தமிழ் வழியில் சிவ பூசைகள், காவடி பூசைகள், வீடு குடிபுகுதல், நீத்தார் சடங்குகள், ஆகியவற்றை நிகழ்த்தி வருகிறார். இவரிடம் பூரி,
தவண்டை, சேமக்கலம், தவல
சங்கு, பிரம்ம தாளம் மற்றும் கோனத்தாரை போன்ற பழந்தமிழர் இசைக்கருவிகளும்
உள்ளன. கோவில் விழாக்களில் குழுவாக இசைக்கிறார்கள்.
முந்தைய தமிழர் நிலமான மேல் திருப்பதி
மற்றும் கீழ் திருப்பதி கோவில்களில் தவண்டை,
திருச்சின்னம், சேமக்கலம் ஆகியவற்றுடன் ஒற்றை கௌரிகாளம்
இசைக்கப்படுகிறது. பித்தளையாலானது. குறிப்பாக
கனு பொங்கல் அன்று நடைபெறும் பார்வேட்டை திருவிழாவில் இக்கருவிகள் இசைக்கப்படுவதை நாம்
காணலாம். வேட்டை திருவிழாவின் வீரியத்தை அதிகரிக்க இக்கருவிகள்
துணை செய்கின்றன.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
காஞ்சிபுரம் வரதராசப்
பெருமாள் கோவில்
மன்னார்குடி
இராசகோபால பெருமாள் கோவில்
திருவேங்கடம் திருவேங்கடமுடையான்
கோவில்
கீழ் திருப்பதி
கோவிந்தராஜப் பெருமாள் கோவில்
மயிலை ஆதிகேசவ
பெருமாள் கோவில்
கோடம்பாக்கம் அகத்தீச்வரர்
கோவில்
சென்னை பாரிமுனை
கந்தசாமி கோவில்
காஞ்சிபுரம் சங்கர
மடம்
மேலும் தமிழகத்தில் திருச்சி வட்டாரத்திலும், தஞ்சையை அடுத்துள்ள சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் தொழில் ரீதியாக நமரி இசைப்பவர்கள்
இருகின்றார்கள். சிவ
வாத்திய குழுவினர் சிலரும் நமரி கண்டிப்பாக வைத்துள்ளார்கள்.
காணொளி
தமிழகம்
-சரவண பிரபு ராமமூர்த்தி
(P. Sambamurthy,
Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum,
Chennai & வெ. நீலகண்டன், வாழ்விழந்து
வரும் கிராமிய இசைக் கருவிகள், Lalitha M/Nandhini M - Proceedings of National
Seminar on PRISTINE GLORY of Kanchipuram, Sankara University, Enathur,
Kanchipuram)
No comments:
Post a Comment