.
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே….“ என்ற பாடலை மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டு, அபிதா தெருவில் இறங்கி நடந்தாள்.
கற்பகம்
ரீச்சர் தவிர்ந்து, ஏனைய மூன்று டிக்கட்டுகளும்  வேலைக்கு
அடுத்தடுத்து புறப்பட்டுவிட்டன.
ஒவ்வொரு
டிக்கட்டையும் அனுப்புவதற்கிடையில் அபிதாவுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.   வார நாட்களில் காலையில்   அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு,                  “ மொபைலை எடுத்தீர்களா…? தண்ணீர் போத்தல் வைத்துக்கொண்டீர்களா..?
வீட்டு  சாவிக்கொத்து
இருக்கிறதா…?  “  ஒவ்வொன்றையும் நினைவு படுத்தியும் விடுபவள் அபிதா.
அதனையும்
தினசரி  கடமைகளில்
ஒன்றாக ஏற்று இயங்குவதற்கு அபிதா பழக்கப்பட்டுவிட்டாள்.
இனி
புறப்படவேண்டியது கற்பகம்தான். அவளும் போய்விட்டால், மளமளவென்று இதர வீட்டு வேலைகளை முடித்து, குளித்து, உடை மாற்றி அருகிலிருக்கும் வேர்ல்ட் கொமியூனிக்கேசன் சென்டருக்கு  காலை
பத்து மணிக்கு முன்னர் செல்லவேண்டும்.
ஒரு
மணிநேரத்தில் திரும்பிவந்து, எஞ்சியிருக்கும் வேலைகளை கவனிக்கவேண்டும். வீட்டில் இருக்கும் தொலைபேசி அந்த ஒரு மணிநேரத்திற்கிடையில் அலறாமலும் இருக்கவேண்டும்.
எவரும்
பேசலாம். அவ்வூர் திருடர்கள் எவ்வாறு வீடுகளை நோட்டம் விட்டு, திருடுவார்கள் என்பதையும் ஜீவிகா, அபிதாவுக்கு சொல்லியிருக்கிறாள்.
வீட்டுத்
 தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டால், அங்கிருப்பவர்கள் எவரேனும் எடுத்தால், ஆட்கள் வீட்டிலிருக்கிறார்கள் என்பது அர்த்தம்.
தொடர்ந்து
அது சிணுங்கிக்கொண்டிருந்தால்,
எவரும் இல்லை என்பது அர்த்தம்.  அபிதாவுக்கு
ஒரு யோசனையும் வந்தது, ரிஸீவரை  இணைப்பிலிருந்து
எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டுப்போனால்,
 எங்கேஜ்  ஒலிதான் கேட்கும். யாரோ வீட்டிலிருந்து யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அர்த்தம்.
ஜீவிகாதானே
வீட்டின் எஜமானி. அவளிடம்  தனது
கம்பியூட்டர் பயிற்சி வகுப்பு பற்றி ஏற்கனவோ சமயோசிதமாக சொல்லியிருப்பதனாலும்,
அந்த வீட்டிலிருந்து வெளியே வேலைக்கு செல்லும் அந்த நான்கு டிக்கட்டுகளும் ஏதும் அவசரமென்றால் தனது கைத் தொலைபேசிக்கு தொடர்புகொள்வார்கள்தானே என்ற  ஆறுதலும்
அபிதாவுக்கு இருந்தது.
தான்
கம்பியூட்டர் பயிற்சிக்கு செல்லவிருக்கும் விடயத்தை கற்பகம் ரீச்சரிடம் மாத்திரம் மறைத்துவிட்டாள். அவளது  இரண்டு
மாணவர்களுக்கு நாவன்மைப்போட்டிக்கு உரை  எழுதிக்கொடுத்ததனால்
வந்த வினையை அவள் மறக்கவில்லை.
இதனையும்
சொன்னால்,   “ நீ… என்ன வீட்டு வேலைக்காரியாக வந்தாயா..? அல்லது,  இங்கே படித்து பட்டம் பெற வந்தாயா..?  “ எனக்கேட்டு
தனது விருப்பத்தை முளையிலேயே கருகச்செய்துவிடுவாள் இந்த கட்டளைத்தளபதி.
எது
செய்தாலும்,  இந்த
ரீச்சரிடம் சற்று முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். 
 “ அபிதா… அபிதா… “ கற்பகம் ரீச்சரின் அறையிலிருந்து குரல் வந்தது. 
அப்போது
அபிதா சமையலறைக்கழிவுகள் நிரம்பிய பிளாஸ்டிக் பையை கட்டி எடுத்து, வீட்டுக்கு வெளியே கேட்டருகில் வைப்பதற்கு ஆயத்தமானாள். எனினும் எடுத்துச்செல்ல தயங்கினாள்.
கற்பகம்
பாடசாலைக்குச்  சென்ற
பின்னர்தான் அதனை அங்கே வைக்கவேண்டும் என்பதும்   இந்த கட்டளைத் தளபதியின் ஆணை.
வேலைக்குப்போகும்
 வேளையில் வாசலில் முழிவியளமாக அழுக்குக்  கழிவுகள் தென்படக்கூடாது என்று ஒருநாள் கற்பகம், அபிதாவிடம் சொல்லியிருக்கிறாள்.
“  என்ன… கூப்பிட்டீங்களா..?   ரீச்சர்.
 “ அறைக்கதவின் அருகில் வந்து திரையை விலக்கி கேட்டாள் அபிதா.  இவ்வேளையில் எதற்கு அழைப்பாள் என்பதும் தெரியும்.
கற்பகம்,
அணிந்த சேலை முந்தானையை பின்புறம் முதுகின் இடப்பக்கம், ரவிக்கையுடன் பிணைத்து ஒரு பின் குத்தி பிணைத்துவிடல் வேண்டும். அதன் பிறகு, சேலையின் கீழ் விளிம்பை பாதம் வரையில் இழுத்து  கரை
மடிப்புகளை நீக்கி சரிசெய்யவேண்டும்.
அபிதா
முதல்கட்ட  அலங்காரத்தை
செய்து கொடுத்துவிட்டு, குனிந்து சேலையின் மடிப்புகளை நிமிர்த்தி சரி செய்தாள். அப்போது கற்பத்தின் பாதங்களைப்பார்த்துவிட்டு,   “ ரீச்சர், இன்னமும் உங்களுடைய பாதங்களில் பித்த வெடிப்பு இருக்கிறது.  நீங்கள் தினமும் பூசி வரும் கிறீம் சரிவராது,  இலுப்பெண்ணைதான்
இதற்கு நல்லது. என்ர அம்மாவுக்கும் இருந்தது. இலுப்பெண்ணை தடவித்தான் பித்த வெடிப்பு குணமாகியது  “  என்றாள்.
 “ இந்த ஊரில் இலுப்பெண்ணைக்கு எங்கே போவது…? “
 “ கடைத் தெருவில் ஒரு முஸ்லிம் ஆயுர்வேத மருந்துக்கடை இருப்பதை கண்டிருக்கின்றேன்.  அதற்கு  மரைக்கார்
கடை என்று பெயர். அந்தப்பக்கம் போனால் வாங்கி வந்து வைக்கவா…?   “ 
“  என்ன விலையோ தெரியாது.  இந்தா
நூறு ரூபா. முடிந்தால் வாங்கிவை என்ன…!  “ கற்பகம்
தனது கைப்பையை திறந்து எடுத்துக்கொடுத்தாள்.
அதன்பிறகு சாப்பாட்டு மேசைக்கு வந்து, அன்று காலை அபிதா அவித்துவைத்திருந்த இடியப்பத்துடனும்  தேங்காய்
பால் சொதி,  பருப்புக்கறி,
தேங்காய்ச் சம்பலுடனும் காலை ஆகாரத்தை  சாப்பிட்டாள்.
அபிதா,
கூஜாவிலிருந்து தண்ணீர் எடுத்து, தம்ளரை அருகில் வைத்தாள்.
 “ அபிதா,  நீயும்
அவர்களுடன் நுவரேலியா போகப்போறாயா…? சொல்…? “  
“  சுபாஷினி கூப்பிட்டாங்க. ஜீவிகா இதுவரையும் எதுவும் சொல்லவில்லை. ரீச்சர் நீங்கள் வாரீங்களா..?  “ 
 “ அது என்ன,  நீங்கள்
வாரீங்களா…? என்ற பேச்சு. அப்படியென்றால், நீயும் போகிறாய் என்பதுதான் அர்த்தமா..?  “ இவ்வாறு
கற்பகம் கேட்டதும்,    ‘  அப்படியென்றால், தான் எப்படி கேட்டிருக்கவேண்டும்..?
  ‘ 
என்று
அபிதா குழம்பினாள். 
 ‘இந்த மனுஷியிடம்  முன்னெச்சரிக்கையாகவும்  இனிமேல்
பேசவேண்டும்  ‘
“  இல்லை – ரீச்சர், சொறி ரீச்சர்,  ‘ நீங்கள்
போகவில்லையா ?  ‘ என்றுதான்
கேட்டிருக்கவேண்டும்.
நான் எப்படி போவது.  வீட்டு
வேலைகள் இருக்கும்.  மரங்களுக்கு
தண்ணீர் விடவேண்டும்.  “ 
 “ ஓம்… ஓம்… நீ போகவேண்டாம். நானும் போகமாட்டேன். நீயும் போனால் யார் இங்கே எனக்காக சமைப்பது. பெரும்பாலும் ஜீவிகாவும் வரமாட்டாள். அவளது பெரியப்பா லண்டனிலிருந்து வரவிருப்பதாகவும் வேறு சொல்லியிருக்கிறாள்.  அதனால்
நீ இங்கே நிற்பதுதான் நல்லது.  “ என்று
கற்பகம் சொன்னதும் அபிதாவுக்கு முகம் வாட்டம் கண்டது. அதனை  கற்பகம்   பார்த்துவிடக்கூடாது
என்பதற்காக,  முகத்தை
வேறு பக்கம் திருப்பிக்கொண்டு, கேஸ் அடுப்பின் முனைகளை துடைத்து சுத்தம் செய்வதுபோன்று பாவனை காட்டினாள்.
 “ அபிதா, உனக்கு அந்த பெரியப்பாவைத்  தெரியாது
என்ன…? அந்த ஆள் ஒரு மாதிரி.  சில்மிஷக்காரன்.
முன்பு ஒருதடவை வந்து என்னோடு சேட்டை விடப்பார்த்தான்.  வயது
அறுபதுக்கும் மேல் இருக்கும். இன்னமும் இளந்தாரி என்ற நினைப்பு.  முன்பு
நாமெல்லாம் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பிருந்த சில வேலைக்காரிகள் அடிக்கடி திரும்பிப்போனதற்கு அந்த லண்டன் பெரியப்பாதான் காரணம் என்ற தகவல் எனது காதிலும் விழுந்திருக்கிறது.
ஜீவிகாவின் பெரியம்மாவுக்கு மார்பகப்புற்று நோய் வந்து, சுகமில்லாமல் இருந்தபோது,  சமையல்,
வீட்டு வேலைக்காக வந்த பெண்கள் சிலர் இந்த ஊரிலும் இருக்கிறாள்கள்.  அவர்களில்
ஒருத்தியின் பிள்ளை எங்கட ஸ்கூலிலும் படிக்கிறான். அந்த மனுஷிதான் ஒரு நாள் எனக்கு சொல்லியிருக்கிறாள்  “ கற்பகம்
தனது உணவுத்தட்டத்தை சிங்கில் வைத்துவிட்டு கை கழுவிக்கொண்டாள்.
இந்தத்
 தகவல் அபிதாவுக்கு புதியது.  இதனை இப்போது கற்பகம் ரீச்சர் ஏன் தன்னிடம் சொல்லவேண்டும் என்ற  யோசனையும்
அவளுக்கு வந்தது. 
 “ இதுபற்றி ஜீவிகாவுக்கு எதுவும் தெரியாதா ரீச்சர்..?   “ 
 “ தெரிந்திருக்கும்,  வெளியே
காட்டிக்கொள்ளமாட்டாள்.
இது அந்த பெரியப்பாவின் வீடு.  இவளது
பொறுப்பில் விட்டு விட்டு லண்டன் சென்றவர்.  லண்டனில்
அவருக்கு மகன் மகள் பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.  மனுஷி
நீண்ட காலம் வருத்தக்காரியாக இருந்திருக்கவேண்டும்.
தினவெடுக்கும் போது பெண் சுகம் தேவைப்பட்டிருக்கும்.
அதற்கு வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்களா கிடைத்தார்கள்.  பிளடி
இடியட்,  ராஸ்கல்.  சரி…
சரி… பார்ப்போம்.  இதுபற்றி
ஜீவிகா, மஞ்சுளா, சுபாஷினியிடம் சொல்லிவிடாதே…. தேவைப்பட்டால்,  சுபாஷினி,  மஞ்சுளாவை
மாத்திரம் அழைத்துப்போகட்டும்.
நீ… போகவேண்டாம். என்னோடு நில். அந்த மனுஷன் வரும்போது, நீயும் இங்கிருந்தால், அது எனக்கும் பாதுகாப்பு.  “ என்றாள்
கற்பகம்.
“  சரி… ரீச்சர், நீங்கள் எல்லோரும் வெளியே போய்விட்டால், நான் மாத்திரம்தானே வீட்டிலிருக்கவேண்டி வரும் ரீச்சர்.  என்னை
யார் அந்த  ஆளிடமிருந்து
காப்பாற்றுவது.  “ இவ்வாறு
அபிதா கேட்டதும், வீட்டின் முன்கூடத்தின் மூலையில் கிடந்த தனது செருப்புகளை அணிந்தவாறு, அதனைக்காட்டி, இது இருக்கிறது. இது உன்னை பாதுகாக்கும். நான் வாரேன்.  “ எனச்சிரித்துக்கொண்டு
கற்பகம் விடைபெற்றாள்.
அபிதாவுக்கும்
சிரிப்பு வந்தது. அக்கணம், அவளுக்கு சிறுவயதில் யாழ்ப்பாணத்திலிருந்து  வெளியான
சிரித்திரன் சிரிப்பு சிற்றிதழில் வந்த ஒரு கார்டுண் சித்திர நகைச்சுவை நினைவுக்கு வந்தது.
ஒரு
இளம்
யுவதி
தெருவில்
போய்க்கொண்டிருப்பாள்.
அவளைப்பின்தொடரும்
ஒரு
மைனர்,  “ டார்லிங் டாட்டா  “ என்பான், உடனே அவள்  அவனைத்   
திரும்பிப்பார்த்து.                   “  காலில் இருக்கிறது பாட்டா  “ என்பாள். 
அபிதாவுக்கு
ஜீவிகாவின் பெரியம்மாவின் உருவத்தை  அந்த
வீட்டிலிருக்கும் படத்திலிருந்துதான் தெரியும்.  
அந்தப்பெரியப்பாவை
பார்த்ததில்லை. வரட்டும்.  இது
அந்த ஆளின் வீடு.  வரட்டுமே,  ஏதும்
சேட்டை விடப்பார்த்தால்…,  அங்கிருந்த
இதர செருப்பு சோடிகளை  அபிதா
பார்த்தாள்.  அவளுக்கு
சிரிப்பு வந்தது.
 கற்பகம் சென்றதும்,  கேட்டை
மூடி சாத்திவிட்டு, கம்பியூட்டர் பயிற்சி வகுப்புக்குசெல்வதற்காக எஞ்சியிருக்கும் வேலைகளில் அவசர அவசரமாக மூழ்கினாள்.
முதலில்,
சமையலறை கழிவுகள் நிரம்பி மூடிக்கட்டிவைத்திருக்கும் கறுத்த  பிளாஸ்ரிக்  பையை
எடுத்தாள்.
வீட்டுக்குள்ளும்
வெளியிலும் எத்தனை கழிவுகள் உயிரோடு நடமாடிக்கொண்டிருக்கின்றன.
அந்தக்கழிவுகளுக்கு தினவெடுக்கும்போது,   ஆதரவற்ற
அபலைகள்தான் கிடைக்கிறார்களா…?
முதல்நாள்
ஜீவிகா கொண்டு வந்திருந்த அவள் பணியாற்றும் பத்திரிகையில் வெளியாகியிருந்த யாழ்ப்பாணம்  பல்கலைக்கழக
மாணவிகள் மீதான பகிடி வதைகள் பற்றிய செய்திகள் உள்ளத்தை  பதறவைத்தன.
பொங்கு
தமிழ், எழுக தமிழ் என்றெல்லாம் உத்வேகமாக செயல்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகமாக இப்படியெல்லாம் இழிந்த செயற்பாடுகளை மேற்கொள்கின்றன.
முகநூல்
கண்டு பிடித்தவரின் மீதுதான் அபிதாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இந்த முகநூலை வைத்துக்கொண்டுதானே,
சகமாணவிகளை வலையில் சிக்கவைத்து சீரழிக்கிறார்கள். இவனுகளுக்கு அக்கா, தங்கைமார் இருக்கமாட்டார்களா..?  கேடுகெட்ட
நாய்கள்.  பாவம்
நாய் என்ன செய்யும். அது நன்றியுள்ள பிராணி.  ஆனால்
எதற்கெடுத்தாலும் நாயின் பெயரைத்தானே எமது சமூகம் இழுக்கிறது.
நன்றி
கெட்ட நாய், கேடுகெட்ட நாய், நாய்ப்பயல், நாய்ப்புத்தி இந்த சொற்பதங்கள் பற்றி பாவம் நாய்களுக்கு தெரியுமா..?
அபிதா,
குளித்து உடைமாற்றிக்கொண்டு காலை உணவை சாப்பிட்டாள்.  தினமும்
தான் சமைத்த உணவை உண்டே நாக்கும் செத்துப்போய்விட்டது.  தனக்கு
யாராவது ஒருநாளைக்கு சமைத்து தரமாட்டார்களா..? என்ற ஏக்கமும்  வந்தது.
சுபாஷினியுடன்
அவளது பிரதேசம் நுவரேலியாவை பார்க்கசெல்ல விரும்பியிருந்த அபிதாவுக்கு,  கற்பகம்
ரீச்சரின் தகவல் தடைபோட்டுவிட்டது.
இந்த
ரீச்சர் தனக்கு பாதுகாப்புத் தேடுகிறாவா…? அல்லது, நானும் நுவரேலியா சென்றுவிட்டால், அந்த நாட்களில் தனக்கு யார் சமைத்துப்போடுவது என யோசிக்கிறாவா…?
அபிதா
நேரத்தைப்பார்த்தாள்.  இன்னமும்
பதினைந்து நிமிடங்கள் இருந்தன. இப்போது வெளிக்கிட்டால்தான்,
அந்த வேர்ல்ட் கொமியூனிக்கேஷன் சென்டருக்கு போய்ச்சேரமுடியம்.
எதனை
அணிந்து செல்வது…? சாரி…!  வரும்போது
கொண்டுவந்திருந்ததை பேக்கிலிருந்து எடுத்தாள். அது ரோஸ் நிறத்தில் ரோஜாப்பூக்கள் பதிந்த ஃபுல்வொயில் சாரி.  ஒரு
பிறந்த நாளின்போது பார்த்திபன் வாங்கித்தந்தது.
போரின்
இடப்பெயர்வில் எப்படியோ  தப்பியிருப்பது.
அதனை கையில் எடுத்ததும் விம்மலும் கண்ணீரும் வந்தது. தொலைந்துபோன வாழ்வு,  இழந்துவிட்ட
உறவுகள், அழிந்துவிட்ட வாழ்விடம், எரிந்துபோன பார்த்திபனின் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள், எல்லாவற்றுக்கும் மேலே, எறிகணை வீச்சின்போது பங்கருக்குள் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை, ஓ… எல்லாம் போனதன் பின்னர் நான் மாத்திரம் ஏன் எஞ்சியிருக்கின்றேன்.
சரணடைந்த பார்த்திபன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையிலா..? அவர் வருவாரா..? அல்லது சமகாலத்தில் அரச தரப்பில் சொல்லப்படும் புதைகுழிகளில்தான் அந்த  எலும்புக்கூடுகளை
தேடவேண்டுமா…? 
குழந்தையின்
முதலாவது பிறந்த தினத்தின்போது மூவரும்இணைந்திருந்து எடுத்த வண்ணப்படத்தை பேக்கிலிருந்து எடுத்து,  சில
நிமிடங்கள் அதனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
கண்ணீரும்
வற்றியிருந்தது.  
 வாழ்வில் தொலைத்தவற்றை தேடிப்பெறுவதற்காகவா  இவ்வளவு
தூரம் பயணித்து, இந்த வீட்டுக்குள் வந்து முடங்கியிருக்கின்றேன்..?
இந்த வீட்டில் கழியும் தனிமைப்பொழுதுகள் பயங்கரமாக இருப்பதனால்தானா, அதிலிருந்து தப்பிப்பதற்கு இந்த கம்பியூட்டர் பயிற்சிக்கு என்னை தயார்படுத்தினேன்.
அபிதா,
யோசித்துக்கொண்டே வீட்டின் பின்புறக்கதவு, யன்னல்களை சாத்தி மூடிக்கொண்டு வாசலுக்கு வந்தாள், வாசல் கதவை மூடுவதற்கு முன்னர், மீண்டும் உள்ளே வந்து, கேஸ் அடுப்பு, சுவாமி அறை விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதையும் பார்த்து உறுதிசெய்துகொண்டு,
கையிலிருக்கும் ஷொப்பிங் பேக்கில், தனது கைத்தொலைபேசி ,  பேர்ஸ்,
கைக்குட்டை, பேனை, கொப்பி யாவும் இருக்கின்றனவா என்பதையும் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு,  “ இன்றைய
முதல்  நாள்
பயிற்சி வகுப்பு எந்தவொரு விக்கினமும் இல்லாமல் தொடங்கவேண்டுமென்ற மனப்பிரார்த்தனையுடன்,
வெளியேறினாள்.
கேட்டில்
அமர்ந்திருந்த ஒரு சிட்டுக்குருவி கீச்சிட்டுக்கொண்டு பறந்து சென்றது. 
 “  சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே….“ என்ற பாடலை மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டு, அபிதா தெருவில் இறங்கி நடந்தாள்.
( தொடரும் ) 



 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment